பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Friday, 30 May 2014

தமிழ் முன்னொட்டில் பிற மொழிகள்






( தமிழகத்தின் வேர்ச்சொல் ஆய்வாளர்களுள் குறிப்பிட்த் தக்கவர் முனைவர். அரசேந்திரன். இவரின் ஆய்வுக்கட்டுரை ஒன்றை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கேட்க நேர்ந்தது. விரைவாக குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். மேலும் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட விழாவிலும் அவரின் உரையிலிருந்தும் சில குறிப்புகள் எடுத்திருந்தேன். அதன் தொகுப்பே இக்கட்டுரை. இது சார்பாக முனைவர். அரசேந்திரன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது மிக மகிழ்வாக நிறையக் கருத்துகள் கூறினார். பாவாணருக்குப் பின்னால் தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் முத்திரை பதித்து வரும் ஐயாவினை தமிழ் கூறும் நல்லுலகம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற மனவருத்தமும் என்னுள் உண்டு. )


இந்தோ ஐரோப்பிய மொழிகளைப் பிரித்தானிய கலைக்களஞ்சியம் பத்துக்கிளைகளில் அடக்கியுள்ளது. அண்மைக்கால இந்தோ ஐரோப்பிய மொழி அறிஞர்கள் மேலும் சில சேர்த்துப் பதின்மூன்று எனக் கூறுவர். அவை 1.சமற்கிருதம் 2.ஈரானிய மொழிகள்  3. தாச்சாரியன்    4. அனடோலியன்  5. ஆர்மேனியன்  6. கிரீக்கு  7. இலத்தீன் 8. இத்தாலிக் மொழிகள்  9. செலித்திக் மொழிகள்  10. செருமானிக் மொழிகள்  11. சுலாவிக் மொழிகள்  12.பால்டிக் மொழிகள் 13.அல்பேனியன்  என்பன.  
மேற்கூறிய பதின்மூன்று கிளைகளும் சேர்ந்ததுதான் இந்தோ ஐரோப்பியம் என்னும் மொழிக்குடும்பம். உலகமொழிக் குடும்பங்களுள் இதுவே பெரியது. உலகமக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் இக்குடும்ப மொழிகளைப் பேசுகின்றனர் என சேம்பரார் அகராதி குறிப்பிடுகின்றது. இப்பெருங்குடும்பமொழிகள் ஒன்றுள் ஒன்றாய் உறவுகொண்டிருப்பதை அம் மொழி அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.
        1856 இல் வெளியான கால்டுவெல் கண்காணியரின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கண நூல் தமிழையும் பிறதிராவிட மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தது. அதற்கப்பால் தமிழை உலகின் பிறபிற மொழிக்குடும்பங்களுடனும் ஒப்பிட்டு ஆய்வுசெய்துள்ளது. இந்தோ-ஐரோப்பியம், திராவிடம், உரால்அல் தாய்க், ஆப்ரோ-ஆசியன் என்னும் உலகமொழிக்குடும்பங்கள் ஒரு பெருமொழிக்குடும்பத்திலிருந்து கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளில் பிரிந்து பிரிந்து வளர்ந்திருக்க வாய்ப்புள்ளதென  அண்மைக்கால மொழி அறிஞர்கள் ஆய்ந்து உரைத்து வருகின்றனர். இந்த ஆய்விற்கு “நாசுதிராசுஎன்ற இலத்தீன் சொல்லால் பெயரிட்டுள்ளனர். இச்சொல்லிற்கு“நம்மவர்என்பது பொருளாகும். இன்று வழங்கும் உலகமொழிகள் ஆறாயிரத்திற்கும் மேற் பட்டன. இவை அனைத்தும் ஒரு மூலமொழியிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் எனக் கருதும் அறிஞர்கள் இன்று பலர் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மெரிட்ரூலன்(Merrit Ruhlen), சான்பெங்டன் (John Beng stone), வாக்லாவ் பிலாசக்கு (Vaclav Blazek), விதாலி செவரோசகின் (Vitaly Blazek) அனையர் ஆவர். சற்றொப்ப 15000 ஆண்டுகட்கு முன் ஒரு மூல மொழி யிலி ருந்து இந்த உலகமொழிகள் தோன்றியிருக்கலாம் என்று ஆர்.எல். திராசுக்கு (R.L.Trask) தமது வரலாற்று மொழியியல் என்னும் நூலில் குறிப்பிட் டுள்ளார். (மீண்டும் பாவாணரின் எழுச்சி-மருத நாயகம், முதன்மொழி கி.பி.2042 சுறவம்)
       கால்டுவெல் பெருமகனாருக்குப் பிறகு யாழ்ப்பாணத்து நல்லூர் ஞானப் பிரகாசர், தமிழுக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிகட்குமான உறவுகள் பற்றி ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இவருக்குப் பிறகு பேரளவில் தமிழ்-இந்தோ ஐரோப் பிய உறவினை ஆய்ந்தவர் மொழிஞாயிறு பாவணரே ஆவார். பாவாணர், தமிழ், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் உலகமுதன்மொழியும் ஆகும் என்னும் கொள்கையர். தன் மொழியாய்வினை மேலை மொழியறிஞர் களும் ஏற்கும் காலம் வரும் என்றும் பாவாணர் கூறினார். இவ் ஏற்பு பாவா ணர் காலத்திற்குப் பிறகு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாவாணரின் தமிழ்-இந்தோ ஐரோப்பிய உறவு ஆய்வினை ஏற்றுக்கொண்ட முதல் இந்தோ-ஐரோப்பிய மொழி ஆய்வறிஞர் தீபன் இலியர் லெவிற்று (Stephen Hillyer Levit ) ஆவார். தொல்காப்பியரின் உடைபடையும் இந்தோ-ஐரோப்பிய முன் னொட்டும் என்னும் இக் கட்டுரை பாவாணரின் ஆய்வு நெறிமுறைகளை பின்பற்றியும் மேலே இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதிகளின் ஆய்வு களைப் பின்பற்றியும் “disஎன்னும் மேலை இந்தோ ஐரோப்பிய எதிர்மறை முன்னொட்டின் வரலாற்றினைக் கண்டு காட்டியுள்ளது.
சமற்கிருத – மேலை இந்தோ –ஐரோப்பிய மொழி உறவு.
             கீழை இந்தோ –ஐரோப்பிய மொழிகளில் முதன்மையானது இந்திய மொழிகளுள் ஒன்றான சமற்கிருதம். இவ்விந்திய மொழி கிரேக்க இலத்தீன் செருமானிய கோதிய செலத்திய மொழிகளுடன் உறவுடையதாய் உள்ள தென்பதை கி.பி.1796இல்  முதற்கண் கண்டுபிடித்தவர் வில்லியம் சோன்சு (William jones) என்னும் ஆங்கிலேயர் ஆவார். (வடமொழி வரலாறு ப.20). மேலை இந்தோ –ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் பலவற்றுடன் கீழை இந்தோ–ஐரோப்பிய மொழிகளுள் ஒன்றான சமற்கிருத மொழிச்சொற்கள் உறவு டையனவாய் இருப்பதை மானியர் வில்லியம்சின்( சமற்கிருத அகராதியிலும் ரைசுடேவிட்டின் பாலி வேர்ச்சொல் அகராதியிலும்  கீற்று  சேம்பரார் ன் அயிற்றோபோன்ற ஆங்கில வேர்ச்சொல் அகராதிகளிலும் நிரம்பக் காணலாம்.
எதிர்மறை முன்னொட்டு
               உண்மைக்கு மறுதலையானது எதிர்மறை. தமிழில் வழங்கும் “அஎன் னும் எதிர்மறை முன்னொட்டு அல்ஆகிய எதிர்மறைச் சொல்லின் சுருக் கமே என்று ஞானப்பிரகாசர் முதற்கண் கூறினார்.அல்காலம்என்பதன் சுருக் கமே அகாலம்என்பது அவர் கருத்து. பாவாணரும் இக்கருத்தினை வழி மொழிந்து விரிவாக்கி உரைத்துள்ளார். “தமிழின் போன்று ஆங்கி லத்தில் எதிர்மறைப்பொருளை விளக்கப் பல முன்னொட்டுகள் உள்ளன. in, im, un என்பன சில. இம் முன்னொட்டுகள் ability- in ability, accessible – inaccessible; material – im-material, mature –im-mature; usual- unusual, limit-unlimit போன்ற சொற்களில் இடம்பெறுவதைக் காணலாம். இவ் in, im, un போலவே ஆங்கிலத்தில் புழங்கும் பிறிதொரு எதிர்மறை முன்னொட்டு “disஆகும். இது count- discount, ease-disease, embark- disembark போலப் பல சொற்களில் வழங்குகின்றன.
“துவிவழிப்பிறந்த “dis
           ஆங்கில வேர்ச்சொல் அகராதிகள் பலவும் மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான ஆங்கிலத்தில் புழங்கும். “dis” ஆகிய எதிர்மறை முன் னொட்டின் வேராக- மூலச்சொல்லாகச் சமற்கிருதத்தின் “துவியாகிய இரண் டினைக் குறிக்கும் சொல்லினையே குறிப்பிட்டுள்ளன.
Dis- a prefix meaning; 1. opposite of, lack of, not, as in dishonest = not honest 2. do the opposite of, as in disallow = do the opposite of, as in disallow = do the opposite of allow 3. apart, away,  as in discard. Middle English dis(earlier des-) borrowed from old French des, from Latin dis-apart, or directly from Latin dis- Latin dis –is cognate with old English,  old Frisian and old saxon te-apart, old high German zi ze-, Greek dia through and Albanian tsh-apart, all  from an Indo –European base dis; a variant form of * dwis apart, twice, formed from * dwo(u) Two (pok.232)                                                          - (Chambers)
dis, des, de உறவுகள்
எதிர்மறை முன்னொட்டாகிய dis உடன் உறவுடைய எதிர்மறை முன் னொட்டுகளாகவே des, de என்பனவும் ஆங்கில வேர்ச்சொல் அகராதி அறிஞர் களால் குறிக்கப்பட்டுள்ளன.
desecrate – destroy the sacredness of. (des -. from Latin dis                                                                    sacrer. Consecrate, from sacrare, from sacer SACRED).                                      – Chambers

