பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday 29 August 2016


தொலைந்தவை .நான் ஏன் இருக்கணும் ?? ---

கடந்த வயது அப்படியே தான் முடிந்தது.இந்த வயதும் அப்படியே தான் துவங்கி இருக்கிறது.திருவுடையானை இழந்திருக்கிறேன். திருவுடையானுடன் இரண்டு நிமிடங்கள் கூடத் தனிப்படப் பேசியிருக்க மாட்டேன். எனக்குத் தெரிந்தவை எல்லாம் அவருடைய நெருக்கமான சிரிப்பு, பாடும் போது வெளியேயும் உள்ளேயும் அதிர்ந்தடங்கும் குரல், சதா தரையில் அமர்ந்து வாசிக்கையில் தபேலாவில் புரண்டாடும் அவருடைய விரல்கள்.
என் இரண்டு மூன்று மேடைப் பேச்சை அவரின் தபேலா வாசிப்பில் இருந்து துவங்கியிருக்கிறேன். திறவு கோல்களையும் திறப்புகளையும் எனக்குத் தந்தவை அவர் விரல்கள். அவரே அறியாத ஒரு அவர் என்னுடன் எப்போதும் இருந்திருக்கிறார். நிறையப் பேரை இப்படி இழக்கச் செய்கிற வாழ்வு, இப்படி இன்னும் சிலரையேனும் அடையச் செய்யுமா தெரியவில்லை.

வருத்தத்தில் அல்ல, நிறைவில் தான் தோன்றுகிறது, 'நான் எல்லாம் ஏன் எழுதணும்?'இசையின் 'ஆட்டுதி அமுதே' , ஜான் சுந்தரின் 'நகலிசைக் கலைஞன்' இரண்டையும் அடுத்தடுத்து வாசித்து முடித்ததும் அப்படித்தான் தவிக்கிறது.மரபின் மைந்தன் முத்தையா, ஜயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் இருவரோடும் முதல் நாள் மாலை மேடையில் பேசுகிறேன். மறுநாள் முத்தையா, ஜயந்தஸ்ரீ, அவரது கணவர் பாலகிருஷ்ணன் மூவரோடும் இருக்க வாய்க்கிறது. முன்னிருவரையும் விட அதிகம் என்னைத் தொடுகிறவராக பாலகிருஷ்ணனை உணர்கிறேன். அவர்களிடம் விடை பெறுகையில் தோன்றுகிறது, 'நான் எல்லாம் எதற்குப் பேசணும்?'

நா.முத்துக்குமார், எங்கள் குடும்பத்தின் ரேஷன் கார்டில் இணைக்கப்படாத பெயராக இருந்த 'மீனாக்கா', இன்றைக்குக் காலை திருவுடையான் எல்லோரின் மறைவுக்குப் பின், எனக்குத் தோன்றுகிறது, 'நான் ஏன் இருக்கணும்?'

இப்படி எல்லாம் கேள்வி வருவது, சுய இரக்கத்தில் அல்லது ஒரு வருத்தத்தில் அல்ல, ஒரு வித உணர்வு நிறைவில் தான். தெருக் குழாயில் குடி தண்ணீர் பிடிக்கப் போகிறவள், தன் ஆயிரம் அன்றாடக் கவலையின் நடுவில், சொரு சொருவென்று மஞ்சள் பிளாஸ்டிக். குடம் கழுத்து வரை நிறைந்து விளிம்புக்கு வருவதைப் பார்க்கிற நேரத்து மன நிலை. வழிந்து சிந்துவதை கூடுதலாக ஒரு கணம் பார்த்து,பார்த்தபின் பதறுகிறவன் தானே நான்

-- கவிஞர் வண்ண நிலவனின் இரங்கல் செய்தி.

சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு கலைஞனின் இறப்பின் இடைவெளி நிரப்பவியலாப் பெருவெளி.


அவரின் பணி அளப்பரியது. இனி எந்தக் குரல்நாணும்  ஆத்தாவின் சேலையை   அவரைப் போல் நெய்ய  முடியுமா என்பது ஐயமே.. ஒரு சமூகக் கலைஞனுக்கு ரௌத்திரம் பழகிய புரட்சியாளனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் -  சி.குருநாதசுந்தரம்.

Saturday 27 August 2016

புரிதலில் வசமாகும் மகிழ்ச்சிபுரிதலில் வசமாகும் மகிழ்ச்சி : சி.குருநாதசுந்தரம்.

நாளை அரசுப் பொதுத் தேர்வில் மாணாக்கரை நூறு விழுக்காடு தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுவதாகத் தலைமையாசிரியர் கூறினார். மேலும் எனக்கு வாழ்த்து தெரிவித்து சென்று வரப் பணித்தார். அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் அவர் அவ்வாறே செய்து ஒரு குறிப்பையும் கூறினார். அடுத்த ஆண்டும் இவ்வெற்றி தொடர வெண்டும் என்பதே அது.

