பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday 18 April 2015

வெல்லும் விதை …நீ !!!அன்புத்தோழமைக்கு,

வணக்கம். நான் இங்கு நலமென நினைத்தால் அது உன் விருப்பம். ஆனால் நீயும் அங்கு நலமாக இருக்கிறாயா எனக் கேட்க எனக்கு விருப்பமில்லை. உன் நலம் நலமில்லை எனவும் எனக்குத் தெரியும்.

சில நாள்களாகவே உன் எதிர்காலம் பற்றிய உனது எண்ணங்கள் எதிர்மறையாகவே மாறிப்போயிருக்கின்றன. ஐம்பத்தெட்டு வயதின் ஒரு பின்னாளில் உன் விரல்கள் உன் தலைமுறையின் விரல்களுடன் கோர்க்கும் நிலை அறுபட்டுவிடுமோவென அச்சப்படுகிறாய். இது நியாயம் தான்.

பொருளற்ற விரல்கள் யாருடனும் கோர்க்கப்படுவதில்லையென்ற உண்மை அனைவருக்கும் தெரியும். ஓய்வூதியம் இல்லாத வெற்று வாழ்க்கையின் விரிசல் எண்ணங்கள் உன்னை எதிர்மறையாக எண்ணத் தூண்டியிருக்கும். உன் எதிர்காலம் கேள்விக்குறியான நாளில் உன் தலைமுறைகளின் விரல்களும் உன்னைவிட்டகலுவதென்று எண்ணத்தொடங்கி விட்டதை நீயும் நானும் அறிவோம்.

உன்னைச்சுற்றித்தான் எத்தனை வெளிவர இயலா வட்டங்கள் ? 2004 இல் நீ ஒப்பந்தமானாய். உன் பணிநாள்களைத் துறந்த அந்தக் கண்ணீர்க்காலங்களை துடைக்கும் ஆறுதலின்றி நாள்களும் சுரத்தின்றி நகர்கின்றன.

ஊதியச் சம்மின்மையின் முரண்குரல் உன் வகுப்பறைச்சுவர்களை முட்டிமோதியும் எவ்விதத் தடமுமில்லையெனச் சமூகம் கூறுகிறது. இரவில் ஊளையிடும் பேயின் குரலாய் அது உன் மனக்குரல்நாணை அறுத்துக்கொண்டிருப்பதும் எனக்குத் தெரியும்.

என் முன்னால் அமர்ந்திருக்கும் குட்டித் தலைமுறைக்கு எந்தமிழைக் கற்றுக்கொடுக்கும் மேன்மைக்கற்பித்தல் உனக்கு மறுக்கப்பட்டுள்ளது. சமூக வாழ்தலின் சம்மற்ற தளத்தில் வாழ்தல் அந்நியமொழியால் சாத்தியப்படுமெனில் அது உரிமைஅறுப்பு எனும் எண்ணம் உனக்குள் தோன்றியது. பாரதிதாசனாய் நீ மாறிய  வேடத்தைக் கனவில் மட்டுமே அரங்கேற்றினாய் எனபதும் எனக்குத் தெரியும்.

தாய்தமிழைக் கற்பிக்கும் தமிழாசிரியன் இருப்பிடம் அகற்றப்பட்ட பள்ளிச் சுவர்கள் வெளிறிக்காணப்பட்டன. தமிழாசிரியன் இருக்கை அகற்றப்பட்டு அங்கு தமிழூக்க மாணவத்துவம் ஒழிக்கப்படுமென உறுதி அளிக்கப்பட்டு விட்ட்து. பொங்கி எழ நீ என்ன பாரதியா? இல்லை தலை கொய்யும் பாரதிதாசனா?

வழமைபோல கனவில் கவிதை பாடினாய். உன் ஆசிரியத்துவம் சமூகவிரோதிகளால் துன்புறுத்தப்பட்டது. உன் நரம்புகள் புடைக்க உன் குருதி வலிக்க உன் மண்டையோடுகள் சூறையாடப்பட்டன. நீ என்ன பகத்சிங்கா? வழமை போல அமைதி காத்தாய்.

அகரம் கற்றுத்தந்த ஆரம்பப்பள்ளிக் கதவுகள் அறைந்து பூட்டப்பட்ட போதும் நீ வேற்றுமுகம் மாறினாய். உன் ஏற்புத்திறன் கண்டு பாராட்டுக்கேலிகள் பலமூலைகளிலிருந்தும் உன்னை ஆட்கொண்டன. வழமை போல அமைதி காத்தாய்.

பொதுக்கல்வியின் பொதுமைத்துவம் பறிக்கப்பட்டது. உன் நாக்கின் நுனியில் அகரத்திற்குப்பதிலாக Aகரம் ஏற்றப்பட்டது. சமூகச்சுவையற்ற உன் நாக்குநுனி அதனையும் ஏற்றுக்கொண்ட்து.

தோழமையே , நீ எப்போது இயல்பாவாய்? உன் இயல்புத்துவத்தின் சாயலைச் சோதிக்க, ஜாக்டோ 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை உண்ணாநிலை அறப்போராட்ட அளவுகோலைக் கையிலெடுத்துள்ளது. உன் சாயலைக் காட்ட இதுவே தக்க தருணம்.

கனவில் நீ போராடிய உணர்வுத்துவத்தை இயல்பாக்குவாய். உன் இலக்கின் நம்பிக்கை ஆழத்தில் தான் இவ்வுண்ணாநிலை அறப்போராட்டம் வெற்றிவிதையை நடும். பூட்டிய அரசுக்கதவுகளைத் திறக்கும் சாவி உன் வருகை மட்டும் தான். அவ்வொற்றுமைச் சாவியை ஜாக்டோவின் கையில் கொடு. உன் கனவுகளும் .உன் நிமிர்தலும் உனதாக்கப்படும். ஆம் நீ வெல்லும் விதை.

உண்ணாநிலை அறப்போராட்டப் பந்தலில் உன் வருகை உறுதிப்படுத்தப்பட்டால் தான் உன் பள்ளிவகுப்பறை நாற்காலியும் , உன் வீட்டுவரவேற்பறை நாற்காலியும் உன் இருப்பை மகிழ்வாக்கும்.

எழு! நட! இணை! உணர்! உரிமை உன் உயிர்.!.

உன் வருகையின் தடப்பாதை நோக்கி எம்விழிப்பாதை நேர்கோடாய் நீண்டிருக்கும்.. வெல்லும் விதையின் உணர்வெழுச்சி உயர, புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர் கழகம் கரமுயர்த்தி உன் வருகையை வணங்குகிறது.


-    சி.குருநாதசுந்தரம், மாவட்டச்செயலர்,

-    தமிழகத்தமிழாசிரியர் கழகம், புதுக்கோட்டை.