அன்று
பிற்பகல் நேரம். தமிழாசிரியர் முழக்கம் சனவரி இதழ்
கிடந்தது. பொதுச்செயலர் அவர்கள் தனது மடலில் பத்தாம் வகுப்பு
தமிழ் பாடத்திற்கான அகமதிப்பீடு சார்ந்த கோரிக்கை அரசின் கவனத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
உவகையாக இருந்தது. அங்கு வந்த ஆசிரியர் ஒருவரிடம்
இதைப் பற்றி பேச்சுக் கொடுத்தேன். அவர் பத்தாம் வகுப்பு எடுக்கும்
ஆசிரியர். அவரின் கருத்துகள் சக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த எண்ணமாக
ஒலித்ததாக நான் கருதினேன்.. அவர், அகமதிப்பீட்டுக்
கோரிக்கை தேவையற்றது;இது மாணாக்கர்களை சோப்பேறிகளாக்கி விடுமென்றும்,
கூறியதோடு ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் போட்டு
விடுவாரென்றும் கூறினார். போகிறபோக்கில் அது ஆசிரியர்களின் மதிப்பீட்டு
நோக்கை சீர்குலைத்து விடுமென்றும் கூறிவிட்டுச் சென்றார்.
தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின்
இக்கோரிக்கை பிறநிலை ஆசிரியர்களிடையே வரவேற்பினைப் பெறாததற்குக் காரணம் என்னவென யோசிக்கையில்
பாடத்தளம் குறித்து புரிதல்கள் இன்னும் பரவலாக்கப்படவில்லையெனத் தோன்றியது.
ஒரு பாடத்தில் அதிக எண்ணிக்கையில்
மாணவர்கள் தோல்வி அடைந்தால் அதுகுறித்த
விவாதங்கள் ஆண்டு தோறும் நடைபெறுகின்றன. அது இறுதியில்
ஆசிரியரின் திறன்குறை நிலையை மையப்படுத்தி முடிந்துவிடும் . மாணவர்களின்
திறன் அங்கு மையப்படுத்தப்படவில்லையென்பது விவாதத்தின் ஒருசார்நிலையினை வெளிக்கொணர்வதை
அனைவரும் அறிந்திருந்தாலும் அது பற்றி எத்தரப்பிலும் கருத்துகள் எழுவதில்லை.
முன் ஆண்டுகளில் தமிழ்ப்பாடம்
மாணவர்களுக்கு எளிமையாக இருந்ததெனவும், இப்போது அவர்களுக்குக்
கடினமாக மாறியது ஏன் எனவும் தற்போது எங்கும் பரவலாகப் பேசிவரும் நிலையில் நாம் சில முன்கருத்துவரைவுகளை எடுத்துக் காட்டுவது
காலத்தின் கட்டாயமாகிறது.
சமச்சீர்கல்வி தமிழ்ப்பாட அமைப்பு
இயல்பாகவே அமைந்துள்ளது. அது மாணவர்க்கு கடினமாக இல்லையெனினும்
அதன் போக்கு மாணவரை சுயசிந்தனை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதில் இருவேறு கருத்தில்லை.
ஆனால் திறன் சோதனை என்பது வெறும் மதிப்பீட்டு நிலையிலேயே இங்கு உள்ளது.
இது சுயசிந்தனை என்ற மைய இலக்கினின்றும் விலகிச் செல்வதை கல்வியாளர்கள்
கண்டு கொள்ளவில்லை என்பதே தமிழாசிரியர்களின் ஆதங்கம்.
தமிழ் இரண்டாம் தாளில் அறிதலுக்கு
இருபது மதிப்பெண்களும், புரிதலுக்கு முப்பது மதிப்பெண்களும்,
பயன்படுத்தலுக்கு இருபத்தைந்து மதிப்பெண்களும் திறனுக்கு இருபத்தைந்து
மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன.
