பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 11 July 2013

காமராசரின் பள்ளிச்சோறு.

நான்
பள்ளிக்கூடத்துச் சோறு.

ஏழைச் சிறுவனை
புத்தகம் சுமக்கவைத்த
பேராண்மையின் சோறு.

எழுத்துகளைத் தொடுகையில்
ஒட்டிக்கிடக்கும் வயிற்றுள்சீண்டும்
பட்டினி வலியினைப் போக்க
பள்ளிச்சிறுவனின் தட்டில்
பெருமளவு நிறைகிறேன்.

உணர்வை உதாசீனப்படுத்தும்.,
ஏழ்மை விழிகள் வீழ
குடிசைச் சிறுவனின்
இரைப்பையில் விழுகிறேன்.

சோறில்லாத் தட்டுகளில்
புத்தகப்பைக் கனவு
மெய்ப்படாத சாத்தியத்தை
மெய்யாய் உணர்ந்தவரின்
மெய்ப்பொருள்
நான்.

கிழிசலுடைச் சிறுவனின்
குறுந்தட்டில்
நான் விழும்போது
அறியாமை வீழ்ந்ததையெண்ணிச்
சிலிர்க்கிறேன்.

எண்ணெயில்லாத தலைகளை
ஏற்றமுடையதாய் மாற்றிய
எளிமைச் சிற்பியின்
எண்ணம் நினைத்து
வியக்கிறேன்.

குடிசைக்குள்ளிருந்து கல்வியொளி
ஒளிர்வதையெண்ணி
கர்மவீர்ரின் கரம்பற்றி
வணங்குகிறேன்.

பள்ளிச் சுவர்களில்
பசிநீங்கிய பெருங்கதை
பதிவு செய்யப்பட்டபோது..
பெருந்தலைவரின் பேரன்பும்
பதிவு செய்யப்பட்டது.

அகரம் படிக்கும்
அன்புச் சிறுவனின்
கடைவாயில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
என் நிழலில்
சரித்திரம் எழுதும்,

பாரதியின் கவிதை
இங்கே தான்

உயிர்பிக்கப்பட்டது

2 comments:

  1. mikavum ullarntha valikalai ulvangiya karuthottam !!!

    ReplyDelete
  2. அய்யா அவர்களுக்கு வணக்கம். ஆசிரியர் புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்டேன். உஙகளை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய படைப்புகள் உயிரோட்டமானது. உங்கள் தமிழ்ப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் பக்கத்தில் இணைந்து இருப்பேன். சந்திப்போம் அய்யா.

    ReplyDelete