despatch, dispatch – the orig. sense was ‘to remove a hindrance.’ Better                                                                                             spelling, despatch. – O. F. despecher, to hasten, dispatch. – O.F.                                                                                             des – (L. dis-), apart, away; pescher, to hinder.                     – skeat

இவ்விரண்டு சொற்களிலும் வந்துள்ள ‘des’ வடிவம் முன் உரைத்த ‘dis’
உடன் உறவுடையதாகக் காட்டப்பட்டுள்ளது காண்க. 
deforest, deform, dehydrate, demerit, போன்ற சொற்களின் ‘de’ எதிர்மறை வடிவமும்  ‘des’ உடன் உறவுடையனவே.

                demerit – fault, defect, black mark on one’s record.                                                                                                                   [Old French des – not, opposite of + merite MERIT]                                                                                          - Chambers.
dis, des, de உடன் உறவுடைய ‘di’
                dis, des, de என்னும் எதிர்மறை முன்னொட்டுகள் ஆங்கிலத்தில் இரண்டி னைக் குறிக்கும் ‘di’ சொல்லுடன் உறவுடையதாக வேர்ச்சொல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

                di, prefix, signifying ‘twice’ or ‘double’.                                                                                                                                                          Gk. de-, for bis twice. +Lat                                                                                                                                                        bis, bi-, twice + Skt. dvis, dvi-,                                                                                                                                                                 twice. Connected with Gk                                                                                                                                                                 di, Lat. duo, skt. dva, E. two. See Two                                                                                                                                                                                                                            (Skeat.)
                di – a prefix meaning. 1. twice, double,                                                                                                                                                         twofold, as in dicotyledon; or two, having two, as in                                                                                                   digraph. Borrowed from Latin di-, from Greek di – earlier * dwi-) related to dyo Two.                                                                                                                                                                                - Chambers