கட்டுரை, கடிதம், படைப்பாற்றல் வினாக்களான கவிதை, சிறுகதை எழுதுதல் போன்றவை மாணாக்கர்களால் தன் சுயசிந்தனை சார்ந்து எழுதப்படுகிறதாவென்றால்
அது கேள்விக்குறிதான். என்னிடமே நிறைய மாணவர்கள் கவிதை எழுதித்தருமாறு
கூறி அதனை மனப்பாடம் செய்து தேர்வில் எழுதுவதை நான் கண்டிருக்கிறேன். இது மாணவர்களின் அடைவுநிலையில் எத்தகு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
மாறாக மனப்பாடம் செய்யுந்திறனே அதிகரிக்கும் .இது
மாணவரின் திறன் சோதனைக்கு முரணாக அமைந்துள்ளதை மறுக்கவியலாது. மாணவர் திறனை மதிப்பீடு செய்வதில் புறத்தேர்வு முழுஅளவுகோலாக இருக்கவியலாது
என்பது கல்வியாளர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோள் ஆகும். இச்சூழலில் இதிறன் சோதனையை அகத்தேர்வாக மதிப்பீடு செய்வது மாறிவரும் கல்விச்சூழலில்
அவசியமான ஒன்றென்றே நாங்கள் கருதுகிறோம்.
மாணவர்கள் ஏற்கனவே ஒன்பதாம்
வகுப்பில் செயல்திட்டம் என்ற அகஒப்படைவு ஒன்றை வழங்கி வருகின்றனர். இது அவர்களின் களப்பயணம், சமூகச் சிக்கல்கள்,
வாழ்வியல் சூழல், குடும்ப அமைவு போன்றவை சார்ந்ததாகவே
அமைகின்றது. இச்செயல்திட்டம் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில்
மாணவர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையினையும் முழுத்திறன் அடைவையும் வெளிக்கொண்ர்ந்துள்ளது
என்பது கல்வியியளாளர்களின் ஆய்வு முடிவாகும்.இவ்வக ஒப்படைவு பத்தாம்
வகுப்பிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது மாணவனின் திறனைடவை வெற்றியாக்கும்.
இது மேல்நிலை வகுப்பிற்கான ஆயத்தமாகவும் அமையும் எனலாம்.
எனவே மாணவர்களின் திறன்களுக்கான
அகமதிப்பீடு காலத்தின் கட்டாயமாகும். அது மாணவர்களின் களப்பயணம்,
சமூகச்சிக்கல்களைத் தீர்க்கும் நுண்ணறிவு, தலைமைப்பண்பு
வெளிப்பாடு, ஆளுமை வளர்ச்சி, நல்லொழுக்க
நெறி வழுவாமை, முன்னோர்களின் தடம்பற்றல், மொழிப்பற்று போன்றவை சார்ந்து மதிப்பிடப்படல் வேண்டும். இரண்டாம் தாளில் திறன் மதிப்பீடும், பயன்படுத்தல் மதிப்பீடும்
அகமதிப்பீடாக வழங்கப்படின் கல்வியின் மையப்பொருளான சுயசிந்தனை மேம்படலென்னும் குறிக்கோள்
வெற்றியடையும்.
இது மாணவர்களை மனப்பாடப் பாலைநிலத்திலிருந்து
மீட்கும். மாணவர்களின் சுயகற்றலை மேம்படுத்தும். கல்வியாளர்கள் கூறும் மனம்மகிழ் கற்றல் மாணவர்களுக்குக் கிட்டும். அரசு இது சார்ந்து விரைந்து முடிவெடுத்து இக்கல்வியாண்டிலேயே மொழிப்பாடத்தில்
அகமதிப்பீட்டினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் கோரிக்கை
மட்டுமல்ல. மனப்பாடம் செய்வதை வெறுக்கும் கோடானுகோடி மாணவர்களின்
அவாவுமாகும்.
சி.குருநாதசுந்தரம்,
மாவட்டச்செயலர்,
தமிழகத்
தமிழாசிரியர் கழகம்,
புதுக்கோட்டை.
