பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 14 February 2016

ஒரு வரலாற்றுக் காதலின் கதை


      ஒரு நண்பர் வழங்கிய களத்தின் குரல்கள் எனும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் நம் பிரபாகரன். மதிவதனி இருவருக்கிடையே காதல் மலர்ந்த நிகழ்வு மிகவும் பிரமிப்பாக இருந்தது.
காதலர் தினத்தில் இந்தப் பதிவு மிகப் பொருத்தமாக இருக்கும்.
காவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால்  நம் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம்.
பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ விடுதலைக்கான  போராட்டத்தைத் தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு  சூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர், தென் இலங்கையில் படித்த மாணவர்கள் யாழ் பல்கலையில் படிக்க முயன்ற பொழுது சிங்களப் பேரினவாத அரசு அதற்கு மறுத்தது, அவர்கள் படித்துக் கொண்டிருந்த பழைய பல்கலைக்கே செல்ல காலக்கெடு  விடுத்தது.
மேலும் யாழ்ப்பாணப்  பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாநோன்பு  அறப்போராட்டத்தைத் தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாநோன்பிற்குப்  பெருகியது. யாழ் நகரம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
ஜெயவர்தனா இந்த உண்ணாநோன்பினைக்  கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலியும்  அந்த மாணவர்களின் இறத்தல் நிலை பற்றி எந்த கவலையும்  கொள்ள வில்லை.  . 15ம் தேதி உண்ணாநோன்பு  ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை  ஆய்வு செய்த  மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தைச்  சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றனர்.
ப்ளாட் இயக்கம்  மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர்.
உண்ணாநோன்புப்  பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்குச் சென்றனர்.
மாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி, அதற்குக் கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணனிடம் பேசிவிட்டுத்  திரும்பி வந்த பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனியைச்  சமாதானம் செய்துவிட்டுச் சென்றார்.
இதன் பிறகே இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர்  மணம் செய்யத்  தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி,  அந்தத்  தடையை நீக்கி,  திருமணத்திற்கு அனைவரின்  இணக்கத்தையும்  ஆண்டன் பாலசிங்கம்  பெற்றார். பிரபாகரன் மதிவதனியின் பெற்றோரின்  இணக்கத்தையும் பெற்ற பிறகு தான் திருமணம் என்று கூறியதால், யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் இணக்கமும் பெறப்பட்டது.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார் அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன் மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார். இதே சமயத்தில் டெலோ இயக்கம் பெண்களைத்  தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்குக் கூட்டி வந்தது, அவர்களுக்கு தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும் ஆண்டன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் தான் சோதியா என்று அழைக்கப்பட்ட மாவீர்ர் சோதியா. இதன் பிறகே இவர்களுக்கான பயிற்சிப் பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.

இதன் பிறகு தனது கணவரின் ஒவ்வொரு போராட்டத்திலும் தான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்திலும் தொடர்ந்து பிரபாகரனுக்கு தோள் கொடுத்து நின்றவர் மதிவதனி. மதிவதனியும் பிரபாகரனும் வேறு வேறு உருவங்களாக இருக்கலாம் ஆனால் உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத் தமிழர்களுக்காக தங்களின் காதலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள், போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகளுக்கு இறந்த மாவீரர்களின் பெயரையே வைத்துள்ளனர். சார்லஸ் ஆண்டனி, துர்கா போன்ற மாவீரர்களை நமக்குத் தெரியும், ஆனால் பாலச்சந்திரன் யார் என்ற தகவல் பலருக்கு தெரியாது, இவர் வேறு யாரும் அல்ல மதிவதனியின் தம்பி இந்திய அமைதிப்படை காலத்தில் களத்தில் நின்று போராடிய வீரர்களில் ஒருவர். பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தன் தம்பியை  விடுதலைத்  தமிழீழத்திற்காக கொடுத்த தமக்கையான மதிவதனி தன் பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக கொடுத்துவிட்டார்.
       தம் மக்களின்  விடுதலையையே தம் காதலாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக் கொண்டவர்களே தலைவர் பிரபாகரனும் மதிவதனியும்.என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிற உண்மை.

3 comments:

  1. 1994 அக்டோபர் 9 ஆம் தேதி பிரபாகரன்- மதிவதனி திருமணம், சென்னை அருகிலுள்ள திருப்போரூர் முருகன் ஆலயத்தில் நடைபெற்றதன் நினைவாக வைகோ தலைமையில் ஓர் நினைவுத்தூண் அக்கோவில் அருகில் அமைந்திருப்பதை இன்றும் காணலாம்.தியாகமே வடிவானதொரு இல்லறத்தின் இரத்த சாட்சியம் அது.

    ReplyDelete
  2. 1994 அக்டோபர் 9 ஆம் தேதி பிரபாகரன்- மதிவதனி திருமணம், சென்னை அருகிலுள்ள திருப்போரூர் முருகன் ஆலயத்தில் நடைபெற்றதன் நினைவாக வைகோ தலைமையில் ஓர் நினைவுத்தூண் அக்கோவில் அருகில் அமைந்திருப்பதை இன்றும் காணலாம்.தியாகமே வடிவானதொரு இல்லறத்தின் இரத்த சாட்சியம் அது.

    ReplyDelete