இரண்டிற்கும் எதிர்மறைக்கும் ஆன விளக்கப்படாத பொருள் உறவு

       கீழை இந்தோ – ஐரோப்பிய மொழியாகிய சமற்கிருதத்தின் துவியா கிய இரண்டு குறித்த சொல்லுடன் dis, des, de ஆகிய மேலை இந்தோ ஐரோப் பிய மொழிகளின் எதிர்மறை முன்னொட்டுகள் உறவுடையன என்பதை மேலே விளக்கிய அறிஞர்களின் ஆய்வுப்பகுதிகளிலிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.  இந்தச் சமற்கிருத dva – dvi வுடன் உறவுடைய மேலை இந்தோ – ஐரோப்பிய சொற்கள் மேலும் பல உள்ளன என்பதும் இங்குக் குறிப் பிடதத்தக்கன. Dout, double, duel, two, twice போல்வன இவற்றுள் சில.
       இரண்டு என்ற எண் குறிக்கும் சொல்லிலிருந்து எதிர்மறை முன் னொட்டு குறிக்கும் சொற்களை உறவுபடுத்திய இந்தோ – ஐரோப்பி மொழி அறிஞர்கள் எவ்வகையில் இவ்விரண்டு எண் எதிர்மறைப் பொருளுக்கு உறவு டைதாயிற்று என்று எவ்விடத்திலும் விளக்கம் கூறவில்லை.மேலும் இரண்டு குறித்த dva.dvi ஆகிய சமற்கிருத சொல் வடிவங்களும் di,duoஆகிய மேலை இந்தோ – ஐரோப்பியச் சொல் வடிவங்களும் எவ்வாறு அம் மொழி களில் உருவாயின என்ற மேலதிக விளக்கங்களும் சமற்கிருத வல்லுநர் களாலோ அல்லது ஆங்கில வல்லுநர்களாலோ காட்டப் பெறவில்லை. 

‘துமி‘ ஈன்ற ‘துவி‘
       தமிழின் எண்ணுப் பெயர்களை ஆராய்ந்த கால்டுவெல் பெருமகனார் தமிழின் எண்ணுப் பெயர்களைச் சமற்கிருத எண்ணுப் பெயர்களுடன் ஒப்பு மைப்படுத்தி ஆய்ந்துள்ளார். ஒன்று குறித்த ‘ஒக்க‘ என்னும் தெலுங்கு வடி வத்தை ‘ஏக‘ என்ற சமற்கிருதத்திற்கு உறவுடையதாகக் கால்டுவெல் எழுதியுள்ளார்.    கால்டுவெல் வழியில் ஆய்வு நிகழ்த்திய பாவாணர் மேலும் நுணுகித் தமிழ் எண்ணுப் பெயர்களுடன் சமற்கிருத எண்ணுப் பெயர்களை உறவுபடுத்தித் தம் வடமொழி வரலாறு நூலில் ஆய்ந்துள்ளார்.  இவையெல் லாம் அவரின் வடமொழி வரலாற்றில் காண வேண்டிய பகுதிகள்.  இங்கு நாம் எடுத்துக்கொண்ட dvi – dva ஆகிய சமற்கிருதச் சொல் எவ்வாறு தமிழ் வழியிற் பிறந்தது என்பதைப் பாவாணரின் வடமொழி வரலாறு வழிக் காண்போம்.
த்வி (d)
       இது, துமி என்னும் சொல்லினின்று திரிந்ததாயிருக்கலாம்.  துமித்தல் = வெட்டுதல், இரண்டாகப் பகுத்தல்.  ஒரு வெட்டில் ஆகக் கூடிய துண்டுகள் இரண்டே. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் சொலவடையை நோக்குக.
       துமி – துவி – த்வி. ஒ.நோ குமி – குவி.  இரண்டு என்னும் தமிழ் எண்ணுப் பெயரின் வேர்ப் பொருளும் இதுவேயாயிருத்தல் காண்க.
       ஈர்தல் = அறுத்தல், பிளத்தல். ஈர் – இர் – இரது – இரடு – இரண்டு”                                                                             (பகுதி 2 ப. 114)
       துமித்தல் என்னும் வெட்டுதற் பொருட்சொல் சங்க நூல்களில் முப்பத்தேழு (37) இடங்களில் ஆளப் பெற்றுள்ளது.  சில ஆட்சிகளை மட்டும் இங்குக் காண்போம்.  வயலில் விளைந்த நெல்லின்தாள் வெட்டப்பட்டதைப்
       பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின்                                                       தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர் (பெரும்பா. 230 -31)
என்று பெரும்பாண் கூறும்.

யானையின் தும்பிக்கை வெட்டப்பட்டதைத்
       தொடித்தெறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து                                                                பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்                                                                  பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமிய (முல்லைப். 68 – 70)
என முல்லைப் பாட்டு உரைக்கும்.

புன்னைமரக்கிளை துண்டிக்கபட்டதைக்
       கொடுங்கால் புன்னைக் கோடு துமித்து (பெரும்பா. 266)
எனப் பெரும்பாண் கூறும்.

