பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday, 15 May 2014

தேரழுந்தூராரின் காதல்தேர்.

 (கம்பனின் காதல்)     -    சி.குருநாத சுந்தரம்




(கட்டுரைச் சூழல் : மிதிலைக் காட்சிப் படலத்தில் இராமன் - சீதை பாத்திரப் படைப்பில் கம்பனின் காதலுணர்வு சார்ந்த குறுந்தேடல்)

                                மானுடனின் உணர்வெல்லை வரையறைக்குட்பட்டதன்று.  அவ்வெல்லை இன்பம் சார்ந்தவையாகவும் துன்பம் சார்ந்தவையாகவும் இயற்கையான படிமங்களாக இயல்பாய் விரவிக் காணப்படுகின்றன.  இவ்வுணர்வாளுகையின் வடிவம் பல தருணங்களில் நம்மை ஓர் உயர்வின்பத்திற்கு ஆட்படுத்தி விடுகின்றது.  அவ்வடிவத்தின் உயர்வின்ப வகையான காதல், முதல் இயல்பின்ப உணர்வாக  முன்னிறுத்தப்படுகின்றது.  கம்ப நாடனின் உலகுயர்ந்த காப்பியமான கம்பஇராமாயணத்தில் இக்காதல் உணர்வுகள் நம்மை உன்னதமான மேம்பட்ட இன்பநிலைக்கு இழுத்துச் செல்கின்றன.  காப்பியத்தின் வாசிக்கும்  தளத்தின் இளைப்பாறும் இடமாக இவை அமைந்திருக்கின்றன.

                இக்காதலுணர்வுக் களங்கள் காப்பியத்தில் பரந்து காணப்படினும், அக்களத்தில் ஒரு சிறுபுள்ளியைப் பற்றிப் பயணிக்கும் நோக்கில் மிதிலைக் காட்சிப் படலத்தில் இராமன் சீதை காதலுணர்வு நிலையின் சில கூறுகளை ஆய்ந்து, அதன் மாண்பினை விளக்குமுகத்தான் இக்கட்டுரை அமைக்கப்பட்டிருக்கின்றது.

காதலுணர்வின் தோற்றச்சூழல் :
                பொதுவான கதைச் சூழலில், காதலுணர்வின் தோற்றம் பெண்ணின்பாற் சார்ந்தே தொடங்குகின்றது. மெல்லுணர்வு பெண்ணினுள் அதிகம் காணப்படுவது கூட இதற்குக் காரணமாயிருக்கலாம்.  மிதிலைக் காட்சிப்படலத்தில் காப்பியத் தலைவி சீதையின் அழகுப் பொலிவுடன், காதலுக்கான தோற்றச்சூழலை நம்முள் கம்பன் விதைக்கின்றான்.
               
        இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே
                மழைபொரு கண்ணினை மடந்தை மாரொடும்
                பழகிய எனினும் இப்பாவை தோன்றலால்
                அழகெனும் அவையும்; ஓரழகு பெற்றதே.


                அணிகலன்கள் உடலை அணி செய்கின்றன.  மங்கையரைப் பொலிவோடு காட்சியளிக்கச் செய்கின்றன.  இவ்வியல்புச்சூழலை மென்மேலும் அழகூட்டும் விதமாக கம்பநாடன் சீதையின்  அழகை வெளிப்படுத்துகின்றான்.  பேரழகுப் பொற்கொடி சீதாதேவியின் உடலில் அணியப் பெற்றதாலேயே அணிகலன்கள் அழகைப் பெற்றதெனக் கூறுகையில், அணிகலன்களுக்கே அழகு தேடித் தந்த சீதையின் அழகைச் சொல்லவும் வேண்டுமோ? உன்னத அழகின் வடிவமாகச் சீதை இருந்தாள்  என்ற இக்கவியுணர்வு நம் மனக்கதாநாயகியைத் தேடும் இன்பத்தென்றலை ஏற்படுத்தியுள்ளதை எவராலும் மறுக்க இயலாது. காதலுணர்வின்  இத்தோற்றச்சூழல் காப்பிய அழகை மேலும் மெருகூட்டுகின்றது என்பதே உண்மை.


காதலுணர்வின் புறவாயில் : 

                மனம் சார்ந்த உணர்வின் தோற்றமாகவே காதல் வரையறுக்கப்பட்டுள்ளதுகம்பநாடனின் காதல் புறக் குறியீடு, வியத்தகு உணர்வுக் குவியலாக நம்கண்முன் விரிவது தவிர்க்க இயலாத ஒன்று.  காதலுணர்வினை கண்களின் வழியே பரிமாறிக் கொள்ளும் பாத்திரப் படைப்புகளில் கம்பனின் கவித்திட்ம் உயர்ந்து நிற்கின்றது.

                எண்ணரு நலத்தினாள் இனையன் நின்றுழி
                கண்ணோடு கண்ணினைக் கவ்வி. ஒன்றையொன்று
                உண்ணவும் நிறைபெறாது உணர்வும் ஒன்றிட
                அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்.
                                                  (பால காண்டம் : மிதிலைக் காட்சிப் படலம் : 514)

                அச்சந்திப்பினை கம்பன் வழி காணின் தித்திக்கும் காதலுணர்வு ஆண், பெண் சந்திப்பு நேரத்தில் வளர்ச்சியடைத் தொடங்குகிறது. அதற்குமுன் கனவுலகம் சார்ந்த நிழல் உணர்வுகளே  மிகைப்பட்டு நிற்கின்றன.  புறஉறுப்புகளின் வழியே உள்வாங்கப்பட்டு  அகவுணர்வாக நிலைத்து நிற்கும் காதலுணர்வின் தொடக்கப்புள்ளியே முதற்சந்திப்பு நேரம் எனலாம்.  அழகின் எல்லை கடந்த அரிய அழகுடைச் சீதையின் கண்கள், அறிவழகாய் உணர்ந்து நிற்கும் (கம்பன் தேர்ந்தெடுத்த காதலின் முகநூல் கண்கள்) இராமனது கண்களை முதலில் நோக்கினவா, அல்லது இராமனது கண்கள் சீதையின் கண்களை முதலில் நோக்கினவாயென்ற உணர்வு வடிவத்தினைக் கம்பனால் நோக்க இயலவில்லை. பாத்திரப் படைப்பின் சமநிலை தவறி, முதலில் நோக்குபவரின் அழகு குறைத்து மதிப்பிடப்படும் சூழலைத் தவிர்ப்பதற்காக கம்பன் இத்தகு கவிச் சூழலைக் கையாண்டிருக்கக் கூடும். அதனால் தான் கண்ணொடு கண் இணை எனக் கூறினான்.
               
                அடுத்ததாக உணர்வின் துள்ளலை அழகாய் வடிவமைக்கின்றான்.  கவ்வி ஒன்றையொன்று உண்ணவும் என்ற அடியில் இராமன், சீதை இருவரது கண்களும் கவர்ந்து பற்றிக் கொண்டு ஒன்றையொன்று கவர்ந்து சுவைக்கவும் என்று அமைத்தான்.  காதலுணர்வின் இத்தகைய உணர்வுப் பரிமாறலை கம்பனைத் தவிர யாரும் கூறியிருக்க இயலாது.  

                பின்னாளில் பாரதி தன் கண்ணம்மாவைப் பாடியது கூட  கம்பனின் உணர்வுப் பிரதிபலிப்பு எனலாம்.  இராமன் - சீதை  காதலுணர்வுப் பகிர்தல் காதலின் ஆழத்தை நம் கண்முன் புலப்படுத்துகின்றது.  காதலின் கண்களை இவ்வளவு அழகாகக் காட்டியிருக்கும் உணர்வுப் பகிர்தலை வெளிப்படுத்திய கம்பன் காதலின் அடுத்த வடிவம் பற்றி விளக்குகின்றான்.

                உணர்வும் நிலைபெறாது ஒன்றிட - என்ற அடி காதலின் அகவாயிலைத் திறந்து வைக்கின்றது. இராமன் - சீதை இருவரது அறிவும் அவரவரிடத்தில்  நிலை பெற்றிருக்காமல் ஒன்றியது எனக் கூறும் கம்பனின் காதல்நிலை எண்ணினும் வியக்கத்தக்கது.

                கண்கள் உணர்வைப் பகிர்ந்து கொள்ளும்போது, அங்கே அறிவும் ஒன்றுபடுகின்றது. ஒத்த அன்புடையவர்களாக மாறும் இக்காதல் வடிவநிலை கம்பனின் கவி முத்துகளுள் ஒளி வீசுகின்றது.  இந்த ராமன் - சீதை உணர்வுப் பகிர்தலின் மூலம் காதலின் புறக்குறியீடு இவ்வுலகிற்கு படிமப்படுத்தப்பட்டுள்ளது.  மனவுணர்வு ஒன்றுபட்ட ஒருதன்மைத் தான காதலுணர்வை இராமன் சீதை பாத்திரப்படைப்பில் வெளிப்படுத்தும் கம்பனின் காதல் என்றும் நிலைத்து நிற்கும்.  காதலுணர்வினை ஓர் எல்லைக் கோட்டிற்குள்ளாகவே அழகியல் உணர்வோடு உணர்த்தியிருக்கும் கம்பனின் காதல் வடிவத்தினை  தற்போதைய ஊடகச் சூழல்  உள்வாங்க  மறுத்திருப்பது கவலையளிக்கும் ஒன்றாகும்.

காதலின் உணர்வுக் குறியீடு :
               
                நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேலினை
                ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன
                வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும்
                தாக்கணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே
                                                           (பால காண்டம் : மிதிலைக் காட்சிப் படலம்)
                வீரமும், காதலும் பழந்தமிழர்களின் வாழ்வில் நீக்கமற நிறைந்திருந்தது என்ற கூற்று கம்பநாடனின் இக்காதல் நோக்கில் உட்புகுத்தப்பட்டுள்ளதை அறியலாம்.

                வலிமையான தோள்கள் ஆணின் ஆண்மையைப் பறைச்சாற்றுகின்ற வீரத்தை முன்னிறுத்துகின்ற குறியீடாகும்.  இதனை வலியுத்தவே கம்பன், கூரிய இருவேல்களைப் போன்ற சீதையின் பார்வை, வன்மையுடைய இராமனின் தோள்களிலே அழுந்தின எனக் குறிப்பிடுகின்றார்.  பெண்மையின் காதலுணர்வின் முகவரியாக ஆணின் வீரம் அமைந்துள்ளமையையும் இங்குக் காணலாம்.

                ஆனால், ஆணின் காதல் பெண்ணுடல் சார்ந்த வடிவ உணர்வையே சார்ந்திருந்தது என்பதையும் கம்பன் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

காதலுணர்வின் அகத்தோற்றக் குறியீடு :
                காதலுணர்வின் உண்மை நிலையான அகத்தோற்றக் குறியீடு கம்பன்பால் அனைவராலும் கையாளப்படுகின்ற காப்பிய பொது உத்தியைச் சார்ந்ததாகவே அமைந்திருக்கிறது. 
                
         பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து,
                 ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
                 வரிசிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்,
                 இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்.

                இராமனும் சீதையும் தத்தமது விழியுணர்வுப்  பகிர்தலை காதலுணர்வுக் கயிற்றால் கட்டி, கட்டமைந்த வில்லையுடைய இராமனும், வாள் போன்ற கண்களையுடைய பெண்ணிற் சிறந்த சீதையும் (இதயம் மாறிப் புக்கு) ஒருவர்  மனத்துள் ஒருவர்  மாறிப் புகுந்தார்கள்.

                காதலுணர்வின் இவ்வியல்புச்சூழல் கம்பனின் கவிநயத்தால் மெருகூட்டப்பட்டுள்ளது. 
               
                இயற்கையாக அமைந்த மனிதப் பாலுணர்வின் அழகியல் மெல்லுணர்வான காதலுணர்வை முனைந்து சிறப்பாக வடிவமைத்திருக்கும் கம்பனின் காதல்தேர் அழகினும் அழகானது.  கம்ப ராமாயணத்தின் ஒரு துளித் தேனாக இவ்வுணர்வுத் தேடல் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
               
                தேரழுந்தூராரின் காதல்தேர்  பலஆயிரம் தேனடையால் வார்க்கப்பட்டதென்பதை அனைவரும் அறிவர்அத்தகு இனிமைக்
காதல் தேரின் ஒரு துளியை சுவைத்துப் பார்த்த அனுபவம் தித்திக்கும் பேரனுபவமாய் அமைந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது.

                                கம்பனின் காதல்தேர்
                                இலக்கிய வீதியில்..
                                கம்பீரமாய் உலா வரும்...
                                கம்பனைப் போலவே…

9 comments:

  1. வணக்கம் ஐயா
    எடுத்துக் கொண்ட கருத்துக்கு ஏற்புடைய தலைப்பு, கம்பனின் காதல் உணர்வுகளை உள்வாங்கிய எழுத்து, தகுந்த விளக்கங்களோடு சிறப்பான காதல் தேரினை உலா வரச் செய்திருக்கும் உங்கள் ஆற்றல் மிகவும் ரசிக்க வைத்தது. அற்புதமான பகிர்வு ஐயா. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழரே ! தங்களின் பின்னூட்டம் எனக்கு மிக்க நல்லூட்டமாக இருக்கிறது.

      Delete
  2. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மெருகூட்டப்பட்ட பகிர்வு...

    நன்றி,..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஐயா,
      வணக்கம். இணையத் தமிழ்ப் பயிற்சிப்பட்டறையில் தங்களின் பயிற்சி மிக அருமை. எங்களுக்கெல்லாம் மிக்க பயனுடையதாக இருந்தது. நெஞ்சார்ந்த நன்றி ஐயா.

      Delete
    2. கம்பனின் கவித்தேனை நானும் சுவைத்தேன் தங்களின் சொல்லாற்றலால்.. உண்மையில் உங்களின் மொழி நடையை வியக்காமல் இருக்க முடியவில்லை ஐயா,,,,,

      Delete
  4. மிக்க நன்றி ! தங்களின் படைப்புகள்... தோழிகளின் படைப்புகள் தொடர்ந்து காண ஆவல். முக்கியமாக சத்யா அம்மாவின் படைப்புகளைக் காண ஆவல்.

    ReplyDelete
  5. மிக அருமையாக பயணித்தது. மிதிலை படலத்தின் இராமன் - சீதை யின் காதலுணர்வை திறம்பட வெளிகொண்டுள்ளீர்கள். கட்டுரைக்கு தங்கள் சொல்லாற்றல் பக்கபலம்..

    ReplyDelete