Monday, 25 January 2016
மதிப்பெண்களல்ல வாழ்க்கை - சி.குருநாதசுந்தரம்.
மனம்
மகிழ்வாயிருக்கட்டும்
மாணவர்களே !!
வாழ்வுச்
செடியில்..
மதிப்பெண்பூக்கள்
மணப்பதில்லை..
இயல்பு
மனம்
என்றும்போல் இயல்பாயிருக்கட்டும்..
வழமை
போல்
புத்தகப்பக்கங்களுக்குள் ஒளித்துவைத்திருந்த
மயிலிறகைத் தேடுங்கள் !!
வகுப்பறைக் கலகலப்புகளின்
மீள்நினைவில்
மனம்விட்டுச் சிரியுங்கள் !!
சன்னலோரத்து ஒற்றைப்பூவிடம்
கவிதை சொல்லுங்கள் !!
ஆசிரியர்களின் மேசையில்
நன்றிப்புன்னகையைப் பரப்பிவையுங்கள் ,
அப்பாவின்
கோபமும்
அம்மாவின்
படபடப்பும்
அடுத்த
நாள் மறைந்துவிடும்,
மறைந்த
பொழுதுகளில்
மனம்மகிழச்
சொல்லுங்கள்
மதிப்பெண்களல்லவாழ்க்கை !!!
Sunday, 24 January 2016
வாசிப்பை நேசிக்கும் ஆளுமை !!
வாசிப்பை நேசிக்கும் ஆளுமை !!
ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சிறு வயதில், நாட்டு நடப்பு தொடர்பாக நிறையக் கேள்விகள் என்னுள் முளைத்தன; அதற்கான பதில்களைத் தேடினால், பாடப் புத்தகத்தில் இருக்காது. இப்படித்தான் என் வாசிப்பு தொடங்கியது. அரசியல் ஆர்வம் வாசிப்பை அதிகமாக்கியது. வாசிப்பு இல்லாவிட்டால் உண்மையான அரசியலைத் தெரிந்துகொள்ள முடியாது எனும் உண்மையை நான் பணியாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ இயக்கம் உணர்த்தியது.
படிக்கிற காலத்தில் புத்தகங்கள் வாங்குவதற்காகவே மூர் மார்க்கெட் வருவேன். பழைய புத்தகங்கள், அரிய புத்தகங்கள். அதே மாதிரி பைகிராப்ட்ஸ் சாலைக்குப் போவேன். புத்தகங்கள் வாங்குவதைத் தாண்டி, புத்தகக் கடைகளுக்குச் சென்று புத்தகங்களைப் பார்ப்பதும் புரட்டுவதுமே ஒரு அலாதியான அனுபவம்தான்.
சிக்கனமாகச் செலவு செய்பவன்தான். ஆனாலும், இயக்கப் பணிகளுக்காக டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று போனால், கட்சி அலுவலகத்திடம் கடனாளி ஆகிவிடுவேன். புத்தக ஆசைதான்!
கடலூரில் இருக்கும்போது 4 வீடுகள் மாறினேன். நெய்வேலியில் இருக்கும்போது 4 வீடுகள் மாறினேன்.
1992-ல் சென்னை வந்த பிறகு 4 வீடுகள் மாறிவிட்டேன். இப்படி ஒவ்வொரு முறையும் வீடுகளை மாற்றும்போது, புத்தகங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வது பெரிய சவால். எங்கள் வீட்டில் உள்ள பெரிய சுமையும் அவைதான்; பெரிய சொத்தும் அவைதான்.
மார்க்ஸிய தத்துவம் பற்றிய மூலநூல்கள், ரஷ்ய இலக்கியங்களான ‘தாய்’, ‘வீரம் விளைந்தது’ போன்ற நாவல்கள், ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, காந்தியின் ‘சத்தியசோதனை’, பாரதி-பாரதிதாசன் கவிதைகள், அம்பேத்கர், பெரியார் நூல்கள் இவையெல்லாம்தான் என் பார்வையை விசாலப்படுத்தின.
ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது புதிய கரு ஒன்று கிடைத்தால் அது மிகுந்த மனநிறைவை அளிக்கும். ஒரு விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்பின்போது எப்படி மகிழ்ச்சி அடைகிறாரோ அத்தகைய உணர்வு எனக்கு ஏற்படுவதுண்டு. உதாரணமாக: எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், சென்னையிலிருந்து வெளியான ‘ஆரியா’ என்ற இதழுக்கு
1901-ல் இந்தியாவில் உள்ள சாதிய ஒடுக்குமுறை பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இக்கடிதத்தை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்தை வாசித்தேன். இன்றைய தகவல் தொடர்பு வசதிகளெல்லாம் இல்லாத அக்காலத்தில் இந்தியாவில் நிலவும் சாதியக் கொடுமையைப் பற்றி டால்ஸ்டாய் பேசியிருந்தது ஆச்சரியப்படுத்தியது.
