பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday 31 December 2012


புத்தாண்டு வாழ்த்துகள்

                       வெற்றியுடன் தொடங்குவோம் ! 
                        விழுதுகளைத் தாங்குவோம் !
2013    
2013     
2013     
2013     
2013

ஐயனின் ஐம்புலன்கள் ---- சி.குருநாதசுந்தரம்


பைந்தமிழ்தமிழ்த்தேர்ப்பாகன்பாரதிக்குப்பிடித்த பொய்யாமொழிப்புலவனின்பொய்யாமொழியில்பயணித்த    பொழுது,ஒருசிற்றனுபவம்இடறியது.அவ்வனுபவப்பகிர்வின்
உணர்வு பேரின்பமெய்தக் கூடியதாக அமைந்தது
 ஸ்டீபன் ஹாக்கிங் காலம் சார்ந்த பதிவுகளைக் கூறுவதற்கு முன்பே,
முதற்பாவலரின் வள்ளுவக் காலப் பதிவுகள் உலகை வியக்க வைத்தன. காலத்தின் உண்மைத் தன்மையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே
,” வாழ்நாளைச் சிறிதுசிறிதாக அறுக்கும் வாளே, நாளெனக்காட்டிச் சென்ற வள்ளுவத்தின் வாய்மை எண்ணினும் மேன்மையுடையது.
 நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
 வாள துணர்வார்ப் பெறின்.  _   [அறம்;துறவறவியல்;-நிலையாமை-334 ]
   வாயுறைவாழ்த்தில் பல வாழ்வுத்தளங்கள் கணினி நினைவகமாய் எண்ணிறந்து காணப்படினும் புறப்பொருள் சார்ந்த பல்வேறு விழுதுகளுள் ஐம்புலன்களைப் பற்றிய மேலறிவைப் பகிர்தலுக்காய் இக்கட்டுரையின் சூழல் நோக்கப்பட்டது.
 ஐம்புலனியக்கம் :
   மனிதனின் இயக்கச்சூழலில் புலன்கள் முதன்மைப்பங்கு வகிக்கின்றன. சமூகத் தகவல்தொடர்பிலிருந்து இல்லறநலம் மேம்படுவது வரை புலன்களின் செயல்கள் சமமாய்ப் பேணப்படுவதையே மனிதன் விரும்புகிறான். நல்லெண்ணங்களை முன்னியக்குவது புலன்களேயாகும். புலன்களின் சமநிலை தவறுவதாலேயே சமூகச்சிக்கல்கள் கிளர்ந்தெழுகின்றன என்பது இயல்பான உண்மையாகும். இத்தகு
முக்கியம் பெற்ற புலன்களின் இயக்குநிலையை செந்நாப்புலவர் பல நிலைகளில் எடுதுக்காட்டியுள்ளார்.
ஐம்புலனடக்கமே இறைநெறி :
  தற்காலச் சூழலில் தடம் மாறிய மனிதத்தடங்கள் எதிர்மறை செயலூக்கிகளாய் வலம் வருவது கண்டு சமூகமேம்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். விழிப்புணர்வில்லாத விழியிழந்த அவலநிலை தொடர்கின்ற சமூகப்போலித்தனம் அதிகரித்துவருகிறது. பண்பாட்டுச்சிதைவு புரையோடியிருக்கும் சமூகக்களத்தில் வாழ்வியல் நசுக்கப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஒழுக்கமென்ற
எல்லைக்கோட்டைத் தாண்டுவதற்கான இயல்புச்சூழல் மிகையாகி வருவதாக சமூகவியலாளர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.   பண்பட்ட உயர்நெறிகளை வாழ்வியல் கோட்பாடுகளாகக் கூறிய தெய்வப்புலவர் இவ்விழிநிலை நீங்க மலர்ப்பாதையொன்றை அமைத்துத் தருகிறார்.
  பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
  நெறிநின்றார் நீடுவாழ் வார். [ அறம்பாயிரம்இறைவணக்கம் – 6 ]
நமது ஐம்புலன்களின் உணர்வுகளைப் பக்குவப்படுத்தினால் ஒழுக்கநெறி மேம்படும். இவ்வுணர்வுகளைப் பக்குவப்படுத்துபவன் இறைவன். அவ்வொழுக்கநெறியில் வாழும் உண்மையான இறைப்பற்றே நீண்ட நலவாழ்வைக் கிட்டச் செய்யும். தற்போதைய சமூகப்பிறழ்தன்மையை மாற்ற வள்ளுவனின் இத்தீர்ப்பினை தன்மனத்தீர்ப்பாய் அனைவரும் கொள்ளுதல் நன்று. தனிமனித ஒழுக்க மேம்பாடு சமூக உயர்விற்கான
வித்து என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
ஐம்புலனடக்கமே அறிவுத்திண்மை :
  சமூகமறுமலர்ச்சிக்கான தொடக்கம் கல்வியால் கிட்டுமென்பது அனைவராலும் எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இவ்வுலகம் உயர்வு பெற வேண்டுமென்பதற்காக அனைவரும் அரிதின் முயன்று உழைக்கிறோம். இவ்வுழைப்பினைச் செம்மையாக்கிச் சீராக்கும் பணியினை கல்விச்சாலைகள் செய்ய வேண்டும். உலகம் மேம்பட உயிர்களின் மனம் மேம்பட வேண்டும். உயிர்களின் மனம்மேம்பட அறிவுமேம்படல்  அவசியம். இத்தகு மேம்பட்ட அறிவுத்திண்மை புலனடக்கத்தால் சாத்தியம் என்பதை நாயனார் நயம்படக் கூறுகின்றார்.
 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
 வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
                                 [ அறம்பாயிரம் – நீத்தார்பெருமை- 24 ]
 ஐப்புலன்களின் உணர்வுகள் அடக்க முடியாதவை. யானையைப் போல்
மலையானவை. இத்தகு ஐம்புல உணர்வுகளை அறிவுத்திண்மையெனும் தோட்டியால் காப்பவனே இவ்வுலகின் விதை போன்றவன் என்கிறார். இவ்விதைகள் இன்றைய கல்விக்களத்தில் அவசியம் உருவாக்கப்பட வேண்டும்.
ஐம்புலனடக்கிய கோமான் :
    இத்தகைய புலன்களை இவ்வுலகில் அடக்கியாண்ட அறிவுத்திண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு மாந்தரையும் காட்டுகிறார் செந்நாப்போதார்.
 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
 இந்திரனே சாலும் கரி.               
                                  [ அறம்பாயிரம்நீத்தார்பெருமை – 25 ]
தேவர் தலைவனாகிய இந்திரன் ஐம்புல உணர்வினை அடக்கியாண்ட
அறிவுத்திண்மைக்கு எடுத்துக்காட்டாவான். இந்திரனைக் காண  முடியாதவர்க்கு அப்துல்கலாம் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
ஐம்புலனாய்ந்தவன் அறிவின்கண் உலகம் :
   ‘ பற்றற்ற பெரு மனிதர் பொற்பாதங் காண எத்தனை கோடி ஆண்டு எனக்கு  வேண்டுமம்மா ? ‘ எனக் கேட்ட மனிதனிடம் காந்தியைக் காட்டினாள் பாரதத்தாய். சுவை, ஒளி, தொடுஉணர்வு, ஓசை, மணம் என்ற ஐவகைப் புலனுணர்வின் வகைகளையும் ஆராய்ந்தறிந்தவன்கண் உலக இயக்கம் அடங்கியுள்ளதென பெருநாவலர் கூறியது மேம்பட்ட உண்மை.
  சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
  வகைதெரிவான் கட்டே உலகு.      
                              [ அறம்பாயிரம்நீத்தார்பெருமை – 27 ]
