பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 2 November 2014

கடித இலக்கியம்









             ஒன்பதாம்வகுப்பு - துணைப்பாடம் - தம்பிக்கு - மு.வ. அவர்கள் எழுதிய கடிதத்தின் பாடத் தயாரிப்பில் இருந்த எனக்கு கடித இலக்கியத்தின் மீது ஒரு தேடல் ஏற்பட்டது. அதனை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

                    கடித இலக்கியம் என்று, ஒன்று தனியாக தமிழில் இல்லை. தமிழ் இலக்கிய வகைமையில் தொன்மையானதாக கருதப்படும் காப்பியப்பண்புகளில் ஒன்றாக - கடிதத்தின் மூலம் கருத்துக்களைத் தெரிவிக்கும் மரபு இருந்தது தெரியவருகிறது.
                    பொதுவாக கடிதம் என்னும் எழுதுமுறை தகவல் பறிமாற்றமானது, தனிமனிதனால் எதிரில் இருப்பவரிடம் பேசமுடியாத சூழல் ஏற்படும்பொழுது - அதாவது பயத்தின் காரணமாகவோ அல்லது அச்சம், மடமை என்றுச் சொல்லக்கூடிய மனித உணர்ச்சிகளின் அப்பட்ட வெளிப்பாடுகளை, அவ்வபொழுது அப்படியே வெளிப்படுத்திவிட முடியாத சூழலின் காரணமாகவோ எழுத்து மூலம், அந்த கருத்தை அல்லது உணர்ச்சி வெளிப்பாட்டை புலப்படும் முறைமையாக கடிதங்கள் செயல்படுகின்றன. இவ்வாறு எழுதப்பட்ட கடிதங்களின் கூட்டுத்தொகுப்பு பிற்காலச்சூழலில் கடித இலக்கியம் என்னும் ஒரு தனிநிலை வகைமையை உருவாக்கியது எனலாம். இப்படித்தான் கடிதம் என்னும் சொல்லானது இரு மனிதர்களுக்கிடையே எழுத்து வடிவில் நடைபெறும் செய்திப்பரிமாற்றமாக LETTER என்ற ஆங்கிலச் சொல்லாட்சியால் அழைக்கப்படுகிறது.
கடிதம் -  இலக்கியமாதல் :
                    முதலாவதாக மாதவி கோவலனுக்கு எழுதிய இரு கடிதங்கள்தமிழ் இலக்கிய உலகில் நமக்குக் கிடைக்கும் இலக்கியக் கடிதங்களாகும். அதனைத்தொடர்ந்து சீவனுக்குக் காந்தருவதை எழுதிய மடல், பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் திருமுருகப் பாசுரங்கள் போன்றவற்றை பூராணக்காலத்துக் கடித இலக்கியத்திற்கான உதாரணங்களாகக் கூறலாம். அதற்குப்பிறகு மறுமலர்ச்சிக்கால இலக்கியங்கள் வெளிவரத்தொடங்கிய பொழுது, மஹாகவியின் சீட்டுக்கவி, இடைக்காலத்தில் எழுந்து பின்னர் தொகுக்கப்பட்ட பாட்டு மடல்கள் போன்றவற்றைக் குறிப்படலாம். இக்காலச் சூழலில் தான் அந்தகக்கவி என்னும் கடிதவகை இலக்கியம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அந்தகக்கவி எழுதியதில் வீராகவர் முதல் மஹாகவி பாரதிவரை ஒரு நீண்ட வெற்றிக்கண்ட மரபு இருப்பது கவனிக்கத்தக்கது. இவர்களுக்குப்பிறகே உண்மையில் கடிதங்கள் வெளியாகத் தொடங்கின. அந்தவகையில் உலக அளவில் வெளியான - லிப் அரசனை வரவேற்று அத்தீனிய மக்களுக்கு எழுதிய கடிதங்கள், உரோமானிய பெருந்தகையாளர் சிசாரோ (கி.மு.106 – 43), ஸ்பென் நாட்டைச் சேர்ந்த செனாகா (கி.மு.4 – கி.பி.65), பாசில் (கி.மு379 – 330), சாக்ரட்டீஸ் (கி.மு.436 – 338), டால்ஸ்டாய், பாஸ்டன் (கி.பி.1422 – 1509)., ஜேம்ஸ் ஹோவல் (கி.பி.1594 – 1666), டோரத்தி ஆஸ்பான் (கி.பி.1627 – 1695), சாமுவேல் ரிச்சர்ட்சன் (கி.பி.1689 – 1761), ஹோரஸ் வால்போல் (கி.பி.1717 – 1799), செஸ்டர்ஃபீல்டு (கி.பி.1774 – 1787), பமேலா, மெக்காலே, அடிசன், பர்த், கோல்டு ஸ்மித், பைரன் கீட்ஸ், ஸ்விப்ட்,  பெர்னாட்சா, போன்ற அறிஞர்களின் கடிதங்கள் கடித இலக்கய உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர்களைத்தொடர்ந்தே தமிழகத்தில் சுவாமி விவேகாநந்தர் அமெரிக்கா சென்றிருந்த பொழுது இந்தியாவிலுள்ள அவர் நண்பர்களுக்கு எழுதியக்கடிதங்கள், அண்ணல் காந்தியடிகள் பல்வேறு சூழ்நிலைகளில் எழுதிக் குவித்துள்ள எண்ணற்றக் கடிதங்கள், நவஜீவன், சவர்கர்லால் நேரு போன்றோர் சிறையில் இருந்த காலச்சூழலில் அவர்கள் வீட்டில் இருப்போர்களுக்காக எழுதியக்கடிதங்கள் என கடிதஇலக்கியக் குறிப்புகளாகப் பார்க்கப்படுகின்ற மரபு உருவானது என்பது  குறிப்பிடத்தக்கது.  இந்த வகையான ஒரு நீண்ட வரலாற்றியல் தன்மையில் தான் கடிதம் - இலக்கியமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
தமிழில் கடித இலக்கியம் :
             இராமலிங்க அடிகளார் எழுதிய திருவருட்பா ஐந்தாவது புத்தகம் மற்றும் திருமுறை பகுதி 1932 ஆகியன கடித எழுதியதகாகச் சொல்லப்படும் முதல் தமிழ் அடையாளங்களாகும். அதைத்தொடர்ந்து, தனிநிலையாக மறைமலையடிகளார் எழுதிய மடல்கள், டி.பே.சி, டாக்டர் மு.வரதராஜன், வாவே.சு ஐயர், ஜீவா, கண்ணதாசன் ஆகியோரைக் குறிப்படலாம். இவர்கள் எழுதிய கடிதங்களில் சமயம், பண்பாடு, கலாச்சாரம், மனித மாண்பு, தமிழ் உணர்ச்சி, தமிழ் ஆர்வம், இன்னும் அன்னைக்கு, அண்ணனுக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, உழைப்பாளர்களுக்கு, உடனிருந்த நட்பர்களுக்கு என வகைப்படுகின்றன.
திராவிட இயக்கத்திற்கு முன் - கடித இலக்கியங்கள் :
                    தமிழகச் சுழலில் கடித இலக்கியமரபு முதலில் மொழியாக்க மரபாகத்தான் தோன்றியுள்ளது. உலக நாடுகளில் உள்ள முக்கிய அறிஞர்களின் கடிதங்களை இங்கிருந்த முக்கிய மொழிபெயர்பாளர்கள் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர். அவர்களுள் சுப்பிரமணிய சிவம் (1916), சி.ரா.வெங்கட்ராமன் (1941), கா.அப்பாதுரை (1949), அ.இராமசாமி (1964), வெ.சாமிநாதசர்மா (1965) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் வெளியிட்ட மொழியாக்கக் கடிதங்கள் ஒருவகையில் பொதுநிலைப் பண்பு கொண்டவைகளாக இருந்தன. கடித இலக்கிய ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்புகள் இக்கடித இலக்கியங்களில் ஆங்காங்காக் காணப்படுவதால் இதனை தனிநிலை கடித வகைமைக்குள் அடக்க முடியவில்லை. ஒருவகையில் இக்கடிதங்கள் வரலாற்று தகவல்களைத் தரும் ஆவணங்களாகப் பார்க்கப்படும் சூழலும் இன்று நிலவுகிறது. எனவே இதேக்காலகட்டத்தில் தனிநிலை கடிதங்கள் என்ற ஒருவகை தோற்றம் கொள்கிறது. இராமலிங்க அடிகள் (1932), மறைமலையடிகளின் கடிதங்கள் (1957), டி.கே.சி யின் கடிதங்கள் (1961), சத்தியமூர்த்தி (தீரர்) தன் மகள் இலக்ஷ்மிக்கு எழுதிய கடிதங்கள் (1967) ஆகியவற்றை தனிநிலைக் கடிதங்களாகப் பார்க்கலாம்.
                    மேற்கண்ட தனிநிலை, பொதுநிலை என்ற இரண்டு வகையாக கடித இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே இன்று கடித இலக்கியத்தின் வகைமைகளாகக் குறிப்பிடப்படும்,
1.   தனிநிலை அல்லது உண்மைக்கடிதங்கள்
2.    அலுவல் கடிதங்கள்
3.   பொதுநிலை அல்லது புனைவியல் கடிதங்கள்
4.   வெளிப்படை கடிதங்கள்

என்னும் வகைபாடு தோன்றியுள்ளது.    
                    உண்மையில் தனிநிலைக் கடிதங்களைக் காட்டிலும் பொதுநிலைக் கடிதங்கள்தான் பல்வேறு வகையில் இலக்கியங்களுக்கான பங்களிப்பை ஆற்றியுள்ளன. இதற்கு திராவிடத்தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் கடித இலக்கியங்களே சாச்சியம்.
              பொதுவாகவே இலக்கியம் என்ற சொல் தனிநிலைக்குச் சொந்தமானது அல்ல. தனிமனிதனால் உருவாக்கப்பட்ட இலக்கியமானலும் கூட அஃது இலக்கியம் என்ற பெயரடையோடு எப்பொழுது வெளிவருகிறதோ அப்பொழுதே அதுஒரு சமூகத்துக்கானதாக மாறிவிடுகிறது. இதைதான் சுஜாதா,
ஒரு கதையோ கட்டுரையோ எழுதிய பின் அது ஒரு காட்சிப்பொருளாக பரிசோதனை  சாலையாக மாறிவிடுகிறது. எழுதும் வரைத்தான் அது கதை, கவிதை, கட்டுரை அப்பொழுதுதான் அது எழுத்தாளனுக்கு சொந்தமானது. அதன்பின் அது ஒரு பிரதி TEXT. (சுஜாதா., தமிழ் அன்றும் இன்றும்., ப.133, உயிர்மை பதிப்பகம், 2004)

என்று குறிப்பிடுவார். அந்தவகையில் சுத்தானந்தபாரதியார் எழுதிய வீரத்தமிழருக்கான கடிதங்கள், திரு.வி.காவின் 47 அறிஞர்களுக்கான கற்பனைக்கடிதங்கள், கருமுத்து தியாகரானின் காந்தியம் மற்றும் சுதந்திரம் குறித்தக் கடிதங்கள் ஆகியவற்றில் டாக்டர் மு.வரதராசன் எழுதிய கடிதங்கள் மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவை இலக்கியத்தமிழுக்கானதாக இருந்தது என்பதுதான். மு.வ.சிந்தனைகள் அனைத்தும் இலக்கியச் சிந்தனைகளாக - தலைச்சிறந்த இலக்கியவகையான கடித இலக்கியத்தின் மூலம் வெளிப்பட்டிருப்பது கடித இலக்கிய வளர்ச்சியில் டாக்டர் மு.வ.க்கான ஒரு தனியிடத்தைப் பிடித்துத்தந்துள்ளது. அதேபோல தம் கடிதஇலக்கியத்தின் மூலம் தனித்த இலக்கிய வகைமையினையும் தனக்கானக் கருத்தாக்கங்களையும் கட்சியினையும் வளர்த்தெடுத்தவர்கள் அறிஞர் அண்ணாவும், கலைஞர் மு.கருணாநிதியும் என்றால் அது மிகையாகாது.  

