பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday, 16 August 2014

நம்ப மறுக்கும் மனம்.


          புதுக்கோட்டை கவிராசன் அறக்கட்டளையின் சார்பாக வருகிற ஆசிரியர் தின விழா அன்று எனக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.

         என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

         ஒருவேளை இன்னும் அதிக பொறுப்புடன் செயல்படவேண்டுமென்ற பயமா ?

        அல்லது இன்னும் என்னை அதிகளவு மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எச்சரிக்கையா ?

       அல்லது என் அனுபவத்தை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டுமென்ற அறிவுரையா ?


       எதுவென்று புரியவில்லை. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. என்னை வாழ்த்த நீங்களும் வருவீர்கள் தானே ?







Thursday, 14 August 2014

விதை ( விடுதலைப் போராட்டப் பயணச் சுவடுகள் )




விடுதலை விதை

 1498 மே மாதம் 17 ஆம் நாள். அன்றுதான் பார்த்தலோமிய டயஸ் காட்டியிருந்த வழியைப் பயன்படுத்திக் கொண்டு, நன்னம்பிக்கை முனையைத்தாண்டி, இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரம், கேரளப் பகுதியின்கள்ளிக்கோட்டைக்கு (கோழிக்கோடு)வாஸ்கோடகாமா எனும் போர்த்துக்கீசியர் முதன் முதலில்  வியாபாரப் படையெடுத்து வந்து சேர்ந்த தினம். 1471ல் தனது பயணத்தை துவக்கி 27 வருட கடும் முயற்சிக்குப் பின்னர் இந்தியாவை வந்தடைந்த போர்ச்சிகீசியன் அவர். பின்பு பல நாடுகளை சார்ந்த வெள்ளையர்கள் இங்கு வந்தனர்.

      வெள்ளையர்களுக்கு முன்பு இந்தியாவை நோக்கி முகலாயர்கள் வந்தார்கள். தங்கள் ஆட்சியை நிறுவினர். ஆனால் அவர்கள் இங்கேயே நிந்தரமாய் தங்கினர், தங்கள் தலைமுறையை இங்கே நிறுவினர். அவர்களது பரம்பரையினர் இந்திய மக்களாகவே வாழ்கின்றனர். இதுதான் அவர்களது தாய்நாடானது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக இன்னுயிர் இழந்த இஸ்லாமியர்கள் ஆயிரமாயிரமாய் இருக்கின்றனர். ஆனால் நமது வரலாறு ஏதோ இஸ்லாமியர்கள் மட்டுமே படையெடுத்து வந்ததாக நமக்கு போதிக்கிறது. இந்திய வரலாற்றில் எழுதப்பட்ட வரலாற்றுச் சோகம் இது.                

      வரலாறு எப்போதும் வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவதாகவே இருக்கிறது. இந்தியாவின் வராலாற்றையும், விடுதலைப் போராட்ட பதிவு களையும் எழுதியவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலேயர்களே!  அதனால்தான் 1857 ஆம் ஆண்டு நடந்த மகத்தான ஒருங்கி னைக்கப்பட்ட மாபெரும் விடுதலைப் போராட்டத்தை சிப்பாய் கலகம் என அவர்களால் மலினமாக எழுதமுடிந்தது. உழுபடை நிலங்கள் உழுபவனுக்கே சொந்தம் என்ற அந்த போராட்டத்தின் அச்சாணியான கோரிக்கையை மறைக்க முடிந்தது. 1946 ஆம் ஆண்டு நடந்த தொழிலாளர்களின் ஆதரவு நிறைந்த, வீர காவியமான கப்பற்படை எழுச்சியை ஏதோ சம்பள கோரிக்கை போராட்டம் போல குறுக்க முடிந்தது. ஆனால் இந்திய விடுதலைப் போராட்டம் என்பது பலநூறு ஆண்டுகள் நடந்தது. 

      கத்தியின்றி இரத்தமின்றி நடந்த யுத்தமல்ல, மென்மையாய் மயிலிறகால் வருடிக்கொடுத்து பெறப்பட்டதல்ல. இலட்சக்கணக்கான ஆண்பெண்களின் உயிர்களை விலையாய் பெற்றது, பல்வேறு வடிவங்களில் பல தன்மைகளில் மக்கள் திரட்டப்பட்ட ஒரு மகா சம்பவம் அது. அகிம்சை போராட்டங்கள், ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் என இரு வழிகளும் விடுதலை பாதையை நோக்கி நடைப்போட்டது. தேசவிடுதலையே முதன்மையாய் இருந்தது. ஆனால் வெறும் விடுதலை முழக்கம் மட்டும் அப்போது எழவில்லை. அந்த காலகட்டத்தில் விடுதலை போராட்டத்தின் இணை கோடுகளாக, விடுதலைக்கு பின்பு இந்த நாடு சந்திக்கும் சவால்களை சமாளிக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.                

          அகிம்சை போராட்டங்கள், ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் இவற்றுடன் சமூக சீர்திருத்த  போராட்டங்கள், தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள், நிலம் சார்ந்த போராட்டங்கள், தொழிலாளர்கள் பிரச்னை சார்ந்த போராட்டங்களும் இணைந்தே நடந்தது. இத்தகைய போராட்டங்களில் எல்லாம் ஆண்களும் பெண்களும் இணைந்தே வீரம் மிக்க தேசம் காக்கும் போராட்ட களத்தில் நின்றனர். விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து நமக்கு கிடைக்கும் குறிப்புகள் மிகவும் குறைவானதாகும் . பதிவு செய்யப்படாமல் விடப்பட்ட அல்லது மறைக்கபட்டவைகள்தான் மிக அதிகமாக இருக்கும். கிடைக்கும் தரவுகள் நம்மை உற்சாகம் அடைய செய்கிறது. உத்வேகம் கொள்ளச்செய்கிறது. அன்றைய சமூகத்தில் பெண்க ளின் நிலை, அவர்கள் வாழ்க்கை சுழல், அவர்களின் கல்வி விகிதம், மூட நம்பிக்கை, மதம், சாதி சார்ந்த கருத்துக்கள் போன்ற ஒட்டுமொத்த சமூக சூழலையும் கணக்கில் கொண்டு பார்த்தால்தான் அவர்களின் வரலாற்று பணியை கணக்கிட முடியும். அவர்களின் தேசபக்த உணர்வை புரிந்துகொள்ள முடியும்.                

          அக்காலத்தில் விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித் துக்கொண்ட  ஹெலனாதத் என்ற வங்க போரளி 1975 ல் கொடுத்த பத்திரிக்கை பேட்டியில் "நாங்கள் கூட்டில் அடைக்கப்பட்ட புலிகளாக இருந்தோம், எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்த போது அதை நாங்கள் பயன்படுத்தினோம்." மிகவும் ஆச்சாரமான குடும்பப் பெண்களிடம் "வீடு பற்றி எரிகிறது, வெளியே வந்து தடுத்திட உதவுங்கள்" என பிரச்சாரம் செய்யப்பட்டது. அவர்களை அந்த கோஷம் கவ்விப்பிடித்தது. வீதியில் இறக்கியது.                

          1930ல் விடுதலைப் போரில் பங்கெடுத்த போராளிகளை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அப்படி கைதுசெய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப் பட்டவர் மன்மோகினி சுஸ்தி சேகல் என்பவர். அவர் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான தகவல் அவரது கனவனுக்கு தெரியாது. பின்பு அவரது கனவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனது மனைவி தேசத்திற்க்காக சிறை சென்றது எனக்கு மிகவும் மகிழ்சியான செய்திதான் ஆனால் வீட்டில் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம் என்றார்.                

           தென்னாப்ரிக்காவிலிருந்து 1919 ஆம் ஆண்டு வாக்கில்தான் காந்தி இந்தியா வருகிறார்.

 அவரது வருகை இங்கிருந்த போராட்டக்காரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. இந்தியா வந்த காந்தி பெண்களை தலைமையேற்க அழைத்தார் "சுத்தமான உறுதியும், சுயக்கட்டுப்பாடும் உடையவர்கள் பெண்கள்" என்றார். தேசியம் என்ற சொல் கல்விப் பிரச்சனைகள், சமுதாய மாற்றம்பெண்கள் உரிமைகள், தீண்டாமை போன்ற பிரச்சனை களையெல்லாம் தாண்டி ஆங்கிலேயரை விரட்டுவதில் ஒன்றினைத்தது. விடுதலைப் போராட்டம் நடந்த அதே காலகட்டத்தில்தான் உழைப்பாளி மக்கள் தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு கடுமையான போராட்டம் நடத்தினர். தெலுங்கானா பகுதியில் கம்யூனிஸ்டுகள் தலைமையில் 10 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 30 லட்சம் மக்களுக்கு பகிர்ந்தளிக் கப்பட்டது. இந்த போராட்டத்தில் பெண்கள் தீரத்துடன் போராடினர். புன்னபுரா வயலார், வார்லி, தோபாக போன்ற போராட்டங்களிலும் பெண்கள் வீரமுடன் நின்றனர், போராடினர், தலைமையேற்றனர். தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களிலும், சமூக சீர்த்திருத்த இயக்கங்களிலும் முன் நின்ற ஆயிரக் கணக்கான பெண்கள் குறித்து எந்தப் பதிவும் இல்லை என்பதுதான் சோகம்.  
  1857 க்கு முன்னும் பின்னும் போர்களத்தில் நின்றவர்கள்:
வீரமங்கை சிவகங்கை இராணி வேலு நாச்சியார் துவங்கி தன்னையே வெடிகுண்டாக மாற்றிக்கொண்ட தியாகத்தின் உருவான அவரது பணிப்பெண் குயிலி, கிட்டூர் ராணி சென்னம்மா, வேங்கையாய் மாறிய ஜான்சி ராணி லட்சுமிபாய், அயோத்தியின் தியாக சின்னமான பேகம் ஹசரத் மஹல், விசுவாசத்தின் மறுவடிவமான அதனாலேயே வெள்ளையர்களாலும் போற்றப்பட்ட ஜல்காரி பாய், நான்காயிரம் படை வீரர்களை திரட்டி ஆங்கிலேயர்களை பந்தாடிய ராம்காட் ராணி அவந்திபாய் போன்றோர் சிலரே வரலாற்றுப் பக்கங்களில் கிடைக்கின்றனர்.                

 1900 க்கு பிறகு போர்க்களத்தில் நின்றவர்கள்: 
1907 அதாவது ஹோம்ரூல் (சுயாட்சி) இயக்கம் அதாவது பூரண சுதந்திரம் என்ற
முழக்கத்தை முதன்முதலில் அன்னிபெஸன்டஅம்மையார்தான் முழங்கினார். ஆங்கிலேய வியாபாரிகளை அச்சமுறச் செய்யும் அளவு கதர் விற்பனையில் சி.ஆர்.தாஸின் மனைவி பசந்தி தேவி தங்கை ஊர்மிளா மற்றும் அக்கா மகள் செல்வி சுனிதி தேவி  ஆகியோர் சாதனை படைத்தனர். ஊர்மிளா, இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சிராணி படைபிரிவின் கேப்டன் லட்சுமி, துணை கேப்டன் ஜானகி ஆதி நாகப்பன், கவிக்குயில் சரோஜினி நாயுடு, ருக்மிணி லட்சுமிபதி, மகாத்மா என்ற பிம்பத்தை தன் வாழ்க்கையால் இட்டு நிறப்பிய கஸ்தூரிபாய்காந்தி. விஜயலட்சுமி பண்டிட், சுசேதாகிருபளானி, மீராபென், ஸலைஹா பேகம், பீனா தாஸ், கல்யாணி, சுமார மித்ரா, கமலா தாஸ், கல்பனாதத், துர்காதேவி போன்றோர் நமது வரலாற்று உதாரணங்கள்.                

தமிழக மண்ணில்.. தனது மருத்துவ படிப்பை உதறி தள்ளி போர்களத்தில் குதித்த சிவகாமு அம்மா, கள்ளுக்கடை மறியலால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த  நாகம்மாள் மற்றும் கண்ணம்மாள், கதர் விற்பனையை அதிகப்படுத்த வேண்டுமென அதையே ஒரு ஆயுதமாய் மாற்றிட  "சகோதரிகள் சங்கத்தை" துவக்கிய பத்மாசனி அம்மாள், தாயம்மாள், திருமதி. ஜோஸப்திருமதி. சுந்தரமையங்கார், சுப்புலட்சுமி அம்மாள், டி.வி.எஸ். சௌந்தரம்தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் ஆகியோர் இதில் கிடைத்த வருவாயை விடுதலை போராட்டத்திற்கு அர்பணித்தனர்.                

1927 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள கர்னல் நீலின் சிலையை அகற்றுவதற்காகத் தொடங்கப்பட்ட சத்தியாகிரகத்தில் பங்கெடுத்த சேலம் அங்கச்சி அம்மாள், இதற்காக கடலூரிலிருந்து தனது 12 வயது மகள் அம்மாகண்ணுவுடன் வந்த அஞ்சலையம்மாள். 1927-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையில், சைமன் குழுவை எதிர்க்கும் பணிக்காக உருவான பெண்கள் அடங்கிய குழுவில் தலைமைதாங்கிய யாமினி பூர்ண திலகம்மா, திருமதி. மாசிலாமணி, திருமதி. ருக்மணி லட்சுமிபதி ஆகியோரும்அந்நிய துணிக்கடை முன்பு மறியல் செய்த எஸ்.அம்புஜம்மாள், பத்து நாட்கள் தொடர் மறியல் செய்த ஞானம்மாள போன்றோரும் வராற்றின் அடையாளங்கள்.                