தேர்ச்சக்கரம் ஈரமான நிலத்தைப் பிளந்து கொண்டு ஓடும்.  இதனை
       நோன்சூட் டாழி ஈர்நிலம் துமிப்ப (அகம் 334 : 14)
என்று அகம் கூறும்.
பகைவரின் தலை வெட்டப்பட்ட செய்தியை மலைபடுகடாம்    
தெவ்வர் இருந்தலை துமிய (438)
என்றுரைக்கும்.
வானில் மின்னும் காரிருளை மின்னல் வெட்டுவதனை
       தாழிருள் துமிய மின்னி  (270 : 1)
எனக் குறுந்தொகை கூறும்.
                மேலை மொழிகளில் தமிழின் இத் ‘தும்‘ வடிவம் இதே வெட்டுதற் பொருளில் சிறு ஒலிமாற்றத்துடன் வழங்குகின்றது.  பிரெஞ்சு மொழியில் ‘tome’எனவும் இலத்தீனில் ‘tomus’ என்னும் கிரேக்க மொழியில் ‘tomos’ எனவும் ஆங்கிலத்தில் ‘tom’ எனவும் வழங்கும் வடிவங்கள் இதற்குச் சான்றுகளாகக் கூறலாம்.தமிழின் தும் துமியாகிய மூலவடிவங்களிலிருந்து பிறந்த  மேலை இந்தோ –ஐரோப்பியச் சொற்கள் சிலவற்றை இங்குக் குறித்தல் நலம்.  
anatomy-Etymologically, anatomy means ‘cutting up’ (The Greek noun anatomia was compounded from the prefix ‘ana’, ‘up’ and the base ‘tom’ which figures in several English surgical terms, such as tonsillectomy, as well as in atom and tome) and when it first came into English it meant literally ‘dissection’ as well as science of bodily structure.                                                                                 - Ayto

                vasectomy – the cutting and sealing of part of each was deferens especially as a means of sterilization.                                                                                                                                                                       - C.O.D

                entomo- comb. Form insect. (Greek entomos ‘cut up’ (in neut. ‘insect’ from its segmented body) from en + temno ‘cut’        
epitome- a summary of a written work; an abstract. (Latin from Greek, epitome, from epitemo ‘abridge’ as epi-, temno- ‘cut’.                                                                                                                                                 - C.O.D
                temple- a fane. (L) A.S. templ, temple L. templum, a temple, + GK temenos A sacred enclosure piece of ground cut off; allied to temnein ‘to cut’                                                                                        - Skeat

       மேலை மொழி நூலறிஞர்கள் இரண்டு குறித்த two, duo ஆகிய சொல் வடிவங்களுக்குச் சமற்கிருதத்தின் வடிவங்களை உறவினவாக எண்ணினார் களே அல்லாமல் தமிழின் இத் தும்–துமி வடிவினை உறவாக எண்ண வில்லை.  இக் கட்டுரையின் முன் பகுதியில் 15000 ஆண்டுகட்கு முன் நாசு திராக்கு நிலையில் மூல மொழியாக இருந்த ஒரு மொழியிலிருந்தே இன்றைய உலகின் பலமொழிகளும் தோன்றியிருக்க வேண்டும் என்று ஆர். எல். திராசுக்கு(R.L. Trask) கூறிய செய்தியை இங்கு மீண்டும் நினைவுபடுத்துக. அதாவது நாசுதிராதிக்கு நிலையில் மூலமொழியாக இருந்தது தமிழோ அல்லது தொல் தமிழோ என்றும் அந்த முதன் மொழியின் தும்–துமி ஆகிய சொல்வடிவமே tom,tome,tomus போன்ற வடிவங்களாகவும் dvi,dva ஆகிய வடிவங் களாகவும் திரிந்தன என்று நாம் கருதுவது பொருத்தமாகலாம். dvi,dva ஆகிய சமற்கிருவடிவம் தமிழின் ஒரு கிளைவடிவம் என்றால் tom,tome,tomus ஆகிய மேலை இந்தோ ஐரோப்பிய வடிவங்களும் தமிழின் பிறி தொரு கிளை வடிவங்களே என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.  தமிழ்மொழி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போலக் கிளைகளான வரலாறு அனையதே தமிழ் பலப்பல இந்தோ – ஐரோப்பியக் கிளைகளனாதும். ஐம்பதாயிரம் ஆண்டுகட்கு முன்னர் குமரிநாட்டில் தோன்றி வடக்கே இமயம் வரை பரவி வாழ்ந்த தமிழ், 20–25 ஆயிரம் ஆண்டுகட்குமுன் இந்தியாவைத் தாண்டி வடமேற்காகச் சென்று இந்தோ – ஐரோப்பியமாகத் திரிந்தது என்ற பாவாணரின் கருதுகோள் பொருத்தமானதாக இருக்கவேண்டும். பழந்தமிழ் இந்தியாவிலிருந்து சென்ற தொல்தமிழர், நடுஆசியாவில் நெடுங்காலம் தங்கியிருந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் 5–6 ஆயிரம் ஆண்டுகட்குமுன் புறப்பட்ட இடத்திற்கே திரும்பத் தொடங்கினர். 4 ஆயிரம் ஆண்டுகட்குமுன் மீண்டும் வட மேற்கு இந்தியாவின் கயவாரம் (கயவார் – கய்பார் – கய்பர்), போலன் கணவாய்கள் வழியாக வந்து நுழைந்தனர். பெரும்பகுதியினர் ஐரோப்பா நோக்கிச் சென்று பரவினர். தமிழர் இவ்வாறுதான் இந்தோ- ஐரோப்பியராயினர். பாவாணரின் இக் கருதுகோளினை இங்குரைத்த இரண்டு குறித்த இந்தோ–ஐரோப்பிய வழக்கு களையெல்லாம் வகைதொகை செய்து பரந்த அளவில் எண்ணிப் பார்த்தால் முழு உண்மையும் விளங்கும்.  இவ்வாறு எண்ணாமல் இந்தோ – ஐரோப்பிய மொழி ஆய்வறிஞர்கள் தங்கள் மொழிக்கான மூலவடிவினைத் தங்கள் குடும்ப  மொழிகட்குள்ளேயோ அல்லது தங்கள் மொழிகளில் மூலமொழியாகக் கருதிக் கொண்டிருக்கக் கூடிய சமற்கிருதத்திற்குள்ளேயோ தேடிக் கொண்டிருப்பது. மேலும் மேலும் ஆய்வுச் சருக்கலை உண்டாக்கும்; தெளிவை உண்டாக்காது.
       தமிழின் தும் – துமி ஆகிய சொல் வடிவம் ‘துல்‘ என்னும் நெருக்கக் கருத்துவேர் வழியாகப் பிறந்திருக்கலாம்.  ‘துல்‘ என்பது துல்–துன்–துன்னு = நெருங்குதல் எனப் பொருள்தரும் சொல் ஈனும்.  நெருங்குதல் பொருள் மூலத்திலிருந்தே துளைத்தல், உடைதல் என்னும் பொருள்கள் பிறந்திருக்க வேண்டும்.  துல் – துள் – துண் – துணி – துணித்தல் = வெட்டுதல், இரண்டாக்குதல் என்ற சொல்லும் பிறந்திருக்க வேண்டும்.


