பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Tuesday 17 December 2013

மரணத்தின் துளி !                                 நவம்பர் மாதத்தின் ஒரு பின்நாள். கடும் காய்ச்சல். அன்று காலையிலிருந்தே உடல் ஒத்துழைக்க மறுத்தது. களைப்பும் சலிப்புமான பொழுதுகளின் கனத்த நகர்தலில் பள்ளிக்குச் சென்றேன். அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு என்ற காரணத்தைத் தவிர நான் பள்ளுக்குச் சென்றதற்கு வேறு காரணம் கண்டறிய இயல்வில்லை. முதல் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு.
                        அன்று என்னால் வகுப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. மாணவச் செல்வங்கள் என் மனநிலையைப் புரிந்து கொண்டு என்னை வகுப்பை விட்டுத் துரத்தினார்கள். தலைமையாசிரியரிடம் நாணத்தையும் மீறி அனுமதி கேட்டேன். என்னை இரக்கத்துடன் பார்த்த அவர் மானசீகமாக அனுமதி அளித்தார். சக ஆசிரியத் தோழர்கள் என்னை வீடு வரை கொண்டுவந்து விடுவதாகச் சொன்ன வேண்டுகோளை ஏற்க மறுத்த அந்த நொடியிலிருந்து என் முள்பாதை தொடங்கியது.
                        களைப்புடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்த என் மனம் அமைதியற்று இருந்தது எனலாம். புதுக்கோட்டை மச்சுவாடிச் சாலையில் என் முன்னால் சென்ற நாயொன்றைக் காப்பாற்றும் பொருட்டு வண்டியைத் திருப்பிய எனக்கு அடுத்து நடந்தது நினைவில்லை. சாலையில் இரத்த வெள்ளத்தில் மிதந்தேன். வலது கால் முட்டியில் கடுமையான வலி. நாடி பெயர்ந்திருந்தது. ஆங்காங்கே இரத்தச் சிராய்ப்புகள்.
                       . பேசச் சக்தியற்று நடக்கச் சக்தியற்று விழுந்து கிடந்த என்னை ஒரு கை ஆதரவாகப் பற்ற்றியது. அன்புடன் பேசியது. என் செல்பேசியிலிருந்து என் மனைவிக்கும் ஆசிரியத் தோழர்களுக்கும் செய்தி அனுப்பியது.
                       என்னைக் காப்பாற்றிய அந்த மனிதரை நன்றி நவிலப் பார்த்தேன். என்னைக் கைத்தாங்கலாலாத் தூக்கி ஒரு மகிழுந்திலேற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அந்த மகானின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழ வேண்டும் போல் இருந்த்து. சக மனிதன் துடித்துக்கொண்டிருக்கும் போது நேசமுடன் கை நீட்டும் இத்தகைய மனிதர்களால் தான் உலகம் இன்னும் உயிர்த்துக்கொண்டிருக்கிறது. அவரது பெயரைக் கேட்டேன். முகம்மது ஜமால் என்று கூறினார். என் இதயச் சுவர்களில் பாரதிக்கு அடுத்த படியாய் அவரைச் செதுக்கினேன். என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதராய் அவர் இருந்தார்.
                    ஆசிரியத் தோழர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார்கள்.  தோழர் செந்திலும் அம்புரோஸும் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். என் உடைகளைச் சரி செய்தார்கள். புது உடையினை ஒடிப்போய் வாங்கி வந்தார்கள்.  என் மனைவியிடத்து ஆறுதல் கூறி உதவிகள் பல செய்தார்கள். தோழர் மகாசுந்தர், திருப்பதி. முத்து நிலவன் ஆகியோர் உடனடியாக மருத்துவர் சலீமைத் தொடர்பு கொண்டு அவசரச் சிகிச்சைக்கு உதவினார்கள். நிஜாம் ஓரியண்டல் உடற்கல்வி ஆசிரியத் தோழர் என்னைத் தூக்கி மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றதை நினைத்துப்
பார்க்கையில் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்து விட்டது. எத்தனை அன்பு. மனித நேயத்தின் நிழல் அங்கே நீண்டிருந்தது.
                      மருத்துவர் குத்தூஸ் என்னைச் சோதித்தார். ஒரு மாதம் விடுப்பு எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தியவுடன் எனக்குத் தலை சுற்றியது. என் மாணவர்கள், என் தமிழாசிரியர் கழகம், என் குடும்ப்ப் பணிகள் எல்லாம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன. அந்நேரத்தில் மருத்துவர் குத்தூஸும், மருத்துவர் சலீமும் என் முதன்மையான உணர்வுகளாகத் தெரிந்தார்கள். மரணத்தின் வலி என்னைப் படுக்கையில் வீழ்த்தியது. சொல்லொணா வலி என்னைச் சூழ்ந்து கொண்டதாய் உண்ர்ந்தேன்.
என் ஆசிரியப் பணியில் இருபத்தைந்து நாள் விடுப்பு எடுத்தது முதன்முறை என்றாலும் எதோ இனம் புரியாத அச்சமும் கோபமும் எரிச்சலும் என்னை ஆட்கொண்டன.
                     இதோ கொஞ்சம் கொஞ்சமாக நான் என் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறேன். வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த தருணங்களில் பராதியையும் சிலப்பதிகாரத்தினையும் தொல்காப்பியத்தினையும் முழுமையாகப் படித்தேன். முடக்கம் இனித்தது.
                என்னை மீள வைத்த ஆசிரியத் தோழர்களின் அன்பு வியப்பிலாழ்த்தியது. அவர்களின் மனித நேயத்தை வணங்கித் தொழுகிறேன்.
என் மீள்தலில் மகிழ்வு கொண்டு அக அன்பு ஒழுக என்னை அரவணைத்த என் பள்ளி ஆசிரியத் தோழர்களுக்கும், தமிழகத் தமிழாசிரியர் கழக புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் என் நிலை கண்டு கண்ணீர் துளிர்த்து எனக்காக இறைவனைத் தொழுத என் மாணவச் செல்வங்களுக்கும் என்னை ஆற்றுப்படுத்திய என் ஆருயிர் அனைத்து ஆசிரியத் தோழமைகளுக்கும் என்னை முழு உடற்தகுதியடையச் செய்வதற்காய் அல்லும் பகலும் அயராது உழைத்துப் பாடுபட்ட என் அன்பு மனைவிக்கும் என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். சாலை விபத்து என்பது ஒரு மனிதனின் வாழ்வை எவ்வாறு புரட்டிப் போட்டுவிடும் என்பதற்கு என் அனுபவமே முன்நிற்கும் எச்சரிக்கைப் பாதை. இப்பொழுதெல்லாம் அந்த மச்சுவாடிச் சம்பவமே அடிக்கடி என்முன்னால் அச்சமேற்படுத்துகிறது. கவனமாக வண்டியில் செல்லுங்கள். ஏனென்றால் நம் கடமைகள் நம் முன்னே வெற்றிடமாக்கப் பட்டுவிடும்.