கடித இலக்கியங்கள் குறித்த முன்னாய்வுகள் :
                    வ.வே.சு.ஐயரின் பாலபாரதம் கண்ணதாசனின் தென்றல் ஆகிய இதழ்களில் வெளியான கடிதங்கள் முதல்தான் கடித இலக்கியங்கள் சேகரிக்கப்பட்டன. எனவே இலக்கிய உலகில் ஆய்வும் அதுமுதலே தொடங்குகிறது. கடித இலக்கியம் தொகுக்கப்பட்ட பிறகும் அதன் மீதான ஆய்வுகள் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மேற்கொள்ளப்படவில்லை.
டாக்டர் நா.சஞ்சீவியைப் பதிப்பாசிரியாகக் கொண்டு  சென்னை, பல்கலைக்கழகம் வெளியிட்ட இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் (1974) என்னும் நூலில் டார்டர் மு.வி. வின் கடித இலக்கியம் என்னும் கட்டுரையொன்று இடம் பெற்றுள்ளது. 15 பக்கங்கள் கொண்ட இக்கட்டுரையை மா.செ எழுதியுள்ளார். சு.த திருநாவுக்கரசின் அறிஞர் அறவாழி (1978) என்னும் நூலில் கடித இலக்கியம் என்னும் கட்டுரை ஒன்று இடம் பெறுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆய்வாளர் பட்டத்திற்காக முத்துசண்முகம் என்பவர் மு.வ.வின் கடித இலக்கியங்களை ஆய்வு செய்து ஆய்வேடாக வெளியிட்டுள்ளார். அதோடு தமிழில் இதுவரை வெளிவந்துள்ள உண்மைக் கடிதங்கள் மற்றும் புனைவியல் கடிதங்கள் ஆகியவற்றை ந.கடிகாசலம் உள்ளடக்க நோக்கில் ஆராய்ந்து கடித இலக்கியக் கொள்கைகள் என்னும் கட்டுரையினை விரிவாக எழுதியுள்ளார். (எம்.ஆர் ரகுநாதன்., இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்., ப.20,ஸ்ரீ செண்பகாப் பதிப்பகம், சென்னை, 2010)
அண்ணாவின் கடிதம் - இலக்கியம் :
                    தமிழர்தம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, அரசியல் ஆகிய அனைத்து வாழ்வியல் துறைகலும் தம்மரபை, அடையாளங்களை, இழந்த நிலையில் அதனை ஒட்டுமொத்தமாக மீட்டெடுக்க போராடிய எழுத்துக்களுக்கு உரிமையாளர் அறிஞர் அண்ணா. இவர் மறுமலர்ச்சிக்காலத்தைச் சேர்ந்தவர்தான். இவர் இலக்கிய படைப்பாளியாக இருந்தபோது ஒரு சமூக சீர்திருத்தவாதியாக, அரசியல் தலைவராக, இலக்கிய போராளியாக, என எத்தனைனோ வெளிப்பாட்டுமுகம் கொண்டவராக இருந்திருக்கின்றார். ஒரு சமுதாயத்தின் சீர்திருத்த இயக்கத்தையும், அரசியல் இயக்கத்தையும் ஒரு இலக்கியமாகவும் குடும்பமாகவும் பார்க்கத்துணிந்த பார்வை அறிஞர் அண்ணாவின் படைப்புப்பார்வை. அதனால் அவர் எடடா தம்பி பேனா, யான் ஏதுசெய்வேனடா? என்று கேட்டபோது அவரோடு சேர்ந்து, அவரது தம்பிகளாக அவருடனிருந்த கலைஞர் மு.கருணாநிதியும் திராவிடத்தோழர்களும் கைகோர்த்தனர். அதனால் திராவிடக் காலத்திற்கென்று சொல்லத்தகும் இலக்கிய ஒன்று உருவானது, அது புதியதொரு மறுமலர்ச்சிதனை இப்புவிதனில் உருகொள்ளச்செய்தது. மக்கள் மத்தியில் தமிழக அரசியலை மாற்றியமைக்க கட்டமைத்த இலக்கிய சொற்போராட்டங்களும்,  தமிழ் மொழியின்  துணையோடு மக்களை சென்று சேர்ந்த பிராச்சார அரசியலும் திராவிட இயக்கத்தவர்கள் கொண்டவந்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது.    
