தேடலின் மூலம் : சி.குருநாதசுந்தரம்.
இன்று கீரனூர் பெண்கள் பள்ளியில் மீத்திறன்
மாணாக்கருக்கான தமிழ்ப்பாடப் பயிற்சி வகுப்பு நடந்தது . அதிலேற்பட்ட ஒரு வகுப்பபறை
நிகழ்வு என்னை வியப்பிலாழ்த்தியது. பாடம் மொழிப்பயிற்சி ஒரு சொல் பல பொருள் சார்ந்தது..
பாடம் கற்பித்தலின் ஊடாகக் கேட்கப்பட்ட ஒரு மாணவியின் கேள்வி என்னை நிமிர வைத்தது.
ஐயா ஆறு என்பதும் நதி என்பதும் ஒன்றா
? என்பதே அது. நதி
என்ற சொல்லுக்கு இணையாக ஆறு என்ற சொல் வைக்கப்படுகிறது... ஆனால்,கலிங்கத்துப்பரணி பெண்ணையாற்றை பெண்ணை நதியாறு என்று குறிப்பிடுகிறது...
பெண்ணையெனு நதியாறு கடந்து
நதியும் ஆறும் ஒன்றாக இருந்தால் நதியாறு என்ற சொல்லாடல் உருவாகியிருக்காது...நதி என்ற தமிழ்ச்சொல் ஆறில் ஒரு வகையாக இருக்கவேண்டும்... எனவே இது சார்ந்து விளக்கமளியுங்கள்
என்றாள். எனக்கு வியப்பு. இதுவரை எனக்கே ஏற்படாத ஐயம். ஏனெனில் நான் ஒன்பதாம் வகுப்பு
மாணாக்கருக்கு கடந்த மாதம் தான் கலிங்கத்துப்பரணியை கற்பித்திருந்தேன். மீண்டும் பரணியை
மறுவாசிப்பு செய்தேன் அவள் கூறிய அவ்வடிகள் 354 ஆம் அடியாக பரணியில் இருந்தது. அம்மாணவி
இக்கேள்வியை யாரிடமும் இதுவரை கேட்கவில்லை யென்பதும் எனக்கு ஆறுதலாக (!) இருந்தது.
ஏரி குளம் கிணறு அணை ஆறு என எந்த நீர்நிலையை எடுத்தாலும் வகைகள் உள்ளன...அதுபோல நதி என்பது ஆற்றில் ஒரு வகையா...? தமிழனின்
நீரிடப்பெயர்களை அம்மாணவிக்கு வரிசைப்படுத்தினேன். அதில் ஆறு எனும் சொல்லின் பொருளைத்
தேட முற்பட்டபோது பெருகி
ஓடும் நதி எனச் சொல்லப்பட்டிருந்தது.
(1) அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12) கடல் - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் - நீரோடும் வழி.
(16) கால்வாய் - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் - பெருங் குட்டை.
(18) குட்டை - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்குகொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (- இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை- தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் - வட்டமாய் அமைந்த குளம் . ( தமிழனின் நீர் மேலாண்மை
– வ. சிவா )
மலையிலிருந்து உருவாகும் அருவி ஆறாக உருவாவதாக
ஒரு செய்தியை வாசித்த நினைவும் என்னுள் இருந்தது. சமவெளியில் ஓடும் நீர்ப்பரப்பை நதி
என்று அழைத்ததாக ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னதும் என்னுள்ளே மீள்நினைவாகப் படர்ந்தது.
முத்தமிழ் என்பது குமரித்தமிழ், சிந்துத்தமிழ், சுமேரியத் தமிழ் என வழங்கப்பட்டதெனவும்
அதில் சிந்துத்தமிழில் நதியெனவும், குமரித்தமிழில் ஆறு எனவும் வழக்கத்திலிருந்ததாகவும்
ஒரு செய்தி படித்தேன், ( செந்தில்குமார் செல்வராஜின் மொழியியல் ஒப்பாய்வு நூல் ) இருப்பினும்
இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பதாகவும் என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. தமிழனின்
நீரிடப் பெயர்களை பட்டியலிடுகையில் ஆறு என்பதும் நதி யென்பதும் ஒன்றெனவே எண்ணுவதற்கு
இடம் உள்ளது. ஆனால் கலிங்கத்துப்பரணியின் நதியாறு என்னை மிகவும் பாதித்து விட்டது.
எப்படியிருப்பினும் அம்மாணவி என்னுள்ளே நிறைய வாசிக்க வைத்துவிட்டாள். ஆசிரியரைப் படிக்கத்தூண்டுவனே
சிறந்த மாணவன் என்பதை அந்த மெலிந்த, கண்கள் உள்வாங்கியிருந்த அந்த அரசுப்பள்ளி மாணவி
நிரூபித்துவிட்டாள். ( குறிப்பு : அம்மாணவிக்கு நான் சொன்ன பதில் பெண்ணையெனும் நதி வழியே ( ஆறு என்பதற்கு வழி எனும் பொருளும் உள்ளது (!) கட்ந்து எனக்கூறிச் சமாளித்தேன் )– சி.குருநாதசுந்தரம்.