இரண்டுபடுதலும் எதிர்மறையின் வேர்
       இரண்டு என்னும் எண் குறித்த dva, dvi, di, duo ஆகிய இந்தோ – ஐரோப்பிய மொழிச் சொற்கள் எவ்வாறு dis, des, de என்ற எதிர்மறை முன்னொட்டாகப் பொருள் மாற்றம் பெற்றன என்பதை இந்தோ – ஐரோப்பிய மொழியாய்வறிஞர்கள் யாரும் எங்கும் விளக்கியதாகத் தெரியவில்லை என்று சொல்லியிருந்தேன்.உள்ளதாம் தன்மைக்கு மறுதலையான இல்லதாம் தன்மையாகிய எதிர்மறைத்தன்மை உருவாவதற்குச் சில பல காரணிகள் உலகில் உள்ளன.  அவற்றுள் இரண்டுபடும் தன்மையும் குறிப்பிடத்தகுந்த ஒன்று.
       உலகில் முழுமையான பெரிய பொருள் என்று ஒன்றும் இல்லை.  அது போலவே சிதைந்து போன சிறிய பொருள் என்றும் ஒன்று இல்லை.  இவ்வாறு கூறப்படுவன எல்லாம் அவ்வக்கால நிகழ்நிலை அளவினவே. முழுமையான பெரிய பொருள் அதன் மேலும் உள்ளதொரு மிகுமுழுமைப் பெரும் பொருளோடு ஒப்பு நோக்கச் சிறிய பொருளாகிவிடும்.  சிறிய பொருள் எனப்பட்டதும் அதனின் சிறிய பொருளோடு ஒப்புநோக்கப் பெரிய பொருளாகிவிடும்.  இவ்வுண்மையை
       முதலும் சினையும் பொருள்வேறு படாஅ                                      
 நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே    (தொல்.சொல்.86)
என்னும் தொல்காப்பிய நூற்பா நமக்குத் தெரிவிக்கின்றது.
       பெரிய பொருள்கள் உடைந்து சிறிய பொருள்களாவதும் சிறிய பொருள்கள் சேர்ந்து பெரிய பொருள்களாவதும் உலகில் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டே உள்ளன.  ஒன்று பலவாவதும் பல ஒன்றாவதும் உலகியல் நிகழ்வுகளே.  இவ்வகையிலேயே ஒரு பொருள் உடையும்பொழுது அது முன்னிருந்த தன்மையிலும் பார்க்க வலிமை இழக் கிறது.  மேலும் உடைவு தொடர்கையில் இறுதியில் இல்லாமலே போகிறது.