திராவிடக்காரர்களின் கடித இலக்கியத்தில்… :
அண்ணா  -
அண்ணா தன் எண்ணங்களையும், செயல் திட்டங்களையும்,  நெறிமுறைகளுக்கான மேற்கோள்களையும் தன் கடிதங்கள் மூலம் வெளியிட்டு அறிவையும் இன உணர்ச்சியையும் ஊட்டப்போராடியவர் (அண்ணாயிசம்., ப.26)
என்று அறிஞர் அண்ணாவைப் பற்றி டாக்டர் கு.விவேகாநந்தன் தன் நூலில் குறிப்பிடுகின்றார்.
                    அண்ணா தான் முதல் முதலாக 1938 ஆம் ஆண்டு விடுதலை நாளேடுகளில் சில கடிதங்கள் எழுதியுள்ளார். அவ்வாறு அவர் முதலாவதாக எழுதிய கடிதம் ஆடி அடங்கினிரே அலகாபாத் பண்டிதரே என்னும் கடிதமாகும். இந்த கடிதத்திற்குப் பிறகும்
அண்ணா பரதன் மடல் என்ற பெயரில் சில கடிதங்களை எழுதியுள்ளார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் - அறிஞர் அண்ணா., ப.108., சாகித்திய அகாதமி வெளியீடு., புதுடெல்லி., 2001)
என்று அண்ணாவின் கடிதங்கள் குறித்து ஆய்வு செய்த, க.சண்முகசுந்தரம் குறிப்பிடுகின்றார். இந்த கடிதங்களில் சில கிழமை நாளேட்டில் வந்தவைகளாக இருக்கின்றன. அதற்குப் பிறகு  25–04-1943 முதல் அண்ணா தானே ஆசிரியராக இருந்து நடத்திய திராவிடநாடு என்னும் வாரஇதழில் அண்ணா தன் கடிதங்களுக்கு எழுதிய பதில்களாக பதினோரு (11) கடிதங்களும், 08-05-1955 க்குப் பிறகு வாரந்தோறும் அண்ணாவே முன்வந்து எழுதிய கடிதங்களாக சுமார் 171 கடிதங்களும், அதற்கும் பிறகு தம்பிக்கு என்ற பெயரில் 21-07-1964 முதல் காஞ்சி இதழில் வாரந்தோறும் 119 கடிதங்களும் என மொத்தமாக 290 கடிதங்கள் எழுதியுள்ளார். இதுமட்டுமல்லாமல் அண்ணா Home Land, Home Rule ஆகிய ஆங்கில இதழ்களில் Dear Brother என்ற அழிப்போடும் சில கடிதங்களை எழுதியிருக்கிறார். மொத்தமாக அண்ணா 3000 பக்கங்கள் கடிதங்களாகவே எழுதியிருக்கக்கூடும் ஏனெனில் இவர் கடிதங்கள் 1969 இல் வெளிவந்த பொங்கல் மலர் வரை நீண்டிருக்கின்றன.
                    அண்ணா தன் கடித இலக்கியத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தவரின் கருத்துக்களை அறிவதற்கும், இயக்கத்தின் ஆக்கப்பணிகளை மேற்கொள்ள இயக்கத்தினரின் இசைவினை கோறுவதற்கும், அதே நேரத்தில் தம் இயக்கத்தொண்டர்களுக்கு இவ்வுலகத்தில் சமகால நடவடிக்கைகளை அறிவிப்பதற்கும் என ஒரு இலக்கிய வடிவமாக பயன்படுத்தியுள்ளார். அண்ணாவின் ஒட்டுமொத்த கடித இலக்கியத்தின் அடிப்படை நோக்கமாவது மக்களாச்சி முறையிலேயே சமதர்மநெறி நடைமுறைக்கு வரவேண்டும் என்பதும், பொருளாதார சமத்துவத்தின் அடிப்படையில் அரசு இயக்கவேண்டும் என்பதுமாகும். இதற்கான அறிவிப்புகளையும் செயலாக்கங்களையும் அண்ணா தான் எழுதிய கடிதங்களின் இலக்கியப் புலப்பாடுகளாகக் கொண்டுசென்றுள்ளார்.
திராவிடக்காரர்களின் கடித இலக்கியத்தில்… :
கலைஞர்  -
             கலைஞர் கடித முறையில் சேதிகளை எழுதும் உத்தியைக்கைவரப்பெற்றவர். பொன்முடி என்னும் தலைப்பிலிருந்து துவங்குகிறது டாக்டர்கலைஞரின் கடித இலக்கியம். (முரசொலி பொவிழா மலர்., நாள் : 30– 07–1954., .177)அதைத்தொடர்ந்து அவர் எழுதிய கடிதங்கள் முறையே அன்பு நண்பா (17 – 04 – 1971); என்உடன் பிறப்பே (18 – 04 – 1971) என்று நீள்கின்றன. பொதுவாக கலைஞர் எழுதியகடிதங்களை கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.
அவையாவன :
1.   மறவன் மடல்கள்
2.   மூனாகானா மடல்கள்,
3.   முக்காஜி மடல்கள்,
4.   தென்னவன் மடல்கள்
5.   தமிழன் மடல்கள்
6.   யாரோ மடல்கள்
7.   உடன் பிறப்பு மடல்கள்.

             காலந்தோறும் கலைஞர் கருணாநிதியின் கடிதங்கள் பல்வேறு தலைப்புகளில்வெளிவந்துள்ளன. அதிலும் இன்றும் பாராட்டத்தாகவும், நிலைகொண்டதாகவும் இருப்பதுஉடன் பிறப்பே எனும் தலைப்பில் அவர் எழுதிய இக்காலக் கட்டத்தைக் குறிக்கும்கடிதங்களாகும். கலைஞர் உடன் பிறப்பே என்ற தலைப்பில் எழுதிய கடிதங்கள்அனைத்திலும் முற்போக்குச் சிந்தனைகளையும் பொது மக்களிடையேயான மூடநம்பிக்கைகளையும் வெளிப்படுத்தி முழுமையான பகுத்தறிவு கருத்தாக்கங்களாகவிளங்கின.
