பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday, 1 May 2014

வெப்பப்பொழுது !


     வசப்படாத பொழுதுகளை
     வசப்படுத்தும் முனைப்பில்
     வறண்ட பொழுதுகள் .

     ஆதவன் மிரட்டலில்
     வெப்பத் தகிப்புகளில்
     வறண்ட வாசங்கள்.

     கண்மாய்ப் பொட்டலின்
     வெடித்த பாளங்களில்
     வேரூன்ற முயலும்
     கருவேல வேராய்ப்
     பயனற்ற பொழுதுகள்.

     கவிதையின் கருத்தேடிய
     களைத்தலிலும்
     களிமண் ஈரந்தேடிய
     சலித்தலிலும்
     வறண்ட பொழுதுகளின்
     வசங்கள் நீளும் !

     நூலாம்படை படிந்த
     பள்ளிக்கூடக் கதவுகளில்
     சார்த்திவைக்கப்பட்டுள்ளன
     ஏர்கலப்பைகள் !

     கயிற்றுக்கட்டிலில் சுகமாய்ப்
     படுத்துறங்குகின்றன..
     சோம்பலும் உழைப்பும்.

     கிராமத்து ஆலமரங்களில்
     கோடைக்காலமென்பது
     வறண்ட பொழுதுகளாகவே
     நகர்கின்றன.

     பொழுதுகளின் குளிர்தலுக்காய்
     வரிசைகட்டி நிற்கின்றன..
     மண்ணும் மனதும்.


No comments:

Post a Comment