பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Tuesday 23 December 2014

கட்டுரை முகம் :


மணம் !
                     கனத்த மௌனம். சிறகுகளின் ஓசைகள் கூட மெதுவாய்ப் படபடக்க எத்தனித்த கவன மௌனம். இம்மௌனத்தின் நிகழ்வலையின் புள்ளி தோன்றிய தருணங்கள் மனித இனத்திற்கு ஒரு முக்கியமான நிறைவினைத் தந்துள்ளது உண்மை. இந்நிறைவில் தான் மகிழ்வின் துள்ளலும், சிந்தனையின் கூராய்வும் தோன்றின. அந்நிறைவின் புள்ளி புத்தக நேசத்தில் பிறந்ததை யாரும் மறுக்க முடியாது. அச்செழுத்துகளின் புரட்சி மனிதனை புரட்டிப் போட்டது. சிந்தனைகளின் பரிமாற்றத்தில் புரட்சி உணர்வுகளில் வெடித்தது. இது புத்தக நேசத்தின் வரையறையை எல்லையில்லாததாக்கியது.

                  புத்தக நேசம் மனிதத்தின் ஆளுமையை உயர்த்தியது . எனினும் தேடுதலின் சில நேரச் சலிப்பில் நேசத்தின் ஆழம் சிறிதேனும் குறையும் என்பது அனைவராலும் அனுபவிக்கப்பட்ட உண்மை. இவ்வுண்மை அனைவருக்கும் நேர்ந்திருக்கலாம். அல்லது சலிப்பின் நீளம் முடக்கப்பட்டிருக்கலாம். எனவே புத்தக நேசத்தின் அளவு குறையாமலிருக்குமாறு நமக்கு நாமே அவ்வப்போது பயிற்சியளித்துக் கொள்வது தேவை மட்டுமல்ல. கட்டாயமும் கூட. இப்பயிற்சி பல தடங்களில் விரவிக் காணப்படினும் அத் தடங்களை நாம் எளிமையாக்க் கடப்பதற்கு சில பாலங்கள் நமக்கு உதவுகின்றன. அத்தகு பாலங்களில் சில நம் இலக்கியப் பயணத்திற்குப் பேருதவி செய்கின்றன.

               தமிழ்மரபு அறக்கட்டளையின் பழந்தமிழ் மின்நூல்களும், ஓரத்தநாடு கார்த்திக்கின் புத்தகத் தரவிறக்க வலைப்பூவும்.. இ.பு.ஞானப்பிரகாசனின் இயல்பான அங்கலாய்ப்பிற்கு அவரின் விடை தந்த தரம் தமிழின்பால் அவரது எண்ண மேன்மையை எடுத்துக்காட்டியது. ஏற்கனவே அறிமுகமாயிருப்பினும் கூட எனக்கு இது சற்று இலக்கிய இளைப்பாறலுக்கு உதவியது.

                புறம், அகம், நற்றிணை, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம் என்று பல நற்றமிழ் நூல்களில் நற்புகழ்ப் பவனி வரும் முடியுடை மூவேந்தர் நம் பண்பாட்டின் திறவுகோல் என்றால் அது மிகையாகாது. தமிழரின் நாட்டுநிலை, நாகரீகம், வீரம், கொடை அனைத்தும் இவ்வுலகால் போற்றுதற்குரியதாய் இருப்பதற்குக் காரணம் இம்முடியுடை மூவேந்தர்தாம்.

                அவர்களுள் சோழர்கள் பற்றிய தரவுகளை தம் பக்கத்தில்  தந்திருக்கும் இராசபாண்டியன் பாராட்டுக்குரியவர். சோழன் என்றாலே வளம். காவிரி முகம், செழிப்பின் நிழல், கலையின் நிழல் நம் கண்முன்னே பரவிடும். அச்சோழர்களைப் பற்றிய பதிவு நன்று.

                நான் தமிழ் படித்திடினும் வகுப்பில் என்னைப் பல  ஐயங்கள் நெருடுவதுண்ண்டு. அவற்றுள் ஒன்று ஞெள்ளல் என்பதன் பொருள். இது என் மாணவன் ஒருவனால் என்னிடத்தில் கேட்கப்பட்ட வகுப்பறை அளவளாவல்களுள் ஒன்று. என் தேடலைத் தொடங்கிய நாள் முதல் சரியான பொருள் எனக்குக் கிட்டவில்லை. சோர்ந்து போனேன். அகராதிகளைக் கைக்கொள்ள சோம்பல் தடுத்தது. வேகத்தின் தள்ளல் எச்சரிக்கவே, தற்செயலாகத் தென்பட்டது ஒரு சட்ட வல்லுநரின் வலைப்பூ. என்னே! வியப்பு ! என் தேடலுக்கான விடை அங்கே பூத்துக் குலுங்கியது. பல்வேறு அனுபங்களைச் சொல்லிய அவரின் பதிவுகளூள் இந்த ஞெள்ளல் பதிவு என்னை வெகுவாய்க் கவர்ந்தது. ஒரு சட்டப்புத்தகத்தின் தமிழ் வாசிப்பில் நான் நெகிழ்ந்து போனேன் என்பதை விட என்னை மறந்து போனேன் என்பதே உண்மை.

