பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday 8 October 2016

அஞ்சல் அட்டை !!





மஞ்சள் முகத்தின்
எழுத்தொப்பனை அழகு !!


எழுத்துகளின்
இதமான. இருப்பில்
பேனாக்களின் வாசனை  !
 

குறுகிய  பரப்பிற்குள்
ஒடுங்கியிருக்கும்
வகுப்பறை. மாணாக்கரின்
இறுக்கத்துடனும்  எழுத்துகள் !!


நீட்டி முழக்கும்
நெடிய எழுத்துகளுக்கு
இங்கே இடமில்லை…


நலங்களும் விசாரிப்புகளும்
குறளடியாய்க் குறுகும்.


விடுதிக்குள்ளிலிருந்து
மகனின் மணம்
அஞ்சலட்டையில் பயணிக்கும்.


புகுந்த வீட்டின்
மகளதிகாரப் பயணங்களில்
அம்மாவின்
இதயத்துடிப்புகள் சீராக்கப்படும்!!

.
முதியோர் இல்லங்களின்
சுமை மனதுகளைச்
சுமந்து வரும்  
கண்ணீர் எழுத்துகளில்
அஞ்சலட்டை அழுததும் உண்டு..


கரிசல் மேட்டில்
மகனின் முகத்தை
வாசிக்கும் 
தாயின் முத்தத்தில்
அஞ்சலட்டை  அழகாகும்..


துக்கமும் துயரமும்
கண்ணீரும் வலியும்
அன்பும் அழுகையும்
சிந்தனையும்  சிரிப்புமாய்
அஞ்சலட்டைக்குப் பலமுகங்கள் !!



அகப்படுதலுக்கான
எந்த மூகாந்திரமும் இல்லாமலேயே
தபால்காரத் தந்தையும் நானும்
தேடுகிறோம்.


எங்களுக்கு
அகப்படவே இல்லை.
அந்த
மஞ்சள் முகத்தின்
மின்னஞ்சல் .முகவரி !!


இன்று உலக தபால் தினம்.


                                            சி.குருநாதசுந்தரம்..


2 comments:

  1. அருமை...
    நம்மோடு உறவாடிய அஞ்சலட்டையை நாமும் மறந்துவிட்டோம்...
    இணையப் புயலில் இணைத்தே மறந்து விட்டோம்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா, மிகச் சரியாகச் சொன்னீர்கள். தங்களின் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete