பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 31 January 2013

நானும் பாடக்குறிப்பேடும்


பாடப்புத்தகத்தைப் பின்தொடரும்
நிழல் பிம்பம்.

தெளிவான திட்டமிடலின்
முன்னொட்டு.

தோன்றலும் முடிவும்
தொன்மைச் சிந்தனையும்
முதிர் ஆசிரியத்தின்
முகம் காட்டுகின்ற
பாடக்குறிப்புப் பக்கங்கள்.

வளர்ந்த செடியின்
வாசமான மலர்களாக
உவமிக்கப்படும்
பெருமிதம் இதற்குண்டு.

வார்த்தையும் வேட்கையும்
வெற்றியும் வனப்பும்
இதனுள் பிரதிபலித்தல்
பணியைக் கண்ணியமாக்கும்

நடந்த நாள்களின்
நினைவுகளைச் சொல்வது
பாடக்குறிப்பேட்டின்
பழையபக்கங்கள் தான்.

பழைய அனுபவத்தின்
புதிய அணுகுமுறை
பசுமை வரப்புகளாய்
பரந்து நீள்கின்றன.

ஆசிரியர்பற்றாக்குறை கூட
அதிகாரிகளால் அனுமதிக்கப்படுவதுண்டு.
ஆனால் பாடக்குறிப்பின்
வெற்றிடப் பக்கங்கள்
என்றுமே அனுமதிக்கப்பட்டதில்லை

Wednesday 23 January 2013

தேசிய வாக்காளர் தினம் – சனவரி 25


வாக்குரிமை.


பதினெட்டு வயதினிலே வாக்குரிமை பெற்றோம்
பெற்றிட்ட வாக்குரிமை பேணிடத்தான் கற்போம்
புதியதொரு உலகமதை படைத்திடவே வந்தோம்
பெருமைதரும் வாக்குரிமை பயன்படவே செய்வோம்.

நம்முரிமை வாக்குரிமை நாமதனை உணர்வோம்
நல்லுரிமை வாக்குரிமை பெற்றுநாமும் உயர்வோம்
தம்முரிமை பயன்படுத்தத் தலையாய நிற்போம்
நம்நாடு உயர்ந்திடவே நாளெல்லாம் நினைப்போம்.

விலைகொடுத்து வாங்குகின்ற வாக்குகளை ஒழிப்போம்
நிலையுயரும் நம்முரிமை தடுப்போரை அழிப்போம்
தலையாயக் கடமையென நம்வாக்கு அளிப்போம்
நிலையுயர்த்தும் தலைமைபெற எந்நாளும் முயல்வோம்.

மக்களாட்சி உயர்ந்திடவே வாக்குரிமை வளர்ப்போம்
தக்கநிலை வந்தவுடன் வாக்குரிமை பெறுவோம்
திக்கெட்டும் பயணித்து விழிப்புணர்வை அளிப்போம்
பக்கத்து நாடெல்லாம் போற்றிடவே வாழ்வோம்.

வாக்குகளின் மதிப்பினையே மக்களுக்குச் சொல்வோம்
தேக்குமர உறுதிபோன்று வாக்குவன்மை பெறுவோம்
நோக்குகின்ற இடமெல்லாம் வாக்குரிமை பகர்வோம்
பூக்கின்ற மலரெல்லாம் நமதென்று நுகர்வோம்.

Saturday 19 January 2013

நானும் நாற்காலியும்.


அமர்தல் வகுப்பறையில்
அடிக்கடி நிகழ்வதில்லை.

அலுவலும் அதிகாரமும்
மட்டுமே..
நாற்காலியில் அழகுபார்க்கிறது.

அரியணையாய் அர்த்தம்கொண்ட
ஆசிரியஅரசத்துவத்தை விட்டு
அனுபவ நாற்காலி
தள்ளியே  நிற்கிறது.

வயோதிக ஆசிரியத்தின்
வகுப்பறை நாற்காலியில்
வளமிகு கற்பித்தலின்
வாசனை முகரப்படுவதுண்டு.

அந்நியமும் அவமதிப்பும்
அருவெறுப்பும் அலட்சியமும்
வகுப்பறை நாற்காலியால்
விமர்சனம் செய்யப்படுவதில்லை.

நிமிர்ந்த அமர்வும்
நிலைத்த எதிர்காலமும்
மாணவ நாற்காலிகளுக்குண்டு !