This comment has been removed by the author.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி ஐயா. சிறப்பான தேடலுக்கு வழிவகுத்த மாணவிக்கு வாழ்த்துகள். அவளை ஊக்கப்படுத்தித் தேடிப் பதிவும் செய்த உங்களுக்கு வணக்கங்கள்
Deleteமிக்க நன்றி தோழர். தங்களுக்கு மிக்க நன்றி
Deleteநதியாறு
ReplyDeleteதமிழின் பெருமையும் தொண்மையும் வியக்க வைக்கிறது ஐயா
நன்றி
மிக்க நன்றி ஐயா. தங்களின் பின்னூட்டம் என்னை ஊக்கப்படுத்துகிறது.
Deleteஅருமை... அருமை ஐயா...
ReplyDeleteவணக்கம் ஐயா.வலைச்சித்தர் வாயால் பாராட்டுப் பெறுவதென்பது மிக்க மகிழ்வைத் தருகிறது ஐயா. மிக்க நன்றி.
Deleteநதியைப் பற்றிய உங்கள் ஆய்வு ஊற்றுப் பெருக்காய் பொங்கிவருவது பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி பொங்குகிறது குரு! (கட்செவியில் இந்த உங்கள் பதிவுக்காகவே, கணினித் தமிழ்ச்சங்கக் குழுவில் இணைத்த எனக்கு நன்றி தெரிவிததிருந்தார் ஒரு நண்பர். புதுக்கோடடை ஆ.கா.க.நண்பரின் மகன், தற்போது சென்னையில் பணியாற்றுகிறார்)
ReplyDeleteஇதுபோலும் தேடலுள்ள, அந்தத் தேடலுக்கும தன் மாணவிக்கே நன்றிசொல்லும் நிறைபண்பும் ஆசிரியர் அனைவர்க்கும் வளர வேண்டும் குரு. “ஆசிரியரைப் படிக்கத்தூண்டுவனே சிறந்த மாணவர்” என்ற உங்கள் வார்த்தைகளுக்கு எனது ஓராயிரம் வணக்கங்கள். உங்கள் தேடல் ஊற்றுப் பெருகி, தமிழ் நீர் பெருகட்டும்.
நீரைச் சேமிக்கும் இடங்களாக 46சொற்கள் பழந்தமிழில் இருந்ததென்றால், எவ்வளவு தெளிவாக நீரின் பயன்பாடடை அறிந்து பாதுகாக்கவும் செய்திருக்கிறார்கள் நம் தாத்தன்-பாட்டிமார்கள்.. அந்த அறிவை எப்படி எங்கே தொலைத்தோம் என்று ஏங்கவும் வைத்துவிட்டது உங்களின் இந்தப் பதிவு. அடிக்கடி எழுதுங்கள் குரு!
ஐயா வணக்கம். இது அனைத்தும் தங்களாலேயே நடக்கிறது. ஒரு தமிழாசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி கூறுவீர்களே , அது என் மனதுள் வேராய் இறங்கிவிட்டது ஐயா. இனி தொடர்ந்து எழுதுகிறேன். தங்களின் ஊக்கமான பின்னூட்டத்தீற்கு கோடானு கோடி நன்றிகள். பாரதி விழாவிற்குத் தாங்கள் வருவதாக மகாசுந்தர் ஐயா கூறினார்கள். தங்களைச் சந்திக்க இயலவில்லை ஐயா. மிக்க நன்றி.
Deleteஇந்தப் பதிவின் இணைப்பைத் தந்து, என் தளத்தில் பகிர்கிறேன் குரு, நன்றியுடன்.
ReplyDeleteஎன் அனுமதியெல்லாம் எதற்குக் கேட்கிறீற்கள் ஐயா? தாராளமாக பகிருங்கள். தங்களின் இலக்கியத் தோட்டத்தில் ஓர் ஓரமாக இடம் தந்தமைக்கு நன்றிகள் பல.
Deleteநான் எழுதிக்கொண்டிருக்கும் நீர்நிலைகள் பற்றிய தொடருக்கு இந்த சொற்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி. அருமையான பதிவு.
ReplyDeleteதங்களுக்கு நேரம் இருந்தால் இது சம்பந்தமான எனது பதிவை படித்து கருத்திடுங்கள்.
நீர்வழிச் சாலை அமைத்திருந்தால் சென்னை இப்படி ஆகியிருக்காது!
http://senthilmsp.blogspot.com/2015/12/1.html
நீர்வழிச் சாலை அமைத்திருந்தால் சென்னை இப்படி ஆகியிருக்காது! 2
http://senthilmsp.blogspot.com/2015/12/2.html
நீர் மேலாண்மை
http://senthilmsp.blogspot.com/2015/12/3.html
நீர்வழிச் சாலை
http://senthilmsp.blogspot.com/2015/12/4.html
நீர்வழிச் சாலை 2
http://senthilmsp.blogspot.com/2015/12/5.html
குடிமராமத்து
http://senthilmsp.blogspot.com/2015/12/6.html
சங்கிலித் தொடர் ஏரிகள்
http://senthilmsp.blogspot.com/2015/12/7.html
நன்றி ஐயா. பார்க்கிறேன்
Delete