நூறுதல்- அழிதல்
        ‘நூறுதல்‘ என்னும் வினை அழிதற்பொருளது.
        “அம்புடைக் கையர் அரண்பல நூறி    (அக: 69 : 16)
        “எழுதெழில் மாடத்து இடனெல்லாம் நூறி  (பு. வெ. மா : 120)
என்ற இடங்களின் நூறுதல் அழிதல் பொருள் பெறும்.  ஆவின் சாணத்தை வறட்டியாக்கிப் பின் எரித்துச் சாம்பலாக்கியதை ‘நூறு‘ என்கின்றோம். தெய் வத்தன்மை குறிக்கும் ‘திரு‘ அடை சேர்ந்து இதுவே ‘திருநூறு‘ ஆனது.  பிறகு திருநீறு என்றும் துண்ணூறு என்றும் இச்சொல் மருவியது. ஒரு பொருள் பல பகுதியானதும் நூறு ஆனதுதான். ஒரு பொருள் இல்லாமல் அழிந்து போன தும் நூறு ஆனதுதான்.  ஒரு பொருள் பல பகுதியானது என்ற பொருளில் உருவான நூறுதான் பிறகு நூறு (100) என்னும் எண்ணினையும் குறித்தது. இவற்றைப் பாவாணர் விளக்கியுள்ளார்.
       ‘ஈர்தல்‘, பிளத்தல் என்னும் பொருள் தரும். ஈர்தல் என்ற இதே வினை யில் இருந்துதான் ஈர்–இர்–இரு என்ற இரண்டு எண்ணினைக் குறிக்கும் சொல் லும் தோன்றிற்று. துமித்தல் என்னும் வெட்டுதல்- பிளத்தல் வினை இவ் வாறுதான் முதலில் பிரிவு என்ற பொருளில் தோன்றிப் பிறகு துமி–துவி என்று எண்ணினைக் குறிக்கவும் அதாவது இரண்டினைக் குறிக்கவும் ஆன நிலை எய்தியது.
       ‘ஒன்று‘ என்னும் எண், ஒன்றுதலாகிய வினையுடன் உறவுடையது.  ‘ஒல்‘ என்னும் பொருந்துதல் பொருள் தரும் வேர் ஒல்–ஒன்–ஒன்னு–ஒன்னு தல்; ஒல்–ஒற்-ஒர்–ஒரு-ஓர்; ஒல்–ஒற்–ஒறு–ஒன்று என்றெல்லாம் பலப்பல சேர்ந்த ஒன்றிய ஒருபொருளை முதற்கண் குறித்தது.
       தனித்தனியாக இருந்த ஆடு மாடுகள் சேர்ந்து சேர்ந்து ஒன்றாதலும்.  தனித்தனியராக இருந்த மக்கள் சேர்ந்து ஒன்றாதலும் நிகழ்தல் காண்கின் றோம். துளித்துளியான மழைத்துளிகள் வெள்ளம் ஆவதும் சிறுவெள்ளம் பெருவெள்ளம் ஆவதும் இவ் ஒன்றாதல் வழியே நிகழ்கிறது. ஒன்றுதல் ஆகிய இவ்வினைக்கு மறுதலை அவ்வொன்றிய பொருளை பிரித்தலேயாம்.  அதாவது ஒன்றுதலைப் பிரிக்கும்போது மட்டுமே அதற்குரிய எதிர்நிலை தோன்றுகின்றது. இந்த வகையில் ஒன்று என்பது மட்டும் தனித்த எண்ணா கவும் அதனைப் பிரிக்கப் பிரிக்க உருவாகுகின்றவையெல்லாம் பிரிவுப் பொருள் தரும் எண்ணாகவும் கருதப்படுகின்றது.
ஈர்தலாகிய பிளத்தல் வினையால் இரண்டு மட்டும் அல்லாமல் மூன்று நான்கு வினையாகிய மற்ற மற்ற எண்களும் கிடைக்கின்றன. திராவிட மொழியியல் அறிஞர்களில் ஒருவராகிய கிட்டல் (kittel) இரண்டு என்னும் எண் பற்றிக் கருதிப் பார்த்ததை கால்டுவெல் குறிக்கின்றார்.
                I find that kittel, also in the Indian Antiquary for January 1873, derives the Dravidian word for two from ir (ஈர்) to split, especially to split off a branch; whilst or(ஓர்), one, he considers to mean a unit without a branch.                                                           (கால்டுவெல் ப.-333)
                நூறு(தல்) என்ற வினை முதலில் அழிதல் பிரிதல் என்ற பொருள்களில் புழங்கப்பட்டுப் பிறகு எவ்வாறு ‘நூறு‘ என்ற எண்ணினை மட்டும் குறித்தற் குரியதாகியதோ அவ்வாறே ‘ஈர்தல்‘ என்ற பிரிதல் வினை முதலில் பிரிவுப் பொருளில் மட்டுமே வழக்கில் இருந்து பின் ஈர்-இர் என்று வளர்ந்து பிறகு இரண்டு என்ற எண்ணிற்கு மட்டுமே உரியதாகி இருக்க வேண்டும்.
       ஈர்(தல்), இரண்டு என்ற எண்ணிற்கு மட்டும் உரியதாகத் தமிழில் நிகழ்ந் தது போலவே துமி(தல்) ஆகிய தமிழ்வினை இந்தோ–ஐரோப்பியத்துள் நாள டைவில் dvi, duo, di என இரண்டினைக் குறித்தற்கு உரியதாக வளர்ந்திருக்க வேண்டும்.
       ஒன்றாகியிருக்கும் பொருள் அது சிதையும் போதும் உடையும்போதும் நொறுங்கும்போதும் அழிதலுக்கு– இன்மைக்கு உரியதாக ஆகிவிடுகிறது.  ஒரு நாடு உடையும் போதும் கட்சி உடையும் போதும் நிகழ்வது அதன் முந்தைய வலிமை இல்லாத் தன்மையேயாகும். மரம் உடைதல், வீடு உடைதல், சட்டி உடைதல், கண்ணாடி உடைதல் இப்படி ஒவ்வொரு பொருள்களிலும் உடைதல் நிகழும்போது அந்த அந்தப் பொருள் படிப்படியாக இல்லாத தன்மை யை எய்திவிடுவதை அன்றாடம் உலகில் காண்கின்றோம்.  ஒன்றாதல் தன்மைக்கு எதிர்நிலையான உடைதலாகிய ஈர்தல் தன்மையில் அதாவது இரண்டாதல் தன்மை நிகழ்கின்றபோது அந்தப் பொருள் மெல்ல மெல்ல இல்லாதல் தன்மையை அடைந்துவிடுகிறது.  இந்த வகையிலேயே இரண்டு என்ற எண் குறித்த சொல்லிலிருந்து இன்மைத் தன்மையாகிய எதிர்மறைத் தன்மை தோன்றிவிடுகிறது. பிரிதல் அழிதலுக்கும், ஒன்றுபடுதல் வாழ்தலுக்கும் அடிப்படையாகக் கருதப்படு கிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற் றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்ற பாரதியார் பாடல் நினைக்கத் தக்கது. அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு என்னும் பழமொழியும் ஒன்று படுதலின் வலிமையைத் தெரிவிக்கும்.
       தமிழில் ‘பாதிப்பு‘ என்ற சொல் இப் பிரிதல் பொருளில் பிறந்ததாகவே தெரிகிறது.  பகு–பகுதி–பகுதிப்பு–பாதிப்பு எனவே இச் சொல் வளர்ந்திருக்க வேண்டும்.  அழிதல் பொருள்தரும் இப் பாதிப்புச் சொல் பிரிதல் பொருள் வழி யாகவே அப் பொருளை எட்டியிருக்க வேண்டும்.