முப்பதுகோடி முகங்களில் விடுதலையுணர்வினை துளிர்க்கச் செய்த அம்மகாத்மா வள்ளுவக்கோட்பாட்டிற்குப் பொருத்தமானவரென்றே கருதலாம். ஐம்புலன் சுவைகளை ஆராயும் அறிவுடையோர் சமூகவளர்ச்சியின் தூண்களாவர். புலன்வென்ற குற்றமற்ற  அறிவுடையோர்யாம் இல்லாத ஏழையென்றுகருதிப் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்.
   இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
   புன்மைஇல் காட்சி யவர்.       
                             [ அறம்இல்லறவியல்வெஃகாமை – 174 ]
இத்தகைய தன்னலமிலாத் தன்மான வித்தகர்களையே நம் நாடு இன்று எதிர்நோக்கியுள்ளது. புலம் வெல்லும் புன்மையை உருவாக்குவதே வாழ்வின் வெற்றிமிகு கோட்பாடாகும்.  
ஐம்புலனாசை அழிவைத் தரும் :
   நம் நாட்டின் போற்றத்தக்க பெரும்பேறு புத்தபிரான் இங்கு தோன்றியதாகும். ஆசையை அறுத்தால் துன்பம் நீங்குமென்ற அப்பெருமானின் வழிநின்று வள்ளுவனும் வானோங்கிய கோட்பாடொன்றை நம்முன் வைக்கிறார்.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
வேண்டிய வெல்லாம் ஒருங்கு  .    
                                    [ அறம்துறவறவியல்துறவு – 34 ]        
ஐம்புல உணர்வுகளை தீயவழியில் செலுத்தாமல் அடக்க வேண்டும். தீயவழியில் செல்லத் தூண்டும் பொருள்கள் மீதுள்ள ஆசைகளை விட்டுவிட வேண்டும்பற்று விட்டவனைத் துன்பம் பற்றாது என்ற உயர் வாழ்வியல் தத்துவம் வள்ளுவரால் மட்டுமே கூற முடியும்.
ஐம்புலனின்பமே இல்லாள் :
  சமூகத்தின் வடிவம் இல்லற மாண்பின் இனிமையைச் சார்ந்துள்ளது. இல்லறம் இனிக்க ஒத்த இணையர் ஒற்றுமை பேணி கவின்மிகு மக்களைப் பெற்று, நற்சமூகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்த வேண்டும். இல்லறத்தின் மகிழ்விற்கு கணவன் மனைவியின் மகிழ்வே அடிப்படை. காணல், கேட்டல், உண்ணல், முகர்தல்தொடுதல் ஆகிய ஐம்புல இன்பங்களும் தன் இல்லாளிடம் மட்டுமே உள்ளதாகக்
கணவன் கூறுகிறான்.
 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
 ஒண்தொடி கண்ணே உள.           
                          [ இன்பம்களவியல்புணர்ச்சிமகிழ்தல் -1101 ]     
தன் இல்லாளுடன் புணர்ந்து மகிழ்ந்து பூத்த கணவனுக்குத் தான் எத்தனை அன்புஇவ்வன்பே நம் பண்பாட்டுச்சிதைவை வேரோடு அறுக்கும் வலிமையானகூர்வாளாகும்.
ஐயனின் ஐம்புலனாளும் தன்மை :
  ஒழுக்க நெறி வாழ்ந்து, அறிவுத்திண்மை பெற்று, ஐம்புலன்சுவை ஆராயும் அறிவுடையோனாய், புலன் வென்ற புன்மையோடு, ஆசை அறுத்து, தூய நல்லன்பின் இல்லறம் செழிக்க வாழ்வோரே வாழ்வாங்கு வாழ்பவராவார். இந்த உயர்நிலையடைய ஐம்புலன்களையும் கையாளும் அரியவித்தையினை நமக்குக் கற்றுக்கொடுத்த ஐயனின் ஐம்புலனாளும் தன்மை இவ்வுலகம் உய்ய உயர்ந்த நல்வழியாகும். ஒவ்வொரு
நிமிடமும் உங்களால் உலகை வெல்ல முடியும். முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசியுங்கள். யோசிக்கும் நிமிடத்தின் வெற்றிச்சமன்பாடு வள்ளுவத்தில் உள்ளது.  