                அன்றே மலர்ந்து அன்றே மடியும் பூக்களின் வாழ்வு நம்மைத் துயரப்படுத்தினும் சில வலைப்பூக்களூம் அதுபோன்றே இருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தது. நல்ல ஆய்வுக்களம் இங்கே தொடங்கப்படுள்ளது. அதன் தொடர் எல்லை முடிந்துபோன ஒன்றாக இருப்பதால் சற்று கோபம் கூட ஏற்படுகிறது, அதுபோலத்தான் இளநங்கையின் பத்துப்பாட்டு வடிவ மரபும். அகம், புறம், ஆற்றுப்படையென்ற போக்கில் ஆய்வுசெய்யப்பட பத்துப்பாட்டின் வடிவ மரபை ஆய்ந்து நுணுகியிருப்பது மிக்க போற்றுதற்குரியது.

            படிநிலையில் மட்டுமே வஞ்சிப்பாவிற்குத் தொடை காணமுடியும். சீர்நிலையில் வஞ்சிப்பாவிற்குத் தொடை காணமுடியாத நிலையில் அதற்கான விளக்கங்கள் இயற்றப்படவில்லை. இன்று விருத்தம், தாழிசை, துறை போன்ற பாவினங்களுக்குத் தொடை காணுவதில் உள்ள சிக்கல் வஞ்சிப்பாவிற்கும் உள்ளது. நாற்சீர் கொண்ட அடியில் மட்டுமே சீர்நிலை தொடைகளைக் காணமுடியும். இருசீர், முச்சீர் பயிலும் வஞ்சிப்பாவிலும், வஞ்சியடியிலும் தொடை காணமுடியாது. பத்துப்பாட்டில் பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும் வஞ்சிப்பாவாக அமைந்த நிலையில் இவ்விலக்கியத்தில் தொடை பயிலாத நிலை உள்ளதா என்ற வினா இயல்பாக எழலாம். ஆனால் வஞ்சிப்பாவான இவ்விரு இலக்கியங்களிலும் ஆசிரியடிகள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு இடம் பெற்றுள்ள நாற்சீரடிகளில் சீர்நிலையில் பயிலும் தொடைகளைக் காணமுடிகிறது. ஒவ்வொரு பாக்களுக்குரிய சிறப்பான தொடையினைக் காணும் முயற்சி யாப்பிலாய்வில் மேற்கொள்ள வேண்டிய ஆராய்ச்சியாக முன்நிற்கிறது. நாற்சீர் கொண்ட ஆசிரியப்பாவில் அடிஎதுகையும் பொழிப்பு மோனையும் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்கும் நிலையில் இவ்விரு தொடைகளை ஆசிரியப்பாவிற்குரியதாகக் கட்டமைக்கலாம். என்பதாக நீள்கிறது இளநங்கையின் ஆய்வு, சிறந்த தமிழாய்வுக் களம். நன்று. தொடர்ந்தால் மிக்க நன்று.

        வாழ்த்து எனும் சொல்பற்றி பல சொல்லாய்வுகள் நடைபெற்று வருகின்றன. சென்னைக் கிறித்துவக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர்..அரசேந்திரன் ஐயா அவர்கள் கூட இது ஆய்வுக்குரிய ஒன்று எனும் போக்கில் சொல்லிப் போனார். இது உரிச்சொல்லா அல்லது தொழிலாகுபெயரா என்பதும் கள் எனும் பன்மை விகுதி சார்ந்த பல்வேறு விவாதங்களும் தொடர்ந்து இலக்கியத் தளத்தில் நடைபெற்று வரும் இவ்வேளையில் இது சார்ந்து சில நடைமுறை எடுத்துக்காட்டுகளோடு விளக்கியிருக்கும் செந்தில்குமரனின் சொல்லாய்வும் இலக்கியத் தளத்தில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒன்று என்றே நான் எண்ணுகிறேன்.

     இறுதியாக பொத்தல் அகம் என்பது பொத்தகமாகப் பின் புத்தகமாக மருவி வழங்கிவந்தாலும் அது என்றேன்றும் நம் நேசத்திற்குரியதாகவே உள்ளது என்பதை மறுக்கவியலாது. அத்தகு மதிப்புமிகு புத்தகங்கள் பலவற்றைத் தொகுத்துத் தந்திருக்கும் தமிழ்ப் புத்தகம் என்னைக் கவர்ந்த ஒன்று.

         என் எண்ணங்களையே உங்களிடம் திணிப்பதாக ஒரு மனச்சோர்வு என்னுள் ஏற்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். நான் உங்களாக மாறி எழுத முனைந்தால் தான் உன் எழுத்து வெற்றி பெறுமென்ற முனைவர். அருள்முருகன் அவர்கள் கூறியதும் என் செவிகளில் விழுகிறது. முயல்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் முறையில் எழுதவும் முனைகிறேன்


அன்புடன், 
சி.குருநாதசுந்தரம்,
வலைச்சரம்- மூன்றாம் நாள்.

4 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்... வலைச்சரத்திற்கு செல்கிறேன்...

    இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Intellect-Part-1.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. என் தளத்தைக் கொஞ்சம் செப்பனிட்டுத் தர இயலுமா ஐயா?

      Delete
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஐயா.

      Delete