மறியல் களம்கண்ட பி.லீலாவதி, லலிதா பிரபு, பத்மாவதி அம்மா ஆகியோர் யாவருக்கும் தேசபக்தி கனலை மூட்டினர். தங்களது கம்பீரமான குரல் வளத்தால் தேசபக்திப் பாடல்களை பாடிய  கோதை நாயகிகே.பி.சுந்தராம்பாள், டிகே.பட்டம்மாளும், எஸ்ஆர்.ரமாமணிபாய் ஆகியோரும்காந்திபுராணம் மற்றும் திலகர் புராணம் எழுதிய பண்டிதை அசலாம்பிகை அம்மையாரும். ஆண்களே பெண்கள் வேடமிட்ட காலத்தில் துணிச்சலுடன் மேடையேறிய கே.பி.சானகிஅம்மாள், உலகப்போருக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால் கைது செய்யப்பட்ட பட்டியலில் இருந்த  சொர்ணம்மாள், செல்லம்மாள்அகிலாண்டத்தம்மாள், லட்சுமிபாரதி, திருமதி.சௌந்தரம் ராமசந்திரன்திருமதி.கிருஷ்ணசாமி, திருமதி.ராமசாமி, சமீந்தாரினி இராதாபாய், சி.ஆர். சாரதாம்பாள் அம்மாள், பியாரி பீபி, ரஸ்வதி பாண்டுரங்கம், சொர்னம்மாள்லட்சுமி பாய், எம்.ஆர்.கமலவேணி, கோவிந்தம்மாள் ஆகியோர் ஒற்றை வார்த்தையில் வெறும் பட்டியலில் மட்டுமே நமது வரலாற்று  பக்கங்களில் கடந்து செல்கின்றனர்.

இவர்கள் குறித்து பேச ஆயிரம் கதைகள் இருக்கிறது. இது சொல்ல துடிக்கும்
வீரம் நிறைந்த கதை, பகை வெல்ல போர்களத்தில் பலர் உதிரம் சொரிந்த கதை. இந்தியாவின் வரலாற்றை உருவாக்கிய ஆயிரக்கணக்கான பெண்களின்  நினைவுகளை அடைகாக்காத சமூகமாய் நமது இந்திய சமூகம் மாறியது எப்படி? இயல்பாக நடந்ததா அல்லது அறியாமல் நடந்ததா? அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்டதா என்பதை ஆராய்வதில்தான் இருக்கிறது நாளைய மாற்றத்திற்கான விதை.

1857 ஆம் ஆண்டு வெடித்து துவங்கி இரண்டு ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியான கலகங்கள்தான் இந்தியாவின் முதல் விடுதலை போராட்டம் என்று அறியப்பட்டது. வெள்ளையர்கள் இதை சிப்பாய் கலகம் என்று பதிவு செய்தனர். ஆனால் 1700 ஆம் ஆண்டு  இறுதியிலும் 1800ஆம் ஆண்டு  துவக்கத்திலும் தென்னிந்தியாவில் இந்த போராட்டங்களுக்கு இணையாக, எழுச்சி மிகுந்த போராட்டங்கள் நடந்தன.

போராட்டத்திற்கு திட்டமிட்டவர்கள், செயல்படுத்தியவர்கள் மற்றும் பல்வேறு மக்கள் பிரிவை சேர்ந்த தேசபக்தர்கள் தென்னிந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மட்டுமின்றி நாட்டு விடுதலைக்காக இந்தியா முழுவதும் நடைப்பெற்ற போராட்டங்களின் வரலாற்றிலும் தங்கள் ஆளுமை முத்திரையப் பதித்துவிட்டுச் சென்றனர்.  வீரன் வேலுதம்பி, பழசிராஜா, வேலுநாச்சியார், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என இவர்களின் பட்டியல் பெரியது. வீரம் நிறைந்த்து. உத்வேகம் கொள்ளச்செய்வது.

இந்த மண்ணிற்காக தங்கள் உயிரையே அர்ப்பனம் செய்த இந்த தேசபக்தர்களின் புகழ்மிக்க வீரச்செயல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற தனித்தனியான வீரசாகசங்களாகவே பலகாலம் கருதப்பட்டு வந்தது. இது சரியான சித்தரிப்பு அல்ல என்பதை பின்பு வந்த ஆய்வுகள் தெரிவித்தன. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றுடன் மஹாராஸ்டிரத்தையும் உள்ளடக்கிய பகுதி முழுவதும் பரவியிருந்த ஒரு விரிவான இயக்கத்தின் பகுதியாகவே இப்போராட்டங்கள் நடைபெற்றன. பல போராளிகளுக்கு இடையில் இடையிறா தொடர்பு இருந்தது. இந்த கூற்று உண்மையாக இருந்த காரணத்தினால்தான் வேலுநாச்சியாருக்கு ஹைதர் அலியின் படை உதவி கிடைத்தது.   

இந்திய விடுதலைப் போராட்டம் கோடிக்கணக்கான மக்கள் திரளுடன் நடந்தது தொழிற்புரட்சிக்குப்பின் வந்த நவீன அரசியல் காலத்தில்தான். எனினும், மன்னராட்சி காலத்தில்கூட மக்களை வெள்ளையர்களுக்கு எதிராக திரட்டிய சம்பவங்கள் பல நடந்ததுண்டு. அதில் மறக்க முடியாத தடம் பதித்தவர்தான் வேலுநாச்சியார் ஆவார்.

1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் பெண் பேதம் இல்லாமல் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி கல்வி கற்பதிலும் வேலு நாச்சியார் திறமை மிக்கவர்தான். பத்து மொழிகள் தெரியும். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம். தன்னுடைய 16 வது வயதில் 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை திருமணம் செய்துகொண்டார். முத்து வடுகநாதர் என்பவர் சிவகங்கை பாளையத்தை ஆண்ட மன்னர் ஆவார். 1749ல் இவரின் தந்தைய இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்காரர்கள் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

1752ல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பிரிட்டிஷ் கும்பெனி கேப்டன் கோப் போர் தொடுத்து மதுரையை கைப்பற்றினர். அதையறிந்த முத்துவடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராக பதவி அமர்த்தினார். இதனாலேயே நவாப், பரங்கி மற்றும் கும்பெனி படைகளுக்கு சிவகங்கை மீது கோபமும் தீராப்பகையும் எழுந்தது.

இச்சமயத்தில் கும்பினியர் தலைவனாக லார்டு ஸ்டீகார்ட் என்பவன் பதவியேற்றான். முதல் வேலையாக முத்துவடுகநாதர் சிவகங்கை சார்பாக கும்பினியருக்கு திரை செலுத்த வேண்டும் என்று தூதனுப்பினான். அவனது நோக்கம் எப்படியும் சிவகங்கையை பணியவைக்க வேண்டும் என்பதுதான். அவனது தூதை முத்துவடுகர் மறுத்ததால் கான்சாகிப் மூலம் கொலை மிரட்டலும் விட்டுப்பார்த்தான் டீகார்டு. இரண்டுக்குமே இவர் பணியாததால் 1963ஆம் ஆண்டில் மன்னர் காளையார் கோவிலுக்குச் சென்ற சமயம் பார்த்து சிவகங்கை மீது போர் தொடுத்து சூறையாடினான். இதையறிந்த முத்துவடுகநாதர் கலவரத்தைத் தடுத்து கான்சாகிப்பையும் விரட்டினார்.

இந்த சமயத்தில் வெள்ளைய படை ஒன்று இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது. இதுவரை சிவகங்கைக்குக் கட்டாத வரியைத் திருப்பித் தறுமாறும் இராமநாதபுரத்தைக் குடக்கூலிக்கு தறுமாறும் செய்திவந்தது. அதற்கு மறுத்து இராமநாதபுரத்தின் மீது படையெடுக்க மறவர் சீமைப் படைகளுடன் சேர்ந்து எதிரிகளின் துப்பாக்கி மற்றும் பீரங்கிப்படை மீது போர் தொடுத்து இராமநாதபுரத்தை மீண்டும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இனிமேல் வடுகநாதரை வெல்ல முடியாது என்றறிந்த பரங்கியர் அன்றிரவே சிவகங்கை மீது இனி போர் தொடுப்பதில்லை என சமாதானம் பேசினர். அதை உண்மையென வடுகநாதர் நம்பினார். சமாதானம் என்று கூறியதால் பாதுகாப்புகளைக் குறைத்து விட்டு இதுவரை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த 1772 ஜூன் 25 ஆம்தேதி காளையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார் வடுகநாதர். இதையறிந்த வெள்ளையரக்ள் காளையர் கோவிலுக்கு முத்துவடுகநாதரைக் கொல்ல பான்சோர் என்ற தளபதியின் கீழ் ஒரு படையை அனுப்பியது. கோவிலுக்குச் சென்றதால் ஆயுதம் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வடுகநாதரை பான்சோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். வடுகநாதரின் மூத்த மகளும் கொல்லப்பட்டார்.

இந்த சமயத்தில் இந்திய நாடு முழுவதும் ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஒரு புதிய சட்டத்தை விதித்திருந்தது. இதனை பயன்படுத்தியே பல நாடுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இந்த அடிப்படையில் ஆண் வாரிசு இல்லாத சிவகங்கையை தன்னுடன் இணைப்பதாக அறிவித்து ஆக்கிரமித்தது.

கனவன் படுகொலையை தொடர்ந்து வேலுநாச்சியார் நாட்டின் பொறுப்பை ஏற்றார். வெள்ளையரக்ள் தொடர்ந்து போர்தொடுத்ததால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார். வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் நுட்பமானவர். நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலியின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். 

கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். வேலு நாச்சியார் வரவில்லையா? என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். அந்த வீரமங்கையின் உருது மொழித் திறமையையும், அறிவு சாதுர்யத்தையும், விடுதலை வேட்கையையும் கண்டு ஆச்சர்யப்பட்டார் ஹைதர் அலி, அவரிடம் தனது வேதனைகளையும் இலட்சியத்தையும் விளக்கினார் வேலுநாச்சியார். எல்லாவற்றையும் கேட்ட ஹைதர் உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். 

ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார் வீரமங்கை. இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராய பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசி கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்திற்க்கு தலைமை தாங்கினர்.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட ஏற்பாடு செய்தார். கணவன் இறந்த பின்னும் மூட நம்பிக்கைகளை கடைபிடிக்காமல் தனது கழுத்தில் விலைமதிப்புக் கொண்ட திருமாங்கல்யத்தை சுமந்த ராணி, உடையாள் மீதுள்ள பாசத்தால் தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை வணங்க கூட்டம், கூட்டமாக பெண்கள் வருவது வழக்கம். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார் வீரமங்கை வேலுநாச்சியார். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், வேலுநாச்சியாரும் அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை.

வெட்டுண்டு விழுந்தார்கள் ,துடித்து உயிர் அடங்கினார்கள். வால்வீச்சில் தப்பித்து பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு நெடுந்தூரம் ஓடினார்கள். சிவகங்கை கோட்டை மீது பறந்த அருவருப்பான ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. சிவகங்கை நாட்டின் கொடி ஏற்றப்பட்டது. வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். பலகாலம் தொடர்ந்து ஆட்சி நடத்தினார்.

1793ல்  அன்பு நிறைந்த இதயம் கொண்ட வேலு நாச்சியாருக்கு தனது பேத்தியின் மரணத்தால் துயரம் அதிகமானது. அதன் பிறகு விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட, மதிநுட்பம் கொண்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.
ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜகம்பீர, ராஜகுலதிலக, ராஜபராக்கிரம என நீண்ட ராஜபாட்டைகளில் வாழ்த்தொலி எழும்ப ராஜாக்கள் வரும் திரைப்பட காட்சிகளும், அந்த நேரத்தில் எழும் முரசின் ஓசையும் பிருமாண்டமான சிந்தனைகளை நமக்குள் விதைக்கும். ஆனால் ஒருசில மன்னர்களை தவிர நமது வரலாற்றில் மன்னர்களின் ஆட்சி என்பது தேசம் முழுமைக்கும் உடையது அல்ல. பல சிற்றூராட்சிகளை இணைத்து ஒரு நாடாக ஆட்சி நடத்தினர். அதற்குள்தான் இத்தனை போட்டிகளும், கொலைக்களங்களும், இலக்கியங்களும், இலட்சியங்களும், காப்பியங்களும், தியாகங்களும் நடந்துள்ளது. 

உற்பத்திக் கருவிகளின் பெருக்கத்தின் தவிர்க்க முடியாத வளர்ச்சியில் தோன்றிய முடியாட்சியின் அழிவில் உதித்தெழுந்த, தொழில் புரட்சி சந்தைக்காக நாடுகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்தபோது அந்த வட்டத்திற்குள் நமது இந்தியாவும் தப்பமுடியவில்லை. போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கத்தோலிக்க மன்னனின் பிரதிநிதியாக வாஸ்கோடகாமா இந்தியா வந்த பிறகு சிறிது காலத்துக்குள்லேயே கத்தோலிக்கர் அல்லாத ஹாலந்து வணிகர் குழு வந்தது. அதன் பின் பிரான்ஸ், கடைசியில் இங்கிலாந்து வணிகக்குழுக்கள் இந்தியாவுக்குள் வந்தனர். தங்களுடைய வர்த்தக மையங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஒரு ரணுவப் படைப்பிரிவை வணிக நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொண்டன. 

ஆனால் இரண்டு நூறாண்டுகளுக்கு மேலாக இப்படைகள் உள்நாட்டில் தொலைதூரத்தில் இருந்த கிராமப்புறங்களுக்குள் நுழையவில்லை. ஏனெனில் அதற்கானா தேவைகளும் அவர்களுக்கு எழவில்லை. நமது சிற்றரசர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையாலும், நாடாளும் ஆசையாலும் இந்த மண்ணில் அந்நியர்களை நுழையவிட்டதும், அவர்களுடைய நவீன ஆயுதங்களுக்கும், படைபலத்திற்கும் ஆசைப்பட்டு தங்கள் மண்ணையே இழந்ததும் இந்திய வராற்றில் அழிக்க முடியாத தழும்புகளாகும். ஆனால் எல்லா சிற்றரசர்களும் அப்படி அல்ல. அந்நியனை இம்மண்ணிலிருந்து விரட்ட தங்கள் உயிரையே அர்ப்பனம் செய்தவர்கள் பலர் உள்ளனர். அந்நியர்களை எதிர்த்த போரட்டத்தில் ஆண், பெண் என பேதமில்லாமல் போரடியதுதான் நமது  வரலாற்றின் சிறப்பம்சமாகும். 

