பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday 18 February 2015

உலகத்தாய்மொழி தினம் - சிறப்புப்பதிவு.




தமிழே ! நறுந்தேனே !!


உலகத்தாய்மொழி தினம் - சிறப்புப்பதிவு.
தமிழே ! நறுந்தேனே !!
காலந்தோறும் மொழியில் மாற்றம் ஏற்படுகிறது. புதியன தோன்றுகின்றன. பழையன மறைகின்றன. இவை குற்றமில்லை. காலப் போக்கில் நேர்பவைஎன்பதை, 
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினான
என்று நன்னூல் நூற்பா குறிப்பிடுகிறது. மொழியின் வரலாறு என்பது காலப் போக்கில் நேர்ந்த மாற்றங்களை ஆராய்வதுதான் என்று சுருக்கமாகக் கூறலாம்.
 தமிழ்மொழி வரலாறு
தமிழ்மொழி பல்வேறு காலக் கட்டங்களில் எவ்வாறு இருந்தது என்று வரலாற்று அடிப்படையில் ஆராய்வது அவசியம். அவ்வரலாற்றினைக் கீழ்க்காணும் மூன்று கோணங்களில் அணுகலாம்:
·  தமிழ்மொழி அக வரலாறு
·  தமிழ்மொழி அகப்புற வரலாறு
·  தமிழ்மொழி புற வரலாறு
இவ்வாறு பகுத்துக் கொண்டு நுணுக்கமாக ஆராயும்போது முழுமையான பார்வை கிடைக்கும்; தெளிவு பிறக்கும்.
தமிழ்மொழியில் இடம் பெற்றிருக்கும் உயிர் ஒலியன்கள் (Vowels), மெய் ஒலியன்கள் (Consonants), சார்பொலியன்கள், பெயர்ச்சொற்கள் (Nouns), அடிச்சொல் (Root Morpheme), மூவிடப் பெயர்கள் (Pronouns), எண்ணுப் பெயர்கள் (Numerals), வேற்றுமை (Case), வினைச்சொற்கள் (Verbs), இடைநிலைகள் (Suffixes), தொடரமைப்பு முறைகள் (Syntactic Structures) முதலியன பழங்காலத்தில் எவ்வாறு இருந்தன ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எவ்வகை மாற்றங்களை அடைந்தன என்று 21ஆம் நூற்றாண்டு வரை பரிசீலிப்பதைத் தமிழ்மொழி அக வரலாறு என்று வரையறை செய்யலாம்.
சான்றாக,
எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
(தொல். எழுத்து. நூன்மரபு. நூ. 1)
எழுத்து என்பது தமிழில், ‘என்பதில் தொடங்கி ன்என்பது வரையிலான முப்பது என்று தொல்காப்பியத்தின் முதல் நூற்பா வரையறுக்கிறது.
ஒளகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப
(மேலது. நூ. 8)
அகரம் முதல் ஒளகாரம் வரை உள்ள பன்னிரண்டும் உயிர் எழுத்துகள் ஆகும்.
னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப
(மேலது. நூ. 9)
ககரம் முதல் னகரம் வரை உள்ள பதினெட்டு எழுத்தும் மெய் எழுத்துகள் என அன்று செய்த வரையறை இன்றளவும் தொடர்வதை நீங்கள் படித்திருப்பீர்கள். வியப்பாக இருக்கிறது அல்லவா? இதுபோல் வரலாற்று நோக்கில் ஆராய்வதைத்தான் 'தமிழ்மொழியின் அகவரலாறுஎன்று வசதிக்காக இப்பாடத்தில் வரையறை செய்யப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் தமிழ் ஒலியன், தமிழ் உருபன், தமிழ்த் தொடர் எங்ஙனம் இருந்தன என்பதை அந்தந்தக் காலக் கட்டத்துத் தரவுகளின் அடிப்படையில் ஆராயலாம். தொல்காப்பியர் காலத் தமிழில் ஒலியன், உருபன், தொடர் அமைப்பு எவ்வாறிருந்தன என்பதைத் தொல்காப்பியத்தையே அடிப்படையாகக் கொண்டு ஆராயலாம். சங்க காலத் தமிழ் எங்ஙனம் இருந்தது என்பதைச் சங்க இலக்கியங்களின் துணை கொண்டு ஆராயலாம். பல்லவர் காலத் தமிழ் பற்றி அறிந்து கொள்ளப் பக்தி இலக்கியத்தை உதவியாகக் கொள்ளலாம். சோழர் காலத் தமிழைப் பற்றி அறிய அவர்கள் வெளியிட்ட கல்வெட்டுகளைப் பயன்படுத்தலாம். இப்படி ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தமிழ்மொழி எவ்வாறு இருந்தது என்று ஆராய்வதைஅகப்புற வரலாறு எனலாம்.
தொல்காப்பிய விதிப்படி சகரம்' எந்தவொரு சொல்லுக்கும் முதல் எழுத்தாக வராது (எழுத்து. மொழிமரபு, நூற்பா. 29). ஆனால் சிலப்பதிகாரத்தில்  சகடு, சண்பகம், சதுக்கம், சந்தனம், சந்தி, சதங்கை,சக்கரம், சகடம், சங்கமன் போன்ற சொற்கள் சகரத்தை முதல் எழுத்தாகக் கொண்டு இடம் பெற்றுள்ளன.  அதேபோல் மணிமேகலையில் சம்பாபதி, சரவணம், சனமித்திரன், சரண், சலம்,சபக்கம், சண்பகம் போன்ற சொற்கள் உள்ளன. இவை போன்றவற்றை ஆராய்வது அகப்புற வரலாறு ஆகும்.
வெவ்வேறு மொழி பேசுவோர் கலந்து பழகும்போது ஒரு மொழியில் உள்ள சொற்கள் மற்றொரு மொழியில் கலப்பது உண்டு. அவ்வாறு கடன் வாங்கப்பட்ட சொற்கள் இல்லாத மொழியே உலகில் இல்லை என்பார்கள். அவ்வகையில் தமிழில் வந்து கலந்த பிற மொழிச் சொற்களின் கலப்புப் பற்றியும், ஒரு சொல்லுக்கு உரிய பொருள் ஒவ்வொரு காலத்திலும் மாறி வருவது பற்றியும், கிளைமொழிகள் பற்றியும் ஆய்வதைப் புற வரலாறு எனலாம்.
தண்ணீர்’, ‘நீர்’, ‘வெள்ளம்என்பன நீரைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். கடலில் மீன் பிடித்து வாழ்வதை வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்களின் மத்தியில்,
