பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday 10 October 2016

தாடிமுளைத்த மழலைகள் .. !!






சிறகுகள் விரிக்கத்தெரியாத
சிக்கல் மனம் !!


பட்டாம்பூச்சிகளைத் தேடும்
பாசிபடர்ந்த கண்கள் !!


மூளை நரம்புகளின்
கணக்குச் சிக்கல்களில்
பிறழ்ந்த விடை !!


கிழிந்த சட்டைக்குள்
குட்டிச்சிறுவர்கள் வீசிய
கற்துண்டுகள் !!


இயல்பைத் தொலைத்த
இயல்பான கனவுகள் !


விடுதலைச் சிரிப்புகள் !!
வேதனை மறந்த
விசாரிப்புகள் !!


குழந்தைக் குறுகுறுப்பில்
பிணக்கு மொழி !!


தெருவோரத்து
வெட்டப்பட்ட மரத்தின் மீதோ,
சாலையோர
தார்த்தகிப்பிலோ..


வாசற் கோலங்களின்
அழகை விசாரிக்கும் போதோ
தெருநாய்கள் குரைக்கும்
இருட்டு சந்துகளுள்ளோ,


ஒரு
அழுக்கடைந்த மனிதனை
நீங்கள்
சந்திக்கலாம்..


அன்புக்கரம் நீட்டிப்
புன்னகை உதடுகளால்
பொன்னுதவி செய்யுங்கள் !!


மெல்லாதரவால் அவர்களின்
மனநலம் விசாரியுங்கள் !!


அவர்கள்
தாடி முளைத்த  மழலைகள் !!


இன்று உலக மனநலதினம் !! ( அக்டோபர் 10 )

  

                                    -----    சி.குருநாதசுந்தரம்.

Saturday 8 October 2016

அஞ்சல் அட்டை !!





மஞ்சள் முகத்தின்
எழுத்தொப்பனை அழகு !!


எழுத்துகளின்
இதமான. இருப்பில்
பேனாக்களின் வாசனை  !
 

குறுகிய  பரப்பிற்குள்
ஒடுங்கியிருக்கும்
வகுப்பறை. மாணாக்கரின்
இறுக்கத்துடனும்  எழுத்துகள் !!


நீட்டி முழக்கும்
நெடிய எழுத்துகளுக்கு
இங்கே இடமில்லை…


நலங்களும் விசாரிப்புகளும்
குறளடியாய்க் குறுகும்.


விடுதிக்குள்ளிலிருந்து
மகனின் மணம்
அஞ்சலட்டையில் பயணிக்கும்.


புகுந்த வீட்டின்
மகளதிகாரப் பயணங்களில்
அம்மாவின்
இதயத்துடிப்புகள் சீராக்கப்படும்!!

.
முதியோர் இல்லங்களின்
சுமை மனதுகளைச்
சுமந்து வரும்  
கண்ணீர் எழுத்துகளில்
அஞ்சலட்டை அழுததும் உண்டு..


கரிசல் மேட்டில்
மகனின் முகத்தை
வாசிக்கும் 
தாயின் முத்தத்தில்
அஞ்சலட்டை  அழகாகும்..


துக்கமும் துயரமும்
கண்ணீரும் வலியும்
அன்பும் அழுகையும்
சிந்தனையும்  சிரிப்புமாய்
அஞ்சலட்டைக்குப் பலமுகங்கள் !!



அகப்படுதலுக்கான
எந்த மூகாந்திரமும் இல்லாமலேயே
தபால்காரத் தந்தையும் நானும்
தேடுகிறோம்.


எங்களுக்கு
அகப்படவே இல்லை.
அந்த
மஞ்சள் முகத்தின்
மின்னஞ்சல் .முகவரி !!


இன்று உலக தபால் தினம்.


                                            சி.குருநாதசுந்தரம்..


Thursday 6 October 2016

மனிதக் கொம்புகள்.



ஒரு
நண்பகல் நகர்வு.


சொற்களினூடே பயணிக்கிறேன்.
நகர்வுகளில் நன்மையேதுமில்லை.


சொல்லாழத்தில் முகிழ்த்து,
மூழ்கியிருந்த தருணம்,


நகர்வுகளில் மந்தம்.
தலைகவிழ்ந்த தலையொன்று
நகர்வுப் பாதையின் குறுக்கே
மந்தகாசமாய் படுத்திருந்தது.


தலையின் நடுவில்
கொம்புகள்  முளைத்திருந்தன..
கொம்புகளில்
நகர்வை நிறுத்தப்புகும் ஆவேசம்.


தன்சுயம் தோற்ற
தன் கொம்புகளால்
அது
சுயமிழந்திருந்தது..


என்
நகர்வுகளில் வேகம்.


கொம்புகளின் எக்காளம்.


என் நகர்வுகளில்
எதிரெதிராய்
நானும் அக்கொம்புகளும்.


உணர்த்தலில்லா தடைகளற்ற
இளமைச் சமமின்மையில்
கொம்புகளில் குதூகலம்.


பின்னொரு
நண்பகல் நகர்வில்
தன்சுயமிழந்த கொம்புகள்
ஏதோ ஒரு நகர்வினால்
வெட்டப்படலாம்..

அப்போது
தலைகவிழ்ந்திருக்கும் தலை
தலைநிமிரச் சற்று சிரமாயிருக்கும்.



                                  ---   சி.குருநாதசுந்தரம்.