பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday, 1 May 2014

முருகன்கோவில் பொட்டல்..


     பள்ளிக்கூடக் கரும்பலகைகளில்
     பரிதவிப்பின் பிரதிபலிப்பாய்..
     பிஞ்சு மனங்களின்
     பிரிவின் வாசகங்கள்.

     சிறகுகள் முளைக்கக்
     கற்றுக்கொடுத்த
     வகுப்பறை வேப்பமரங்களில்..
     வருங்காலக் கனவுகள்
     கல்வெட்டாய்ப் பொறிக்கப்பட்டன.

     பெரிய பள்ளிக்கூடத்திற்குப்
     போகும் அனுமதி
     வழங்கப்பட்டதாய்ச் சொன்ன
     ஆசிரியரின்  அறிவித்தலில்
     உற்சாகமும் பயமும்
     ஒட்டிக்கொண்ட 
     பெரியமனிதத்தோரணையும்
     நிஜங்களைச் சுமந்தன.

     சுண்ணக்கட்டித் துகள்களை
     கன்னத்தில் அப்பிப்
     பயங்காட்டிய பிரிதலோடு
     பள்ளிக்கூடக் கதவுகள்
     மூடப்பட்டன.

     இதுவரை கவனிப்பாரற்றுக் கிடந்த
     முருகன்கோவில் பொட்டலில்
     கோலிக்குண்டுக்காகவும்
     கிட்டிப்புல்லுக்காகவும்
     தட்டாங்கல்லுக்காகவும்
     நொண்டி ஆட்டத்திற்காகவும்
     அன்று இரவு
     முன்பதிவு செய்யப்பட்டன.

     அழுக்குப் பள்ளிச்சீருடைகள்
     ஓய்வெடுக்கச் சென்ற
     சுவரோரங்களில் தம்மையும்
     சேர்த்துக்கொள்ளச் சொல்லிக்
     கெஞ்சிக்கொண்டிருந்தன..
     பாடப்புத்தகமும்
     அடிவாங்கிக் கொடுத்த
     வீட்டுப்பாடப் பயிற்சிஏடும்.


No comments:

Post a Comment