அரசியல்வாதிகள் படிப்பதற்கு நேரம் கண்டுபிடிப்பது ஒரு போராட்டம் என்று சொல்வார்கள். என்கூட எப்போதுமே புத்தகங்களை வைத்துக்கொள்வதால், வாசிப்பதற்கான நேரத்தை உருவாக்கிக்கொண்டே இருப்பேன். வெளியூர்ப் பயணங்களில் மூட்டையில் புத்தகங்களே அதிகம் இருக்கும். ரயில் பயணங்கள் படிப்பதற்கான சரியான வாய்ப்புகளில் ஒன்று.
அப்புறம், எங்கள் வீட்டில் எல்லோருமே நல்ல வாசகர்கள். என் மனைவி நூலகர். ஆகையால், வாசிப்பதை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொள்வோம். மக்கள் வாழ்வதற்காகப் போராடுகிறார்கள். கம்யூனிஸ்ட் டுகள் போராடுவதற்காக வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. வாழ்க்கை, போராட்டம் இரண்டிலுமே வாசிப்பு எனக்குப் பெரிய உந்துசக்தி.!
திரு. ஜி. இராமகிருஷ்ணன், தமிழக மாநிலச் செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் .
நன்றி : திரு. ரெங்கராஜன், முகநூல் நண்பர்.
Thursday, 14 January 2016
இனிய பொங்கல் வாழ்த்துகள் !!
செஞ்ஞாயிற்றுச் செலவினை அன்றே அளந்தறிந்த தமிழன், உயிர்கள் உறையும் உலகிற்கு ஆதிபகலன் ஆகிய சூரியனே காரணன் எனக் கண்டறிந்தான்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இயற்கையின் முதற்பொருளாகிய ஒளியை இறைவழிபாடாகக் கொண்டு, படைப்பு இயற்கையின் கொடை என்றறிந்து, படைக்கப்படும் பொருள் யாவும் தென்னை, வாழை, கரும்பு, நெல், அரிசி, இஞ்சி, மஞ்சள், பூ, புல், காய், கனி, கதிர் என இயற்கைப் பொருளாய் விளங்க, கூடி உழைத்துக் கொண்டாடி மகிழ ஊரும் மக்களும் ஆடும் மாடும் கன்றும் கழனியும் மரமும் செடியும் கொடியும் புல்லும் பூண்டும் பூவும் காயும் கனியும் உறவுகளாய் அமைய நலமாய் வளமாய் வாழ அருளும் ஞாயிறு போற்றும் நாளிது…
உலகம் உவந்து போற்றும் தமிழனின் வழிபாட்டை இன்று பெற்றனம். இனிதே பொங்கலிட்டு எங்கும் நிறைந்த ஒளி ஆற்றலைத் தொழுதேத்தினோம் ; ஏற்றருள் புரிந்து என்றும் துணை நிற்க இறைஞ்சினோம் தமிழே…!
உலகை வலம்வந்து உயிர்களை வாழவைப்பாயாக.. !
அறுவடைத் திங்களை ஆண்டின் தொடக்கமாகக்கொண்டு எல்லாம் வல்ல முழுமுதற்பொருளாம் சூரியனுக்கு நன்றி பாராட்டும் நன்னாளின்று - வாழ்த்துவோம் வளம்பெறுவோம்; மகிழ்வோம் மகிழ்விப்போம் எல்லாவற்றையும் ஏற்றுப் போற்றும் இடமகன்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் இளங்கதிர்ச் செல்வனே உன்னை வணங்கி மகிழ்கின்றோம்.
எழுந்து வா இளங்கதிரே…. ! இன்று புதிதாய்ப் பிறந்தோம் – புத்தாடை உடுத்தி, புதுப்பானைப் பொங்கலிட்டு உண்ணும் உணவில் ஒன்றுபட்டோம் உணரும் தமிழ்உறவில் ஒன்றுபட்டு நிற்போம் .. வழிபடுவோம் வல்லமை பெறுவோம்.

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். –
சி.குருநாதசுந்தரம்
Subscribe to:
Posts (Atom)