கிறுக்கிய கவிதைகள்
செதுக்கிய படங்கள்
மாணவ நாற்காலிகளில்
அங்கீகரிக்கப்படாத கல்வெட்டுகளாய்
அனுமதிக்கப்படுவதுண்டு.

நிற்றலின் எதிர்ச்சொல்லாய்..
நாற்காலி நிறுத்தப்படுவதால்..
என்
வகுப்பறை நாற்காலி
மட்டும் ……
என்னை விட்டு
ஒதுங்கியே நிற்கிறது.!

Monday 14 January 2013

நானும் வருகைப்பதிவேடும்.


வளமைத் தொடக்கத்திற்காக
வாசிக்கப்படும் முன்னுரை.

என் அங்கீகரிப்பைவிட
இதன் அங்கீகரிப்பு
முக்கியமானது.

மாணவ நிகழ்வுகளை
மேன்மையாக்கும்
மனுநீதி இதற்குண்டு.

பயமின்றித் தொடர்புறும்
தருணம்
இப்பதிவேடு திறக்கப்படும்போது
மட்டுமே
எனக்குக் கிட்டும்.

நான்
வடிக்கப்போகும் சிற்பங்களின்
வரலாற்றுச் செப்பேடு
இது மட்டும்தான்.

மாணவ ஒழுக்கத்தின்
அளவுகோலாக மதிக்கப்படும்
தடங்களுள் இதுவும்ஒன்று.

வறுமையும் வாய்க்கொழுப்பும்
வசதியும் வாய்ப்புகளும்
ஒருமுகமாய்க் காட்டிடும்
மாணவக் கண்ணாடி..

இதன் பக்கங்கள்
கிழிவதையும் அழிவதையும்
நான்
என்றென்றும் விரும்பியதில்லை.

தலையெழுத்தை அழிப்பதற்கு
யார் தான் விரும்புவார்கள் ?

Sunday 13 January 2013

தைமகளே வா !
உழவும் தொழிலும் உயிரெனக் கொண்ட
அழகுத் திருமகளே வா !

தமிழின் தலைமை தரணிக்குத் தந்திட
தகைமைத் தலைமகளே வா !

உண்மை உழைப்பு உறுதியாய் ஊன்றிட
வண்மை வளமகளே வா !

பெருநில மெங்கும் பெருந்தமிழ் பேச
பெருநிலப் பூமகளே வா !

வறுமை நீக்கி பசிப்பிணி போக்கிட
பொதுமைப் பெருமகளே வா !

பெண்மை மதிக்கும் மதியொளி பரப்ப
திண்மைச் சுடர்மகளே வா !

மாண்புடை மாந்தர் புவியினில் தோன்ற
காண்நிகர் கலைமகளே வா !

புன்னகை வித்து வேராய் விழுதூன்ற
பொன்முக நன்மகளே வா !

எங்கும் எதிலும் மகிழும் மகிழ்வாய்
பொங்கும் வளர்மகளே வா !

ஏங்கிடும் நீர்சூழ் நிலமகள் நெற்படையைத்
தாங்கிடும் தைமகளே வா !  

Wednesday 9 January 2013


கடந்த இரு நாள்களாக தமிழாசிரியர் பயிற்சி முகாம் சார்ந்த பணியின் காரணமாக இடுகையிட முடியவில்லை. இப்பயிற்சி முகாமில் எனது இரு கவிதைகள் வாசிக்கப்பட்டன. அவற்றை இடுகையிட்டுள்ளேன்.இக்கவிதைக்கு ஈற்றடி  வழங்கிய தோழர் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு நன்றி.
வள்ளுவம் வாழ்க்கை வழி.

வள்ளுவத்தின் ஈரடி, வாழ்நிலத்தின் நேரடி,

வள்ளுவத்தின் பாவடி, வெற்றிநேர்ப் பூவடி,

வள்ளுவத்தின் நாவடி, நற்சொல்லின் தாயடி,

வள்ளுவம் வாழ்க்கை வழி.

வன்கொடுமை தீர்க்கலாம் வா.

பெண்கொடுமை கண்டு நமக்கென்ன வம்பென்று

கண்மூடிச் செல்வாரே கண்ணிலார் – பெண்கொடுமை

தன்கொடுமை யென்றெண்ணும் தக்காரைக் கூட்டிங்கு

வன்கொடுமை தீர்க்கலாம் வா.