கர்நாடக மாநிலம் பெங்களூர் பூனா இடையே அமைந்துள்ள பகுதி கிட்டூர் சிற்றரசாகும். சுமார் நானூறு கிராமங்களைக் கொண்டது கிட்டூர். கிட்டூரின் 12-வது அரசராகப் பதவியேற்றவர் மல்லசராஜா என்பவர். மல்லசராஜா சிறந்த நிர்வாகிமட்டுமல்ல, மாபெரும் வீரராகவும் இருந்ததால் அருகில் உள்ள எந்த சிற்றரசும் இவரை எதிர்க்கத் துணியவில்லை. இவரைப் போலவே இவருடைய மனைவி ருத்திரம்மாவும் சிறந்த வீராங்கனைதான்.      

இந்தக் காலத்தில்தான் வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்த்தான் தன் ஆட்சி அதிகாரத்தைப் பலமாக்குவதற்காக மற்ற பல நாடுகள் மீது போர் தொடுத்துவந்தார். கிட்டூரின் வளத்தையும், அதன் வலிமை மிக்க கோட்டைகளையும் கேள்விப்பட்டு அதைக் கைப்பற்றிக் கொள்ள படையன்றை அனுப்பி வைத்தார். கிட்டூரை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்பது அவரது கணக்கு. ஆனால் கிட்டூர் வீரர்களின் அதிரடியான ஆவேசத் தாக்குதல்களால் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தது அவரது படை. ராணி ருத்திரம்மா தலைமியிலான கிட்டூர் படை திப்புசுல்த்தானின் படைகளைத் துவம்சம் செய்தது. நூறுக்கணக்கான திப்புவின் வீரர்கள் கொல்லப்பட்டனர். திப்பு என்ற மாவீரனுக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்தியானது.       

பல்வேறு பணிகளில் இருந்த திப்பு சில மாதங்கள் காத்திருந்து பெரும் படையைத் திரட்டி மீண்டும் கிட்டூரைக் கைப்பற்ற படை அனுப்பினார். இம்முறை மல்லசராஜாவே தாமே படைக்குத் தலைமை தாங்கிப் போரில் ஆவேசமாகப் போர்புரிந்தார். ஆனாலும் திப்பு சுல்த்தானின் அசாத்திய திறமைகொண்ட பெரும்படைகளுக்கு முன் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் மன்னர் கைது செய்யப்பட்டு கபாலதுர்க்கா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.       

கிட்டூரைத் திப்பு சுல்த்தான் கைப்பற்றியிருந்தாலும் தொடர்ந்து அந்தப் பகுதியை அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் திப்புவின் படை அந்நியர்களை எதிர்த்து போராட்டத்தை நடத்திவந்தது. இதற்குள் நாடுபிடிக்கும் உள்நாட்டு போரினால் சத்ரபதி சிவாஜிக்கு பின்னர் வந்த பேஷ்வாக்கள் சில மாதங்களில் கிட்டூர் மீது படையெடுத்து மிகக்குறைந்த அளவில் இருந்த திப்புவின் படைகளைச் சிதறடித்து கிட்டூரைக் கைப்பற்றி ஆட்சி நடத்திவந்தனர்.  இதனிடையே சிறையில் அடைக்கப்பட்ட மல்லசராஜா சிறைக் காவலையும் மீறி சில மாதங்களுக்குப் பின் தப்பி தன் நாட்டிற்கு வந்த போது, நாடு பேஷ்வாக்களிடமிருந்த்து. ஒரு உடன்படிக்கையில் பேஷ்வாக்களுக்கு கப்பம் கட்ட மல்லசராஜா ஒப்புக் கொள்ளவே  மீண்டும் கிட்டூர் மன்னரானார்.     

இந்தக் காலக் கடட்த்தில் ஆங்கிலேயர்கள் நாட்டின் பலபகுதிகளைத் தனது சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் கைப்பற்றி ஆட்சி செய்துவந்தனர். பேஷ்வாக்கள் மீது ஆங்கிலேயர் படையெடுத்துச் சென்றபோது கிட்டூரும் தாக்குதலுக்கு உள்ளானது. ஆங்கிலேயர்களை பல இடங்களில் தோற்கடித்த திப்புவைத் தோற்கடிக்க பேஷ்வாக்களின் படை தேவை என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள்  போரில் கைப்பற்றிய பகுதிகளை பேஷ்வாக்களிடமே மீண்டும் ஒப்படைத்தனர். ஒருபுறம் திப்புவின் படைகள் மீண்டும் தன்னை தாக்கலாம் என்ற அச்சமும், மறுபுறம் ஆங்கிலேயர்களின் தாக்குதல்களை முறியடிக்கவும் நாட்டின் பல சிற்றரசர்களின் ஆதரவையும் நாடினார் மல்லசராஜா. அப்போது காகட்டி என்ற சிற்றரசன் ஆதரவு கிட்டியது மட்டுமல்ல, காகட்டி,  மன்னரின் மகள் சென்னம்மாவைத் தன்னுடைய இரண்டாவது மனைவியாக மணந்துகொண்டார்.      

34 ஆண்டுகள் கிட்டூரை ஆட்சிபுரிந்த மல்லசராஜா 1816ல் மரணமடையவே அவருடைய முதல் மனைவி ருத்ரம்மா ஆன்மீக ஈடுபாடு கொண்டு ஆசிரமம் ஒன்றை அமைத்து அங்கேயே வாழத்தொடங்கினார். இவருடைய மகனும்  1824ல்  நோய்வாய்ப்பட்டு  சில ஆண்டுகளில் காலமாகிவிட்டார். எனவே வேறுவழி இல்லாமல் நேரடியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்று நிர்வகிக்கத் தொடங்கினார் ராணி சென்னம்மா. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத முத்திரையை பதித்த சென்னம்மா 1778 ஆம் வருடம் பிறந்தார். தனது சிறு வயதிலேயே சென்னம்மா குதிரையேற்றம், வாள் வீச்சு, வில்வித்தை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவராவார். தனது கனவனும் அவருக்கு பிறந்த குழந்தையும் தொடர்ந்து மரணமடையவே தனக்குப் பின்னால் ஒரு வாரிசு தேவை என்பதால் சிவலிங்கப்பா என்ற சிறுவனைத் தத்தெடுத்து அவனுக்கு முடி சூட்டினார். அப்போது பரவலாக ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்றி இருந்தது. எந்த மன்னருக்கு வாரிசு இல்லையோ அந்த மன்னருக்கு பின் அந்த நிலப்பரப்பு ஆங்கில அரசின்பகுதியாக ஆக்கப்படும்.     


இந்த சதியை முறியடிக்க ராணி சென்னம்மா சிவலிங்கப்பாவை சுவீகாரம் எடுத்துக் கொண்டதைக் கண்ட ஆங்கிலேயர் பெரும்படை ஒன்றை அனுப்பி கோட்டையை முற்றுகையிட்டு கோட்டையிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு காவலுக்கு ஆங்கிலேயச் சிப்பாய்களை நிறுத்திவைத்திருந்தனர்.      நாட்டை அபகரிக்கும் திட்டத்துடன் கிட்டூர் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு விட்டதையும் கோட்டை முற்றுகை இடப்பட்டிருப்பதையும் சென்னம்மாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படியும் தாய் மண்ணை மீட்கவேண்டும் என உறுதி பூண்டார். படைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். ஆலோசனை செய்தார். தனது நம்பிக்கைக்குறிய படைவீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். தனது தேசத்தை தியாகபூர்வ யுத்தத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சத்தமில்லாமல் கோட்டைக்கு உள்ளேயே செய்தார். இருப்பினும் கோட்டைக்குள்ளே ஏதோ நடக்கிறது என்ற சந்தேகம் காவலுக்கு நின்ற ஆங்க்கிலேய சிப்பாய்களுக்கு ஏற்பட்ட்து. உடனடியாக கலெக்டர் தாக்ரேவிற்கு தகவல் சொல்லப்பட்ட்து.      


கணவனை இழந்து கடுந்துயரில் உள்ள ஒரு விதவைப் பெண்ணின் சோகத்தை எதிர்பார்த்த ஆங்கிலேயர்கள் இவ்வளவு தீரமான போராளியை கனவிலும் நினைக்கவில்லை. உள்ளே ஏதோ ஆலோசனை என்ற செய்தியை கேள்விப்பட்ட கலெக்டர் தாக்ரே உடனடியாக  நான்கு பீரங்கிகளை கொண்ட பெரும்படையுடன் கிட்டூர் கோட்டைக்கு வந்து சேர்ந்தான். தனது பெரும்படையை பார்த்தும் அஞ்சி நடுங்கி ராணி சென்னம்மா சரணடைந்து விடுவார் என்பது அவனது எண்ணமாய் இருந்தது. அதனால் மிகவும் அலட்சியமாய் ஆணைகளை பிறப்பித்தான். அந்த கோட்டையை கைபற்றி ராணி சென்னம்மாவை கைது செய்து அழைத்துவர குதிரைப் படையினர் நூறு பேரை அனுப்பிட உத்திரவிட்டான். ஆனால் நடந்தது வேறு, அது வரலாற்றில் செதுக்கப்பட வேண்டிய சம்பவமாய் அமைந்தது.

நூறுபேர் கொண்ட குதிரைப்படை கோட்டையை நோக்கி சென்றபோது கோட்டைக் கதவுகள் இவர்களை எதிர்பார்த்து திறந்தே இருந்தன. அலட்சிய சிரிப்புடன், வென்றுவிட்ட இறுமாப்புடன் கலெக்டர் தாக்ரே  படையை சார்ந்த நூறு பேர் உள்ளே போனதும் அவர்கள் எதிர்பார்க்காத தருணத்தில் திடீரென பிருமாண்டமான கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. அதிர்ச்சியில் மிரண்டு நின்ற ஆங்கிலப் படையை கிட்டூர் வீர்ரகள் மின்னல் வேகத்தில் வெட்டிச் சாய்த்தனர். மொத்தம் வந்த நூறு பேரில் 98 பேர் கொல்லப்பட்டனர் இரண்டு ஆங்கில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.      ஆங்கிலேயப் படைமுகாமில் நடந்தது எதுவும் யாருக்கும் புரியவில்லை. இந்த அதிரடித் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத கலெக்டர் உயிர்பலியைத் தவிர்க்க சமாதானத் தூதனுப்பினான். கிட்டூரின் பத்து கிராமங்களை உங்களுக்கு தானமாக விட்டுக் கொடுக்கிறோம், எஞ்சியதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என எழுதிக்கொடுத்து அனுப்பிய கடித்த்திற்குப் பதிலே இல்லை. 

கிட்டூர் ராணி சென்னமாவின் ராஜியத்தில் சில கிராமங்களை விட்டுக்கொடுக்க இவன் யார்? அதனால் பதில் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கலெக்டர் நான்கு பீரங்கிகளில் இரண்டைக் கோட்டைக்கு மிக அருகில் நிறுத்தி வைத்தான். நாளை காலைக்குள் சென்னம்மா சரணடையாவிட்டால் கோட்டையைத் தகர்த்துவிடுமாறு உத்திரவிட்டான். ஆனால் நடந்தது வேறு மறுநாள் காலை அந்த இரண்டு பீரங்கிகளையும் காணவில்லை.அதாவது அந்த இரண்டும் கிட்டூர் வீர்ர்கள் தந்திரத்தால் அவர்களது கோட்டைக்குள் சென்றுவிட்டது.      

இது கலெக்டரின் இரண்டாவது அவமாணம். ஆத்திரம் உச்சந்தலைக்கு ஏற எஞ்சியிருந்த இரண்டு பீரங்கிகளைக் கோட்டைக்கு முன் நிறுத்தி கோட்டையைத் தகர்க்க ஆணையிட்டான். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக கோட்டைக்குள் இருந்த பீரங்கியிலிருந்து குண்டுகள் கோட்டைக் கதவைப் பிளந்துவிட்டு ஆங்கிலேயர்கள் மீது பாய்ந்த்து. அந்த நேரத்திலேயே கோட்டை மதில் சுவற்றின் மேலிருந்த வீரர்கள் அம்புகளால் ஆங்கிலேயர் உடல்களைத் துளைத்தனர். போர்களம் சூடானது. இருபக்கமும் இரத்தம் வழிந்தோடியது.       

             தனது வீரர்களுக்கு கட்டளைகளை மட்டும் அல்ல களத்திலும் நின்று வழிகாட்டினார் ராணி சென்னம்மா. அவர் கவசமணிந்த குதிரையில் கம்பீரமாக அமர்ந்து வீர்ர்களுக்கு உத்த்திரவிட்டுக் கொண்டிருந்தாள். மாவீரம் காட்டிய கிட்டூர் ராணியைக் கொல்லத் தன் கைத்துப்பாக்கியால் குறிபார்த்த கலெக்டரை ராணியின் மெய்க்காப்பாளன்  பாலப்பா சுட்டுக் கொன்றான். அவனது மரணம் ஆங்கிலப் படைகள் சிதறி ஓடச் செய்தது.  அதுவரை மக்களுக்கு அறிமுகமில்லாத நவீனப் போர்கருவிகள் கொண்ட ஆங்கிலேயரைத் தனது வீரத்தாலும், தந்திரத்தாலும் தோற்கடித்த ராணி சென்னம்மாவின் புகழ் எங்கும் போற்றப்பட்டது.