அடுத்த வருசம் கொஞ்சம் கஷ்டம் தான். ரெண்டு மாணவர்கள் இருக்காங்க . ஒரு ஆசிரியர் கவலையோடு முணுமுணுத்தார்
.
எனது வகுப்பில் ஐயப்பன் என்ற மாணவன் எப்போதும்   தமிழ்ப்பாடத்தில் தோல்வியடைந்து கொண்டே இருப்பான்,  ஆகஸ்டு  மாத அலகுத்தேர்வில்  முப்பத்து எட்டு  மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதைக்  கண்ட நான் சொல்லொணா மகிழ்வுற்றேன்.. ஐயப்பனின் பெயரை வகுப்பறையில் அவ்வப்போது உச்சரிக்க ஆரம்பித்தேன். அவனைப் போல எல்லோரும் மாறவேண்டும் என்று கூறினேன். நான் செல்லும் மற்ற வகுப்பறையிலும் அவனைப் பற்றி பகிர்ந்து கொண்டேன். இந்த செயல் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கு புரிதலற்ற எரிச்சலைக்  கொடுத்தது. அவன்  94  மதிப்பெண்கள் வாங்கியிருந்தும் அவனுடைய பெயரை வகுப்பறையில் உச்சரிக்காமல்  38  மதிப்பெண்கள்  எடுத்த ஐயப்பனை  முன்நடத்தைக் குறியீடாக்குவதைக் கண்டு   மனதுள் வெம்மை கொண்டிருந்தான். எதிர்மறைப் பின்னுரையாடல்களை அவனுடைய நண்பர்களிடத்தில்   பகிர்ந்து கொண்டிருக்கிறான். எனவும் அறிந்தேன்.

பைபிளில் ஒரு கதை வரும். ஆடுகளை மேய்க்கும் ஒருவர் 100 ஆடுகளை மேய்த்துக்கொண்டிருப்பார். மாலையில் வீடு திரும்பும் வழியில் ஆடுகளை எண்ணிப் பார்க்கும் போது அங்கு 99 ஆடுகளே இருந்தன. ஒரு ஆட்டைக்  காணவில்லை. 99 ஆடுகளையும் விட்டு விட்டு , அந்த மேய்ப்பன் ஒரு ஆட்டைத் தேடி அலைவார். தொலைந்து போன ஆடு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த ஆட்டைத்  தோளில் போட்டுக் கொண்டு மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்ததாக அக்கதை  முடியும்

மேய்ப்பனை சரியாக பின் தொடர்ந்த 99 ஆடுகளும் நடந்தே வந்தன. ஆனால் காணாமல் போன ஆடு மட்டும் மேய்ப்பனின் தோளில் அமர்ந்து வந்தது. இதை பார்த்த 99 ஆடுகளும் நாமும் காணாமல் போனால் இதைப் போல் மேய்ப்பனால் குதூகலிக்கப் படுவோம் என நினைப்பதில்லை.


ஆனால் மனிதர்கள்,. தாம்  காணாமல் போனால் நம்மைத் தூக்கி வர மேய்ப்பர்கள் வருவார்கள்  என எண்ணுகிறார்கள்.

அதனால் தான் சிலவேளைகளில்,

நிழல் தரும் மரங்களுக்கு அடியில் நடந்து கொண்டேயிருந்தாலும் யாராவது குடைகொண்டு வந்து வெம்மை தீர்ப்பார்களா , என்று தேடுகிறார்கள்.

சுவை தரும் பழத்தோட்டத்தில் நின்றாலும் தன் பசிக்குப் புசிக்க யாராவது உணவு கொண்டுவர மாட்டார்களா? என காத்திருக்கிறார்கள்.

அன்பை பகிர்ந்து கொள்வதற்கு சுற்றிலும் சுற்றம் இருந்தாலும் யாராவது அன்பு செய்ய மாட்டார்களா? என ஏங்குகிறார்கள்.

ஒருவருக்குப் பாராட்டு கிடைக்கும் போது அதை மனதார ரசித்து வாழ்த்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. மற்றொருவர் பாராட்டுப் பெறும் போது அந்தப் பாராட்டு தனக்கும் வேண்டும் என அடம்பிடிப்பது ஒருவகையான நோய். அந்த நோய் தான் முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும் வந்திருந்தது. அந்த நோயை குணப்படுத்த சரியான மருந்தும் இருக்கிறது.

எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் பிறரைப் புரிந்துகொள்கிறீர்களோ,
அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் மகிழ்ச்சியை உங்கள் வசமாக்குவீர்கள்.

அம்மாணவனுக்கு நான் புரிய வைத்தேன். இப்பொழுதெல்லாம் ஐயப்பனைப் பரிவுடன் பார்க்க ஆரம்பித்திருந்தான் அந்த மாணவன்.

      வட்டம் போடக் கற்றுக் கொண்டிருக்கும் நிஷாவும், ரெட்டைக் கொம்பு நெடிலைத் தேடிக்கொண்டிருக்கும் ரெங்கராஜனும்  அடுத்த தேர்வில் ஐயப்பனின் பாராட்டைத் தன்வசப்படுத்த போராடத் தொடங்கி விட்டார்கள்  என்று மகிழ்வோடு கூறிய ஆங்கில ஆசிரியரின்  செய்தி எங்கள் காதுகளில் தேனாய்ப் பாய்ந்தது.

      பாராட்டுப் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். அடுத்த ஆண்டு பாராடுப் பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் முன்வாழ்த்துகள்.
                                       அன்புடன் சி.குருநாதசுந்தரம்


நன்றி : திரு. பெர்ஜின் முகநூல் நண்பர்..

Sunday 14 August 2016


அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.மாத்தூர், புதுக்கோட்டை மாவட்டம். 70 ஆவது விடுதலைநாள் விழா அழைப்பிதழ். அனைவரும் வருக.

ஒரு கவிதையின் முற்றுப்புள்ளி !
சிறகொடிந்து கிடக்கிறது..
முத்துக்குமாரெனும்
முத்துக் கவிதை !!

கன்னிகாபுரத்துக் கவிதை
காற்றோடு கலந்து விட்டது !!

ஆனந்த யாழை மீட்டியவனே,
ஆனந்தமாய் உறங்குகிறாயோ ?.

சமரசமில்லாக் கவிஞன் நீ !!
சமத்துவம் பேசிய கவிஞன் நீ !!

காந்தித் தாள்களில்
சொற்களை அடகுவைக்காத
காந்தீயக் கவிஞன் நீ  !!

குழந்தைகள் நிறைந்த வீட்டில்
பட்டாம் பூச்சி விற்றவன் நீ  !!

சுதந்திரச் சிற்பியாய்
சொற்களைச் செதுக்கியவனே..!.

எனக்குத்
தூக்கம் வராத
பல இரவுகளில்
தாலாட்டுப் பாடினாய்.

திண்மை வரிகளால்
என்
துக்கத்தைத்
தேற்றினாய் !!

இருண்ட வரலாற்றை எழுதிய
காலனின் புத்தகத்தில்
இன்னுமொரு
இருண்ட பக்கம் !!

பாரதி,
பட்டுக்கோட்டையார் வரிசையில்..
நீயும் !!

அறிவியலே !
மஞ்சள் காமாலையை
மரணிக்கச் செய்யும்
ஆயுதத்தைக் கண்டறியும்
விஞ்ஞானிகளை
என் வகுப்பறைக்குக் கொடு !!


இறந்துபோனதை 

அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டுமெனச்

சொன்னாயே ?

எப்போது எழுந்து வருவாய் ?

காற்றில் இலைகள்

பறந்த பிறகும் 

கிளையின் தழும்புகள்

அழிவதில்லை

கவியுலகின்
கிளைத் தழும்பன்றோ  நீ !

உன்
ஆன்மா
அமைதியாய் இளைப்பாறட்டும்..

ஆதவன் உதயமாவான் ..
உன்
வானத்தின் கிழக்கில்.

    ஆழ்ந்த இரங்கலுடன்
    சி.குருநாதசுந்தரம்.


Sunday 7 August 2016

நட்பின் கறை !


நட்பின் கறை !
ஐந்தாம் வகுப்பின்

கடைசி இருக்கையில்,

எனக்காக,

பாதி மிட்டாய் கடித்த

உன்

பற்களிலும்..எட்டாம் வகுப்பில்

உடைந்த  மண்டையுடன்

நான்

உன் மடி சாய்ந்தபோது,

செந்நீர் பட்ட

உன்

சட்டையிலும் ..பத்தாம் வகுப்பில்

வாங்கிக்கொடுத்த

பொன்னியின் செல்வனின்

முதல் பக்கத்தில்

நீ

சிந்திய மையிலும்..பசியான பொழுதுகளில்

அம்மாவின் அதிரசத்தைத்

திணித்த

எண்ணெய் படிந்த

எனது

சட்டைப் பையிலும்..பணி கிடைத்தவொரு

மகிழ்வு நொடியில்..

என்னை,

முத்தமிட்ட

உன் எச்சிலிலும்..இருசக்கர வாகன விபத்தில்

உன்

கண்ணிரால் மூடிய

என்

கிழிந்த சதைத் தழும்புகளிலும்..


நம் நட்பின் கறை.. !!நினைவுகள்

நரம்புகளில்  பயணிக்கும் போது..

நான்

நீயானேன்..!


என்றாவது ஒருநாள்

புறநானூற்றின்

நானூற்று ஒன்றாவது

பாடலில்

நம் கறை பேசப்படும் ..!


என்

உணர்வின் நரம்புகளுக்கு

அன்பு வாழ்த்துகள் !!         சி.குருநாதசுந்தரம்.