வலைப்பதிவர் சந்திப்பு - புதுக்கோட்டை
வணக்கம்.
பணிப்பளு காரணமாய் இதுகாறும் பதிவுகளை இட
இயலவில்லை. கடந்த மாதத்தின் ஒரு பிற்பகலில்
என் மதிப்பிற்குரிய தமிழாசிரியர் கவிஞர் முத்துநிலவன் அவர்களிடமிருந்து அலைபேசி ஒலித்தது.
எப்பொழுதும் அடிக்கடி அலைபேசியில் ஐயா கூப்பிட மாட்டார். நானும் அவ்வளவு அதிகமாக அவரிடம்
பேச மாட்டேன். இயல்பாக என்னுள்ளே இருக்க்கின்ற நான் மாற்றிக்கொள்ள நினைக்கும் எனது
அதிகம் பேசாக்குணம் அவரிடம் மட்டுமல்ல, என்
மதிப்பிற்குரிய நண்பர்கள் அனைவரிடத்தும் என் மீது ஒரு தலைக்கன மனப்பான்மையை ஏற்படுத்தியிருந்தது
என்றால் அது மிகையாகாது. ஆனால் ஐயா அவர்கள் என்னை அதிகம் ஊக்கப்படுத்தி பல்வேறு நிகழ்வுகளுக்கு
என் தனித்திறன்களைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆதலால் அவரிடமிருந்து அலைபேசி வந்தால்
ஒரு மிகப்பெரும் நிகழ்வுக்காக என்னை அழைக்கிறார் எனப் பொருள்.
. அது மிகச்
சரியாகவே இருந்தது. “ குருநாதன் , இந்த ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு நம்ம மாவட்டத்துல
நட்த்தலாமா? அவர் என்னிடம் ஆலோசனை கேட்டார். என் ஆலோசனைகளை நான் கூற மாட்டேன் எனவும்
அவருக்குத் தெரியும். சரி ஐயா, எனக் கூறிவிட்டு நான் அலைபேசியை வைத்து விட்டேன். கல்வித்துறை
சார்ந்த பெரும் நிகழ்வுகள் என்னை அவர் பக்கம் போக இயலாத படி தடுத்தன. இருப்பினும் ஒவ்வொரு
திட்டமிடலுக்கும் என்னை அவர் அழைக்கத் தவறியதில்லை. ஒருநாள் ஒரு திட்டமிடல் கூட்டத்திற்கு
நான் சென்ற போது, வியந்தேன், அவ்வளவு பணிகளை அவர் முடித்திருந்தார். என்னிடம் அப்பொழுதும்
ஆலோசனைகள் கேட்டார். எனக்கு என் இயலாமை மீது கோபமாக வந்த்து. என்னை அடிக்கடி கூர்தீட்டி,
என்னை பல முக்கிய நிகழ்வுகளுக்கு ஆயத்தப்படுத்திய அவருக்கு எவ்வித உதவியும் செய்யவியலாத
நிலையில் இருந்த எனக்கு முதன்முதலாக என்மீதே வெறுப்பு தோன்றியது. என் சகதோழர்கள் கஸ்தூரி,
ஐயா மகாசுந்தர், கவிஞர் கீதா, விருதோம்பல் அரசியும் நான் அடிக்கடி வியந்து பார்க்கும்
ஒரு முக்கிய நபருமாகிய தொடக்க்கல்வி அலுவலர் ஜெயா, போன்ற அனைவரும் அவருக்குப் பக்கபலமாய்
இருந்த்து எனக்கு சற்று ஆறுதலைத் தந்தது.
இருந்தாலும்
இப்பதிவர் திருவிழா நடப்பதற்கு ஒரு சிறிய பங்களிப்பாவது நான் செய்ய வேண்டுமென என் மனது
உறுத்தியதற்கிணங்க, இன்று முதல் என் பணியை
இப்பதிவு வாயிலாகத் தொடங்குகிறேன்.
மிகச்சிறப்பாக
நடைபெறப் போகிற இத்திருவிழாவில் கணினி பயின்ற தமிழாசிரியப் பெருமக்கள் அகரத்தை அடுத்த
தலைமுறைக்கு கணினி வழி நகர்த்தவிருக்கிறோம்..
மிக முக்கிய
ஆளுமைகள் இதில் கலந்து கொள்கிறார்கள். வலைப்பதிவுச் சித்தர் திண்டுக்கல் தனபாலன், வலைப்பதிவு
வேந்தர் கரந்தையார், ஜம்புலிங்கனார், இளங்கோ எனப் பட்டியல் நீள்கிறது. அன்றொரு நாள்
முனைவர். அருள்முருகன் ஐயா, நிலவன் ஐயா, திருப்பதி ஐயா, மகாசுந்தரய்யா போன்றோரால் வெங்கடேஸ்வரா
தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கிய பயிற்சி விதை இன்று தான் தன் கிளைகளைப் பரப்பத்
தொடங்கியிருக்கிறது. அதற்கு புதுக்கோட்டை தமிழாசிரியர் கழகத்தின் சிறு பங்கு போற்றுதற்குரியது.
அக்டோபர்
11 ஆம் தேதி வாருங்கள். இது இணையத்தால் இணையக்கூடிய அரிய வாய்ப்பு மட்டுமல்ல, இளம்
தலைமுறைக்கு நம் தமிழை அறிமுகப்படுத்தும் அற்புதமான திருவிழா .
வலைப்பூவால் தமிழ்மாலை கோக்க புதுக்கோட்டை வலைப்பதிவர் சார்பாக பணிவோடு அழைக்கிறேன்.
தங்களின் வருகை எங்களுக்குப் பேருவகை. பதிவும் போட்டிகளில் கலந்து கொள்ளலும் மிகவும்
முக்கியம், பெருநாழி பேருவகையோடு உங்களின் தடம் நோக்கிக் காத்திருக்கிறது.
மறக்காமல்
தங்களின் பொன்முடிப்புகளையும் கொடையாகத் தாருங்கள்.
தொடர்புக்கு
: http://bloggersmeet2015.blogspot.com
அலைபேசி
: 9443193293
நட்புடன்,
சி.குருநாதசுந்தரம்.
வலைபதிவர்
சந்திப்பு விழாக்குழு. உறுப்பினர்.
புதுகை வலைப் பதிவர் திருவிழாவில் சந்திப்போம் நண்பரே
ReplyDeleteகட்டாயம் ஐயா. புதுக்கோட்டை பதிவர்களளின் வழிகாட்டி தாங்கள் தான்.
Deleteமிக்க நன்றி ஐயா. தங்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
நிலவன் அண்ணாவின் சிறப்பே , சிரித்த முகத்துடன் வேலைவாங்குவதே தெரியாமல் வேலை வாங்கும் அழகுதான் இல்லையா சார்!! விழா கண்டிப்பாக வெற்றிபெறும்! நாம் அனைவரும் நம்மாலான பணிகளை செய்வோம்!! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றியம்மா.
Deleteநீங்க வந்தாலே புதுகைத் தமிழாசிரியர்கழகம் வந்துவிடும் சார்....இனி...மிக்க நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி .உங்களது சுறுசுறுப்புக்கு முன்னால் நாங்களெல்லாம் ஒன்றுமில்லை. உங்களின் பணி சிறக்க நாங்கள் கட்டாயம் துணை நிற்போம்.
Deleteஅய்யா ..வாருங்கள் கணினித் தேரை வடம்பிடிப்போம்,,!
ReplyDeleteவரலாற்றில் புதுகை மண்ணின் தடம் பதிப்போம்..!
தடம் இன்னும் செப்பனிடப்பட வேண்டுமய்யா. அது தான் நீங்கள் வந்து விட்டீர்களே? கணினித் தேர் கட்டாயம் புதுகைத் தமிழ் வீதியில் வலம் வரும்.
Deleteதமிழாசிரியர் கழக முன்னெடுப்பில் நாம் நடத்திய இணையப் பயிற்சி முகாம் படங்களைப் போட்டு ஓராண்டுக்கு முந்தியே நாம் விதைத்த வெயர்வையை நினைவுபடுத்தி விட்டீர்கள் அய்யா. இன்றைய வளர்ச்சியை நம் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் பார்க்க வேண்டும் என்றுதான் அவர்களை அழைத்திருக்கிறோம். தாங்கள் எழுந்துவிட்டால் அது இயக்கமாக மாறும் என்பது எனக்குத் தெரியும்..வாங்க வாங்க..சரியான நேரத்தில்தான் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள்..இனித் தொடர்ந்து பதிவிடுங்கள் அய்யா.நன்றி
ReplyDeleteமுன்னெடுப்பின் அகரம் நீங்கள் தானய்யா. உங்களின் பணி வியக்க வைக்கிறது. எங்களின் முன்னெடுப்பு நீங்கள் தானய்யா. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா.
Delete