           அத்தோடு நின்றுவிடாமல் தென்பகுதியில் உள்ள எல்லா சமஸ்த்தானங்களையும் ஒன்றிணைத்து விரிவடைந்த ஒரு தேசிய மேடையமைத்து ஆதிக்கம் செய்ய வந்த ஆங்கிலேயரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். பல அரசர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால் சென்னம்மாவின் முயற்சிக்கு பெரும்பாண்மையான சிற்றரசர்கள் ஒத்துழைக்கவில்லை. ஒருவேலை இது நடந்திருந்தால் வரலாறு வேறோர் தளத்தில் பயணித்திருக்கும். கிட்டூர் ராணி சென்னம்மாவால்அவமானப்பட்ட வெள்ளையர்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தங்களது ஆயிரக்கணக்கான படை வீரர்களை ஒருங்கிணைத்து மூன்று படைப் பிரிவுகளாகப் பிரிந்து கிட்டூர் கோட்டையை சாப்ளின் என்பவர் தலைமையில் முற்றுகையிட்டனர். ராணி சென்னம்மா சரணடையாவிட்டால் கோட்டை தகர்க்கப்படும் எனச் செய்தி அனுப்பப்பட்டது. சரணடைவதைவிட சாவதே மேல் எனக் கருதிய சென்னம்மா கடுமையான யுத்தத்தை எதிர்கொண்டார். பலநாட்கள் நடந்த கடுமையான போரில் இரு தரப்பிலும் எண்னற்ற வீரர்கள் உயிர் இழந்தனர்.  பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் வேல் அம்பினால் ஈடு கொடுக்க முடியாத கிட்டூர் வீர்ர்கள் கடைசிவரை போராடி மாண்டனர். கடைசியில் வீரப் போர்புரிந்த  கிட்டூர் கோட்டை தகர்க்கப்பட்டது. அந்நியர்களை எதிர்த்து வீர சமர் புரிந்த கிட்டூர் ராணி சென்னம்மாள் உயிருடன் பிடிக்கப்பட்டாள். 

ஆட்சி, அதிகாரம், இன்ப வாழ்க்கை போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு பல ஆட்சியாளர்களைப்போல  வெள்ளையருக்குப் அடிபணிந்திருந்தால் அவரது ஆட்சி அதிகாரம் அவருக்கே கிடைத்திருக்கும். ஆனால், தன்மானத்திற்கும், தேச விடுதலைக்கும் போராடிய காரணத்திற்காக கிடைத்த பரிசு கடுமையான சிறைச்சாலை. கொடுமை நிறைந்த தனிமைச் சிறையிலேயே ஐந்தாண்டுகள் இருந்து 1829 பிப்ரவரி 2ல் மரணமடைந்தார். இந்த வீரத்திற்க்காக, போராட்ட உணர்விற்காக, எழுச்சிமிகு உதாரணத்திற்காக அவர் இறந்து 183 ஆண்டுகள் கடந்து இன்னும் வாழ்கிறார். இவர் மட்டும் அல்ல இன்னும் நாம் சந்திக்கவிருக்கும் வீராங்கனைகளும் இப்படியே வாழ்கிறார்கள்... 
          நமது துணைக்கண்டத்தில் நிகழ்ந்த ஆங்கிலேய எதிர்ப்புகளிலேயே சிப்பாய்க் கலகமே அளவிலும் பங்கேற்பிலும் பெரியதாகையால் அதுவே இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த போராட்டம் ஒருங்கினைக்கப்பட்ட விதமும் திரட்டுதலும் அப்படிபட்டது. ஆயினும் நாடெங்கிலும் அதற்கு முன்பே பல இடங்களிலும் பல்வேறு மன்னர்களிடமிருந்தும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு தொடர்ச்சியான எதிர்ப்புகள்  இருந்துவந்துள்ளன. 1857 இல் வெடித்த சிப்பாய்க் கலகத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் ஆங்கிலேயருக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு அதில் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் வீழ்ந்தாலும் கூட வெள்ளையைகள் வெள்ளமுடியாதவர்கள் அல்ல என்பதை அவர் நிருபனம் செய்தார். 

 அதிலிருந்து தொடங்கி 1772ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வீரமங்கை வேலு நாச்சியார் தலைமையிலும், 1795ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799ஆம் ஆண்டு வீரப்பான்டிய கட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது பாண்டியர் தலைமையிலும் ஆங்கிலேய கடுமையாக எதிர்ப்பு எதிரொலித்தது. பின்னர் 1806ஆம் ஆண்டு திப்புவின் மகன்கள் சிறப்பட்டிருந்த வேலூர் சிறையில் சிப்பாய்க் கலகமாகவும் வெடித்து. இதுவே முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முதல் கிளர்ச்சியாகும். அதன் தொடர்ச்சியாகவே 1857ஆம் ஆண்டு வட இந்தியச் சிப்பாய்க் கலகமாகம் மூண்டெழுந்தது. பின்னர் அது நாடு தழுவிய போராட்டமாக உருப்பெற்றது.

 இந்தியாவில் வர்த்தக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட பிரித்தானியரின் தொழில் மற்றும் தொழிற்சாலை பகுதிகளை நிருவகிக்க பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆனாலும் இதன் எல்லை மீறிய லாப, ஆதிக்க வெறி நடவடிக்கைகளாலும் இந்திய மன்னர்களிடையே ஓயாமல் நடந்த தகராறுகளாலும், ஒற்றுமையின்மையாலும் 1757 ல் பிளாசி போரில் பெற்ற வெற்றியால் கிழக்கு இந்தியாவில் வங்காளம் வரை அதன் ஆட்சி பரவலாக்கப்பட்டது. அவர்கள் வெற்றிக்கு இந்திய குறுநில அல்லது பெரிய நிலப்பரப்பை ஆண்ட மன்னர்களும் முக்கிய காரணமாய் இருந்தார்கள் என்பது கசப்பான உண்மைதான். பக்சர் போரில் முகலாய பேரரசர் ஷா அலாம்  தோற்றபின் 1764ல் பீகாரும் கிழக்கிந்திய கம்பெனியால் எளிதாக கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக வங்கம், பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களில் வரி வசூல் செய்யும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் விரைவில் மும்பை, சென்னை போன்ற பகுதிகளில் தன்னை விரிவாக்கம் செய்தது. அதாவது இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை தன்வசம் கொண்டது.

 ஆங்கில-மைசூர்ப் போர்கள் (1766-1799), ஆங்கில-மராட்டியப் போர்கள் (1772-1818), கர்நாடகப் போர்கள் ஆகியன பரந்த நர்மதா ஆற்றின் தெற்குப் பகுதியைத் ஆங்கிலேயர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிவகுத்தது. அதுவரை இச்செயல்களுக்கு பேரளவில் பெரிய எதிர்ப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

 எதிர்ப்பை விதைக்கும் பொறிகள் ஆங்காங்கு வித்தாக கனன்றுக்கொண்டிருந்தன. அப்படி ஒரு நெருப்பு பொறி பிறந்தது. அது ஆஸ்திரேலியாவில் மெல்போர்ண் நகரம் அமைக்கப்பட்ட, சார்லஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று தனது உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, அதே 1835 ஆம் ஆண்டில் பிறந்தது. அவ்வாண்டு நவம்பர் 19 இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்த வீரத்தின் பெயர் மணிகர்னிகா.

 இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு நான்கு வயதாகும்போது தாயார் பகீரதிபாய் இறந்து போனார். தாயை இழந்த குழந்தை அந்த சோகத்தின் சுவடுகூட தெரியாமல் வளர்ப்பதில் மிகவும் சிரமம் இருந்ததுதான். ஆனால் அவரது தந்தை அந்த சுமையை தன் தோலில் சுமந்து பாசத்துடன் வளர்த்தார். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தை மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா மன்னரின் நீதிமன்றத்தில் வேலை செய்தார். பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார். வளர்த்தது மட்டுமல்ல அவளது திருமணத்தையும் அப்படியே செய்துவைத்தார்.

 ஜான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் அவரது தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 

 1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் உடல்நல குறைவால் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின் சோகம் அவர்களை வாட்டியது, நாடு, நகரம், அதிகாரம், போதுமான அளவு செல்வம் எல்லாம் இருந்தும் சொல்ல முடியாத வெறுமை அவர்களை வாட்டியது. எனவே ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் இராணி இலட்சுமிபாயும் கலந்து பேசி  ஆனந்த் ராவைத் என்கிற குழந்தையை தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்குத் தங்களுடைய இறந்த குழந்தையான தாமோதர் ராவ் எனற பெயரை சூட்டினர். இருப்பினும் தனது மகனின் இழப்பின் துயரரம் ராஜாவை துரத்திக்கொண்டே இருந்தது. அந்த கொடுந் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல் நலமிழந்து குறைந்து இறந்தார். அது பேரிடியாக ஜான்சிரானியை தாக்கினாலும் அவரது மனஉறுதி மட்டும் குறையவே இல்லை. அவர் மன உறுதியை சோதிக்கும் பல நிகழ்வுகள் இனிதான் நடக்க இருந்தது.

 அதே காலத்தில்தான் இந்திய நாடு முழுவது பல மாற்றங்கள் நடந்துவந்தது. அந்நிய ஆட்சியின் மீது கடுமையான கோபம் ஆங்காங்கே மூன்டுக்கொண்டிருந்தது. காரணம் அவர்கள் கொண்டுவந்த கடுமையான சட்டங்கள்தான். ஒருபக்கம் அவர்களது படையில் இந்திய நாட்டு சிப்பாய்களை அதிக அளவு சேர்த்துக்கொண்டே வந்தார்கள். அதிலும் குறிப்பாக இந்திய கிராமங்களில் சாதியின் பெயரால் ஒடுக்கிவைக்கப்பட்ட சமூகத்தினர் சேர்க்கப்பட்டனர். இந்த ராணுவ வாய்ப்பை பெருமையாகவும் ஒருவித விடுதலையாகவும் கருதினர். அது ஒருவிதத்தில் உண்மையும் கூட இதுகுறித்து பின்னர் பார்க்கலாம். ஆங்கிலேயரின் படை விஸ்தரிப்பு அவர்களது ஆட்சியை இங்கு முழுமையாக நிறுவிட உதப்வியது. அதே நேரம் அவர்களுக்கான எதிர்ப்பும் இதனாலேயே அதிகரித்ததையும் மனதில் வைப்போம். இந்தியாவில் எழுந்த கிளச்சிகளை இந்தியர்களை வைத்தே அடக்குவது என்ற தந்திரம் எப்போதும் பலிக்காதுதனே!  

 இந்த சம்பவங்களூடாக மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், தங்களின் வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் ஜான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கியேல ஆளுனர் டல்லவுசி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை ஆட்சியின் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் ஜான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். இப்படி பல இடங்களில் செய்தும் இருந்தனர். இது அவரகளது செல்வாக்கு விரவில் பல இடங்களுக்கு பரவ வழிவகை செய்தது. தங்களது அடகுமுறையை மிகவும் இயல்பாக செய்தனர். ஆங்கிலேயர்கள் 1854ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஜான்சிராணி லட்சுமிபாய்க்கு 60,000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.



ஒன்று பனத்துடன் ஓய்வெடு அல்லது நாட்டைவிட்டு வெளியேறு இதுதான் அவர்கள் கொடுத்த வாய்ப்பு. இரண்டில் ஒன்றல்ல, ஒன்றில் ஒன்றை தேர்ந்தெடு. ஜான்சி ராணி தனது வாழ்வில் முக்கியமான சவாலை சந்திக்கும் காலக்கட்டதில் இருந்தார். பெண்தானே எளிதில் அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து நிற்க எழ வேண்டிய கட்டாயத்தி இருந்தார்.


 அப்போது ஆங்கிலேயர்கள் செய்த செயலே அவர்களுக்கு எதிராக எழுத்தது. இந்தியாவில் எழுந்த கிளச்சிகளை இந்தியர்களை வைத்தே அடக்குவது என்ற தந்திரம் எப்போதும் பலிக்காது என்பது மிக விரைவில்  நிருபணம் ஆனது. ஆம் இந்தியாவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராய் திரளும் காலம் வந்தது. அது ஜான்சி ராணியின் ஆட்சிக்கும், பல மன்னரகளை ஒன்று திரட்டவும், மன்னகள் மூலமாக மக்கள் திரளை திரட்டவும் பயன்பட்டது. இனிதான் ஜான்சியின் போர்களம் துவங்கியது.  
வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு!


 இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்று பணத்துடன் ஓய்வெடு அல்லது நாட்டைவிட்டு வெளியேறு என்றனர். இரண்டில் ஒன்றல்ல, ஒன்றில் ஒன்றை தேர்ந்தெடு, இதனால் ஜான்சி ராணி தனது வாழ்வில் முக்கியமான சவாலை சந்திக்கும் காலக்கட்டதில் இருந்தார். பெண்தானே எளிதில் அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து நின்ற வீரத்தை பார்த்து மிரண்டனர். நேரடி வாரிசு இல்லாத அரசுகளை தங்கள் ராஜியத்துடன் சேர்த்துக்கொள்வது என்ற ஆங்கிலேயரின் இந்த சதியை எதிர்த்து மற்ற மன்னர்களை அணிதிரட்ட துவங்கினார். மிகவும் தேசபக்தி மிகுந்த மகாராஜா மர்தன் சிங்குடன் தொடர்ந்து விவாதித்து வந்தார். உதாரணமாக அம்மன்னருக்கு அவர் எழுதிய கடிதம் கீழே உள்ளது.


