பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday 13 May 2013

திருப்பதியின் தங்கம். - சி.குருநாதசுந்தரம்



சண்முகா நகரின் சாலையோர மரங்களைக் காற்றின் தாலாட்டு சுகமாய் வரவேற்றது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      
                                                     “லொள், லொள் ! ”
                   புலர்ந்த காலைப்பொழுதை வரவேற்பதாய் திருப்பதியின் நாய்க்குட்டி குரைக்க ஆரம்பித்தது.
                  படுக்கையை விட்டு எழுந்த திருப்பதி எரிச்சலுடன் தன் மகனை நோக்கிக் கத்தினார்.
                   “ டேய், கோபி, தங்கத்துக்கு ரொட்டியைப் போடு.
காலங்காத்தாலே கத்திக்கிட்டே இருக்கு பாரு.”
                  படுக்கைக்குள் சுருண்டு கிடந்த கோபி தலையை மட்டும் நீட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் போர்வைக்குள் சுருண்டான். கண்களைக் கசக்கிக் கொண்டே சோம்பல் முறித்தபடி வெளியே வந்தார் திருப்பதி.
                   வெள்ளை வெளேரென்று பஞ்சுப்பொதியால் செய்யப்பட்ட அழகுப் பொம்மை போன்றிருந்தது அந்த நாய்க்குட்டி. திருப்பதி அதற்குத் தங்கம் என்று பெயர் வைத்திருந்தார். ஏனெனில் தங்கம் அவருக்குப் பிடித்தமான ஒன்று,
நேசிக்கும் பொருள் மீது பற்றுதலின் படிமங்கள் மடைமாற்றப்படும் மனிதப் பண்பின் இயல்பிலிருந்து திருப்பதியும் தப்பவில்லை
                            “லொள், லொள் ! ”
                   குட்டிக்கால்களால் தரையைப் பிராண்டி , துள்ளிக்குதித்து தலையைச் சாய்த்துக் குரைக்கும் தங்கத்தைத் திருப்பதி அன்புடன் பார்த்தார்.
                   உற்சாகம் பீறிட்டெழ வாலை ஆட்டிக்கொண்டே தன் நாவால் அவர் காலை வருடியது தங்கம்.அன்புக் கண்களால் தன்னை நோக்கிய தங்கத்தைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தார்.                  
                   தங்கம் தன் சிறு கூரிய பற்களால் உணவைக் கடித்துச்                                                                                                                                                                                                                             சாப்பிடுகையில் ஒரு ஓவியத்தின் நேர்த்தி காணப்படும். அப்பொழுது அவரின் மனம் அழகின் நிழலில் இளைப்பாறும்.
                   தன் மகன் கோபியோடு விளையாடுவது தொடங்கி,
அந்நியரின் வருகையைச் சுட்டிக்காட்டுவது வரை அதன் செயல்களில் தேர்ந்த
வேலைக்காரனின் அன்பின் அர்ப்பணிப்பு வெளிப்பட்டது.
                   ங்கம் திருப்பதிக்குக் கிடைத்தது ஒரு தற்செயலான நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்.அவர் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி அவர் நண்பர்
கருப்பையா குடியிருந்தார். ஒருநாள் காலைப்பொழுதில் தயங்கியவாறே வீட்டிற்கு வந்தார்.
                  “ சார்,எங்க வீட்டு நாய் அஞ்சு குட்டி போட்டிருக்கு. எல்லாமே அழகழகா இருக்கு சார்.”
                    தன் கையிலிருந்த இனிப்புப் பொட்டலத்தை திருப்பதியின் கையில் திணித்தார்.
                  ” ரொம்ப மகிழ்ச்சி சார். நாய்க்குக் குழந்தை பிறந்ததுக்காக இனிப்பெல்லாம் குடுக்கிறீங்க. அந்த நாய் ஒங்ககிட்ட இருக்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும், “
                    “ ரொம்பப் பாசமான நாய் சார் அது. என்னொட கடைசி புள்ள
மாதிரி நான் அதுகூட வாழ்ந்துகிட்டிருக்கேன். “
                     சொல்லும் பொழுதே அவரின் கண்கள் இலேசாகக் கலங்கின.
                     ” வெளியூர்ல இருக்கிற என்னோட நான்கு பசங்களும் இந்த நாய்க்குட்டிகளை எடுத்திட்டு போக வந்துகிட்டிருக்காங்க.. ஆனா அதுக்கு நான் சம்மதிக்கலை. ஒரு குட்டியையாவது இங்க விட்டுட்டு போக சம்மதிச்சா நாய்க்குட்டிகளை தர்றதா சொல்லிட்டேன் சார். ”
                       வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் திருப்பதி. அந்த நாய் மேல் அவருக்கிருந்த பாசம் அவரை மெய் சிலிர்க்க வைத்தது.
                       “ தன்னோட குட்டிகளைப் பிரிஞ்சு என்னோட நாய் படுகிற வேதனையை என்னால தாங்கிக்க முடியாது சார். அதனால ஒரு குட்டியையாவது பக்கத்துல யாருக்காச்சும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். “
                        மேலும் அவர் தொடர்ந்து பேசினார். குறுக்கிடாமலிருந்த திருப்பதியின் அமைதி அவருக்குப் பிடித்திருந்தது.
                       “ இந்தத் தெருவுல இந்த நாய்க்குட்டிய பாசமா வளர்க்கக் கூடியது நீங்க மட்டுந்தான்னு என் மனசு சொல்லுச்சு. இந்த நாய்க்குட்டியை பத்திரமா வளர்ப்பீங்களா சார் ? “
                       மீண்டும் அவர் கண்கள் கலங்கியது. மனிதநேயம் வெளிப்படுத்தும் உணர்வின் வெடிப்பு தன்னையும் மீறி கட்டுப்படுத்த இயலாத தூண்டலை ஏற்படுத்தி விடுகிறது என்பது எவ்வளவு உண்மை !
                       தன் மடியில் கிடத்தப்பட்ட அந்த நாய்க்குட்டியை அன்போடு பார்த்தார் திருப்பதி. அதன் அலைபாயும் கருவிழிகளுக்குள் அன்பு சுழன்று கொண்டிருப்பது தெரிந்தது.மென்மையான அதன் மெல்லிய உரோமங்களை நீவி விட்டார்.அதன் வெண் நெற்றியில் முத்தமிட்டார்.மனசு இலேசானது போல் காணப்பட்டது.

                                                 
                       “ சார் … “
                      கருப்பையா மீண்டும் மெதுவாக அருகில் வந்தார்.
                      “ சொல்லுங்க சார்
                      “ ஒரே ஒரு வேண்டுகோள் சார்
                      “ என்ன சார் நீங்க ! ஏன் தயங்கித் தயங்கிப் பேசுறீங்க. எதுவாயிருந்தாலும் சொல்லுங்க சார்
                     “ ஒண்ணுமில்லே, தினந்தோறும் காலையில ஒரு பத்து நிமிசம் நாய்க்குட்டியை அதோட தாயோட விளையாட விடணும்
                      “ அவ்வளவு தானே சார். நானே உங்க வீட்டுக்குத் தினமும் கூட்டிட்டு வர்றேன்
                      அதன்படி தினமும் காலையில் தனது தங்கத்தை அதன் தாயிடம் கொண்டுபோய் விடுவார். நான்கு குட்டிகளுக்கும் கொடுக்க இயலாத அன்பைத் தங்கத்திடம் தாய்நாய் காட்டும்..
.                      உயர்வான தாய்மைப்பண்பு இல்லையேல் உயிர்களிடத்தில்
உறவின் பிணைப்பு அறுந்து விடும் பொதுமையை எண்ணிக் கொண்டே தன் தங்கத்துடன் காலைப்பொழுதை கழிப்பார் திருப்பதி.
                       இப்பொழுது தங்கத்திற்கு ஒரு வயதாகியிருந்தது. இருந்தபோதும் தன் தாயின் அன்பில் தினமும் திளைக்கும் அந்தப் பத்து நிமிடத்திற்கு ஈடாக மிகப்பெரிய பேரன்பை தங்கம் திருப்பதியின் குடும்பத்திற்குக் கொடுத்துக்கொண்டிருந்தது.
.                      அன்று கருப்பையாவின் வீடு ஒரே சத்தமாக இருந்தது. ஊரிலிருந்து அவரின் மகன்கள் வந்திருந்தார்கள். கூடவே நாய்க்குட்டிகளும் காணப்பட்டன. கலகலப்பும் சிரிப்புமாய் அவரின் வீடு அமர்க்களப்பட்டது.
                       திருப்பதி தங்கத்தை அவிழ்த்துவிட்டார்.
                       ‘ போடா, தங்கம்.ஊருல இருந்து ஒன்னோட அண்ணன்கள் எல்லாரும் வந்திருக்காங்க. சந்தோசமா போயி விளையாடு. “
                       துள்ளிக்குதித்தபடி ஓடியது தங்கம்.
                       “ லொள், லொள்
                       “ லொள், லொள்
                       கருப்பையாவின் வீட்டு வாசலில் நாய்க்குட்டிகள் சேர்ந்து தங்கத்தை விரட்டின. உள்ளே வரவிடாமல் கத்தின. கருப்பையாவின் பெயரன் வேகமாக வந்து ஒரு கல்லை எடுத்து தங்கத்தை நோக்கி வீசினான்.
                       “ அப்பா, அடுத்த வீட்டு நாயி உள்ள வந்து சேட்டை பண்ணுதுப்பா. “
                      வேகமாக வந்த கருப்பையாவின் மூத்த மகன் பெரிய மரக்கட்டையை எடுத்து தந்கத்தை நோக்கி வீசி எறிந்தான். தந்கத்தின் கால்களில்   
இரத்தம் வழிந்தது. எப்படியாவது தன் தாயிடம் சென்று ஒரு முத்தம் பெற்று விடலாமென்ற தங்கத்தின் முயற்சி தோற்றுப்போனது.
                     திருப்பதி கருப்பையாவின் வீட்டிற்குச் சென்று சத்தம் போட்டார். யாரும் அதை பொருட்படுத்துவதாய்த் தெரியவில்லை. தங்கத்தின் நிலை கண்டு அவருக்குக் கவலையாயிருந்தது.
                     ஒரு வார காலம் தங்கத்தின் போராட்டம் நீடித்தது. ஒருபடி மேலே போய் மூத்த மகன் கத்தினான்.
                     “ சார், இனிமே இந்த நாய்க்குட்டி எங்க வீட்டுக்கு வந்து தொந்தரவு செஞ்சா நாங்க போலீஸுக்கு போக வேண்டிவரும். ஒழுங்கா வீட்டில நாயைக் கட்டிப் போடுற வழியைப் பாருங்க
                      கருப்பையா செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
                     ‘ இத பாருங்க சார், நான் ஒண்ணும் சும்மா கூட்டிட்டு வரல. இந்த நாய்க்குட்டியோட தாயை இந்தக் குட்டி தெனமும் சந்திக்கும். தாய் புள்ள உறவைபத்தி ஒனக்கு என்ன தெரியும் ? நீயெல்லாம் பணத்தாளைப் போர்த்திகிட்டுத் தூங்குற மனுச எந்திரம். சுத்த வெவஸ்தை கெட்ட ஜெனம்ம். சை. மனிதாபிமானமே மரத்துப் போச்சு. “    
                     இதுவரை யாரிடமும் கடிந்து பேசாத திருப்பதி கொஞ்சம் காரசாரமாகவே பேசிவிட்டார். அது அவருக்கே வருத்தமாயிருந்தது.
                      ஒரு வார காலம் அவருக்கும் மனம் அலை பாய்ந்தது.
மறுக்கப்பட்ட அன்பில் மரத்துப் போன உண்ர்வுகளோடு சோர்ந்து போன தங்கத்தைப் பார்க்கப் பாவமாயிருந்தது.
                     மறுநாள் கருப்பையா வீட்டிற்கு வந்தார். அவரைப் பார்க்கப் பிடிக்கவில்லை திருப்பதிக்கு.
                      “ சார் .. “
                      “ என்ன மன்னிச்சிருங்க சார். அந்த நேரத்துல என்னால எதுவுமே பேச முடியல சார். என்னோட மனைவி போனதுல இருந்து ஒரு மரக்கட்டையாயிட்டேன் சார். “
                       ” பரவாயிலை சார்.அதெல்லாம் நானு அப்பவே மறந்துட்டேன். “
                       “ நாளைக்கு நானு மகன்களோட ஊருக்குப் போறேன் சார். அவனுங்களோட கடைசி காலத்த செலவழிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஒங்களை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருப்பேன் சார். “
                       சிறு பிள்ளை போல் கையைப் பிடித்துக் கொண்டு அழும் கருப்பையாவின் குழந்தை மனது திருப்பதியை என்னவோ செய்தது.அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்த திருப்பதிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது
                       தன் நண்பர் பிரிந்துவிட்டார் என்பதைவிட தன் தங்கத்தின் தாய் அதனை விட்டுப் பிரியும் சூழலை நினைத்துப்.பார்க்கவே பயங்கரமானதாய் இருந்தது
                        மறுநாள் தங்கத்தை வழக்கம் போல் அவிழ்த்து விட்டார். எப்பொழுதும் துள்ளலுடன் ஓடிச்செல்லும் தங்கம் அன்று சற்றே தயங்கி நின்றது.
                       ” போடா , ஒன்னோட அம்மாவப் பார்த்துட்டு வா
                       தள்ளிவிட்டார்.
                       அவரைப் பார்த்துக் குரைத்தது.
                       திரும்பி வந்து தன் மகனின் மடியில் படுத்துக்கொண்டது.
திருப்பதி அதனை அன்பாகத் தடவி விட்டார்.
                       “ தான் ஊருக்குப் போற சேதி தெரிஞ்சு தான் நம்ம தங்கத்தை வெரட்டும் போது அதோட தாயிநாயி ஒண்ணும் செய்யாம இருந்திருக்கும் இல்லையா அப்பா ? “
                       மகனின் கேள்வி சாட்டையடியாய் வலித்தது. இதுவரை தாய் நாயைச் சபித்து வந்த திருப்பதியின் மனம் முதன்முதலாய் வெட்கப்பட்டது.
                        தாய்மை எங்கும் மாறுவதில்லை. அவரையறியாமல் அவரது கைகள் தாய் நாய் இருந்த திசை நோக்கி வணங்கின.
  



n  சி குருநாதசுந்தரம்.
    

2 comments:

  1. சிலிர்க்க வைத்தது...

    வாழ்த்துக்கள்...

    தாய்மை எங்கும் மாறுவதில்லை...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். மிக அருமை.

    ReplyDelete