             பொதுவாக கலைஞரின் எழுத்துக்கள் சுருக்கமானதாகவும், தெளிந்தகருத்தாழம் மிக்கதாகவும் இருக்கும் தன்மை பெற்றன. அவ்வகையில் அவர் எழுதியகடிதங்களும் அதற்கு விதிவிளக்கானவைகள் அல்ல. அதன் கீழ் கலைஞர் கருணாநதியின்கடிதங்கள் பல்லோராலும் பலவாறு பாராட்டத்தக்க கடிதங்களாக இருக்கின்றன. அதனைஅவரே தன் கடித இலக்கித்தொகுதிகளை (பத்து) வெளியிட்ட பொழுது எழுதியஎன்னுரையில் குறிப்பிடுகின்றார். அவையாவன :
குமுறல்  கொந்தளிப்பு  கவலை  கலக்கம்  ஏமாற்றம்   துரோகம்இப்படி  ஈட்டிகள் என் இதயத்தில் பாய்ந்து என் இதயத்தை ரணமாக்கியுள்ளன. அந்தரணம் ஆற்றிடும் மருந்தாகத்தான் எனது எழுத்துக்கள் பயன்பட்டிருக்கின்றனபயன்படுகின்றன.
முரசொலி இதழில் கலைஞரின் கடிதமே பிரதானமானது.  அதற்காகவே வாசகர்கள் அவ்விதழுக்கு உண்டு. (திரு.வி. மலரும் மாலையும் என்ற நூலிலிருந்து.,.264)
தமது இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் இலக்கியச் சுவையுடன்அரசியல் கருத்துக்களைத் தெரிந்துக்கொள்ளும் வகையில் கடித இலக்கியத்தின் வழிஇணைப்புப் பாலமாகக் கலைஞர் விளங்கியிருக்கிறார். இதனால் பொதுமக்கள் மத்தியிலும்,அரசியல் வித்தகர்கள் மத்தியிலும், இலக்கிய உலகிலும் புகழ்பெற்று ஓர்புதுமையைக்கண்டவராக இவர் திகழ்கிறார். 
             கலைஞரின் இந்த கடித இலக்கியம் உருவாகக் காரணமானவர் அறிஞர்அண்ணா. அண்ணா திராவிட நாடு என்னும் இதழில் தம்பிக்கு என்ற தலைப்பில்தொடங்கி எழுதிய பல்வேறு கடிதங்கள் தான், கலைஞர் கடித இலக்கியம் எழுதவும்அவருக்குள் கடித இலக்கியம் என்ற ஒன்று வளர்ச்சியடையவும் காரணமானது.
அண்ணா  - கடித இலக்கியத்தில் இலக்கியங்கள் :
                    தொல்காப்பியம், தொடங்கி தற்கால இலக்கியங்கள் வரை கற்றுத்தேர்ந்தவர் என்ற வகையில் அறிஞர் அண்ணாவின் கடிதங்களில் எல்லா வகையான இலக்கியத்தாக்கங்களும் காணக்கிடைக்கின்றன.  தமிழ் மரபு, தமிழிலக்கிய வரலாறு, தமிழ் என்னும் மொழிக்கான வளம், தமிழ்ர்களின் வாழ்வியல் முறைமைகள், பண்பாடு கலாச்சாரம் என தமிழ் நூல்களின் சிறப்பம்சங்களும் தமிழ்களின் மீதான பற்றும் போராட்டமும் நிறைந்தவைகளாக அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் இருக்கின்றன. அண்ணா தன் கடிதங்கள் பலவற்றிலும் திருக்குறளை மேற்கோள்காட்டியுள்ளார். சங்க இலக்கியக் குறித்தக் கருத்துக்கள் சிலவற்றை முழுமையாக அப்படியே ஏற்றுக்கொண்டு; இன்னும் சில இடங்களில் அவைகள் கற்பனையாகப் புனையப்பட்ட இலக்கியங்கள் என்று அவற்றை கைவிட்டும் எழுதியிருக்கின்றார். அண்ணா அகம், புறம் என்பதற்கு உணர்ந்து மகிழ்வது அகம் என்றும்; பகிர்ந்து மகிழ்வது புறம் என்றும் தனித்தன்மையில் விளக்கம் தந்துள்ளார்.