 "மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். இங்கு அனைவரும் நலம். தாமோதர் ராவின் தத்து எடுத்தல் குறித்த நடவடிக்கைகளின் முன்னேறம் பற்றி நீங்கள் இங்கு வந்திருந்த சமயத்தில் நாம் பேசிக்கொண்டோம். ஆனால், இந்த தத்தெடுப்பை அங்கீகரிப்பதற்கான எண்ணம் எதுவும், பிரிட்டிஷாருக்கு இருப்பதாக தெரியவில்லை. அந்த அயல்நாட்டவர்கள் யாருக்குமே நண்பர்கள் அல்ல. தால்பேஹத் கோட்டையில் ஏற்கனவே இந்த விஷயம் பற்றி பேசினோம் அல்லவா? புந்தேலா வீரர்களின் தலைவரான உங்களை முழுமையான அளவுக்கு நம்புகிறோம். ஒவ்வொரு முறையும் உங்கள் அறிவுரையை நாடுகிறோம். தயைகூர்ந்து இந்தக் கடிதம் கண்டு மறு மடல் எழுத வேண்டுகிறோம்.(விக்ரம ஆண்டு 1914 முத்திரை)"  

 இந்த நேரத்தில் 1857ஆம் ஆண்டு மே 10ம் தேதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றி ஆகியவற்றின் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய செய்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. ஏற்கனவே புழுங்கிக்கொண்டிருந்த இந்திய சிபாய்களுக்கு இது ஒரு சரியான காரணமாய் இருந்தது. இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே அதிகம் கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.


 1857ம் ஆண்டு ஜூன் மதம் 4ம் தேதிக்குள்  ஆங்காங்கு சிப்பாய்கள் கலவரம் செய்யும் செய்தி சாகர் மற்றும் லலித்பூரில் இருந்த சிப்பாய்களுக்கு எட்டியது. அங்கிருந்த ஆங்கிலேயர்களை கொன்று மர்தன் சிங்கை தங்களது தளபதியாக ஏற்றுகொண்டனர்.  இச்சமயம் மகாராஜ ராணி லட்சுமி பாய்க்கு நீண்ட மடல் எழுதியிருந்தார் அதற்கு பதில் அளிக்கும் வகையில் கீழ்கண்ட கடிதத்தை லட்சுமிபாய் எழுதினார்.


 "மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். நாங்களனைவரும் நலம், திவான் கௌஸ் கொண்டுவந்த கடிதம்கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தோம். ஷாஹ்கட் மன்னர், மற்றும் தாத்யா தொபே முன்னிலையில் நம்மிடையே நடந்த ஆலோசனைக் குழுவில் நமது நாட்டிலே சொந்த ஆட்சி நிலவவேண்டும் என்று முடிவு செய்தோம். இது நம்முடைய சொந்த நாடு. நாம் வேண்டிய அளவு பீரங்கிகளும், குண்டுகளும் தயாரித்துவிட்டோம். இது விஷயம் ரகசியமாகவே இருக்கட்டும். ஏனென்றால் டீகம்கர் ராணி லடய் சர்காரும் திவான் நந்தேகானும் அந்நிய நாட்டவர் பால் நாட்டம் கொள்கின்றனர். ஆகவே இவ் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். கடிதம் பெற்று விவரம் தெரிவிக்கவும். (ஐப்பசி, விக்கிரம ஆண்டு 1914 முத்திரை)


 இதே நேரம் ஜான்சிராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857ஆம் ஆண்டு சூன் 8ம் தேதி ஜோக்கன் பாக்கில்  கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் ஜான்சிராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் ஜான்சிராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர்.


 இதனையே காரணமாக வைத்து, 1858ஆம் ஆண்டு மார்ச்சு 23ம் தேதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20,000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படை நவீன தொழில்நுட்பம் நிறைந்த பிருமாண்டமான ஆங்கிலேய எதிர்க்கமுடியவில்லை. இப்படை மார்ச்சு 31ம் தேதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. 


 ஆனாலும் சான்சி இராணி ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்சிராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. கடுங்கோபத்திலிருந்த ஆங்கிலேயர்கள், அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.


 ஜான்சி இராணி 1858ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சிராணி நகரத்தை விட்டு நீங்கினார். அவர் கல்பியிலுள்ள ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதாகவே திட்டம் போட்டிருந்தார். அவர் இங்கிருந்து தபிக்க அடிப்படையாக ஒரு வீராங்கனை இருந்தாள். அவள் ஜல்காரிபாய். தான் ஜான்சிராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். ஜல்காரிபாயும் பெண் படையைச் சேர்ந்த சிலரும் ராணி லட்சுமிபாயை கடுமையான முயற்சிக்கு பிறகு தப்பிச் செல்ல வைத்தார்கள். ராணி கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த பராக்கிரமத்துடன் ஆங்கிலேயப் படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார். 


 இந்த நேரத்தில் உயிர் பிழைக்க தப்பிக்கவில்லை மீண்டும் பெரும் போருக்கான தயாரிப்புக்காகவே அவர் சென்றார் என்பதை, அவர் மன்னர் மர்தன் சிங்கிற்கு எழுதிய கடிதம் அவரது கல்பி திட்டம் குறித்து கூறுகிறது. "மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். ஷாஹ்கட் மன்னர் கடிதம் பற்றி அறிந்தோம். நீங்களும் அதுபற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் உடனடியாக சாகரை நோக்கி படையெடுத்து வரவேண்டும். வழியிலே நிற்கும் வெள்ளையர்கள் படையின் இரண்டு கம்பெனிகளை வென்று ஷாஹ்கட் மன்னருடன் சேர்ந்து முன்னேறவும். என்னுடன் தாத்யா தொபே மற்றும் நானா சாகாப் போருக்கான ஆயத்தில் முனைந்துள்ளார்கள். நீங்கள் நேராக நௌட்காட்டிலிருந்து ஹ்யூ ரோஸைத் துரத்திவிட்டு கால்பி பக்கம் விரைந்து வரவும். குவாலியரில் ஆங்கிலேயர்கள் மீது கூட்டாக தாக்குதல் நடத்துவதற்காக நாம் அனைவரும் கால்பியில் சந்திப்போம் இதில் சற்றேனும் சுணக்கம் கூடாது இக்கடிதத்திற்கு உடனடியாக மறுமடல் எழுதவும்" என அந்த கடிதம் திட்டம் வகுத்துக் கொடுத்தது. 


 ஆனால் வரலாறு வேரொரு திருப்பத்தை கொடுத்தது. மன்னர் மர்தன் சிங் வழியில் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் முன்னேறுவதையும், பலர் கூட்டம் கூட்டமாய் உயிரிழப்பதைதயும் அறிந்து அவநம்பிக்கையடைந்து ஜான்சிராணிக்கு உதவுவதில் விலகிக்கொண்டார். ஆனால் ஜான்சிராணி லட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப்  படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். 


 இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. அங்கு கடுமையான தாக்குதலும் எதிர்தாக்குதலும் நடந்தது. கொள்ளையடிப்பதையும் இந்தியாவின் வளங்களை சுரண்டும் நோக்கம் மட்டுமே கொண்ட ஆங்கிலேயப்படை கடுமையான தாக்குதலை தொடுத்தது.
 ஒப்பிட்டு நோக்கும் போது ஆங்கிலேயப் படையின் ஆயுதங்களும், அளவும் தங்கள் தேசம் காக்க போராடிய வீரர்களிடம் இருந்ததை விட மிகவும் அதிகம். இருப்பினும் அவர்கள் கடுமியாக போர் புரிந்தனர். ஆங்கிலேயர்கள் கடந்து வந்த பாதைகள் முழுவதும் கொடூரமான கொலைகளை செய்து வந்தனர். அவர்கள் வந்த பாதைகளில் உள்ள மரங்களில் எவ்வுளவு கிளைகள் இருந்தனவோ அவிவுளவு கிளைகளிலும் இந்திய சிப்பாய்களின் உடல்கள் உயிரற்று தொங்கியது. இந்தியா முழுமைக்கும் அவர்கள் ஒரு அச்சத்தை உருவாக்க திட்டமிட்டு செயலாற்றினர்.

 1858ஆம் ஆண்டு ஜூன் 17ம் தேதி, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் ஜான்சிராணி வீரத்துடன் போரிட்டார். கொஞ்சமும் சலைக்காமல் போரிட்ட இந்த வீராங்கனை இந்த வீரமிக்க போரின்போது படுகாயமடைந்து விழுந்தார். அவரது உயிர் அவரிடமிருந்து மெல்ல மெல்ல பிரிந்துக்கொண்டிருந்தது. அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார். எப்போதும் அந்நியருக்கு அடிபணியாத, அவர்கள் மிரட்டல்களுக்கு செவிமடுக்காத, மலையளவு பணம் தருகிறோம் இன்பமாய் ஓவ்வெடுங்கள் என்ற ஆசை வார்த்தைக்கு இணங்காத, வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! என்ற வார்த்தைகளை உயர்த்தி பிடித்த அந்த மகத்தான வீரம் தனது சுவாசத்தை நிறுத்திக்கொண்டது. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு பின்னர் குவாலியரைக் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.


 ஆங்கிலேயர்களின் படையை வழி நடத்திய ஹீ ரோஸ் "அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர்" என்றும் ஜான்சிராணியைப் புகழ்ந்தான். இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் ல் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.
தியாகத்தின் மானுட உருவம் ஜல்காரி பாய்
 1857ல் முதல் சுதந்திர போராட்டம் என அழைக்கப்படும் ஓரளவு ஒருங்கிணைக்கப்பட்ட, விரிவாக நடந்த சிப்பாய்களின் எழுச்சியில் ஜான்சிரானி லட்சுமிபாயின் போர் களத்திலிருந்து இன்னும் வீரர்களை திரட்ட தலைமறைவானார். அவரை போலவே வேடமிட்ட ஒரு பெண் போர் களத்திலிருந்து அவரை தப்பிக்க வைத்தார். அந்த 27 வயதுடைய வீரப் பெண்ணின் பெயர் ஜல்காரிபாய். தனது ராணிக்காக தனது உயிரைக் கூட தூக்கியெறிய துணிந்த விசுவாசத்தின் மானுட ரூபம் அவர். 

 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஜான்சிக்கு அருகிலுள்ள போஜ்லா எனும் கிராமத்தில் பிறந்தார். கடுமையான உழைப்பை செலுத்தும் விவசாயிகளான சடோபா சிங் - ஜமுனா தேவி தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜல்காரிபாய். இவர் தாயின் அரவணைப்பும், அன்பும் அவருக்கு நீண்ட நாள் கிடைக்கவில்லை. அவரது சிறு வயதிலேயே  தாயான ஜமுனா தேவி இறந்தார். அதன் பின்னர், சோகத்தை சுமந்த சடோபா சிங் இவரை தாயுமானவனாய் வளர்த்தார். சர்வ சுதந்திரத்துடன் அன்பு மகளை வளர்த்தார். 

 அக்கால சமூக நிலைமையின்படி, ஜல்காரிபாய் முறையான கல்வியைப் பெறமுடியவில்லை. ஆனால் ஜல்காரிபாய் குதிரையேற்றத்தையும் ஆயுதங்களைக் கையாளும் விதத்தையும் மிகவும் நுட்பத்துடனும், வீரத்துடனும் கற்றுக் கொண்டார். இதனால் விரைவிலேயே நன்றாகப் பயிற்சி பெற்ற வீராங்கனையாக வளர்ந்தார். அடர்த்தியான காட்டில் ஒரு புலியால் தாக்கப்பட்டபோது, தனது கோடாரியைப் பயன்படுத்தி புலியைக் கொன்றதாக ஒரு சம்பவத்தின் செய்தி பரவியது. இது புந்தேல்கண்டில் ஜல்காரிபாயின் புகழ் பரவ காரணமாய் அமைந்தது.  இன்னொரு சந்தர்ப்பத்தில் செல்வர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிட வந்த ஆயுதம் தாங்கிய கூட்டத்தை சவால் விட்டு, நேரடியாய் மோதி அவர்களைப் பின்வாங்கச் செய்த கதையும் இவர் குறித்து இருக்கிறது.

 அதைவிட அதிசயம் ஜல்காரிபாய், தோற்றத்தில் ராணி லட்சுமிபாய் போலவே இருந்ததுதான். ஜல்காரிபாய் வாழ்க்கையின் மிக முக்கியமான சந்தர்ப்பம் ராணி லட்சுமிபாயின் பீரங்கிப் படையைச் சேர்ந்த பூரண் சிங்கை சந்தித்ததுதான். இருவருக்கும் அன்பு மலர்ந்து பூரண் சிங்கை ஜல்காரிபாய் திருமணம் செய்து கொண்டார். தனது அன்பு மனைவியை பூரண் சிங், ஜான்சிராணி லட்சுமிபாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். ஜான்சிராணிக்கு ஜல்காரிபாய் தோற்றம் முதல் வியப்பென்றால், அவரது திறமையும், மதிநுட்பமும் மிக, மிக வியப்பாக இருந்தது. ஜல்காரிபாய் நடவடிக்கைகள் ஜான்சிராணியை மிகவும் ஈர்த்தது. அது போலவே ஜான்சி ராணியின் ஆளுமை ஜல்காரிபாயை மிக இயல்பாக அவர் பக்கம் ஈர்த்தது.

 இதன் பின்னர், ஜல்காரிபாயை ஜான்சி ராணி லட்சுமிபாய் தனது பெண்கள் படையில் முக்கிய வீரராக இணைத்துக்கொண்டார். இதை தனது வளர்ச்சிக்கு கிடைத்த மிகவும் சிறந்த வாய்ப்பாக ஜல்காரிபாய் பயன்படுத்திக் கொண்டார், ஜான்சி ராணியின் படையில் இணைந்ததிலிருந்து போர் முறைகளின் அனைத்துப் பிரிவுகளிலும் மேலும் மிகச் சிறந்த நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். துப்பாக்கி சுடுவதிலும் பீரங்கிகளை இயக்குவதிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பார்ப்பதற்குத் தன்னைப் போல் இருப்பதால் ராணி லட்சுமிபாய்க்கு ஜல்காரிபாயின் மேல் ஒரு அன்பும், கரிசனமும் உண்டாகியது. ராணி லட்சுமிபாய்க்கு மிகவும் பிடித்த போர் வீராங்கனையாக, உற்ற தோழியாக விளங்கினார் ஜல்காரிபாய்.

