நான் ஏன்
இருக்கணும் ?? ---
கடந்த வயது அப்படியே தான் முடிந்தது.இந்த வயதும் அப்படியே தான் துவங்கி இருக்கிறது.திருவுடையானை இழந்திருக்கிறேன். திருவுடையானுடன் இரண்டு நிமிடங்கள் கூடத் தனிப்படப் பேசியிருக்க மாட்டேன். எனக்குத் தெரிந்தவை எல்லாம் அவருடைய நெருக்கமான சிரிப்பு, பாடும் போது வெளியேயும் உள்ளேயும் அதிர்ந்தடங்கும் குரல், சதா தரையில் அமர்ந்து வாசிக்கையில் தபேலாவில் புரண்டாடும் அவருடைய விரல்கள்.
என் இரண்டு மூன்று மேடைப் பேச்சை அவரின் தபேலா வாசிப்பில் இருந்து துவங்கியிருக்கிறேன். திறவு கோல்களையும் திறப்புகளையும் எனக்குத் தந்தவை அவர் விரல்கள். அவரே அறியாத ஒரு அவர் என்னுடன் எப்போதும் இருந்திருக்கிறார். நிறையப் பேரை இப்படி இழக்கச் செய்கிற வாழ்வு, இப்படி இன்னும் சிலரையேனும் அடையச் செய்யுமா தெரியவில்லை.
வருத்தத்தில் அல்ல, நிறைவில் தான் தோன்றுகிறது, 'நான் எல்லாம் ஏன் எழுதணும்?'இசையின் 'ஆட்டுதி அமுதே' , ஜான் சுந்தரின் 'நகலிசைக் கலைஞன்' இரண்டையும் அடுத்தடுத்து வாசித்து முடித்ததும் அப்படித்தான் தவிக்கிறது.மரபின் மைந்தன் முத்தையா, ஜயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் இருவரோடும் முதல் நாள் மாலை மேடையில் பேசுகிறேன். மறுநாள் முத்தையா, ஜயந்தஸ்ரீ, அவரது கணவர் பாலகிருஷ்ணன் மூவரோடும் இருக்க வாய்க்கிறது. முன்னிருவரையும் விட அதிகம் என்னைத் தொடுகிறவராக பாலகிருஷ்ணனை உணர்கிறேன். அவர்களிடம் விடை பெறுகையில் தோன்றுகிறது, 'நான் எல்லாம் எதற்குப் பேசணும்?'
நா.முத்துக்குமார், எங்கள் குடும்பத்தின் ரேஷன் கார்டில் இணைக்கப்படாத பெயராக இருந்த 'மீனாக்கா', இன்றைக்குக் காலை திருவுடையான் எல்லோரின் மறைவுக்குப் பின், எனக்குத் தோன்றுகிறது, 'நான் ஏன் இருக்கணும்?'
இப்படி எல்லாம் கேள்வி வருவது, சுய இரக்கத்தில் அல்லது ஒரு வருத்தத்தில் அல்ல, ஒரு வித உணர்வு நிறைவில் தான். தெருக் குழாயில் குடி தண்ணீர் பிடிக்கப் போகிறவள், தன் ஆயிரம் அன்றாடக் கவலையின் நடுவில், சொரு சொருவென்று மஞ்சள் பிளாஸ்டிக். குடம் கழுத்து வரை நிறைந்து விளிம்புக்கு வருவதைப் பார்க்கிற நேரத்து மன நிலை. வழிந்து சிந்துவதை கூடுதலாக ஒரு கணம் பார்த்து,பார்த்தபின் பதறுகிறவன் தானே நான்.
-- கவிஞர்
வண்ண நிலவனின் இரங்கல் செய்தி.
சமூகப் பிரக்ஞையுள்ள
ஒரு கலைஞனின் இறப்பின் இடைவெளி நிரப்பவியலாப் பெருவெளி.
அவரின்
பணி அளப்பரியது. இனி எந்தக் குரல்நாணும் ஆத்தாவின் சேலையை அவரைப்
போல் நெய்ய முடியுமா என்பது ஐயமே.. ஒரு
சமூகக் கலைஞனுக்கு ரௌத்திரம் பழகிய புரட்சியாளனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் - சி.குருநாதசுந்தரம்.
ஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteஎன்ன செய்வது நண்ப! திருவுடையானின் பணிகளைத் தொடர நம் பாணியில் நமது கடமை இருக்கிறதே எனவே இருந்து தொலைக்கத்தான் வேண்டும்.
ReplyDelete