அரசு இது சார்ந்து விரைந்து முடிவெடுத்து இக்கல்வியாண்டிலேயே மொழிப்பாடத்தில் அகமதிப்பீட்டினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் கோரிக்கை மட்டுமல்ல. மனப்பாடம் செய்வதை வெறுக்கும் கோடானுகோடி மாணவர்களின் அவாவுமாகும். மிகச் சிறப்பாக கூறியுள்ளீர்கள் ஐயா. தங்களின் சேவை மாணவர்களுக்கு தேவை என்பதை மறுபடியும் தங்களின் சிறப்பான கட்டுரை வடிவில் அகமதிப்பீட்டின் அவசியத்தினை முன்னுரைத்தீர்கள் மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி தம்பி. என் மாணவராயிருந்து என் கருத்துகளை நோக்கி நற்பின்னூட்டம் வழங்கியமைக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
உண்மையில் வரவேற்கா வேண்டிய வியத்தை பதிவாக எழுதியமைக்கு நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ஐயா. காலத்தின் தேவை இது ஐயா.
Deleteஅக மதிப்பீடு அவசியம் வழங்கப்பட்டாக வேண்டும் நண்பரே
ReplyDeleteபன்னிரெண்டாம் வகுப்பிற்கு மொழிப் பாடங்களுக்கு அக மதிப்பீடு உண்டு
ஆனால் பத்தாம் வகுப்பிற்குக் கிடையாது
இது விந்தையல்லவா
மொழிப்பாடத்திற்கு அகமதிப்பீட்டின் அவசியத்தை என்னுடன் இணைந்து குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. தங்களைப் போன்ற கல்வியாளர்களின் குரல் அரசின் காதுகளில் விழ வேண்டும். மிக்க நன்றி ஐயா.
Deleteநல்லதே நடக்கட்டும் ஐயா...
ReplyDeleteநடக்க வேண்டும் ஐயா. தமிழாசிரியர்களுக்கு மன உளைச்சல் நீங்க வேண்டும். பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றீ ஐயா.
Deleteஅகமதிப்பீட்டு முறை அருமையான மதிப்பீட்டுமுறை என்பதை முதலில் ஆசிரியர்கள் உணரும்படிச் செய்வது அவசியம். அப்போதுதான் இந்தப் புதிய மதிப்பீட்டு முறை வெற்றிபெற முடியும். மாணவர் நலன் சார்ந்த இம்முறையை உள்வாங்கிக்கொள்ள ஆசிரியர்கள் முன்வரவேண்டும். எல்லாவற்றுக்கும் சராசரி மதிப்பெண் கொடுக்கும் சராசரிக்கும் கீழான ஆசிரியர்கள் கொஞ்சம் சிரமப்படடாலும் கற்றுக்கொண்டால் அவர்களே சராசரிக்கும் மேலான ஆசிரியர்களாக வாய்ப்பு உண்டு. நல்ல பதிவு. உங்களின் இதுபோலும் புதிய முயற்சிகள் வெற்றிபெற வேண்டிய சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறேன். வாழ்த்துகள் குரு.
ReplyDeleteதங்களின் பின்னூட்டம் மிவும் கவனிக்கப்பட வேண்டியது ஐயா. அனைத்துத் தமிழாசிரியர்களுக்கும் இதனை உணர்த்த வேண்டும். தங்களின் ஒத்துழைப்போடு இச்சாத்தியம் சாத்தியப்படுமென்றே எண்ணுகிறேன். மிக்க நன்றி ஐயா.
Deleteஉண்மைதான்! அகமதிப்பீடு தேவையான ஒன்றுதான்! மனப்பாட முறையில் இருந்து மாணவர்களை கொஞ்சமாவது இது மீட்டெடுக்கும்! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே. காலத்தின் கட்டாயம் இது. நன்றி ஐயா.
Deleteநல்ல திட்டம் சார் விரைவில் வரட்டும்..
ReplyDeleteமிக்க மகிழ்வாயுள்ளது. தங்களைப் போன்றவர்கள் என் தளத்திற்கு வருவதே
Deleteஎனக்கு உவகை. எனக்காகவும் நேரத்தை ஒதுக்கி நற்பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி அம்மா.
Pl write more name of blogs
ReplyDelete