 1857-58ஆம் வருடங்களில் ஜான்சிக் கோட்டையின் மீது ஆங்கிலேய அரசு பல முறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் ராணி லட்சுமிபாய் அந்தப் படையெடுப்புக்களைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு முறியடித்தார்.  1858ஆம் ஆண்டு ஏப்பிரல் 3ஆம் தேதி ஹீ ரோஸ் மிகப் பெரிய  படையுடன் வந்து ஜான்சியை முற்றுகையிட்டான். ஜான்சி ராணி லட்சுமிபாய் அந்த அசுரப் படையை எதிர்த்து வீரம் நிறைந்த போராட்டத்தை நடத்தினார். ஆனால் தொடர்ந்து போர் புரியக்கூடிய நிலையில் அவர் இருக்கவில்லை. காரணம் அவர் கல்பியிலுள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்து சங்கமித்த ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதற்கு திட்டம் போட்டிருந்தார். 

  எப்படி கல்பிக்குச் சென்று பெரும்படை திரட்டுவது என குழப்பத்திலும், சிந்தனையிலும் ஆழ்ந்தனர் அனைவரும். ஜல்காரிபாய் தான் ஜான்சி ராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இம்முடிவை தனது வாழ்நாளின் மிகப் பெரிய கவுரவமாக ஏற்றுக் கொண்டார் ஜல்காரிபாய். அவருடன் அவரது பெண் படையைச் சேர்ந்த சிலரும் மிகவும் திட்டமிட்டு ஜான்சி ராணி லட்சுமிபாயை மிகுந்த சிரமத்துடன் தப்பிச் செல்ல வைத்தார்கள். 

 ஏப்பிரல் 4ஆம் தேதி நிலவு கண்மூடிய இரவில் ஜான்சி ராணி லட்சுமிபாய் கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ஜான்சி ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, மிகுந்த தீரத்துடன் படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த திறமையுடன், மதிநுட்பத்துடன்  ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து சண்டையிட்டார். ஆனால், இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளயடித்து, இங்கிருப்பவர்களை வைத்து  பிருமாண்டமான படை நடத்திய வெள்ளையர்களிடம் கடைசியில்  பிடிபட்டார். 

 போர்களத்தில் அடிமேல் அடிவாங்கிய ஆங்கிலேய அதிகாரிகள், தாங்கள் ராணி லட்சுமிபாயை உயிருடன் பிடித்ததாக எண்ணி கொண்டாட்டங்களை நடத்தினர். தங்களது மேதாவிலாசத்தை பெருந்தன்மை என காட்டிட, ஜல்காரிபாயிடம் அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். பெண்தானே, உயிர் பிச்சை கேட்பார் என நினைத்தனர். ஆனால் அவர்கள் ஜான்சி ராணி என நினைத்த உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த வீராங்கனை ஜல்காரிபாய் துணிச்சலுடன் தூக்கிலிடுங்கள்! என்று கூறினார். ஆனால் ஆங்கிலேயர்கள் பிரச்சினையின் உண்மையைச் சிறிது தாமதமாகத்தான் ஒரு ஒற்றன் மூலம் அறிந்து கொண்டனர். 

 ஆனால், அதற்குள் ராணி லட்சுமிபாய் நீண்ட தூரம் சென்றிருந்தார். ஆங்கிலேய அதிகாரிகளுக்கு தங்கள் எதிரில் நின்ற ஜல்காரிபாயின் வீரமும், தியாகமும், தேச விசுவாசமும் தெரிந்தது. அவரது தேசப்பற்றும், தியாகமும் மிகவும் பிடித்துப் போயிற்று. ஆகவே, அவர்கள் ஜல்காரிபாயை மிகுந்த மரியாதையாக நடத்தி விடுதலையும் செய்தனர்.

 ஜல்காரிபாயின் பிற்கால வாழ்க்கை பற்றிய மூலாதாரங்கள் மிகச் சிலவே கிடைத்துள்ளன. ஜான்சிப் போரில் ஜல்காரிபாய் இறந்ததாகச் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் சில ஆதாரங்கள் ஜல்காரிபாய் ரோசால் விடுதலை செய்யப்பட்டு 1890 வரை வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. இவைகளில் உண்மை எதுவாகினும் அவரது வீரமும், தியாக குணமும் அசாதாரணமானது. இந்த தேசத்தின் மீது அவர் வைத்த நம்பிக்கையில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.
அயோத்தியின் ராணி பேகம் ஹசரத் மஹல் போராளியாக 1857 கலகத்தில் தலைமை தாங்கிய பின்னணி மிகவும் முக்கியமானது. கிழக்கிந்திய கம்பெனியினர் அயோத்தியின் மன்னர்கள் ஆட்சியை மெல்ல மெல்ல அபகரித்தனர். மொகலாய மன்னன் ஷா ஆலம் பீகாரின் மீது படையெடுத்தபோது அயோத்தியின் நவாப்பான ஹ§ஜவுத்தவுலவும் அவருடன் சேர்ந்து கொண்டார். அவர்கள் இருவரின் படைகளும் பக்ஸார் எனும் இடத்தில் 1764ஆம் ஆண்டு சர் ஹெக்டர் மன்றோவால் தோற்கடிக்கப்பட்டது. இந்த வெற்றிக்கு பின் ஆங்கிலேயர் அரசியல் வெற்றியும் அடைந்தனர். அயோத்தி நவாப் ஆங்கிலேயரைத் தவிர வேறு வெளிநாட்டினருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாதென கட்டுப்படுத்தபட்டார்.. 

 அதன் பின் நவாபுகள் பரம்பரையாக அப்படியே நடந்தனர். ஆனாலும் கிழக்கிந்திய கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நயவஞ்சகத்தால் நாட்டை தங்கள் வயப்படுத்தினர். ஷ§ஜாவுத்தவுலவுக்குப் பிறகு அவரது மகன் ஆஸாப்வுத்தவுலா பட்டத்திற்கு வந்தார். அவருக்கு பின் அவரது பதவிக்கு வர அவரது மகன்கள் மிஸ்ரா அலிக்கும் காசியில் ஆங்கிலேயரின் கையாளாக இருந்த சதாத் அலிக்குமிடையே கடுமையான போட்டி இருந்தது. ஆங்கிலேயர் சதாத் அலி பக்கம் நின்றனர். 1814 ஆம் ஆண்டு சதாத் அலி இறந்தார் அதன் பிறகு அவரது மகன் காஸியுத்தீன் ஆங்கிலேயருக்கு உதவிகளை செய்து மன்னன் பட்டம் பெற்றார். பின் நஸீருதின் ஹைதர், முஹ்ம்மத் அலிஷா, அம்ஜத் அலிஷ் ஆகியோர் தொடர்ந்து ஆட்சி செய்தனர். 

 1847ம் ஆண்டு வாஜீத் அலிஷா பட்டத்திற்கு வந்தார். இவர் இவரது முன்னோடிகளைப் போல ஆங்கிலேயர்களுக்கு அடங்கி நடக்கவில்லை. பல ஆங்கிலேய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தினார். பாடல்களில், நல்ல கவிதைகளில் நாட்டம் கொண்டவர். அதனால் இவர் மக்களை மறந்து சிற்றின்பங்களில் ஈடுபட்டு ஆட்சியை நாசப்படுத்துவதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இவரது அன்பு மனைவி பேகம் ஹசரத் இவருக்கு எல்லாவற்றிலும் உறுதுணையாக இருந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்த காரணத்தினால் அவரது ஆட்சி  1856 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பறிக்கப்பட்டது. மன்னர் கொலை செய்யப்பட்டார். 

  அயோத்தி ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்ததும் அங்கிருந்த அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். உயர் பதவிகள் எல்லாம் ஆங்கிலேயருக்கே கொடுக்கப்பட்டது. அரசரின் படையில் இருந்த அறுபதாயிரம் வீரர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். ஆட்சி மாற்றத்தால் பலதரப்பட்ட மக்கள் அல்லலுற்றனர். மன்னனை நம்பி வாழ்ந்த கம்மியர்களும், கைவினைத் தொழிலாளிகளும் வேலையின்றி, வாழ வழியின்றி தவித்தனர். முஸ்லீம்களால் மிகப் புனிதமானதாகக் கருதப்பட்ட, நபிகள் நாயகத்தின் பாத அடையாளமுள்ள ஒரு கல் இருந்த "கதம் ரஸ¨ல்" என்ற கட்டிடம் ஆங்கிலேயர்களால் ஆயுத தளவாடக் கிடங்காக மாற்றப்பட்டது. கடுமையான வரிகள் விதிக்கபட்டன. இக்கொடுமைகளைக் கண்டு சினம் கொண்ட ராணி பேகம் ஹசரத் மஹல் தக்க சமயத்திற்காக காத்திருந்தாள். 

 ராணி பேகம் ஹசரத் மஹல் காத்திருந்த காலம் 1857ல் வந்தது. இந்திய நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்லி, கான்பூர், பீஹார், ஜான்சி, பஞ்சாப், ராஜபுதனம் மற்றும் மத்திய இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால் அவர்களது படைகளில் இருந்த சிப்பாய்கள் கொதித்துக் கொண்டிருந்தனர். அந்த கொதிநிலை அயோத்தியையும் எட்டியது. ஆங்கிலேயர்களை எதிர்த்த அயோத்தியின் படை வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்படனர். கொடூரமான தண்டைனைகளாக அவைகள் இருந்தன.  அதுவரை பொறுத்திருந்த பேகம் ஹசரத் மஹல் பொங்கி எழுந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து படைவீரர்களை தூண்டிவிட்டார். தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். 

 1857 ஜூன் மாதம் ஆங்கிலேயர்களை எதிர்த்த கலகம் கெய்ராபாத் தலைநகரான சீத்தாபூரில் துவங்கியது.  அந்த தாக்குதல் நவம்பர் மாதம் வரை தொடர்ந்தது. பல ஆங்கிலேய அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான ஆங்கிலேய வீரர்கள் உயிரிழந்தனர். குதிரைப்படையினர், ஆயுதப்படையினர், காலாட்படையினர் என அனைவரும் ஒருங்கிணைந்தனர். முற்றுகை யுத்தம் எனில் அப்படி ஒரு யுத்தம் நடந்தது. அப்போது இருந்த நிலை கீழிருந்தவாறு கொடூரமாய் இருந்தது.   

 "முற்றுகையிட்டு ஆங்கிலேயர்கள் தாக்கப்பட்டபோது சுற்றித் திரிந்த கால்நடைகளால் பெரும் தொல்லை ஏற்பட்டது. அவைகளை கவனிக்க யாரும் இல்லை. உணவு தேடி அவைகள் அலைந்தன. சில கிணறுகளில் காலிடறி விழுந்து மாண்டன. அவைகளின் சடலங்கள் தண்ணீரை அசுத்தப்படுத்தின. சில குண்டடிப்பட்டு இறந்தன. அவைகளின் சடலங்கள் அழுகி நாற்றமடித்தன. அவைகளை அப்புறப்படுத்த சில குழுக்கள் அமைக்கப்பட்டன. தீனி இல்லாததால் குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டு துரத்தி விடப்பட்டன. பீரங்கிகளை இழுக்கும் எருதுகளைக் கொன்று இறைச்சி பெற்றனர்."" 
  
 பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அங்கிருந்துதான் அவர் அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து தொடர்ந்து மக்களைத் திரட்டி  புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். பேகம் ஹசரத் மஹலின் சாதுர்யமும் சமயோசித தாக்குதலும் ஆங்கிலேயர்களுக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. பல இடங்களில் முற்றுகையிடப்பட்ட ஆங்கிலேயர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அயோத்தியிலிருந்து முற்றிலுமாக கிழக்கிந்திய கம்பெனி துடைத்தெரியும் நேரம் நெருங்கியதாகவே அனைவரும் நினைக்கும் தருணம் நெருங்கியது. ஆனால் டெல்லி உள்ளிட பல இடங்களில் போராட்டம் முடியும் தருவாயில் இருந்ததால் மேலும் அதிக ஆங்கிலேய படைகள் அயோத்தியை நோக்கி திருபப்பட்டன.   

இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. எதிர்புரட்சியாளர்களை ஆங்கிலப்படை கடுமையாகப் பழி வாங்கியது. வீதிகள் எங்கும் இரத்தம் தோய்ந்த வாட்களும், கோடாரிகளும் சிதறிக் கிடந்தன. வழக்கம் போல பல இந்திய பேஷ்வா மன்னர்களும், ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமான சிப்பாய்களும் பயன்படுத்திக்கொள்ளப் பட்டனர். அஞ்சாமல் தீரத்துடன் போரிட்ட பேகம் ஹசரத் மஹல் வேறு வழி இல்லாமல் பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டர். போர்களத்தில் ஜான்சிராணி, வேலுநாச்சியார் போன்ற மங்காத வீரம் கொண்டவர்களுக்கு இனையாக நின்ற பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் இமயமலை காடுகளை நோக்கிச் சென்றார். பல மன்னர்களிடம் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வராத நேரத்தில் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர். 