பாறுதல் - அழிதல்
       பகு – பகல் – பால் – பாலு – பாறு என்பதாகவே தமிழின் அழிதற் பொருள் தரும் பாறு சொல் பிறந்திருக்க வேண்டும். 
       “காழியாம் பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே“  (சம்: 2 : 11 : 5)
       “நூலறு முத்தின் காலொடு பாறி“  (குறுந். 51 : 2)
என்ற பாடலடிகளின் ‘பாறுதல்‘ அழிதற் பொருளதே.
       “முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைச்                 பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்                  சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட  அத்தனெனக்  கருளியவா றார்பெறுவார் அச்சோவே “
என்னும் மணிவாசகர் பெருமானின் பாறுதலும் அழிதற் பொருளதே.
       புறநானூற்று வீரத்தாய் போருக்குத் தன் மகனை அனுப்பிய காட்சியைக் கூறும் பாடலில் அவனின் பிளவு பட்ட குலைந்திருக்கும் தலை மயிரினைப் “பாறுமயிர்க் குடுமி“ (புறம்.279;9) என்று குறித்தது இங்கு மூல வழக்காக எண்ணத்தக்கதாகும்.

பால் – பாள் – பாழ்

       துலக்கம் – துளக்கம்; செதில் – செதிள்;
       கால் (கருமை) – காள் (கருமை) – காழ் (கருமை)
போன்ற தமிழ்வேர்வளர் நெறிமுறைகளின்படித்தான் பகுவழித் தோன்றிய பகு – பகல்– பால் என்னும் சொல், அடுத்த வளர்ச்சியாகப் பாள்–பாளம்; பாள் - பாழ் எனச் சொற்களைத் தோற்றின. ஒருபொருள் பாழாவது அதன் பிரிநிலைத் தன்மையாலும் என்பதை இப் பாழில் பொருத்திக் காண்க.

ஈர்தல் – இரிதல்

       ‘இரிதல்‘ சொல், அழிதல் கெடுதல் பொருள் தரும் தமிழ்ச்சொல்.  இச் சொல் ஈர்தல் வினைவழியாகவே ஈர்–இரு–இரி எனப் பிறந்திருக்க வேண்டும்.
       மன்ற மரைஆ இரிய            (குறு : 321:  5)

       கம்புள் சேவல் இன்துயில் இரிய (மது : 254)

       புனல்ஒழுகப் புள்இரியும் பூங்குன்ற நாட (நால் : 22 : 2)

கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி                                  துதைமென் தூவித் துணைப்புறவு இரிக்கும்    (குறுந் : 174 : 2-4)

போன்ற பாடல்களின் இரி–இரிதல் ஆட்சிகள், அழிதல் - நீங்குதல் பொருள் பெற்றவையாகும். மன இருள் இரிய மாண்பொருளைப் பவணந்தி எழுதிய தாக நன்னூல் பாயிரம் கூறும்.  குற்றங்களாகிய ஆசினை இரிப்பவனே (அழிப் பவனே) ஆசு + இரியன் = ஆசிரியன் எனப்பட்டான்.



படையும் உடைபடையும்
       போரினை எதிர்கொள்ளும் படையின் வெற்றி அதன் ஒன்றுபட்ட தன்மையிலும் படையின் தோல்வி அதன் உடைந்து சிதறும் தன்மையிலும் அடங்கியுள்ளது.வெல்லும் படையின் மாட்சியை அதன் கூடிநிற்கும் வினை மேல் ஏற்றியுரைப்பார் திருவள்ளுவர். 
       கூற்றுடன்று மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும்                                                                                               ஆற்ற லதுவே படை
என்பது அவரின் பொய்யாமொழி.
       தொல்காப்பியர், புறத்திணையியலில் தும்பைத்திணை பற்றிக் கூறிய இடத்துக் கூழைதாங்கிய பெருமை, நூழில் என்று இருதுறைகளைக் கூறு வார்.
ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக்                                                                             கூழை தாங்கிய பெருமை                                                          (நூற் 72 : 7 – 8)
எனவும்
       பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்                                                   ஒள்வாள் வீசிய நூழிலும்”                                                                    (நூற் 72 : 16 – 17)
எனவும் வருவன தொல்காப்பிய நூற்பாத் தொடர்கள்
       எருமை மறம், நூழிலாட்டு என்னும் இருதுறைகளே இங்குப் பேசப் பெறுபவை.  படைத் தோல்வி என்பது இங்குப் படை உடைவதில் நேர்வதாகக் கூறப்பட்டுள்ளது.  உடையும் படைக்குள்தான் ஒருவன் புகுந்து ஒருவனைக் காக்கின்றான்.  அவ்வாறே பகைப் படையை நூறி அழித்தலே நூறில் – நூழில் எனப்பட்டது.  இந்த நூழில் நிகழப் படைவீரன் ஒருவனுக்குப் படை உடைபட வேண்டும்.  இதனைத்தான் பலபடை ஒருவற்கு உடைதலின் அவன் ஒள் வாழ் வீசிய நூழில் என்று தொல்காப்பியர் கூறினார். படை உடைவில்தான், இல்லாத தன்மை அதாவது தோற்றோடும் தன்மை நேர்கிறது.
       ஒன்றாக இருந்த பொருளைச் சிறிது சிறிதாகச் சிதைத்தும் அழிக்கலாம்.  அல்லது நடுப்பகுதியில் சமமாகப் பிளந்தும் அழிக்கலாம். விறகு உடைப்பவர் அவ்விறகுக் கட்டையை அதன் சமமான நடுப்பகுதியில் பிளப்பதை நோக்க மாகக் கொள்வர். எந்தவொரு பொருளையும் இரண்டிரண்டாக உடைத்தே அத னைச் சிதைப்பவர் பணி செய்வர்.
       இந்த வகையில்தான் ‘துமி‘யாகிய பிளத்தல்வினை dvi, dvis – dis, des, de என்றெல்லாம் இந்தோ–ஐரோப்பியத்துள் சென்று இரண்டு என்ற பொருள் குறித்ததற்கு அப்பால் அப்பொருள் இல்லாது போகும் நிலையையும் குறித்து அதன்வழி எதிர்மறை முன்னொட்டுப் பொருளைப் பெற்றுக் கொண்டது.
       இக் கட்டுரையில் எதிர்மறை முன்னொட்டாகிய ’dis’ இன் வரலாறு சரி யாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழின் ‘துமி‘யே இந்த ’dis’ ன் மூல மாகும். பிறர் அறியாமல் உலகில் பல கமுக்கங்களும் உண்மைகளும்  திரையிட்டு மூடியுள்ளன. இம்மூடிகளை இல்லாமல் நீக்கி அனைவரும் அறியச் செய்வது தான் கண்டுபிடிப்புகள். ’discover’  என்னும் சொல்லின் வரலாறும் இதைத்தான் தெரிவிக்கின்றது. ease என்பது இயல்பாக இருப்பது. உடல் வருத்தம் ஏற்படு கின்ற போது நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை.  இதனைத்தான் ஆங்கிலத்தில் dis+ ease- disease என்று குறிக்கின்றனர். தமிழின் படகு மேலை உலகில் barque என்று ஆனது. இது இன்றைய குடகு coork என்று ஆனது அனையது. எபிரேயத்தின்  barque ஆங்கிலத்தில் bark என்று ஆனது.  படகில் சரக்கினை ஏற்றினால் அது embark என்றும் படகில் இருந்து சரக்கினை இறக் கினால் அது disembark என்றும் ஆங்கிலத்தில் கூறப்பட்டது.இவ்வாறு மேலும் பலப்பல ஆங்கில வழக்குகளில் எதிர்மறை முன்னொட்டாகிய dis இனைக் காணலாம். தமிழ் இந்தோ – ஐரோப்பியத்திற்கு மூலமான மொழி என்னும் உண்மை இக்கட்டுரையிலும் நிறுவப்படுகிறது.