                    அண்ணாவின் மொழிநடையோடு இரண்டற கலந்த பாங்கு கதைச்சொல்லும் பாங்கு. அதற்கான வலுவான மொழிப்பயன்பாடும், நாட்டார் இலக்கியங்கள் மற்றும் மனிதர்கள் கையாளுகின்ற பழமொழிகளும் அடுக்கடுக்காய் அறிந்துவைத்திருந்தவராக அண்ணா திகழ்ந்திருக்கின்றார். அண்ணாவின் கடித இலக்கியத்தில் பெருவாரியான இடத்தைப் பிடித்திருப்பவைகள் அவர் கையாண்ட கதைகளும், நாடகத்தன்மையிலான உரையாடல்களும் ஆகும். ஒரே ஒரு கடித்திற்குள்ளாகவே அண்ணா நான்கு கதைகளை இணைத்திருக்கும் சிறப்புப் பொருந்தியக் கடிதம் கதைக்குள் கருத்தளிக்க என்னும் கடிதமாகும். இக்கடிதத்திற்குள்
1.   மரக்கொத்தியும் குருவியும்
2.   அவரைக் கொடியும் குழந்தையும்
3.   மகிழம் பூசும், பூசணைப்பூவும்
4.   கோடிவீட்டுக் கருப்பு ஆடு

என்னும் நான்கு கதைகளையும் நான்குவிதமான கருத்துக்களை விளக்கும் விதமாக பயன்படுத்தியுள்ளார். அதேபோல் அங்கில கதைகள் சிலவற்றை சுருக்கமாக மொழிபெயர்த்து தன் கதைகளில் பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக விவிலியன் கதை, ஒருகிழவியின் கதை என்னும் கதை பயன்பாடுகளைக் குறிப்பிடலாம். இன்னும் இதுபோலவே,
மாமியார் வீட்டில் சிம்மினி தின்ற கதை (த., அக.,  தொ.3.,ப.157); மல்லன் கதை  (த., அக., தொ.3.,ப.31); கிழப்புலிக் கதை (த., அக., தொ.3.,ப.47); ஆப்பசைத்த மந்தி கதை (த., அக., தொ.3.,ப.97); அண்ணன் தம்பிகள் ஆறுதல் சொல்லப்போனக்கதை (த., அக., தொ.3.,ப.122); இந்திராணி சேலைக்கதை (த., அக., தொ.3.,பக்.130-133); முரடன் கதை (த., அக., தொ.3.,ப.226); ஆகிய மிக முக்கியமான கதைகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.(இந்திய இலக்கியச் சிற்பிகள் - அறிஞர் அண்ணா., ப.110., சாகித்திய அகாதமி வெளியீடு., புதுடெல்லி., 2001)
அதேபோல் நெல்லிக்காய் முட்டை, மனிதன் என்னும் இரண்டு நெடுங்கதைகளையும் அண்ணா தம் கடிதங்களில் எழுதியுள்ளார். இவ்வாறு எழுதும் பல்வேறு கதைகளின் தலைவனாக அண்ணாவே இருப்பது அவர் கூறவரும் கருத்தை வலுசெய்வதாக அமைக்கும்.
                    அண்ணாவின் கடிதங்களில் இலக்கிய நணிச் சொட்டும் தன்மை என்பது எப்பொழுதும் இருக்கும் ஒருதனிமரபாக தெரிகிறது. அதற்கான உதாரணங்களாக,
·          பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று
·          கட்டுவது காவி, தொட்டு இழுக்கிறான் பாவி
·          இல்லாமல் பிறவாது; அள்ளாமல் குறையாது
-    என்றமைந்த சொல்லழகு.
·          கைப்புண்ணுக்குக் கண்ணாடியா?
·          புயலும் அடிக்க வேண்டும் மரமும் விழக்கூடாது.
-    என்றமைந்த பொருளாழங்கள்.
·          கூடா நட்பு கேடாய்முடியும்
·          போதும் என்ற மனமே புன்செய்மனம்
·          இடிகண்ட நாகமாக
·          பலாப் பழத்தை ஈ மொய்ப்பது போல

      என்றமைந்த நீதியும் உவமைச்சிறப்பும் இருக்ககாணலாம்.
மேற்கண்ட இலக்கிய பண்புகளோடு அண்ணாவின் கடிதங்களில் இருபதாம் நூற்றாண்டிற்குப் பிறகான முக்கிய அறிஞர்களின் கருத்துக்களும் பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் வாக்கிய வரியமைப்புகளும் ஆங்காகாங்காணபடுகின்றன. அதோடு கடிதம் ஒன்றை எழுத முன்வரும் பொழுதே அறிஞர் அண்ணா அந்த கடிதம் எதைப்பற்றியது என்று ஒரு கதையைச் சொல்லுவிட்டு எழுதத்தொடங்கும் பண்புகொண்டவராக இருந்திருக்கின்றார். இப்பண்பு சில கடிதங்களில் குட்டி குட்டி நாடகங்களை இயற்றும் அளவிற்கு நீண்டிருப்பதையும் காணமுடிகிறது.  
கலைஞர்  - கடித இலக்கியத்தில் இலக்கியங்கள் :
             கடித இலக்கியம் என்ற இலக்கியம் இன்றளவில் தனித்த இலக்கியவகைமையாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இவ்விலக்கியம் கதையாகவும்நாவல்களாகவும், பயணக் குறிப்புகளாகவும் இருந்திருக்கிறது. பயணம் செல்லும்சூழலையும்  அதன் மூலம் பெறப்படும் அனுபவங்களையும் கூட மடல் எழுதும்தன்மையில் படைத்துக்காட்டியவர்கள் கவிஞர் கண்ணதாசனும், சோமலேயும் ஆவர்.அதேபோல் நாவல் இலக்கியத்தை தொடக்கத்தில் ஒரு கடித இலக்கியத்திற்கானபாணியில் அமைத்து வந்தவர் மறைமலை அடிகள் உதாரணமாக அவரதுகோகிலாம்பாள் கடிதங்களைக் குறிப்பிடலாம். அதேபோல் டாக்டர் மு.வரதராசனார்செந்தாமரை என்னும் நாவலைக் குறிப்பிடலாம். அவ்வகையில் கடித இலக்கியத்தை ஒருகட்டுரை இலக்கியமாக படைத்தவர் கலைஞர் மு.கருணாநதி ஆவார். அறிஞர்அண்ணாவைப் பின்தொடர்ந்து, உடன் பிறப்பே என்ற தலைப்பில் கலைஞர் எழுதியகடிதங்கள் அனைத்தும் உரைநடையின் செல்வாக்கைப் பரைச்சாற்றும் கட்டுரை இலக்கியவடிவத்தில் எழுந்தவைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கலைஞர் எழுதியகடிதங்கள் மொத்தம் (369) பத்து தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
             பேரறிஞர் அண்ணாவைப் போலவே தான் எழுதிய கடிதங்கள் அனைத்திலும்கழகத் தொண்டர்களுக்கான அறிவுரைகளையும் நாட்டு நடப்பையும் தொடர்ந்து சொல்லிச்சென்றவர் கலைஞர் மு. கருணாநதி.
உடன் பிறப்புக்கான கழகக் கண்மணிகளுக்குக் கூறவேண்டியவைகளை  அவர்களை முன்வைத்து நாட்டிற்கும், சமுதாயத்திற்கும்சொல்லவேண்டியவற்றை உணர்வுடன் வெளியிட இந்த கடிதம் எழுதும் முறை எனக்குபயன்படுகின்றது        (சு.சண்முகசுந்தரம், கலைஞர் கலை இலக்கியத்தடம்., .258)என்று குறிப்பிட்டுள்ளார்.
கலைஞரின் கடித இலக்கியத்தில் காணலாகும் இலக்கியவாதிகள் :
                   நண்பா! உடன்பிறப்பே!! என விளித்து எழுதியது தொடங்கி,இன்னணம், மறவன் என முடிக்கும் வரையிலான கலைஞரின் கடித உத்திகள் அத்துனையும் இலக்கிய வகைமைக்கு வளம் கொழிக்கும் தன்மை பெற்றவைகளாகும்.
                   அரசியல், இலக்கியம், பொருளாதாரம், மொழி, இனஉணர்வு,இனப்பிரச்சனை எனப் பல்வேறு கூறுகளைப் பற்றி எழுதும் பொழுதும் சரி, மேடைகளில் பேசும் பொழுதும் சரி கலைஞரின் தமிழிலக்கிய பற்றினை நம்மால் உற்றுநோக்க முடியும்.மேலும் கலைஞர் தன் எண்ணங்களை, சிந்தனைகளை வெளிப்படுத்த தமிழ் இலக்கிய மேற்கோள்களை எடுத்தியம்புவதை இயல்பாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவ்வகையில் தான் கலைஞரின் கடிதங்கள் சில தமிழ்ச்சான்றோரின் கவிதைகளோடு தொடங்கப்பட்டிருக்கின்றன. அதிலும் இவரது சில கடிதங்கள் முழுமையாகவே தமிழ் இலக்கிய மாண்பினை வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.கணியன் பூங்குன்றனார், ஓரேருழவர்ம் காவற்பெண்டு, பூங்கணுத்திரையார்,நல்விளக்கானார், செம்புலப் பெயனீரார், பிசிராந்தையார், பொத்தியார், மருதனிளநாகனார்,ஆவூர் மூலங்கிழார், பொதும்பில் கிழார், இடைக்காடர், குறுங்கோழியூர்க்கிழார், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார், அள்ளூர் நன்முல்லையார், கணைக்கால் இரும்பொறை,ஓரம்போகியார், சாத்தந்தையார், ஐயூர் முடவனார், மீனேறி தூண்டிலார், காவன் முல்லைப் பூதனார், மீளைக் கந்தனார் போன்ற எண்ணற்ற சங்கப் புலவர்கள் படைத்தப் பாக்களையும்,திருவள்ளுவர், இளங்கோ, பட்டினத்தார், சிவவாக்கியர், கம்பர், திருமூலர், ஔவை,சுந்தரம்பிள்ளை, ..சி, பாரதி, பாரதிதாசன், தியாகராஜபாகவதர், கோபலக் கிருஷ்ணப்பாரதி, பொன்னிவளவன், குருவிக்கரம்பைச் சண்முகம், அப்துல் ரகுமான் போன்ற தமிழ்ச் சான்றோர்கள் படைத்த இலக்கியங்களையும் கலைஞர் காலமாற்றங்களோடு கற்று தேர்ந்திருந்ததினால் இவரது கடித இலக்கியங்கள் அவைகளை ஆங்காங்கே தாங்கிச் சிறக்கின்றன. தான் கற்ற இலக்கியங்களை எல்லாம் தாம் வெளிப்படுத்தும் சுயமரியாதைச் சிந்தனைகளாகவும், இயக்கப் போராட்டங்களுகான கருக்களாகவும் மாற்றியவர் அல்லது மாற்றத்தெரிந்திருவந்தவர் கலைஞர்.
             கலைஞர் தம் கடிதங்களில் அடிக்கடி பயன்படுத்தி இருக்கும் இரண்டு முக்கிய இலக்கியங்கள் இங்கு குறிப்படத்தக்கன. ஒன்று உடன் பிறப்பே என்று கழகத்தோழர்களை அழைக்கும் பொழுது அவர்களை இவர் புரிந்துணர்த சூழலை விளக்க,
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புல பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
                               செம்புலப் பெயர்நீரார் குறுந்தொகை., 40.
என்ற பாடலையும், அதேபோல், நண்பர்களுக்கான விளக்கமாக,

யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும்  யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்! எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
- நாலடியார்

இலக்கியத் தேடலில் புதிய இலக்கியம் காணல் :
                    கடித இலக்கியத்தின் மூலம் அந்திக் கலம்பகம் என்னும் புதிய இலக்கிய  முயற்சியினை அண்ணா மெற்கொண்டிருக்கிறார்.
அந்திக்கலம்பகத்தை புதுமுறைத் தொடராக அளிக்க எண்ணி இருக்கிறேன்.  கோடுகள் தயாராகி விட்டன. வடிவம் விரைவில். வண்ணமும் கூட்டிட இயலும்      (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்., தொ.5., ப.123)
என்று அண்ணாவே அவர் உருவாக்க இருக்கும் புதியவகை இலக்கியத்தைப் பற்றி இனியன பல இனி என்னும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கடித இலக்கியத்தில் கலைஞர், தமது எழுத்துக்களில் பல்வேறு விதமான தமிழ் இலக்கிய தன்மைகளைக் கையாண்டவர்.
நமது எழுத்துக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுத்திட்டங்களை அலட்சியப்படுத்தி விட்டு கரையுடைத்துக் கிளம்பும் காட்டாற்றுப் பெருக்காக இருந்திடவில்லை (அந்தீணி குருசு., ப.40)
இந்த வரிகளின் தன்மை ஒவ்வொரு தொண்டனையும் வீறுகொண்டு எழச்செய்யும் எழுத்தாக விளங்குகிறது.
வழக்குச் சொற்களை கொச்சை நீக்கி எழுதுதல், எளிய தமிழ் சொற்களைப் பயன்படுத்துதல்; நெருக்கமாக அமர்ந்துக்கொண்டு கருத்துக்களைப் பரிமாறல்; சிறுசிறு தொடர்களாக அடுக்கி அழுத்தம் கொடுத்தல் (தடுக்க நடை) (அந்தீணி குருசு., ப66., 1998)
  போன்றன இவரது எழுத்துக்களுக்கு அடையாளமாக விளங்குகிறது.
நிறைவாக :
             பொதுவாக கடித இலக்கியம் கட்டுரை, நாட்குறிப்பு, நெடுங்கதை, விளக்கக் கதைகள், சிறுகதை, நாடகம், துணுக்குகள் என பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியதாக இருப்பது வழக்கம். இது கடித இலக்கியத்திற்குரிய பண்புகளில் ஒன்றும் கூட. அதற்குள் திராவிட இயக்கத்தலைவர்களான அறிஞர்அண்ணாவின் கடிதங்கள் மற்றும் கலைஞர் மு.கருணாநிதியின் கடிதங்கள் அரசியல், சமூகம், இலக்கியம், கலை, நாடு, இனம், மொழி, பண்பாடு என்பனபோன்ற கருத்தியல்களையும் சேர்த்து பிணைந்தவாறு அமைந்திருக்கின்றன.
             அண்ணாவின் எல்லாக் கடிதங்களும் பொதுநிலைக் கடிதங்களுக்கான பண்பாக கருதப்படும் நாட்டுநடப்பு, உலகியல் நிலை, ஊரார் உறவு முதலானவற்றை முதலில் பேசுவதாக அமைந்திருக்கிறது. அதோடு கூடவே அண்ணாவின் தனிப்பண்பான சமயச் சடங்குகள் குறித்த எள்ளல், மணமுறை செயலாக்கங்கள், சமூக கட்டாக்கங்கள் மீதான மீறல் அல்லது கேள்விகள் என்பன போன்ற கருத்துக்களையும் சொல்லத்தவறுவதாக இல்லை. சமூக மற்றும் சமயம் குறித்த திராவிடக் கருத்துக்களைக் கூறும் வடிவமான - கலைஞர் கருணாநிதியின் கடித இலக்கியத்தில் ஒருவித சொற்பொழிவு பாணியைக் காணமுடிகிறது. இம்முறை மனிதன மனங்களில் நேரடியான தாக்கத்தையும், வாசகரிடையே ஒருவிதமான சோர்வற்ற தன்மையினையும் ஏற்படுத்தியதால் வெகுசுலபமாக திராவிட இயக்கம் கடித இலக்கியத்தின் மூலம் மக்களைக் கவர்ந்து ஒரு மக்கள் இலக்கியமாக உருமாற்றம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்க அரசியலாக அமைந்திருக்கிறது.
             அன்பும் பண்பும் அறிவும் தெளிவும் அதற்கேற்ற சொற்றிறமும் வெளிப்பாட்டுமுறையும் (பேச்சித்திறம்) அதோடு சேர்ந்த எளிமையும், இனிமையும் ஒருங்கே சேர்ந்ததுதான் அண்ணாவின் கடிதங்களும், கலைஞரின் கடிதங்களும்.அதில் செந்தமிழ்ச் சிந்தனைகளும், மக்களுக்கான ஆதங்கக் கதரல்களும் குமுறல்களும், கவலைகளை துறத்தும் எள்ளல்களும் அணியணியாக வாசிக்கும் வாசகருக்குள் ஒருவித எதிர்பார்ப்பைத் தொடர்ந்து தூண்டுவனவாக அமைந்திருக்கின்றன. 
             அண்ணாவிடமிருந்த அரசியல் அறிவு, சமூக அக்கறை, படைப்பாற்றல், திராவிடச் சிந்தனைகள், போர்குணம் போன்ற யாவையும் அண்ணாவின் கடித இலக்கியம் ஒருசேர தெரிவிப்பவைகளாக விளங்குவதால் கடித இலக்கிய வரலாற்றில் அண்ணாவின் கடிதங்கள் என்றும் தனிச்சிறப்புடையவைகளாக விளங்கும் தகுதி பெற்றவை எனலாம். இதற்கு சிறந்த உதாரணமாகத்தான் அறிஞர் அண்ணாவை பின் தொடர்ந்து வரும் கலைஞரின் கடிதங்களும் எல்லா விதத்திலும் அறிஞர் அண்ணாவை நிறைவுறுத்துவதாக அமைந்திருக்கின்றன.