 வரலாற்றின் வீதிகளில் அந்த மகத்தான வீரப்புதல்வி அனாதை பிணமாக கிடந்த சோகம் மறக்க முடியாதது. ஆங்கிலேய கால்களை நக்கிப் பிழைந்த மன்னர்களை உயர்த்திப் பேசும் பாரம்பரியத்தை அவளது மரணம் வெட்கப்பட வைத்தது. இந்த நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை இஸ்லாமியர்களின் உதிரமும், தியாகமும் இல்லாமல் யாரும் எழுத முடியாது. அப்படி எழுதுபவர்கள் பேகம் ஹசரத் மஹல் என்கிற அயோத்தியின் விடுதலை கீதத்தை இசைக்காமல் இருக்க முடியாது. 
1931 மார்ச் 23 பெரோஸ்பூர் நகரின் அழகிய சட்லெஜ் நதிக்கரை பிணவாடையால் அவதியுற்றிருந்தது. நதிக்கரை மரங்கள் தங்களது சுவாசங்களை நிறுத்தி இருந்தன. மிகவும் அவசரமாக அந்த மூன்று உடல்களும் எரிக்கப்பட்டது. எரித்தவர்கள் காக்கியுடையணிந்த காவல் துறையினர். முழுவதும் எரிந்து முடிக்கக்கூட பொறுத்திருக்காமல் மிச்சமிருந்த சதை பிண்டங்களை ஆற்றில் வீசி எரிந்தனர். மக்களை நேசித்த, தேசத்திற்காக இறுதி மூச்சுவரை போராடிய, கடற்கரையில் காற்று வாங்கப்போகும் குதூகலத்துடன் சாவு வாங்கிக்கொண்ட அந்த மகத்தானவர்களின் உடல்கள் சட்லெஜ் நதியின் நீர்சுழிகளால் உள்வாங்கப்பட்டது. நதிக்கரையில் அம்மூவரின் சாம்பலும் மிச்சமிருந்தது. செய்தி பரவி அலறி துடித்து மக்கள் கூட்டம் அங்கே கூடியது. இளம் பெண்களும், கர்ப்பிணி பெண்களும் அங்கிருந்த சாம்பலை தங்கள் வயிற்றில் பூசிக்கொண்டே கண்ணீருடன் கதறிக் கூறினார்கள்  " எங்கள் வயிற்றில் உங்களைப்போல பிள்ளைகளை நாங்கள் சுமக்க வேண்டும்" அந்த பிள்ளைகள் விடுதலைப் போரில் அழியாப்புகழை சுமந்த பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆவார்கள். மூவரின் வர்க்கமும், பிறப்பிடமும், வாழ்க்கை பின்னணியும் வேறுவேறாயினும் தேசப்பின்னணி அவர்களை ஒன்றாய் இணைத்தது.

 அவர்கள்..     

விடுதலைப் போராட்டம் எனும் சூரைக்காற்று வீசியடித்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்ற குடும்பம் அது. வங்கப் பிரிவினைக்கு எதிராக போராடியதால் அந்த குடும்பத்திலிருந்த மூன்று சகோதரர்கள் கைது செய்யப்பட்டு பர்மாவின் மாண்டேலா சிறையில் அடைக்கப்பட்டனர்.  மூத்த சகோதரன் ஸ்வரன் சிங் சிறைக்கொடுமைகளால் அங்கேயே மாண்டுபோனார். இளையவர்கள் அஜீத் சிங், கிஷன் சிங் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அஜித் சிங் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட ரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறினார். வீட்டிற்காக எஞ்சிய கிஷன் சிங் சிறையிலிருந்து வீடு திரும்பிய 27.19.1907 அன்று அவரது மனைவி வித்யாவதி இரண்டாவது ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். தந்தை விடுதலையாகி வந்த தினத்தில் பிறந்ததால் அக்குழந்தைக்கு பஞ்சாபி மொழியில் அதிர்ஷ்டமென்ற அர்த்தம் கொண்ட பகத் என பெயரிட்டனர்.

பகத்சிங்கினுடைய 12 வது வயதில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் அவனை மிகவும் பாதித்தது. வாலாபாக் மைதானத்தின் இரத்தம் தோய்ந்த மண்ணோடு அந்த கோபத்தையும் அவன் அடைகாத்தான். லாகூரில் லாலா லஜபதிராய் துவக்கிய தேசியக் கல்லூரியில் இணைந்தான். காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் சௌரி சௌரா நிகழ்வினால் நிறுத்தப்பட்டது பகத்தின் சிந்தனையை வேறுபக்கம் திருப்பியது. வெள்ளையர்கள் ஆயுதம் கொண்டு தாக்கும் போது அவர்களுடன் அந்த மொழியில்தான் பேசவேண்டும், ஆக ஆயுதப் பாதையே சரி என நம்பத்துவங்கினான். நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை துவக்கியது இந்த நோக்கத்தை செயலாக்கத்தான். அந்த நேரத்தில்தான் இந்தியர்களின் சுய கௌரவத்தை சோதிக்கவந்தது சைமன் கமிஷன். அதன் எதிர்ப்புப் போரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். போராட்ட களத்திலேயே லாகூரில்  லாலா லஜபதிராய் காவல்துறை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். பகத்சிங் அவர் மரணத்திற்கு பழிவாங்க முடிவுசெய்து தனது தோழர்கள் சந்திரசேகரஆசாத் மற்றும் ராஜகுருவுடன் காவல்துறை அதிகாரி சாண்டர்சை சுட்டுவீழ்த்தினான். அந்த அதிகாரி மீது பட்ட முதல் குண்டு ராஜகுருவுடையது. யார் இந்த ராஜகுரு?

சத்ரபதி சிவாஜியின் கொள்ளுப் பேரன் சாகூஜி பட்டத்து இளவரசனாய் பட்டம் கட்டிய போது அவருக்கு குருவாக இருந்த கஜேஸ்வர். அவருக்கு ராஜகுரு என்ற பட்டம் சாகூஜியால் சூட்டப்பட்டது. அப்போது முதல் அவரது பரம்பரையினர் ராஜகுரு என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டனர்.  கஜேஸ்வர் பேரன் அரிநாராயண ராஜகுருவுக்கு 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்த சிவராம். இந்த சிவராம்தான் இந்திய விடுதலைப்போரில் அழியாப் புகழைப் பெற்ற ராஜகுரு ஆவார். இளம் வயதில் தன் தந்தையை இழந்த ராஜகுரு தனது அண்ணன் வீட்டில் வளர்ந்தார். அவரது அண்ணனுடன் எழுந்த கருத்து வேறுபாட்டால் வீட்டைவிட்டு வெளியேறி பூனா, காசி என பல இடங்களில் அலைந்துவிட்டு கான்பூரில் இருக்கும் போது அரசியல் தொடர்பு ஏற்பட்டது. தீவிர விவாதங்களும் கூரிய அரசியல் அறிவும் அவரை இந்துஸ்த்தான் சோஷலிஸ்ட் குடியரசு படையில் கொண்டு சேர்த்தது. சோசலிசம் குறித்த நம்பிக்கையும் அதுவே இந்திய விடியலின் தீர்வு என்பதில் உறுதியாக இருந்தார். பல்வேறு வழக்குகளில் பின்னப்பட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அரசியல் கைதிகள் உரிமைகளுக்காக தனது சுவாசத்தின் இறுதிக் காற்றுவரை பகத்சிங் சுகதேவுடன் அங்கும் போராடினார். யார் இந்த சுகதேவ்?

பஞ்சாப்பில் லாயல்பூரில் 1907 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி தனது தந்தை ராம்லால் இறந்த மூன்று மாதம் கழிந்த்து பிறந்தான் சுகதேவ். அவனது சித்தப்பா லாலா அரிசந்தராம் அவரை வளர்த்தார். அவரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான். அதனால் சிறையில் வாடியவர். சிறு வயதில் மேல்நாட்டு உடைகளில் நாட்டம் கொண்ட சுகதேவ் ஒத்துழையாமை இயக்கம் வந்ததிலிருந்து கதர் ஆடைகளுக்கு மாறினார். ஆரிய சமாஜ கொள்கையில் நாட்டம் கொண்டிருந்தவர். லாகூர் நேஷனல் கல்லூரியில் பகத்சிங் தோழனாக மாறிய சுகதேவ் இறுதி மூச்சுவரை அவருடன் இருந்தது மட்டுமில்லை மூச்சு நின்ற பின்னும் அவருடனே எரிந்தார். இந்துஸ்த்தான் சோஷலிஸ்ட் குடியரசு படை அடக்குமுறை கருப்புச் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீச முடிவெடுத்தது. பகத்சிங் பி.கே. தத் இருவரும் அதற்கென நியமிக்கப்பட்டனர். காந்தி இந்த நடவடிக்கைகை கடுமையாக விமர்சனம் செய்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து சுகதேவ் வெடிகுண்டின் தத்துவம் என்ற வரலாற்று சிறப்புமிக்க கடிதத்தை எழுதினார்.
"புரட்சிக்காரர்கள் போராட்ட முறை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக உருக்கொள்கிறது. சில நேரங்களில் அது ரகசியமாகவும் உருக்கொள்கிறது. சில சமயம் வெறும் கிளர்ச்சி மட்டுமே நடக்கிறது. சில சமயம் ஜீவமரணப் போராட்டமாக நடக்கிறது. புரட்சிக்காரர்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் தங்களைச் சுற்றியுள்ள எல்லாச் சூழ்நிலைகளையும் ஆராய்ந்தே செயலபடுகின்றனர். தங்கள் பொறுப்பைப் பற்றிய அறிவு அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது"

அவர்கள் ஒன்றினைந்த பின்னணி..

ஏகாதிபத்தியம் இந்த நாட்டை அடிமைப்படுத்தியதை எதிர்த்து ஆயிரமாயிரமாய் மக்கள் உதிரம் சிந்தி போராடியிருக்கின்றனர். சுக்கா மிளகா சுதந்திரம் அக்கா வந்து வாங்கித்தர என பாவேந்தன் கேட்டது போல ஏதோ ஒரு சிலர் மட்டும் தலைமை தாங்கி வாங்கிக்கொடுத்ததல்ல இந்த சுதந்திரம். பல்வேறு தத்துவ பின்னணி கொண்ட அமைப்புகள் அவரவர் வழிகளில் போராடினர். அகிம்சையை காந்தி கையில் எடுத்தார், அன்னிய நாடுகளின் ஆதரவுடன் இந்திய தேசிய ராணுவ படையை திரட்டி நேதாஜி போராடினார். டொமினியன் அந்தஸ்த்து போதும் என கேட்டு காங்கிரஸ் போராடிய போது முதன் முதலாக பூரண சுதந்திரம் வேண்டும், அந்நியனே வெளியேறு என கம்யூனிஸ்டுகள் போராடினார்கள். ஆயுதம் தாங்கி மக்களை திரட்டி போராட பல குழுக்கள் ஆங்காங்கே தோன்றியது. இப்படி பல வழிகளில் போராட்டம் தொடர்ந்தது. இப்பின்னணியில் நவ ஜவான் பாரத் சபாவை பகத்சிங் உள்ளிட்ட சில இளைஞர்கள் உருவாக்கினர். இந்தியா விடுதலை அடைந்தால் இன்றைய சமூக அமைப்பில் உழைக்கும் மக்களுக்கு பொருளியல் விடுதலை கிடைக்காது என்பதை உணர்ந்து சோசலிஸமே சரியான தீர்வு என்று உணர்ந்து தனது அமைப்பின் பெயரை இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு படை என மாற்றினர். சமதர்ம சிந்தனைதான் உண்மையான சுதந்திரத்தை உருவாக்கும். ஆக சுரண்டலை ஒழிப்பதுதான் உண்மையான தேசபக்தி என்ற தெளிவான அறிவிப்புடன் பிறந்தது இந்த அமைப்பு. சாதி ஒழிப்புக்கென ஒரு அமைப்பையும் துவக்கினார்கள். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடுமையான தாக்குதலை தொடுத்தனர். இந்த அமைப்பின் கருவாக இயங்கியவர்கள் துர்கா தேவி, சுசீலா அக்கா, பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத், பகவதி சரண் போன்றோர் ஆவார்கள்.  பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அடக்குமுறை செய்வதற்காக கொண்டுவந்த பொதுப் பாதுகாப்பு மற்றும் தொழில் தகராறுகள் மசோதா (1929) வை எதிர்த்து அந்த சட்டம் கொண்டு வரப்படும் தினத்தில் பாராளுமன்றத்தில் குண்டு வீசுவது என இந்துஸ்த்தான் சோஷலிஸ்ட் குடியரசு படை முடிவெடுத்தது. பாராளுமன்றத்தில் எந்த உயிருக்கும் சேதம் ஏற்படுத்தாத குண்டுகளை வீசி பகத்சிங்கும் பி.கே.தத்து கைதாகினர். லாகூர் சதிவழக்கில் சுகதேவ், ராஜகுரு போன்றோர் கைது செய்யப்பட்டனர். ஒரு தலைபட்சமான விசாரனையும் தீர்ப்பும் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூன்று மாவீரர்களுக்கும் தூக்கு தண்டனையை கொடுத்தது. திட்டமிடப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பாக அவ்வீரர்கள் தூக்கிலிடப்பட்டு, சட்லெஜ் நதிக்கரையில் எரிக்கப்பட்டனர்.

அந்த மகத்தான தேசபக்தர்கள் மரணத்தை கண்டு அஞ்சவில்லை.. அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. நாம் விழுவது பலர் எழுவதற்கு, நாம் விதையாய் விழுந்தால் நம்மிலிருந்து விருட்சமாய் பல்லாயிரம் இளைஞர்கள் எழுவார்கள். இந்த சமூகத்தின் சகல சீரழிவும் ஒருநாள் முடிவுக்கு வரும் என அவர்கள் நம்பினார்கள். ஏற்றதாழ்வற்ற சமூகமே அவர்களது லட்சியமாய் இருந்தது. இதோ அவர்களின் வீரம் சொரிந்த தியாக மரணம் நிகழ்ந்து 81 ஆண்டுகள் ஆகிறது. இந்த தேசம் அவர்களது நினைவுகளை அடைகாத்து வருகிறது. ஆனால் அவரது கனவுகளை....

அவர்கள் மீண்டும் வருவார்கள்..