4 comments:

 1. வாகனம் ஓட்டும் போது நிச்சயம் கவனமாக செல்லத்தான் வேண்டும். அவரவர் கடமையும், குடும்பமும் கவனத்தில் இருக்க வேண்டும்.
  நலம் பெற்று திரும்ப உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 2. வணக்கம் சார்.உங்களைச் சுற்றி நல்ல உள்ளங்கள் உங்களுக்காக வாழ்கின்றன.புதிதாய் எழுங்கள்.விபத்து உங்களுக்கு உறவுகளை அடையாளம் காட்டியிருக்கும்.கவனம் தேவை .அச்சம் வேண்டாம்.நன்றி

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரர்
  தங்களுக்கு நேர்ந்த விபத்து குறித்து இன்று தான் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். மனம் பதைபதைக்கிறது. தங்களுக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள். தாங்கள் விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன். கடந்த கசப்பான நிகழ்வுகளை மறந்து புதிதாய் இன்று பிறந்தோம் என்று எண்ணி வீறுநடை போட வாழ்த்துவதோடு இறை வேண்டலும் தொடர்கிறேன் சகோதரரே..

  ReplyDelete
 4. உடல் உள்ளம் ஒத்துழைக்க மறுக்கும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது மிக நல்லது. பொதுவாக சாலை விபத்தில் சிக்குவோரை உதவ முன்வரும் உள்ளங்கள் அரிது, குறைந்தது மருத்துவ உதவி முதல் உதவியாவது அளிக்க முயல் வேண்டும். ஆனால் நம்மில் சில நல்ல உள்ளங்களைத் தவிர வேறு எவரும் உதவ முன்வராதிருப்பது வருத்தமே. நல்லதொரு பகிர்வு, இதை வாசிப்போராவது விபத்தில் சிக்காமல் சிக்கியோரை உதவ மறுக்காமல் இருக்க முயல வேண்டுகிறேன். நன்றிகள்!

  --- விவரணம். ---

  ReplyDelete