பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday, 16 February 2013

எரியும் மத்யமர்.


எரிபொருள் விலை
உயர்ந்துவிட்டதாய்
அறிவித்தது ஊடகம்.

இருசக்கர வாகனத்தை
வருடிவிட்டேன்.

என்னைச் சுமந்து
செல்லும் கர்வம்
எப்பொழுதும் அதற்குண்டு.

என்
கனத்தபார்வையின் வீரியத்தில்
என்னைக்
கவலையாய்ப் பார்த்தது.

நான் அதனைப்
புறக்கணித்துவிடக் கூடாதென்று
பரிதாபமாய்க் கெஞ்சியது.

கூடுதல் காந்தித்தாள்களுக்காய்
மாற்றுவேலை தேடவேண்டிய
தேடல் சலிப்பைக் கொடுத்தது.
.
மத்தியதரக்
குடும்பத்தலைவனாய் இருப்பதற்கு
மனம் பரிதாபப்பட்டது.

இயற்கையின் விற்பனை
இயல்பின்மைச் சூழலை
இலகுவாக்கியது.

தினப் பொருள்கள்
வாரப் பொருள்களாகவும்
இருசக்கர வாகனப்பயன்பாடு
இருமுறை மட்டுமென்றும்
ஒப்பந்தம் போடப்பட்டது.

மனைவியின் வெளிப்பயணம்
குழந்தைகளின் உணவுவிடுதிப்பயணங்கள்
ஒத்தி வைக்கப்பட்டன.

அழுக்கடைந்திருந்த மிதிவண்டியை
அவசரமாய் வெளியிலெடுத்துத்
தூய்மைப்படுத்துகையில்
அமைச்சரோடு
அறுபது மகிழுந்துகள்
அதிவிரைவாகப் போவதுகண்டு
என்
இருசக்கர வாகனம்
பெருமூச்செறிந்ததுகண்டு,
இதயம் கனத்தது

நானும் என் உணவுப்பையும்

கைக்குழந்தையாய்
என்னுடன் தவழும்.

எப்பொழுதும்
என்னுடன் இருக்கும்.

என்னைப் பிரிதல்
இதற்கு இயலாது.

இதனுள்

நண்பகல் உணவு,
நல்ல புத்தகம்,
நண்பர்களின் முகவரி
நாளையதிட்டங்கள்,

தண்ணீர்க் குவளை
தேனீர்க் காசு
திட்டக் குறிப்புகள்
தூய்மைத் துண்டு

எல்லாமும் இருக்கிறது.
என்றுமே கனத்ததில்லை.

என்னைச் சுமக்கும்
இதன் பிடியினை
நான்
குழந்தையைத் தொடும்
இலாவகமாய்க் கையாளுகிறேன்.

என்னையே
தூக்கிக்கொண்டு செல்வதாய்
நான் இதனைத்
தூக்கிக்கொண்டு செல்கிறேன்.

இதைச்
செப்பனிடுவதிலும்
சீராக்குவதிலும்
நான்
என்றுமே வெட்கப்பட்டதில்லை.

என்
குடும்பத்தைப் போலவே
நான்
என் உணவுப்பையைச்
சுவாசிக்கிறேன்.  

Wednesday, 13 February 2013

உணர்வுகளின் புன்னகை.


மின்னல் தீண்டிய
பார்வையின் சுகம்.

கருவிழிக் காந்தத்தில்
கனவுகளின் உயிர்ப்பு.

மேகக்கூந்தலின் சாரலில்
உணர்வின் விதை.

பிறைப் புருவத்தில்
விண்மீன் ஒளிர்ப்பு.

வளமான நெற்றியில்
வெண்ணருவிக் கீற்று.

கூர்மூக்கின் வாசலில்
பன்மலர் வாசம்.

ஓவியச் செவிமடலில்
ஊஞ்சலாடும் காதணிகள்.

கன்னக் குழிகளிலோ
அழகின் புதையல்.

இதழ்களின் அசைவினில்
இன்கவிதை உயிர்.

உணர்வுகளின் புன்னகை
உணர்ந்த நொடிகளுக்குக்..
காதலெனப் பெயரிட்டபோது..
குதூகலித்துத் துள்ளியது..
மனமும் என்னுலகமும்.

உதடுகளின் முகம்


எனக்கு ஒரு
நண்பன் உண்டு.

பருத்த வயிறு,
படியவாரிய தலை,
துணிந்த நடை,
தேடல் கண்கள்.

நாணயங்கள்
சிதறிய ஒலியாய்,
கலகலத்த மனம்,
கைகுலுக்கும் நேயம்.

விழி வலிக்காத
கோபம்.
வளையும் குணம்.

வார்த்தை வரிசை
மாறாத நேர்ப்பேச்சு.
வளமான நெற்றியில்
வசதியாய் அமர்ந்த
முடிக்கீற்று.

எல்லாம் என்னுள்
விமர்சிக்கப்படுவதுண்டு.

 ஆனால்
வெள்ளை இதழ்களின்
பின்புலத்தில் விரியும்
வெடிச்சிரிப்பு மட்டும்
என்னால்
அழகியலாக்கப்படும்.

நகையுணர்வு பரப்பும்
உதடுகளின் முகம்
உயிர்க்கும் அழகன்றோ ?

நானும் பேனாவும்


என்னைத்
தெரியப்படுத்தும் தூதுவன்.

மனிதர்களைப் போல
இதனுள்ளும்
பல வடிவங்கள்.

மனதை வருடும்
மன்மத எழுத்துகளை
என் பேனா ..
உருவாக்கும் வேளைகளில்
நான்
உங்களை வருடுகிறேன்.

என்
நாக்கு வறண்டிருந்தாலும்
என்
பேனாவின் நாக்கு மட்டும்
என்றுமே வறண்டதில்லை.

என்
பேனாவிற்கு மட்டும்
சுகமும் சுமையும்
சிரிப்பும் சோகமும்
சமமான நிகழ்வுகள்.

என்
ஆசிரியம் மெருகேறும்
அழகான தருணங்களில்
என் பேனாவை
வலியின்றி முத்தமிடுகிறேன்.

என்
மாணவனின் முதல்பரிசும்
என் பேனாவால்
மாணவனோடு கொண்டாடப்படும்.

என்
சட்டைப் பொத்தான்களைச்
சரிசெய்யும் நேரத்தைவிட
என் பேனாக்கூர்மையைச்
சரிசெய்யும் நேரம்
என்னுள் எப்போதும்
நீண்டுகொண்டேயிருக்கிறது