Sunday 30 December 2012

                              உலகத் திருக்குறள் பேரவைக்கு நான் வழங்கிய கட்டுரையின் முகப்பு .                                                       
                                                   கட்டுரையினை நாளை இடுகையிடுகிறேன்.

ஐயனின் ஐம்புலன்கள்

  


     சி.குருநாதசுந்தரம்

Wednesday 26 December 2012

புத்தாண்டே வா..
காவிரி ஆற்றினைக்
கையோடு கூட்டிவா.
நெற்கதிரோடு நானும்
நிறையப் பேசவேண்டும்.

மின்சாரத்தை கைநிறையத்
தேக்கி வா.,என்
மாணவனோடு நானும்
தேர்வுக்குப் படிக்கவேண்டும்.

எம்தோழிகளின் உண்மையான
உணர்வுகளை மதிக்கும்
மனிதர்களைக் கூட்டிவா.
சமூகத்தோடு நானும்
சமத்துவம் காணவேண்டும்.

புத்தாண்டே வா.
பெருமிதத்தோடு உன்னைப்
புதுநொடியில் வரவேற்கிறேன்.

நானும் சுண்ணாம்புக்கட்டியும்..!


தொடரும் கற்றலின்..
தொடர்புச் செயலகம்.


வளையும் நெளியும்
வாதிடும் நகர்ந்திடும்,
அசைவுகள் அனைத்தும்
அறிவினை உணர்த்திடும்.


தன்வடிவம் சுருக்கும்
தன்னலமற்ற தியாகத்தில்
அறிவின் வடிவம்
விரிந்து நீளூம்.


சிறைபட்ட எண்ணங்களை
சீர்தூக்கி வடிகட்டும்.
சிறந்தவற்றையே அனுமதிக்கும்.


கைவிரல்களையும் காலங்களையும்
கவனமாய்ப் பேசவைக்கும்.


சிதைந்த மூளைத்தொடர்பினை
சிறந்ததாய் மாற்றிடும்,
நரம்பியல் நிபுணத்துவம்
இதற்குமட்டுமே உண்டு.


வெள்ளைச்சிற்பி எழுதும்
கரும்பலகைக் கல்வெட்டுக்கள்,
வசப்படும் பொழுதுதான்..
வாழ்வும் வசப்படும்.கரும்பலகையின் காதலியாய்,
இதனைக் கையாளுங்கள்..!
ஏனெனில்
இந்த வெள்ளைப்பெண்
கோபப்பட்டுவிட்டால்..
கரும்பலகை
மௌனமாகிவிடும் அபாயமுண்டு

Sunday 23 December 2012

நானும் கரும்பலகையும்..!


கற்றலை நேசமாக்கிய
கருப்புச் செவ்வகம்.


என் எழுத்துகள்
இதில்
பதிவு செய்யப்படும்பொழுதெல்லாம்
நான்..
மாணவன் மனங்களில்
பதிவு செய்யப்படுகிறேன்.


என்
நாட்களின் நகர்தலை
நீண்டு இயக்கும்.
நிலைத்த இயக்குநராகவே
நானிதனை நேசிக்கிறேன்.


என்
கனவுக் கவிதையை…
காவிய நடிப்பை
களமாக்கும் மைதானம்
இதுவாகத் தானிருக்கிறது..!


இங்கு செய்யப்படும்
சாதாரணத், தவறுகள்
சரிசெய்ய இயலாத
சரித்திரத்தை உருவாக்கிவிடும்.

என்
களைத்த எண்ணங்களை
கலைத்துக் கற்றலாக்கியதும்
வினாக்களை வீணாக்காமல்
விரிந்த விடைகளாக்கியதும்
இந்தக்
கருப்புப் பெட்டகம்தான்..!


என்
வகுப்பை விரல்பிடித்து
நடத்திச் செல்லும்
இவ்வகுப்பறைத் தோழனோடு
நானும் நடக்கிறேன்…
நல்ல தோழமையோடு…! 

Friday 21 December 2012

நானும் வகுப்பறையும் !


வாழ்க்கைக் களத்தின்
வாழும் களம்
வகுப்பறைவாசம் மட்டும்தான்..!


தேசம் நிமிர்வதற்காய்..
குனிதல் இங்கே
குற்றமாய்ப் பேணப்படுவதில்லை.


தாவலும் துள்ளலும்
துளிர்தலும் தெளிதலும்
துளியும் மீறப்படுவதில்லை.


காலம் கையாளப்படுவதை
கரும்பலகை கற்றுக்கொடுக்க..
சுண்ணாம்பு எழுத்துகளோ
சாதனையுணர்வைத் தூண்டும்..!


நிகழ்வைப் பக்குவப்படுத்தும்
நினைவுகளைச் சுமந்து
வகுப்பறைச் சுவர்கள்
வேர்பிடிக்கக் கற்றுத்தரும்..


வசவும் கிறுக்கல்களும்
வெட்கமும் காதலும்
பரந்தசூழலை பரவசப்படுத்தும்..!


புதியமனிதனின் பழையபக்கங்களை
எண்ணக் கல்வெட்டுக்களாய்
புதுமைத்துள்ளலோடு நெறிப்படுத்தும்,
வானுயர்ந்த வகுப்பறைவாசல்..!


திரும்பிப் பார்க்கும்
எந்த மனிதனுக்கும்
உண்மையாய்த் தெரிவது..
உணர்ந்த வகுப்பறையின்
உயர்ந்த அனுபவம்
மட்டும் தான் ..!


Thursday 20 December 2012

நானும், மாணவனும்.


மணக்கும் மலர்த்தாள்கள்,
மலர்வதற்கான பயிற்சியில்,
வகுப்பறைத் தோட்டத்தில்
அழகாய் அமர்ந்திருக்கிறது,
அடுத்த தலைமுறை.


சுழன்றடித்த கனத்த
பிரம்படித் தழும்பும்,
முட்டிகள் சிதைந்த
முழங்கால் தண்டனையும்
சிதைந்த ஊடுருவலாய்
அந்நியப்பட்டு நிற்கின்றன.


என் மாணவன்
 ஒரு கவிதை.


எண்ணெய்வழியும் முகங்களை
நல்லெண்ணங்களால் அழகுபடுத்தும்
சமூகச் சாத்தியமே
கவிதைக் கரு.


தாயின் அன்பும்
தந்தையின் அரவணைப்பும்
கவிதையின் நிறுத்தற்குறிகள்.


சிரிப்பும் சிந்தனையுமே
கவிதைக்கு முற்றுப்புள்ளி.


பேசும் உரிமையும்
பேசும் உணர்வும்
அளவிலாச் சுதந்திரத்துடன்
கவிதையில் உலாவரும்.


வளர்ந்த கவிதை
வானளாவப் பேசப்படும்வரை
வகுப்பறைத் தோட்டம்
மறுஉழவு
செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கும்.  

Tuesday 18 December 2012

நானும், நீங்களும் !


நான் ஓர்
ஆசு இரியன்..

உறுதிபடுத்தப்பட்ட கனவை
உண்மையாக்கும் மனிதநயம்.
கரும்பலகைச் சுண்ணாம்பில்
காய்த்துப்போன என்
கை விரல்களுக்கு உண்டு.


கருவளையக் கண்களில்
காத்திருக்கும் தேடல்,
மனிதவிதை விதைக்கப்படும்
வாழ்வுநிலம் தீர்மானிக்கும்.


அங்கீகரிக்கப்படும் அடுத்தநொடியின்
புதியதைச் சொல்லும்.


புவியை மேம்படுத்தும்
புனிதம் சொல்லும்.


ஆழமாய் ஊடுருவி
அனைத்தையும் தொட்டுவிட்ட
நேற்றைய விழுதுகளின்
உண்மை வேர்.. நான்.


அனுபவ வீச்சில்
அக்கரை தொட்டவனை
அங்கீகரியுங்கள்..!


ஏனெனில்
நீங்கள் உருவானதில்
நானும் ஒருவன்.


Monday 17 December 2012

குருநாதன் கவிதைகள்.: இல்லறப்பள்ளி

குருநாதன் கவிதைகள்.: இல்லறப்பள்ளி: எனது இனிய நண்பர் திருவாரூர் தோழர் திரு . இரா.பண்டியன் அவர்களின் இனிய மணவிழா அண்மையில் நடைபெற்றது. அவர் ஒரு கணித ஆசிரியர் என்பதால் வாழ்த்த...

இல்லறப்பள்ளி


எனது இனிய நண்பர் திருவாரூர் தோழர் திரு . இரா.பண்டியன் அவர்களின் இனிய மணவிழா அண்மையில் நடைபெற்றது. அவர் ஒரு கணித ஆசிரியர் என்பதால் வாழ்த்துக் கவிதையில் கணிதம் கட்டாயம் இடம் பெற வேண்டுமென்ற நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று இக்கவிதையை எழுதினேன்.

ஒரு கவிதைச் சமன்பாடு இதோ :

இரா.பாண்டியன், ச. சங்கீதா இல்லறப்பள்ளி.

பாண்டியனையும்,சங்கீதாவையும்
கூட்டினேன் ….!
அகநானூறு கிடைத்தது.


பாண்டியனைச் சங்கீதாவிலிருந்து
கழித்தேன்  …!
புறநானூறு கிடைத்தது.


பாண்டியனைச் சங்கீதாவால்
பெருக்கினேன் …!
கம்பராமாயணம் கிடைத்தது.


பாண்டியனைச் சங்கீதாவால்
வகுத்தேன் …!
திருக்குறள் கிடைத்தது  …!


இல்லறச் சமன்பாட்டில்
இருவரையும் பொருத்திப்பார்த்ததில்
சரியாகப் பொருந்தியது.

                             2
 [ பாண்டியன் + சங்கீதா ]       =
           2               2
[ அறம் ]    +   [ அன்பு ]     +
2 பாண்டிய [ இளவரசிகளும்,இளவரசர்களும் ]இல்லறப் பள்ளிக்கான
எனது மதிப்பெண்
நூற்றுக்கு நூறு .