·  ஏறிணி
·  வத்தொம்
·  கலக்கு
·  தெளிவு
·  பணிச்சல்
·  மிதாவது
·  சுரப்பு
·  மேமுறி
என்று நீரைக் குறிக்கும் சொற்கள்இன்றும் புழக்கத்தில் உள்ளன. இதைப் பற்றி ஆய்வது புறவரலாறு எனல் பொருத்தம்தானே!
அதுசரி, தமிழ்மொழியை இப்படி எல்லாக் கோணங்களிலும், எல்லாக் காலக் கட்டங்களையும் முன்னிறுத்தி ஆராய்வதற்குச் சான்றுகள் வேண்டாவா? அவசியம் வேண்டும். மக்கள் எப்படிப் பேசினார்கள் என்பதை இன்று போல் கணினிக் குறுந்தகட்டில் பதிவு செய்யும் நிலை பழங்காலத்தில் இல்லை. என்றாலும் பிற வகைச் சான்றுகள் கிடைத்துள்ளன. பழங்காலத்திய கல்வெட்டுகள், இலக்கணங்கள், இலக்கியங்கள், உரையாசிரியர்கள், அகராதிகள், அயல்நாட்டார் குறிப்புகள் முதலானவை தமிழ்மொழி வரலாறு அறிய உதவும் சான்றுகளாகத் திகழ்கின்றன.
3.2 கல்வெட்டுச் சான்றுகள்
பழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல், ‘கல்வெட்டுஎன்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால் அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே நிலையில், சிறிதும் மாற்றமின்றி இன்றும் கிடைப்பது கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.
தமிழ்க் கல்வெட்டுகளில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமி கல்வெட்டுகள் மிகப் பழமையானவை. இவை குகைகளில் கண்டெடுக்கப்பட்டு்ள்ளன. பஞ்சபாண்டவர் மலை, மறுகால்தலை, திருப்பரங்குன்றம், கழுகுமலை, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் இக் கல்வெட்டுகளைக் காணலாம். பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளதால் இவை பிராமி கல்வெட்டுகள்என்று வழங்கப்படுகின்றன. குகைக் கல்வெட்டுகள்என்றும் அழைப்பர்.
கீழவளவு, ஆனைமலை, அழகர் மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, திருவாதவூர், விக்கிரமங்கலம், மாங்குளம், கருங்காலக்குடி, புகழூர், அரசலூர், மாமண்டூர் என்று பல இடங்களில் பிராமி கல்வெட்டுகள் உள்ளன.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அசோகர். அவர் காலத்துச் சமண, பௌத்த சமயங்கள் தென்னிந்தியாவில் பரவின. சமண, பௌத்த சமய நூல்கள் பிராகிருதம், பாலி மொழிகளில் இருந்தன. அவற்றின் எழுத்துகள் பிராமி வடிவில் இருந்தன. தமிழகத்தில் சமண, பௌத்தத் துறவிகள் குகைகளில் வாழ்ந்தனர். குகைகளில் உள்ள கல்வெட்டுகள் அத்துறவிகள் பொறித்தவை. எழுத்து பிராமி; மொழி தமிழ் என்பர். ஐராவதம் மகாதேவன், கே.வி. சுப்பிரமணியம், நாகசாமிபோன்றோர், இவை தமிழ் எழுத்துகள்என்கின்றனர். பொருள் கொள்வதிலும் பல விளக்கங்கள் உள்ளன. சான்றுக்கு ஒரே ஒரு குகைக் கல்வெட்டு வருமாறு:
அரிட்டாபட்டிக் கல்வெட்டு,
கணி இ ந தா ஸீரியகுல
வெள் அறைய் நிகமது
காவி தி இய் காழி திக அந்தைஅ
ஸதன் பிணாஊ கொடுபி தோன்
இதை மயிலை. சீனி. வேங்கடசாமி,
கணி நந்தாஸிரியற்கு
வெள்ளறை நிகமத்து
காவிதி காழிதி ஆந்தைய
ஸீதன் பிணாவு கொடுபித்தான்
என்று பிரித்து, ‘வெள்ளறை அங்காடித் தெருவில் வசிக்கிற காழிதி ஆத்தனுடைய மகன் கணி நந்தாசிரியற்கு பிணாவுகொடுப்பித்தான்என்று பொருள் கூறுகிறார். பிணா அல்லது பிணவுஎன்பதற்கு, பின்னப்பட்டது, முடையப்பட்டது, சாமரை, கற்படுகைஎன்று விளக்கம் தருகின்றனர். இருபத்தொரு இடங்களில் எழுபத்தொரு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொருள் கொள்வதில் வேறுபாடு இருந்தாலும், இவை பழந்தமிழுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
சோழர் காலத் தமிழை அறியக் கல்வெட்டுகள் பேருதவி செய்கின்றன. முதலாம் இராசேந்திரனின் மால்பாடிக் கல்வெட்டுகள்,தஞ்சைப் பெரிய கோயில் மதிற்சுவர்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், வீரராசேந்திரனின் திருமுக்கூடல் கல்வெட்டுகள். மூன்றாம் இராசேந்திரனின் திருவேதிபுரம் கல்வெட்டுகள் என்று ஆயிரக்கணக்கில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. வடசொற்களை எழுதினால், வடமொழி எழுத்துகளை அகற்றிவிட்டு, தமிழ் எழுத்துகளால் தமிழ் மொழி மரபுப்படி எழுத வேண்டும்என்ற இலக்கண வரையறையை நன்னூலில் காணலாம். பதவியல்என்று ஓர் இயலே அந்நூலில் உள்ளது. சோழர் காலக் கல்வெட்டுகளில் வடமொழிச் சொற்கள் தமிழாக்கம் செய்யப் பட்டிருத்தலைக் காணலாம்.
வடசொற்கள்
- கல்வெட்டுச் சொற்கள்
ஏகபோகம்
- ஒரு பூ
தாம்பூலம்
- சுருளமுது
கர்ப்பக்கிரகம்
- உட்கோயில், அகநாழிகை
பரிவர்த்தனை
- தலைமாறு
பரிவட்டம்
- சாத்துக்கூறை
நைவேத்யம்
- அமுதுபடி
அவிர்பலி
- தீயெறிசோறு
கும்பாபிஷேகம்
- கலசமாட்டுதல்

·  மெய்க்கீர்த்திகள்
மன்னன் இராஜராஜன் வெற்றிகளை எல்லாம் கல்வெட்டுகளில் குறிப்பிட்டு, ‘மெய்க்கீர்த்திஎன்று வெற்றிச் சிறப்பைப் பதியும் முறைக்கு வித்திட்டான். இம் மெய்க்கீர்த்திகளின் தொடக்கத்தை வைத்தே யார் காலத்தவை என்று கூறுமளவிற்கு மொழி அமைப்புக் காணப்படுகிறது.
அரசன் பெயர்
மெய்க்கீர்த்தி - தொடக்கம்
1)
முதலாம் இராஜராஜன்
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி
2)
முதலாம் இராஜேந்திரன்
திருமன்னி வளர இருநிலமடந்தையும்
3)
இராஜாதிராஜன்
திங்களேர் தருதன் தொங்கல்
4)
இரண்டாம் இராஜேந்திரன்
திருமாது புவியெனும்
5)
வீரராசேந்திரன்
வீரமே துணையா
6)
அதிராசேந்திரன்
திங்களேர் மலர்ந்தது வெண்குடை
7)
முதலாம் குலோத்துங்கன்
திருமன்னி விளங்கு
8)
விக்கிரம சோழன்
பூமாது புணர
9)
இரண்டாம் குலோத்துங்கன்
பூமன்னு பதுமம்
இவ்வாறு தெளிவான மொழி அமைப்பைக் காணலாம். உறுதி மிக்க சான்றாகக் கல்வெட்டுகள் விளங்குகின்றன.
பிறமொழியில் உள்ள கல்வெட்டுகள் கூடத் தமிழ்மொழி வரலாறு அறியத் துணை புரிகின்றன என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா? உண்மைதான். சிங்கள மொழியில் உள்ள கல்வெட்டில் தமிழ்ச் சொற்கள் உள்ளன. தமிழக இடப்பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதுபோலவே அசோக மன்னன் வெட்டிய கல்வெட்டுகளில், சோழர், பாண்டியர் தொடர்பான தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவ் வகையில் தமிழக மன்னர்கள் குறித்து வடநாட்டு மன்னர்கள் அறிந்திருந்தனர். தமிழகத்தில் மட்டுமன்றித் தமிழ் பேசுவோர் பிற பகுதிகளிலும் சென்று பழகும் இயல்பினராக இருந்தனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.
தமிழ்மொழி வரலாறு அறியச் செப்பேடுகளும் துணை புரிகின்றன. செம்பினால் ஆன தகட்டில் பொறிக்கப்படும் எழுத்துகள் செப்பேடுகள்ஆகும். இவை, சாசனங்கள் என்றும் சொல்லப் பெறும். சின்னமனூர், கூரம், பாகூர் ஆகிய இடங்களில் செப்பேடுகள் கிடைத்துள்ளன. எழுத்துகளின் வரிவடிவம், எழுதப்படும் முறை பற்றி அறிந்து கொள்ளலாம் அல்லவா? சான்றாக,


· 
கல்வெட்டுகளில் நீண்ட கோடு நெட்டுயிரையும் குறுகிய கோடு குற்றுயிரையும் குறிக்கின்றன. நெடில், குறில் வேறுபாடு இல்லை
· 
மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தப் படவில்லை.
என்று குகைக் கல்வெட்டுகள் பற்றிக் கூறலாம். உடம்படுமெய் இல்லாமல் உயிரெழுத்துகள் தொடர்ந்து எழுதப்படும் முறை பின்பற்றப்பட்டுள்ளது.
சான்று :
கோ இலுக்கு
- (கோயிலுக்கு)
ஆஇரம்
- (யிரம்)
கைஇல்
- (கையில்)
என்றே அமைந்துள்ளது என்றும் அறிய முடிகிறது. அல்லவா? (‘ய்என்பது உடம்படுமெய். இது இல்லாமல் எழுதப்பட்டுள்ளது)
·  அகழ்வாய்வுச் சான்று
அகழ்வாய்வில் கிடைக்கும் சான்றுகள் கூடத் தமிழ் மொழி வரலாற்றை அறியப் பயன்படுகின்றன. அரிக்கமேடு என்னும் இடத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் அகல் விளக்கு ஒன்று கிடைத்தது. அதில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் வருமாறு:


அகல் விளக்கு

முதிகு ழுர அன் அகல்
இதில் முதுகுழுரன் என்பது ஒருவரது பெயர். அகல் என்பது அகல் விளக்கு. முதுகுழூரன் என்பவருடைய அகல் என்று பொருள் கூறுகின்றனர்.
முதிகுழூரன் என்பது முதிகுழுர அன்
என்று எழுதப்பட்டுள்ளது என்பர். கல்வெட்டுகளில் அதை எழுதியவரது நடை இருக்கலாம். சாசனங்களில் செல்வாக்குடன் விளங்கிய மொழிநடை இருக்கலாம். மேலும் அக்காலத்திய பேச்சு நடையில் பயின்று வந்த பிறமொழிச் சொற்கள் கல்வெட்டுகளிலும்

காணப்படுகின்றன. அச்சொற்கள் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட காலத்தில் வழங்கப்பட்டவை என்று மதிப்பிடுவது கடினம் என்பார் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்.
 இலக்கணச் சான்றுகள்
தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். வழக்கு மொழிக்கும் செய்யுள் மொழிக்கும் உரிய இலக்கணத்தைச் சொல்லி, செய்யுள் அல்லது பாடல் இலக்கணத்தையும் கூறிடும் முழுமையான இலக்கண நூலாக அது உள்ளது.

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
(தொல். எழுத்து. நூன் மரபு-15)

உட்பெறு புள்ளி உரு ஆகும்மே
(தொல். எழுத்து. நூன் மரபு-14)

............................. ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும்................
(தொல். எழுத்து. நூன்மரபு-2)

என்று அந்நூல், வரி வடிவத்துக்கு இலக்கணம் கூறுகிறது.
, , , , ஒ.............ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து
(மேலது. 3)

, , , , ஐ ஓ, ஒள..... ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து
(மேலது. 4)

என்று குறிலுக்கும், நெடிலுக்கும் உச்சரிப்பு அளவு வரையறுப்பதில், ‘பேச்சு மொழி - ஒலி அளவுகூறுகிறது. தமிழ் மொழியின் கட்டமைப்பை விவரிக்கும் முழு இலக்கண நூல் தொல்காப்பியம்.தொல்காப்பியத்துக்கு முன்னரே இருந்த தமிழ்மொழி, அதன் அமைப்பு, தமிழ் இலக்கியங்கள், புலமை வல்லார் பற்றிய அனைத்துத் தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன. இதற்குப் பின் இலக்கண நூல்கள் பல தோன்றியுள்ளன. அவை முழுமையானவையாகத் திகழவில்லை என்றாலும் வெவ்வேறு காலத்திய தமிழைப் பற்றி அறியவும், ஆராயவும் உதவுகின்றன. அவ்வகையில் நேமிநாதம், வீரசோழியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் சோழர்கால மொழியமைப்பைப் பற்றி ஆராய உதவுகின்றன. முத்துவீரியம்சிற்றிலக்கியக் கால மொழி அமைப்பைப் புலப்படுத்துகிறது. 1680 இல் கோஸ்டா பால்த்சரா என்பவர் இலத்தீன் மொழியில் எழுதிய தமிழ் இலக்கண நூல், கால்டுவெல் எழுதிய, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல், சீகன் பால்கு எழுதிய தமிழ் இலக்கண நூல், வீரமாமுனிவர் எழுதிய தமி்ழ் இலக்கண நூல் முதலியன அந்நியர் வருகைக்குப் பின் தமிழ்மொழி அமைப்பைப் பற்றிப் புலப்படுத்துகின்றன. தமிழ்மொழியில் நேரிட்ட மாற்றம், வளர்ச்சி போன்றவற்றை இவற்றின் துணை கொண்டு ஆராய்ந்து அறிய முடியும்.
சான்றாகத் தொல்காப்பியத்தில் நிகழ்காலத்தைக் குறிக்க இடைநிலை ஏதும் சொல்லப்படாமல் இருப்பதையும், நன்னூல் என்னும் இடைக்கால இலக்கண நூலில்,
கிறு
- வருகிறான்
கின்று
- வருகின்றான்
ஆநின்று
- வாராநின்றான்
என்று மூன்று நிகழ்கால இடை நிலைகள் சொல்லப்பட்டிருப்பதையும் காட்டலாம். இது போல் அந்தந்தக் காலத்திய மொழியமைப்பை இலக்கண நூல்கள் விளக்க முற்படுவதால் அவை மொழி வரலாற்றுக்கு உதவும் சான்றுகளாகின்றன.
பிறமொழியாளர் தமிழுக்கு இலக்கணம் எழுதினர். அவர்களது நூல்கள் பேச்சுத் தமிழை அடியொற்றியமைந்தவை. கி.பி.1672 இல் டச்சுக்காரர் பால்தே என்பவர் தமிழ்மொழியின் உச்சரிப்புகள், வேற்றுமை, வேறுபாடுகள் முதலியவற்றை எழுதுகிறார். கோஸ்டா பாத்சரா என்பவர் இலத்தீன் மொழியில் எழுதிய தமிழ் இலக்கணம், கி.பி. 1686 இல்புருனோ எழுதிய இலக்கண நூல்’, வீரமாமுனிவர், கால்டுவெல், சீகன்பால்கு ஆகியோர் எழுதிய நூல்கள் முதலியன தமிழ் வரலாற்றைக் குறிப்பாகப் பேச்சுத் தமிழ் வரலாற்றைப் பற்றி ஆராயத் துணை புரிகின்றன. சான்றாக, மரபுத் தமிழ் இலக்கணங்களில் மூவிடப் பெயர்கள் தனியாகச் சொல்லப்படவில்லை. பெயர்ச் சொற்களிலேயே சொல்லப்படுகின்றன. ஆனால் மேலை நாட்டவரது இலக்கண நூல்களில், மூவிடப்பெயர் பெயர்ச்சொல்லின் தனி உட்பிரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அது போலவே, ‘எந்த வினைச்சொல் எந்த எந்தக் காலம் காட்டும் இடைநிலைகளைப் பெறும்என்பதையும் மேலை நாட்டாரின் நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. டாக்டர் கிரால் என்பவர் தமிழ் வினையடிச் சொற்களை அவை ஏற்கும் கால இடைநிலைகளின் அடிப்படையில் மெல்வினை, இடைவினை, வல்வினை என மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பகுக்கின்றார்.
· 
வகர எதிர்கால இடைநிலை பெறுவன மெல்வினை.
· 
பகர எதிர்கால இடைநிலை பெறுவன இடைவினை
· 
ப்ப் என்ற ஈரொற்றைப் பெறுவன வல்வினை.
என்கிறார். இதுபோல் பேச்சுத் தமிழைத் துல்லியமாகப் பரிசீலித்து எழுதப்பட்டுள்ள இடங்கள் பெரிதும் உதவுவன. இவ்விலக்கணங்கள் முழுமையானவை அல்ல. செம்மையானவையும் அல்ல; அயல்நாட்டார் புரிந்துகொண்ட வரையில் எழுதியவை என்ற அளவில் சான்றுகளாகக் கொள்ளத் தக்கவை.
தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியத்துக்குக் கிடைத்த பழைய உரை இளம்பூரணர் எழுதிய உரை ஆகும். அவர் மூன்று அதிகாரத்துக்கும் உரை எழுதி உள்ளார். சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பெயர் தெரியா ஒருவர் ஆகியோர் சொல் அதிகாரத்துக்கு மட்டும் உரை எழுதியுள்ளனர். நச்சினார்க்கினியர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், செய்யுளியல் ஆகியவற்றுக்கு உரை எழுதி உள்ளார். செய்யுளியல், மெய்ப்பாட்டியல், உவம இயல், மரபியல் (பொருளதிகாரம்) ஆகிய நான்கு இயல்களுக்கும்பேராசிரியர் உரை எழுதினார். இவ்வுரைகளும் மொழி வரலாறு அறிய உதவும் சான்றுகளாக உள்ளன. ஏனெனில், அவர்கள் நூற்பாக்களின் கருத்துகளை மட்டும் விளக்கவில்லை; ‘உரையில் கோடல்என்று தம் உரையில் தம் கால மொழியமைப்பு மாற்றம் பற்றிய செய்திகளையும் குறிப்பிட்டே எழுதும் போக்கை அவர்கள் கையாண்டதால், அவர்களது கால மொழியமைப்பையும் புலப்படுத்தும் சான்றுகளாக உரைகள் திகழ்கின்றன. சான்றாக, தொல்காப்பிய வினையியல் முதல் நூற்பா (சொல். 200) இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக்காலமும்எனக் காலங்கள் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று என்கிறதே அல்லாமல் காலம் காட்டும் இடைநிலைகளைச் சொல்லவில்லை. ஆனால் முக்காலங்களுக்கும் எடுத்துக்காட்டாக,
உண்டான், உண்ணாநின்றான் உண்பான்
என்பவற்றைச் சேனாவரையர் தருகின்றார் பிற உரையாசிரியர்களும் இவ்வாறே தருகின்றனர். ஆனால் தமிழ்மொழி வரலாற்றில் சங்க காலத் தொகை நூல்களில் இறந்தகாலம் வினைச்சொற்களில் தெளிவாக அமைந்துள்ளது. எதிர்காலம் தெளிவாக அமைந்துள்ளது. ஆனால் நிகழ்காலம் அமைந்திருக்கவில்லை. எதிர்காலமும், நிகழ்காலமும் இணைந்து அமைந்திருக்கலாம். நிகழ்காலம் பற்றிய தெளிவு உரையாசிரியர் கால வளர்ச்சியாக இருக்கலாம். அது போலவே தொல்காப்பியர் வியங்கோள் வினைமுற்றுக்கு ஈறு (ஈறு-இறுதியில் வரும் எழுத்து) கூறவில்லை. உரையாசிரியர்கேளா ஈறுகளைக் குறிப்பிடுகின்றனர்.
இளம்பூரணர், தெய்வச்சிலையார்
வியங்கோள் வினைமுற்று ஈறு - க
சேனாவரையர்
, யா, அல்
நச்சினார்க்கினியர், கல்லாடர்
, யா, அல், ஆல், ஆர், மார், உம், று
இவ்வாறு உரையாசிரியரது உரைகள் அவர்களது கால மொழியமைப்பை விளக்குகின்றன. அதனால் அவற்றை மொழி வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக் கொள்கிறோம்.
ஒரு மொழியில் சொற்களின் பொருளை அகர வரிசையில் விளக்குவது அகராதி ஆகும். தமிழில் உரிச்சொல் பனுவல், நிகண்டு, அகரமுதலி ஆகிய சொற்கள் அகராதியைக் குறிக்கின்றன. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற தமிழ் நிகண்டுகள் தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் கூறுவன. அவை செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. ஒன்பதாவது நூற்றாண்டில் தோன்றிய முதல் நிகண்டுதிவாகர நிகண்டு. இது ஒன்பதாயிரத்து ஐந்நூறு சொற்களைக் கொண்டுள்ளது. சொல்லுக்குப் பொருள் கூறி அகராதி இயலுக்குத் தொல்காப்பிய உரியியல் வித்திட்டது. ஒரு மொழிக்குப் பிறமொழிப் பொருள் கூறும் அடிப்படையில் அகராதிகள் தோன்றின. வீரமாமுனிவரதுசதுரகராதி கி.பி. 1782 இல் பதிப்பிக்கப்பட்டது. இதில் பன்னிரண்டாயிரம் சொற்கள் உள்ளன. அவர் ஏழு அகராதிகளை வெளியிட்டார். தமிழ்-போர்த்துகீசியம், தமிழ்-இலத்தீன், தமிழ்- பிரெஞ்சு, பிரெஞ்சு-தமிழ், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என்ற அடிப்படையில் அவை அமைந்தன சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியில் இலட்சத்து நாலாயிரத்து நானூற்று ஐந்து சொற்கள் உள்ளன.எமனோவும் பர்ரோவும் இணைந்து, திராவிடச் சொற்பிறப்பியல் அகராதியை வெளியிட்டனர். தமிழ் வேர்ச்சொல் ஆய்விலும்,
தமிழ் அகரமுதலி தயாரிப்பிலும் ஞா. தேவநேயப் பாவாணர்சிறப்பிடம் பெற்றவர். கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரை முயற்சிகள் தொடர்கின்றன. இவற்றிலிருந்து சொற்களின் பொருள் மாற்றத்தை அறியலாம். வேற்று மொழிகளில் எழுத்துப் பெயர்ப்புச் செய்யப்பட்டிருப்பதால் தமிழ்ச் சொற்களின் ஒலியமைப்பை ஓரளவு அறியலாம். சொற்பொருளியல் ஆய்வுக்கு



அகராதிகள் பெருமளவு உதவுகின்றன. சான்றாக, சொற்கள் பொருளில் அடையும் மாற்றங்களைப் பழந்தமிழ் என்ற நூலில் பேராசிரியர்இலக்குவனார் கீழ்க்கண்ட சான்றுகளின் மூலம் காட்டுவதைக் காணலாம்.
சொல்
பழம்பொருள்
புதுப்பொருள்
அகம்
உள், மனம்
கர்வம்
இறத்தல்
கடத்தல்
சாதல்
கண்ணி
மாலை
வலை
கிழவன்
உரியவன்
முதியவன்
கோடை
மேல்காற்று
வெயில் காற்று
மணிவிழா
அழகிய விழா
அறுபதாண்டுவிழா
இவ்வாறு மொழியில் சொற்களுக்குத் தோன்றும் புதுப் பொருளை அறியலாம். மொழியில் தோன்றிய புதுச் சொற்களைப் பரிசீலிக்கலாம். புதுச் சொல் அமைப்புகளை ஆராயலாம். இவற்றுக்கெல்லாம் வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்வதில் நிகண்டுகளுக்கும் அகராதிகளுக்கும் தக்க இடம் உண்டு.
3.4 இலக்கியச் சான்றுகள்
மொழி வரலாற்றை அறிய இலக்கியங்கள் உதவுகின்றன. தொல்காப்பியத்தில் காணப்பட்ட கூறுகள் சங்க இலக்கியத்திலும் காணப்படுகின்றன. சில மாற்றங்களைத் தவிரச் சங்க இலக்கியத் தமிழ் முழுக்க முழுக்கத் தொல்காப்பியத் தமிழே ஆகும்.
சான்றாக, வகரம் உ, , , ஓ என்னும் உயிர்கள் தவிர ஏனைய எட்டு உயிர்கேளாடு சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் என்கிறதுதொல்காப்பியம். அவ்வாறே, சங்க இலக்கியத்தில்,
வடுகர் - நற்றிணை 212
வாடை - நற்றிணை 5
விரல் - அகநானூறு 34
வீரர் - அகநானூறு 36
வெகுளி - பொருநராற்றுப்படை 172
வேந்தன் - அகநானூறு 24
வையை - மதுரைக்காஞ்சி 356
என்று வந்திருப்பதைச் சொல்லலாம். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்சங்க காலத் தமிழ்மொழி அமைப்பைச் சுட்டுகின்றன. நாலடியார்உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலமாகிய களப்பிரர் காலத் தமிழ்மொழி அமைப்பைப் புலப்படுத்துகின்றன.தேவாரம், திருவாசகம், நாலாயிரத்திவ்விய பிரபந்தம் முதலான நூல்கள் பல்லவர் காலத் தமிழ் மொழியமைப்பை விளக்குகின்றன.கம்பராமாயணம், பெரியபுராணம் முதலியன சோழர் காலத் தமிழ்மொழி வரலாற்றைச் சுட்டிக் காட்டுகின்றன. பிள்ளைத்தமிழ், உலா, குறவஞ்சி, பரணி முதலியனவற்றின் மூலம் நாயக்கர் காலத் தமிழ்வரலாறு அறியலாம். புதினங்கள், சிறுகதைகள் இக்கால மொழி வரலாற்றை அறியச் சான்றுகளாகின்றன. விளக்கமாக, தனித்தனிப் பாடங்களாகவே நீங்கள் இவற்றைப் படிப்பீர்கள். இவற்றின் வரிவடிவம் ஒலிப்பு முறையைக் காட்டப் போதுமானதாக இல்லை.
பேச்சு வழக்கில் அமைந்த இலக்கியங்களும் முக்கியமானவைதாம்.கட்டபொம்மன் கும்மி, ஐவர்ராஜாக்கள் கதை, இராமப்பய்யன் அம்மானை, சிவகங்கை சரித்திரம், பொன்னுருவி மசக்கைபோன்றவை பேச்சு வழக்கில் அமைந்தவை. சான்றாகப் பதினேழாவது நூற்றாண்டுப் பேச்சுத் தமிழைப் பற்றி இராமப்பய்யன் அம்மானைமூலம் அறியலாம்.
பேச்சுத் தமிழ்
பொருள்
அடைக்காய்
- பாக்கு
வெள்ளிலை
- வெற்றிலை
சம்பாரம்
- சாக்கு
விதனம்
- செய்தி
மன்னாப்பு
- மன்னிப்பு
கலனை
- சீனி
பேச்சு நடையில் எழுதப்படும் இலக்கியங்களும் மொழி வரலாற்றை அறிய உதவும். ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு நாவல் சென்னைப் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. நீல. பத்மநாபனின் தலைமுறைகள் என்னும் நாவல், குமரி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் பேச்சு வழக்கில் உள்ளது. அந்தந்த வட்டாரப் பேச்சுத் தமிழ் அமைப்பை அறிய இவை உதவுகின்றன.
நாட்டுப்புற இலக்கியங்கள் பொதுமக்களிடையே தமிழ்மொழி எங்ஙனம் கையாளப்படுகிறது என்பதைக் காட்டும் கண்ணாடிகளாக உள்ளன. அவை பேச்சு மொழியில் அமைபவை. நூறு பக்கத்தில் விளக்க வேண்டிய செய்திகளை ஓர் உவமை அல்லது பழமொழி சில சொற்களிலேயே விளக்கி விடும். நாட்டுப்புறக் கதைகள், பழமொழி, உவமை, விடுகதை, இசை சேர்ந்த தாலாட்டு, ஒப்பாரி, காதல் பாடல், தொழில்பாடல், குழந்தைப் பாடல், தெய்வப் பாடல் என்று யாவும் பேச்சுத் தமிழையும், தொன்மைக் கால வரலாற்றின் எச்சங்களையும் புலப்படுத்தும் சான்றுகளாக உள்ளன.
3.5 அயல்நாட்டார் குறிப்புகள்
அயல் நாட்டார் குறிப்புகளில் இடம் பெறும் தமிழ்ப் பெயர்கள், தமிழ்ச் சொற்கள் முதலியனவும் தமிழ்மொழி வரலாறு அறிய உதவும் சான்றுகளாகத் திகழ்கின்றன. கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தவரருசியும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பதஞ்சலியும் தம் வடமொழி நூல்களில் தமிழ்மொழிச் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர். பாண்டியர்என்னும் சொல் மகாபாரதத்து அரசரான பாண்டுவின் பெயரிலிருந்து வந்ததாக வரருசி கூறுகிறார். பாண்டி, சோழர் என்னும் தமிழ்ச் சொற்கள் அரசரையும், நாட்டையும் குறிக்கும் என்கின்றார். பதஞ்சலி காஞ்சி என்ற சொல்லைக் குறிப்பிடுகின்றார். பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த லீலா திலகம் என்ற மலையாள இலக்கண நூல் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் நிலவிய சில மொழி வழக்குகளையும், உச்சரிப்புகளையும் குறிப்பிடுகின்றது. மெகஸ்தனிஸ், ப்ளினி, தாலமி ஆகியோர் தம் நூல்களில் தமிழக ஊர்ப் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். கொற்கைநகரைக் கொல்சிஎன்றே கூறியுள்ளனர். இது தமிழ்ச்சொற்கள் பிற மொழியாளர்களால் எங்ஙனம் கேட்கப்பட்டன என்று உணர்த்துவதாகக் கொள்ளலாம். தாலமி மல்லியர்பாஎன்று சென்னைக்கு அருகில் உள்ள துறைமுகத்தைக் கூறுகிறார். இது, ‘மயிலாப்பூர்என்பதன் கிரேக்க உச்சரிப்பாகத் தோன்றுகிறது.யுவான்சுவாங், மார்க்கோபோலோ ஆகியோர் குறிப்புகளில் தமிழ்ச் சொற்கள் உள்ளன. 17 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த ராபர்ட்-டி- நொபிலி என்ற ஒலியை, ‘tch’ என்றே எழுதியுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் வந்த வீரமாமுனிவர் வை, ‘s’ என எழுதியுள்ளார். இங்ஙனம் தமிழ் ஒலியியல் மற்றும் மொழியியல் ஆய்விற்கு அயல்நாட்டார் குறிப்புகள் சான்றுகளாகத் திகழ்கின்றன.




தமிழ் மொழியின் நீண்ட வரலாறு அறிய வேண்டிய ஒன்று. அவ்வரலாற்றினை அறிதற்குத் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள குகைக் கல்வெட்டுச் சான்றுகள், மன்னர் செதுக்கிய கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள், பிறமொழியில் அமைந்த கல்வெட்டுகள், செப்பேடுகள், தமிழ் இலக்கண நூல்கள், பிறமொழியாளர் செய்த தமிழ் இலக்கணங்கள், இலக்கண உரைகள், இலக்கியங்கள், அயலார் குறிப்புகள் போன்றவை துணை புரியும் விதம் பற்றி ஆராயும் சூழல் நமக்லெல்லாம் உள்ளது. இவ்வுலகத் தாய்மொழி தினத்தில் தமிழின் பெருமைகளை உலகுக்கு உணர்த்தி நம் இன்தமிழ் வளம் காப்போம்.

நன்றி : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.