பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Friday 8 August 2014

மாற வேண்டும் மனித மனங்கள்!



                               மாலைப்பொழுது மழையால் நனைந்திருந்தது. பள்ளியிலிருந்து புறப்பட்டேன். “ ஐயா, மழை வரும்போல இருக்கு. பாத்துப் போயிட்டு வாங்கய்யா ! “ அன்புடன் வழியனுப்பிவைத்த தலைமையாசிரியரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கும். எப்பொழுதும் பரவியிருக்கும் இயல்புக் குணச்சூழல் உணர்வுகளே அச்சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கத் தோன்றும் அடிக்கூறுகளாக இருக்க வேண்டும். அவ்வியல்புக் குணம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தாலும் அது வெளிக்கொணரப்படாமலேயே மனித வட்டங்களுள் மூழ்கிவிடுகின்றன. அல்லது மூழ்கடிக்கப்பட்டுவிடுகின்றன. அவ்வியல்புக் குணமே அன்பின் அணுக்களை புன்சிரிப்பின் முகவரியை மனிதநயத்தின் உன்னதத் தன்மையை வெளிஉலகில் தூவுகின்றன. இத் தூவல் அமைந்த இடம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பணியாற்றுவதற்குப் பூஞ்சோலையைக் கொணரும். அவ்விடம் மீண்டும் செல்லத் தூண்டும் மனவிருப்பத்தை பரப்பும்.
                           

                            நான் பார்த்த நான் விரும்பும் இடம் என் பள்ளி. என் தலைமையாசிரியரின் இயல்புக்குணம் என் மனவிருப்பத்தின் பரவிடம். என் மேல் அக்கறை கொண்டு அவர் பேசியதாக நான் கருதவில்லை, அவரது இயல்புக் குணம் அவரை முன்நிறுத்துகிறதென்றே நான் எண்ணுகிறேன்.



                           சீரான வேகத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். அப்போது தொலைபேசி ஒலித்தது. முதல் அழைப்பினை தவிர்த்தேன். மீண்டும் மீண்டும் அழைக்கவே வண்டியை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு அழைப்பை ஏற்றேன். கூப்பிட்டது என் நண்பர் கணித ஆசிரியத் தோழர்..
                      
                           எப்பொழுதோ பார்த்த தேர்வுப்பணிக்கு உழைப்பூதியம் வந்திருப்பதாகவும் என்னைத் தவிர அனைவரும் உழைப்பூதியம் வாங்கி விட்டதாகவும் விரைவாகச் சென்று அதை வாங்கிக் கோள்ளும் படியும் அவர் என்னைப் பணித்தார். அப்பள்ளித் தலைமையாசிரியர் என்னை விரைவாக வந்து வாங்கும் படி வற்புறுத்தியதாகவும் கூடுதல் தகவலையும் கூறினார். எப்பொழுதும் கடைசியில் சொல்லப்படும் தகவலே நம்மை முன்னெடுக்கும் வேக உணர்வின் முகவுரையாய் அமையும். 
                           மணியைப் பார்த்தேன். ஐந்தைத் தொட்டிருந்தது. இன்னும் பத்து கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டும். ஏனென்றால் நான் தேர்வுப்பணியாற்றிய பள்ளியின் தலைவர் சற்றுக் கடுமையானவரென்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அவரிடமிருந்து இதுவரை எவ்விதக் கசப்பான அனுபவமும் கிட்டியதில்லை. நான் மதிக்கும் என் கெழுநகை நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பனுபவங்கள் என்னை அவர்மீது ஓர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

                        வண்டியை சற்று வேகமாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில், எப்பொழுதும் செல்லும் வேகத்தை விட சற்றுக் கூடுதலாக மிகைவேகத்துடன் செல்லத் தலைப்பட்டேன். சரியாக ஐந்து பதினைந்து மணிக்கு அப்பள்ளி வளாகத்தில் நுழைந்தேன். பள்ளி நிசப்தமாக இருந்தது. பள்ளியின் தலைவரும், எழுத்தரும் இருந்தார்கள். என் எச்சரிக்கை உணர்வை சற்று மிகைப்படுத்திக் கொண்டேன். சொற்களை தேர்ந்தெடுத்துப் பேச வேண்டுமென்று என் மனதிற்குக் கட்டளையிட்டேன். எச்சூழலிலும் அதிக நேரம் அங்கு இருக்கக்கூடாதென்று என்னை நான் ஆணையிட்டேன். 



                      தலைவர் அறையில் அவர் எதோ வேலையாக இருந்தார். நான் சற்றுத் தயங்கியபடியே அனுமதி பெற்று நுழைந்தேன்.  என்னைப் பார்த்தவுடன் “ ஓ ! தேர்வுக்காசா ? “ என்றார். நான் ஆம் என்றேன். அவரிடம் சொற்களை அளந்து தான் பேசவேண்டும் என்று என் மதிப்பிற்குரிய நண்பர் அறிவுறுத்தியிருந்தார்.
  
                      ஏனெனில் கசப்பான அனுபவம் எதையும் என் ஆசிரியர் வாழ்வில் சந்தித்திராதவன் நான். மேசையின் மேல் ஏதோ கட்டம் போட்டக் காகிதம் இருந்தது. சரி. பணப் பட்டுவாடாப் பதிவேடு போலும் என்றெண்ணி என்சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்தேன். அப்பொழுது அங்கே ஒரு பூகம்பம் வெடித்ததாய் உணர்ந்தேன்.
                   
                    என்ன, வந்ததும் கையை நீட்றீங்க ? நீங்க வந்ததும் காசு கொடுக்கணுமாக்கும் ? நீங்க வருவீங்கன்னு நாங்க காத்திக்கிட்டா இருக்கமுடியும் ? அடுத்து அவர் பேசியது என் காதுகளில் விழவில்லை. என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். என் ஆசிரியர் அனுபவத்தில் பல தலைமையாசிரியர்கள், பல உயரதிகாரிகள், பல ஆசிரியர்கள், என்று பலரைச் சந்தித்தவன் நான். அச்சுழலில் மிகவும் பொறுமையாக இருக்கத் தலைப்பட்டேன். அது எனக்குச் சற்று மிகையாகக் கூடப் பட்டது.

                    நான் ஒரு ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலராய் இருந்தது கூட அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஏனெனில் உயரதிகாரிகளைப் பிரச்சனை நிமித்தம் சந்திக்கும் பொழுது அவர்கள் மிகுந்த உயர்குரலில் பேசுவார்கள். நான் அமைதியாக பிரச்சனையின் மையக்கூறுகளை எடுத்துக்கூறி பிரச்சனையின் வீரியத்தையும் அவரையும் அமைதிப்படுத்த முற்படுவேன். இது என் சங்கம் எனக்குச் சொல்லிக்கொடுத்த நல்லனுபவம்..எனவே தான் அச்சூழலில் என்னைக் கட்டுப்படுத்தினேன். அவரிடம் வாக்குவாதம் செய்வது அழகல்ல என்பதை உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் நான் கையை நீட்டியதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். சட்டைப்பையிலிருந்து கையைப் பயன்படுத்தாமல் பேனாவை எடுக்கும் உத்தி எனக்குத் தெரியவில்லை.

               உழைப்பூதியத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தேன். எழுத்தர் எனக்குத் தெரிந்தவர். கண்களால் என்னிடம் இரக்கம் காட்டினார். நான் எதுவும் பேசாமல் நகர்ந்து அறையை விட்டு வெளியேறினேன், 

                என்னய்யா அவன் எனக்கு முன்னால கையை நீட்டுறான் ? அவன் வந்தால் நாம தயாரா இருக்கணுமோ ? என்னைப் பற்றி ஒருமையில் அவர் தன் எழுத்தரிடம் கூறியது கேட்டுச் சிரித்துக்கொண்டேன். நான் எதுவும் பேசாதது அவரின் மனதை உறுத்தியிருக்க வேண்டுமென நினைத்துக் கோண்டேன். சரியாக மிகச் சரியாக நான் தேர்வு நாள்களில் என் பணியைச் செய்ததற்கான பிற்கூலி ஏன் இவ்வாறு அவமதிக்கப்படுகிறது ? என்ற வினா என்னுள் சுழன்று கொண்டே இருந்தது.  மிக மெதுவாக இச்சம்பவத்தின் நிழலை உள்வாங்கிக் கொண்டே நகர்கையில் “ ஐயா, பத்திரமாக வீட்டுக்குப் போயிட்டீங்களா ? என் தலைமையாசிரியர் என்னைத் தொலைபேசியில் அழைத்துக் கூப்பிட்டது ஆறுதலைத் தந்தது.

             அடுத்தவர்களிடம் மனித நயத்துடன் நடந்துகொள்ளத் தயங்குபவர்கள் மனித நேயத்தை மாணவர்களிடம் எங்ஙனம் கொண்டு போய்ச் சேர்க்கமுடியும் ? அன்னை தெரசாக்களும் மகாத்மாக்களும் இத்தகையோரிடம் பொய்த்துப் போக யார் காரணம் ?

            விடைக்குள் மூழ்குகையில் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் நினைவில் வந்து போனது.



தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய் !
இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியுமென் றெழிற்கனிவாய் மல்ர்ந்தார்நம் அருள்வள்ளல்.

            இன்னா செய்தார்க்கும் இனியவே செய்த இயேசு பெருமகனாரின் பாடல் எனக்குச் சற்று இளைப்பாறலைத் தந்தது.






பின் குறிப்பு : ( எனக்கு மிகச் சிறப்பானதொரு அனுபவத்தைத் தந்த பள்ளியெதுவென புதுக்கோட்டை ஆசிரியப்பெருமக்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும் )

5 comments:

  1. இதுபோன்ற மனிதநேயமில்லா மனிதர்களிடம் பயில்கிறார்களே மாணவ்ர்கள், அவர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது நண்பரே, இவரது மாணவர்கள் இவரிடம் எதைக் கற்றுக் கொண்டு பள்ளியை விட்டு வெளிவருவார்கள்...

    ReplyDelete
  2. ஆமாம் ஐயா ! அவ்வாசிரியரிடம் பலருக்கும் பலவித கசப்பனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. என் அனுபவ்த்தைப் பகிர்ந்து கொண்டேன். என் மனப்பாரம் குறைந்ததைப் போலுணர்ந்தேன். மிக்க நன்றி ஐயா !

    ReplyDelete
  3. ஒருமுறை இதுபோன்ற ஒருவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது என் நண்பர் கூறினார். இவ்வாறாக உள்ள எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டவர்களைப் பற்றி பேசுவதை விடுத்து நேர்மறைச் சிந்தனைகளைக் கொண்டவர்களைப் பற்றி பேசு, சிந்தி என்று கூறினார். அதனை நான் கடைபிடிக்கிறேன். தங்களுக்கும் இந்த ஆலோசனை உதவும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம்
    என்ன செய்வது மனிதர்கள் பலவிதம் ..இவர்களையும் வாழ்வில் கடந்தே போக வேண்டிய நிலை சார்..மௌனமாய் இருந்தது அவருக்கு உறுத்தலை உண்டாக்கியது நன்று..நன்றி

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா,
    உங்கள் பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்...நன்றி

    ReplyDelete