Saturday, 17 September 2016
Sunday, 11 September 2016
பாரதி........ தீ !!!
நினைவுகளில் என்றும்
உயிர்த்திருக்கிறாய்.
என்
நொடிகளில்
என்றும்
பயணிக்கிறாய்..
உனது
மீசை வைக்கும்
எனது எத்தனிப்புகள் மட்டும்..
தினந்தோறும்
தோற்றே
போகிறது.
உடற்கல்விப் பாடவேளையில்
இலக்கணம்
கற்பிக்கும் அவசரத்தில்
உன்
ஓடி விளையாடும் பாப்பாக்களை
ஒளித்து
வைத்தேன்..
மைதானத்தை
விட
மதிப்பெண்கள்
தானே முக்கியம் இங்கு !
பாதகம்
செய்பவரைக் கண்டால்
பயம் கொள்கிறது மனம் !!
பணத்துள்
மரணித்துவிட்டது..
மோதி மிதித்தல்கள் இங்கு !!
உமிழ்நீரும் வற்றிவிட்டது
!!
சிறகொடிந்த
குருவிகளும்
கரைய மறுத்த காக்கைகளும்
வயல் தேடும்
மாடுகளும்
ஆதரித்தலுக்காய்
அங்குமிங்கும் அலைகின்றன.
ஆங்கிலச் சுவையில்
உன்
அமிழ்தத்தமிழை
எங்கெனத் தேடுகிறது..
என்
மாணவ நாக்குகள்
!!
இருந்தாலும்
உன்
நெருப்புக்
கண்களையும்
துடிக்கும்
மீசையையும்
அச்சமில்லாத் தலைப்பாகையையும்
என்
மாணவனுக்குள்
தினமும்
பொருத்திப் பார்க்கிறேன்..
பொருத்துதலின் உயிர்ப்பில்
நீ
மீண்டும்
உயிர்ப்பாய் ..
என்னுள்
வாழ்ந்து கொண்டிருக்கும்
உன்
நினைவுகளுக்கு நன்றி
!!
சி.குருநாதசுந்தரம், புதுக்கோட்டை.
Sunday, 4 September 2016
ஆசிரியர் தின வாழ்த்துகள்
வாசம் !
வகுப்பறை
வாசமற்ற
நாள்கள்
என்னுள்
வசப்படுவதில்லை.
உதிர்ந்த
சுண்ணாம்புத் துகள்களுக்குள்
மாணவ
வாசம் தேடுகிறேன்.
புரிதலற்ற
விடைத்தாளுக்குள்
புரிதலின்
வாசம் தேடுகிறேன்..
பாடக்குறிப்பேட்டுக்குள்ளும்
மதிப்பெண்
பட்டியலுக்குள்ளும்
வாசம்
வசப்படுவதேயில்லை..
புத்தகங்களுக்குள்
ஒளித்துவைத்திருந்த
மயிலிறகில்
புத்தக
வாசமில்லையெனெ
புகார்க்கடிதங்கள்
மாணவரிடமிருந்து..
கற்பித்தலுக்குள்
என்
வாசம் தேடி
நெடுந்தூரம்
பயணிக்கிறேன்..
யாருக்கும்
தெரியாமல்
பறித்து
வந்த,
ஒற்றைச்
செம்பருத்தியை
என்னிடம்
தந்து,
வாழ்த்துச்
சொல்லிப் போனான்..
ஒன்பதாம்
வகுப்பு அஜய்.
கசங்கிய
பூவில் மணத்தது..
நான்
தேடிய
வாசம் !!!
ஆசிரியத்
தோழமைகளுக்கு வாழ்த்துகள்..
வாழ்த்துகளுடன்
சி.குருநாதசுந்தரம்.
Subscribe to:
Posts (Atom)