பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 11 July 2013

முடியாமையின் இயலாமை :


பள்ளிப்பணி சார்ந்த பணிப்பளுவின் காரணமாய் எழுதவில்லை. நீண்ட நாள்களுக்குப் பின் என் பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கவியரங்கம் நிகழ்த்தப்பட்டது. அக்கவிதைகளை இடுகையிட்டுள்ளேன். தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

காமராசரின் பள்ளிச்சோறு.

நான்
பள்ளிக்கூடத்துச் சோறு.

ஏழைச் சிறுவனை
புத்தகம் சுமக்கவைத்த
பேராண்மையின் சோறு.

எழுத்துகளைத் தொடுகையில்
ஒட்டிக்கிடக்கும் வயிற்றுள்சீண்டும்
பட்டினி வலியினைப் போக்க
பள்ளிச்சிறுவனின் தட்டில்
பெருமளவு நிறைகிறேன்.

உணர்வை உதாசீனப்படுத்தும்.,
ஏழ்மை விழிகள் வீழ
குடிசைச் சிறுவனின்
இரைப்பையில் விழுகிறேன்.

சோறில்லாத் தட்டுகளில்
புத்தகப்பைக் கனவு
மெய்ப்படாத சாத்தியத்தை
மெய்யாய் உணர்ந்தவரின்
மெய்ப்பொருள்
நான்.

கிழிசலுடைச் சிறுவனின்
குறுந்தட்டில்
நான் விழும்போது
அறியாமை வீழ்ந்ததையெண்ணிச்
சிலிர்க்கிறேன்.

எண்ணெயில்லாத தலைகளை
ஏற்றமுடையதாய் மாற்றிய
எளிமைச் சிற்பியின்
எண்ணம் நினைத்து
வியக்கிறேன்.

குடிசைக்குள்ளிருந்து கல்வியொளி
ஒளிர்வதையெண்ணி
கர்மவீர்ரின் கரம்பற்றி
வணங்குகிறேன்.

பள்ளிச் சுவர்களில்
பசிநீங்கிய பெருங்கதை
பதிவு செய்யப்பட்டபோது..
பெருந்தலைவரின் பேரன்பும்
பதிவு செய்யப்பட்டது.

அகரம் படிக்கும்
அன்புச் சிறுவனின்
கடைவாயில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
என் நிழலில்
சரித்திரம் எழுதும்,

பாரதியின் கவிதை
இங்கே தான்

உயிர்பிக்கப்பட்டது

காமராசரின் செருப்பு.

நான்
சாதனைத் தலைவனின்
செருப்பு.

வரலாற்றுச் சுவடுகளைச்
சுமக்கும் பேற்றினை
நான்
பெருமையாகச் சுமக்கிறேன்.

நான்
அறுபட்ட தருணங்களில்
அண்ணலின் கரங்களால்
அறுவை சிகிச்சை செய்துகொள்கிறேன்.

சுமை
எனக்கு என்றுமே
கசந்ததில்லை.

சுகம்
எனக்கு என்றுமே
கனத்ததில்லை.

சேறுகளில் நான்
மூழ்கி எழும்போது
சேரிகளின்
மூச்சு மலருவதுண்டு.

படிக்காத மேதையின்
பாதங்களைப் பாதுகாப்பதில்
இராணுவக் கடமையின்
மேன்மையுடன் உயிர்க்கிறேன்.

ஐவகை நிலங்களின்
மண்துகள்கள் என்னுள்
எப்போதும் ஒட்டிக்கொண்டேயிருக்கும்.

ஓடிக்கொண்டேயிருக்கும் கால்களைப்பார்த்து
நான்
களைப்படைந்ததேயில்லை.

ஓடத்தின் கவிழ்தலில்
காற்றைச் சபிக்காத
கர்மவீரரின் தன்னம்பிக்கை
என்னுள் எப்போதும்
பரவியிருக்கும்.

புழுதிக் கால்களுடன்
பயணிக்க
நான் பதிலியாய்ப்
பலநேரங்களில் அனுப்பப்பட்டிருக்கிறேன்.

சபிக்கப்படும் செருப்பு
சாதனைத் தடங்களை
சுமக்கையில் மட்டும்
அரியணை ஏறுவதுண்டு.

என்னை
அரியணை ஏற்றிய
அற்புத மனிதரின்
அடுத்த பிறவியிலும்
நான்
அவரையே சுமக்க வேண்டும்.

வறுமைவலியை விரட்டும்
வித்தகரின்
விரல்வலியை விரட்ட

என்னைத்தவிர யாருளார்?

காமராசரின் நாற்காலி

நான்
மக்கள் தலைவனின்
மேன்மை நாற்காலி.

என்னில்
அமரும் சூழல்களை
என்றுமே கர்மவீர்ர்
விரும்பியதில்லை.

ஒவ்வொரு
அமர்தல் நிகழ்கையிலும்
ஆயிரம்ஏழைக்கு வேலையும்
ஆயிரம்உழவனுக்கு விதையும்
அண்ணலால்  உறுதியாக்கப்படும்.

நான் நகர்ந்ததைவிட
என்
நாயகனின் நகர்தல்
நீண்டு கொண்டேயிருக்கும்.

தரை
பலநேரங்களில்
என்இடத்தைப் பிடித்துக்கொள்வதால்
சுற்றுப் பயணங்களில்
நான் பலமுறை
உதாசீனப் படுத்தப்பட்டிருக்கிறேன்.

ஏழைக் குடிசையின்
கயிற்றுக் கட்டிலின்
சிரிப்புச் சிம்மாசனம்
என்னுள்ளே
எப்போதாவதுதான் நிகழ்வதுண்டு.

ஏழையின் மனங்களில்
ஏற்றத்தினை மலரச்செய்ய
உருவாக்கப்பட்டவனென்று
கர்மவீரரால்
நான்
போற்றப்பட்ட நிமிடங்களில்
என்னுள்ளே
பெருமகிழ்வு பொங்கும்.

என் பெருமையும்
என் பொறுமையும்
என் பயணமும்
என்
வரலாற்றுவள்ளலின்
வாழ்வுப்பக்கங்களில்
காற்புள்ளியாகவே
நீண்டிருக்கும்.

நான்
நிரந்தரமில்லையென்று என்னிடம்
கர்மவீர்ர் கூறுகையில்
நான் மறுத்துச் சொல்வேன்.

நான்
நிரந்தரமானவன் இல்லைதான்
ஆனால்
நீ
என்றும் நிரந்தரமானவன்.


காமராசரின் கதர்ச்சட்டை

நான்
கருப்புத் தங்கத்தின்
கதர்ச்சட்டை.

என்
நூலிழைகள்
கருணையினால் நூற்கப்பட்டவை.

என்
காவிய நாயகனின்
குடிசைப் பயணத்தின் போது,
சகதிகளின் ஓவியமும்
சாக்கடை நாற்றமும்
என்மேல்
தங்கிவிடுவதுண்டு.

வறுமை
வளமையாகும் வரை
இத் தங்கல்கள்
சட்டையைச் சார்ந்திருக்கும்.

சிலநேரங்களில்
ஏழையின்
வாழ்வுப் பொத்தான்கள்
சரிசெய்யப்படும் வரை

என்
உடைந்து போன
சட்டைப் பொத்தான்களைச்
சரிசெய்ய அனுமதி மறுக்கப்படும்...

என்
சட்டைப்பையில்
எப்பொழுதும் ஏழையின்
விண்ணப்பங்கள் மட்டுமே
நிரம்பியிருக்கும்.

ஏழைக்குழந்தைகளின்
அன்பு அவசரங்களில்
நான்
பலமுறை கிழிந்திருக்கிறேன்.

ஒட்டடைகளாய்த் தங்கிவிட்ட
கிழிசல்களையும் அழுக்குகளையும்
என்
கர்மவீர்ர் என்றுமே சட்டைசெய்ததில்லை.

ஏழைக்குச் சட்டை
கிடைக்க வேண்டுமென்பதற்காக
நான்
பலமுறை
பிரார்த்தனை செய்திருக்கிறேன்.

அப்பொழுதுதான்
நான்
அழகுச் சட்டையாக

சரிசெய்யப்படுவேன்.

காமராசரின் கதர்த் துண்டு

நான்
காமராஜரின் கதர்த்துண்டு.

தமிழ்நாட்டு மக்களைத்
தோள்களில் சுமந்த
தூயவரின் தோள்களில்
என்னை நீங்கள்
பார்த்திருக்கலாம்.

கர்மவீரரின் உடைப்பெட்டியில்
அனுமதிக்கப்பட்ட
இரண்டு கதர்த்துண்டுகளுள்
நானும் ஒருவன்.

கர்மவீரரின் கைகள்
உடைப்பெட்டியைத் துழாவுகையில்
தூயவரின் கைகள்
என்னைத்
தொடுவதற்காய்த் தவமிருப்பேன்.
தொடக் காத்திருப்பேன்.

கர்மவீரரின் வைரக் கைகளால்
எடுக்கப்பட்டு,  
தோள்களில் நான்
அமரும் தருணங்களில்                                      
உலக இன்பத்தின் உச்சம்
என்னுள் படரும்.

என் சிறகுகள்
விரியும்.

எனக்கான இலக்கின்
எல்லை முடியும்.


வறியவர்களை
அவர் தழுவுகையில்
ஆயிரம் பூக்களின் வாசம்
என்னுள் பரவும்.

மக்கள் மதிக்கும்
தோளின் முடிசூடா மன்னன்
நான் மட்டுமே!

நான்
கிழிந்து நைந்து
உருக்குலைகையில்
என் குடிசை வீட்டில்
சுடரேற்றிய
சாதனைத் தமிழனின்
காற்செருப்புத் தூசுகளைத்
தூய்மையாக்கும் காவலனாய்
உடனிருந்து மரணிப்பேன்.


ஏனென்றால்..
நான்
துண்டல்ல….
தூயவன்.