மக்கள் கேட்காமலேயே இலவசங்களை அள்ளிவீசும் ஆட்சியாளர்கள் மக்கள் வரிப்பணத்தில் ஆடு, கோழி, கிரைண்டர், மிக்சி என கொடுக்கிறார்கள். கரும்புக்கும், நெல்லுக்கும் அரசே விலை வைத்துவிட்டு சர்க்கரைக்கும், அரிசிக்கும் விலை வைக்கும் உரிமையை முதலாளிகள் கைகளில் கொடுத்துவிடுகின்றனர். விலைவாசி உயர்வதால் திணறித்தவிக்கும் மக்களுக்கு உபதேசங்களையே மாற்றாக கொடுக்கின்றனர்.  நமது நாட்டின் பெருமுதலாளிகளின் வரி கட்டாத கருப்பு பணம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கியுள்ளது. ஆனால் இவர்களுக்குதான் இந்திய அரசாங்கம் தனது பட்ஜெட்டில் ஐந்து லட்சம் கோடி வரிச்சலுகை தருகிறது, நூற்றுக்கணக்கான பன்னாட்டு  பகாசூர நிறுவனங்கள் இந்திய பெருநகரங்கள் துவங்கி கடற்கரையோரங்கள்வரை  முழுவதும் கபளீகரம் செய்கின்றனர். அவர்களுக்கு வரிச்சலுகை, இலவச நிலங்கள், தடையில்லா மின்சாரம் என அனைத்தும் வாரி வழங்கப்படுகிறது. அங்கே தொழிற்சங்கம் துவங்கக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது வளாகங்களில் ஒப்பந்த தொழிலாளிகள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை. வேலைதேடி புலம்பெயர்ந்து இந்திய நாட்டின் சாலைகள் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக எறும்புகளைப்போல ஆண்களும் பெண்களும் ஊர்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் பெண்கள் அதிகமாக புலம்பெயரும் காலமாய் இக்காலம் மாறியுள்ளது. சுமங்கலி திட்டம் என்ற தூண்டில் மிக இயல்பாய் அவர்களை வசீகரம் செய்து ஏமாற்றுகிறது.  வேலைவாய்ப்பு அறிதாக மாற மாற இருக்கும் வேலையில் நீடிக்கமுடியுமா என்ற பறிதவிப்பு பதட்டமாய் மாறுகிறது. இந்த பதட்டமே தான் என்கிற சுயநலத்தை விதைக்கிறது. இந்த சுயநலம் அன்பு,  மக்கள், நாடு, நாம் என்பைவைகளுக்கு தடையாக இருக்கிறது. இந்த தனிமனித நெருக்கடி சிந்தனையை மதமும், சாதியும் தனக்கான திரட்டலுக்கு பயன்படுத்துகிறது. ஆக இன்றைய முதலாளித்துவக் கொள்கை தேசத்தின் மக்களை அடிமைகளாக நீடிக்கச் செய்ய அனைத்தையும் பயன்படுத்துகிறது.

      இந்த கொடூரங்களுக்கு எதிராக நம்பிக்கைகள் இல்லாமல் இல்லை. உலகம் முழுவதும் மனிதனை மனிதன் விழுங்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். துனிசியாவில் பற்றிய நெருப்பு எகிப்தை கடந்து அமெரிக்காவின் பங்குச் சந்தை தெருவை ஆட்டிப்படைத்தது. நாங்கள் 99 நீங்கள் 1 என்ற முழக்கம் நமக்கான முழக்கம் முன்நிற்கிறது. "நாம் இமயம் முதல் குமரிவரை உள்ள மக்களுக்காகச் சுதந்திரம் கேட்கிறோம். நாம் கேட்கும் சுதந்திரம் மனிதர்களின் பசியைப் போக்க வேண்டும். பட்டினியை நீக்க வேண்டும். அறியாமையை அகற்ற வேண்டும். இல்லையேல் சுதந்திரத்திற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். சமதர்ம சிந்தனைதான் உண்மையான சுதந்திரத்தை உருவாக்கும். ஆக சுரண்டலை ஒழிப்பதுதான் உண்மையான தேசபக்தி" என 81 ஆண்டுகளுக்கு முன் பகத்சிங்கும், சுகதேவும், ராஜகுருவும்  கண்ட கனவு இது. ஆக சகலவிதமான சுரண்டலையும் எதிர்த்து போராட இளைமை பட்டாளத்தை திரட்டுவதுதான் அவர்களுக்கும், இன்றைய தேச நெருக்கடிக்கும் நாம் கொடுக்கும் சரியான விடையாக இருக்கமுடியும்.
     சாலைகளில் புழுதிபறக்க நடந்துவந்த 150 ராணுவத்தினர் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள், மொத்தம் 1650 முறை அதாவது ஒரு சிப்பாய்க்கு 33 குண்டுகள் என்ற முறையில் 5850 குண்டுகளைச் சீறிப்பாயச் செய்தனர். துடிக்கத் துடிக்க மக்கள் வீழுந்துக்கொண்டே இருந்தார்கள். குழந்தைகள், முதியவரக்ள், பெண்கள் யாரும் தப்பமுடியவில்லை. என்ன நடக்கிறது என்று அறியும் முன்பே எல்லாம் நடந்து முடிந்திருந்தது. ஒற்றை வாயிலை மட்டும் கொண்ட அந்த மைதானத்தின் மண்ணில் இப்போது நீங்கள் நடந்தாலும் அந்த சோகத்தின் தடத்தை உணரமுடியும். 93 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் அந்த மைதானத்தின் சுற்றுச் சுவர்களில் தோட்டாக்கள் பதிந்த வடுக்கள் ஆறாத ரணமாய் உள்ளது. மைதானத்தின் இடது ஓரத்திற்கு முன்பு 120 மனித சடலங்களை உள்வாங்கிய அந்த பாழும் கிணறு மௌனசாட்சியாய்  நிற்கிறது. 

 அந்த மைதானத்தின் பெயர்: ஜாலியன் வாலாபாக். இருக்குமிடம்: பஞ்சாப்பின் அமிர்தசரஸ். நடந்த ஆண்டு: 13 ஏப்ரல் 1919. இறந்தவர்கள் எண்ணிக்கை: 1526. காரணம்: அந்நியனுக்கு அடிபணிய மாட்டோம் என்றது. சுட்டது: ஏகாதிபத்திய திமிர். திமிரின் பெயர்: ரெஜினால்ட் டையர்.

      "நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக் கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன்படி அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் குண்டடிப்பட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடியிருந்தவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக் கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமையாக நடந்துக் கொன்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை".

     1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது திமிர் பிடித்த கருத்தக்கள் இவை.

பின்னணியின் பின்னணி.. 

     திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம் மற்றும் அப்போதுதான் இந்தியாவில் போராட்ட களத்தில் இறங்கியிருந்த மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் போன்றவை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பற்றத்துவங்கின. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது. அந்நிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் பேராட்ட எழுச்சியை ஆரம்பத்திலேயே துடைத்தெறிய ஆட்சியாளர் முடிவெடுத்தனர். இந்த பின்னணியில்தான் சிட்னி ரௌலட் என்பவர் தலை மையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதை எதிர்த்துதான் ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடந்தது அப்போதுதான் அந்த கொடூர துப்பாக்கிச்சூடு நடந்தது. இதுமட்டுமே பின்னணியாக சொல்லப்படுகிறது. இது மட்டுமா பின்னணி.

     இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றியே இந்த சிட்னி ரௌலட் குழு அதிகம் ஆராய்ந்தது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஆஹா என்று எழுந்த யுகபுரட்சி இந்தியாவையும் ஆட்டிப்படைத்தது. இங்கிருந்த இளஞர்கள் அந்த நாட்டை நோக்கி நடைப்போட துவங்கினர். எனவேதான் போல்ஷெவிக் தொடர்புகள் ஆராய்ச்சி துவங்கியது. இந்த காலகட்டத்தில்தான் வங்கத்தில் இருந்த புரட்சிக்குழுக்கள் பக்கிம் சந்திர சட்டர்ஜி, சுவாமி விவேகானந்தர் உரைகளை முன்னோடியாகக் கொண்டனர். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுத்திலிருந்து பெறப்பட்ட வார்த்தையான அனுசீலன் சமிதி என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டது. இதில் அரவிந்த் கோஷ், பரித்திர கோஷ், சி.ஆர்.தாஸ், ஜதீன் பானர்ஜி ஆகியோர் அங்கம் வகித்தனர். 

     1905 இல் நடந்த வங்கப்பிரிவினை இந்த புரட்சியாளர்களை மிகவும் சினம்கொள்ளச் செய்தது. 1907 டிசம்பர் 23 இல் குதிராம் போசும், பிரபுல்ல சகியும் வங்கப்பிரிவினைக்கு காரணமான கிங்ஸ் போர்டு என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு  குண்டு வைத்தனர். 1908 இல் சசீந்திரநாத் சன்யால் பனாரசில் இளைஞர்களை திரட்டும் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றினார். ஹர்தயால் 1913 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கதார் என்ற பத்திரிகையை துவக்கினார். பின்பு இந்த பெயரில் இயக்கம் துவக்கப்பட்டு கத்தார் சிங் சராபா என்ற இளம் புரட்சியாளனை கொடுத்தது. இந்த அமைப்பு முன்பு இருந்த அமைப்புகளை எல்லாம் விட மதசார்பற்ற தன்மையை வலியுறுத்தியது. 1915 ஆம் ஆண்டு கத்தார் சிங் சராபா தன்னுடைய 20 ஆம் வயதில் தூக்கு மேடையேறினான். 

    மேற்கொண்ட குழுக்கள் எல்லாம் தங்களுடைய ஊழியர்களுக்கு தொடர்ந்து அரசியல் வகுப்பை நடத்தினர். குறிப்பாக கல்கத்தா அனுசீலன் சமிதி அலுவலக நூலகத்தில் 4000 புத்தகங்கள் இருந்தது. இந்த நூல்கள் தேசபக்த உணர்வையும், தியாக உணர்வையும், அடிமைத்தனத்தின் மீது வெறுப்பையும் தூண்டின. முந்தைய புரட்சிகள் மற்றும் விடுதலை போராட்டங்கள் மற்றும் படிப்பினைகளை போதித்தன. இறுதியாய் பிரிட்டிஷ் இந்தியாவை ஆக்ரமித்திருப்பதால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவு மற்றும் துன்பத்தை விளக்கின.

 இந்த பின்னணியில்தான் இயக்கங்களை, ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு ரவுளட் சட்டம் வழிவகுத்தது கொடுத்தது. இருப்பினும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நாடு முழுவதும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். இது ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் வன்முறை சம்பவங்களுடன் கடையடைப்பு நடந்தது. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர். மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. தொடர்ந்து ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்பு கூட்டங்கள் நடந்தது. ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும்பெரும் போராட்டமாகவே வளர்ந்தது. இந்த போராட்டத்தின் உச்சம்தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை.

ஏப்ரல் 13, 1919..    

 ஆஸ்த்திரியா விடுதலை பெற்ற, கம்யூனிஸ்டுகளின் மூன்றாம் அகிலம் துவக்கப்பட்ட, மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் அமலாக்கப்பட்ட, கிலாபத் இயக்கம் துவங்கிய அதே 1919 ஆம் ஆண்டிண் ஏப்ரல் 13 வைசாகி நாள். அந்த தினம்தான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு நடந்த நாள். அமிர்தசரஸில் இந்நாள் எப்போதும் சிறப்புடன் கொண்டாடப்படும். அந்த தினத்தில்தான் ரவுலட்சட்டத்தை எதிர்த்து அந்நகரின் புகழ்பெற்ற ஜாலியன் வாலாபாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். திரண்டவர்கள் மீதுதான் மனிதத்தனமையற்ற துப்பாக்கிச்சூட்டை டயர் நடத்தினான். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. திறந்திருந்த ஒரேயரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களி மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழுந்தனர். மொத்தமாய் வீழ்ந்தனர். 

 பஞ்சாபின் துணை ஆளுநர் மைக்கல் ஓ'ட்வையர் "ஜெனரல் டயரின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானவையே" ஆட்சியாளர்களுகு தந்தி அனுப்பினான். இதனால்தான், ஆட்சியாளர்களின் இந்த கொழுப்பால்தான் பஞ்சாப் படுகொலைகளை விசாரிக்க ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழுவை வைசிராய் நியமித்த போது "சுட்டேன் சுட்டேன் கை ஓயும் வரைச் சுட்டேன்" என திமிருடன் டயர் வாக்கு மூலம் கொடுத்தான். மைதானங்களில் மக்கள் விளையாடுவது இயல்பெனினும் மைதானங்கள் விளையாடுவதற்கு மட்டுமல மக்கள் வாழ்வினை பாதுகாக்கவும் பயன்படுத்த முடியுமென மக்கள் நிருபித்ததும் இங்குதான். அவர்கள் அப்போது மாண்டு போனாலும் அவர்களின் இறுதி நிகழ்வு தேசத்தில் ஆயிரக்கணக்கான கோபங்களின் பிறப்பிடமாய் இருந்தது. அந்த மைதானத்தின் மண் இந்த தேசத்தில் பல நூறு உத்தம் சிங்குகளை, பகத் சிங்குகளை உருவாக்கியது. இந்த மைதானத்தின் உதிரம் தோய்த மண்ணை இறுதிவரை தன்னுடன் அடைகாத்தான் பகத்சிங். இந்த படுகொலைகளை ஆதரித்த பஞ்சாபின் துணை ஆளுநர் மைக்கல் ஓ'ட்வையரை 21 ஆண்டுகள் கழித்து லண்டனில் சுட்டுக்கொன்றான் உத்தம்சிங். அந்நிய ஆட்சியாளர்கள் மக்களை மந்தைகளாய் நினைத்தனர். மக்கள், மந்தைகள் இல்லை என நிருபித்தனர். அதனால்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.