-          நன்றி. -    திரு.முனைவர்.அரசேந்திரன்,
-                      தமிழ்த்துறைத்தலைவர்,
-                      தாம்பரம் கிறித்துவக்கல்லூரி, சென்னை.

10 comments:

  1. முனைவர் அரசேந்திரன் போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete
  2. ஐயா, மிக வியப்பு. அதற்குள்ளாகவா/ மிக நெகிழ்ச்சியாக உள்ளது ஐயா. தாங்கள் கூறியதைப்போல முனைவர் அரசேந்திரன் மிக நல்ல ஆய்வாளர் ஐயா.புதுயுகம் தொலைக்காட்சியில் அவரின் ஆய்வுரையை தினமும் கேளுங்கள் ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. தங்களின் இந்தப் பதிவு தமிழுக்குச் செய்த அரும்பணி.! அரசேந்திரன் ஐயா அவர்களின் வேர்ச் சொல் ஆய்வுப்பணிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்க வில்லை என்பது வேதனையான விடயம்..?! நம் தமிழாசிரியர்கள் உங்கள் பதிவின் மூலம் அரசேந்திரன் ஐயவின் தமிழ்ப் பணிகுறித்து தெரிந்துகொள்வார்கள். தொடர்ந்து எழுதுங்கள்.. வலைப்பூ எங்கும் தமிழ் மணம் வீசட்டும்.! புரட்சிக்கவி பாரதிதாசனாரின் பாடல் நினைவுக்கு வருகிறது. "கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்.!
    கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை.!".
    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஊக்கமிகு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா !எல்லாம் நிலவன் ஐயாவையே சேரும். அவருடைய வலைப்பக்கத்தில் என் வலைப்பூ இருக்க வேண்டுமென்பதற்காக தொடர்ந்து எழுத் முனைகிறேன். மிக்க நன்றீ ஐயா.

      Delete
  4. அய்யா அரியபேச்சைக் கேட்டு, தொடர்ந்து குறிப்பெடுத்து, அதை அருமையான ஆய்வுக் கட்டுரையாக்கிய தங்களின் தொடர்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. பாவாணர் அ்வர்களின் “வேர்ச்சொற்கட்டுரைகள்” , “சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்“ போல முனைவர் அரசேந்திரன் அய்யா எழுதிய நூல்களிருநதால் பின் இணைப்பில் சேர்த்துத் தரலாம் அ்யயா, ஆர்வமுள்ளவர்க்குப் பயன்படும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றீ ஐயா. தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. முனைவர் அரசேந்திரன் ஒரே ஒரு புத்தகம் மட்டும் வெளியிட்டுள்ளதாகக் கூறினார். அதுவும் குறைவான புத்தகங்களே வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். அவரிடம் தொடர்பு கொண்டு கட்டாயம் புத்தக விவரங்களைத் தெரிவிக்கிறேன்.ஐயாஇ.மிகவும் நன்றீ.

      Delete
  5. இந்தப் பதிவு வந்தபிறகும் இதற்கு முந்திய பதிவே எனது நட்பு வலைப்பட்டியலில் நிற்கிறதே! என்ன தொழில்நுட்பச் சிக்கல்? பொதுவாக, அடுத்த பதிவு இடப்பட்டவுடன் பதிவுப்பட்டியலில் வரிசையில் முதலில் வந்து நிற்கும். ஆனால் இது வரவில்லையே? தங்கள் குறுஞ்செய்தி பார்த்துத்தான் வந்தேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. தெரிய வில்லை ஐயா.திண்டுக்கல் தனபாலன் ஐயாவைத் தொடர்பு கொண்டு கேட்கிறேன். அவர் தான் நமக்கு வலைப்பூ கோனார் உரை.

      Delete
  6. நெல்லுக்கு பாய்வது எங்களைப்போன்ற புல்லுக்கும் பாய்கிறது......நன்றி

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete