பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday, 30 March 2013

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்


மனிதத்தின் நினைவுகள் !

ஓராண்டு ஓடிவிட்டது.
நகர்மன்றத்தில்
நீ
உறங்கத் தொடங்கி !

விழிக்கும் நாளுக்காய்
விழியேங்கி நிற்கும்
வாசல் முகங்கள்
முற்றத்தில் உன்
வருகைக்காய் நிழலின்றி
வாடிக் கிடக்கின்றன.
விழித்தெழு வேந்தனே!

ஏழையின் துவண்டகைகளுக்குள்
தீர்க்கப்படாத கூலிப்பிரச்சனைகளும்.
விளைந்த பயிர்களுக்கு
விலைபேசயியலாத விவசாயிகளும்
முற்றுப் புள்ளியின்றி
முரண்பட்டு நிற்கிறார்கள்.
விழித்தெழு வேந்தனே!

சாவகாசமாய்ச் சிரிக்கும்
சாலைக் குழிகளும்
சந்தியதிரப் பரவிநிற்கும்
சாக்கடைக் குழிகளும்
நீயின்றி
நிலமழிக்க முயலுகின்றன.
விழித்தெழு வேந்தனே!

எங்கினிக் காண்போம்?
எங்குசென்று தேடுவோம்?
உரத்துக் குரல்கொடுக்கும்
உண்மையின் உரிமைகளை
எமக்குயாரினிச் சொல்வார்?

வளர்ந்த மரத்தை
வெட்டியது யாரென்று
வீதி முழுதும்
தேடிச் சலித்துவிட்டோம்.

மகிழ்ந்து சிரித்து
மனதெல்லாம் மணம்பரப்பி
உருண்டு விளையாடிய
உன் கல்லூரிவாயில்
சிகரம்போல் எழுந்துநிற்கிறது.
அதைப் பார்ப்பதற்காகவாவது
எழுந்துவா.

நீ நட்ட மரக்கன்றுகளுக்கு
நீரூற்றும் மாணவச்செல்வங்கள்
வேர் பிடித்த மரக்கன்றுகளைக்காட்ட
நின் வருகைக்காய்ப்
பள்ளி வாசலில்
தவம் கிடக்கிறார்கள்.
எழுந்து வா.

வகுப்பறை மரநிழலில்
சத்துணவு சாப்பிட்ட
சமத்துவ அரசியல்வாதியைக்
காண்பதற்காய் தொழுதுநிற்கிறார்கள்.
எழுந்து வா.

நனைந்த கண்ணீரோடும்
நனைந்த கனவுகளோடும்
மனிதத்தின் நினைவுகளை
விதைத்துக் கொண்டிருக்கிறோம்.

மரத்துப்போன மரணம்
மரணித்துப் போகட்டும்.

புதிதாய்ப்பிறந்து வா
புதுக்கோட்டைத் தாயின்
கருப்பை திறந்தேயிருக்கிறது.

புதுக்கோட்டையின்
புதுக் கோட்டையாளவேண்டும்.
புதிதாய்ப்பிறந்து வா.

No comments:

Post a Comment