பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday, 27 August 2016

புரிதலில் வசமாகும் மகிழ்ச்சிபுரிதலில் வசமாகும் மகிழ்ச்சி : சி.குருநாதசுந்தரம்.

நாளை அரசுப் பொதுத் தேர்வில் மாணாக்கரை நூறு விழுக்காடு தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுவதாகத் தலைமையாசிரியர் கூறினார். மேலும் எனக்கு வாழ்த்து தெரிவித்து சென்று வரப் பணித்தார். அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் அவர் அவ்வாறே செய்து ஒரு குறிப்பையும் கூறினார். அடுத்த ஆண்டும் இவ்வெற்றி தொடர வெண்டும் என்பதே அது.

அடுத்த வருசம் கொஞ்சம் கஷ்டம் தான். ரெண்டு மாணவர்கள் இருக்காங்க . ஒரு ஆசிரியர் கவலையோடு முணுமுணுத்தார்
.
எனது வகுப்பில் ஐயப்பன் என்ற மாணவன் எப்போதும்   தமிழ்ப்பாடத்தில் தோல்வியடைந்து கொண்டே இருப்பான்,  ஆகஸ்டு  மாத அலகுத்தேர்வில்  முப்பத்து எட்டு  மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதைக்  கண்ட நான் சொல்லொணா மகிழ்வுற்றேன்.. ஐயப்பனின் பெயரை வகுப்பறையில் அவ்வப்போது உச்சரிக்க ஆரம்பித்தேன். அவனைப் போல எல்லோரும் மாறவேண்டும் என்று கூறினேன். நான் செல்லும் மற்ற வகுப்பறையிலும் அவனைப் பற்றி பகிர்ந்து கொண்டேன். இந்த செயல் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கு புரிதலற்ற எரிச்சலைக்  கொடுத்தது. அவன்  94  மதிப்பெண்கள் வாங்கியிருந்தும் அவனுடைய பெயரை வகுப்பறையில் உச்சரிக்காமல்  38  மதிப்பெண்கள்  எடுத்த ஐயப்பனை  முன்நடத்தைக் குறியீடாக்குவதைக் கண்டு   மனதுள் வெம்மை கொண்டிருந்தான். எதிர்மறைப் பின்னுரையாடல்களை அவனுடைய நண்பர்களிடத்தில்   பகிர்ந்து கொண்டிருக்கிறான். எனவும் அறிந்தேன்.

பைபிளில் ஒரு கதை வரும். ஆடுகளை மேய்க்கும் ஒருவர் 100 ஆடுகளை மேய்த்துக்கொண்டிருப்பார். மாலையில் வீடு திரும்பும் வழியில் ஆடுகளை எண்ணிப் பார்க்கும் போது அங்கு 99 ஆடுகளே இருந்தன. ஒரு ஆட்டைக்  காணவில்லை. 99 ஆடுகளையும் விட்டு விட்டு , அந்த மேய்ப்பன் ஒரு ஆட்டைத் தேடி அலைவார். தொலைந்து போன ஆடு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த ஆட்டைத்  தோளில் போட்டுக் கொண்டு மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்ததாக அக்கதை  முடியும்

மேய்ப்பனை சரியாக பின் தொடர்ந்த 99 ஆடுகளும் நடந்தே வந்தன. ஆனால் காணாமல் போன ஆடு மட்டும் மேய்ப்பனின் தோளில் அமர்ந்து வந்தது. இதை பார்த்த 99 ஆடுகளும் நாமும் காணாமல் போனால் இதைப் போல் மேய்ப்பனால் குதூகலிக்கப் படுவோம் என நினைப்பதில்லை.


ஆனால் மனிதர்கள்,. தாம்  காணாமல் போனால் நம்மைத் தூக்கி வர மேய்ப்பர்கள் வருவார்கள்  என எண்ணுகிறார்கள்.

அதனால் தான் சிலவேளைகளில்,

நிழல் தரும் மரங்களுக்கு அடியில் நடந்து கொண்டேயிருந்தாலும் யாராவது குடைகொண்டு வந்து வெம்மை தீர்ப்பார்களா , என்று தேடுகிறார்கள்.

சுவை தரும் பழத்தோட்டத்தில் நின்றாலும் தன் பசிக்குப் புசிக்க யாராவது உணவு கொண்டுவர மாட்டார்களா? என காத்திருக்கிறார்கள்.

அன்பை பகிர்ந்து கொள்வதற்கு சுற்றிலும் சுற்றம் இருந்தாலும் யாராவது அன்பு செய்ய மாட்டார்களா? என ஏங்குகிறார்கள்.

ஒருவருக்குப் பாராட்டு கிடைக்கும் போது அதை மனதார ரசித்து வாழ்த்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. மற்றொருவர் பாராட்டுப் பெறும் போது அந்தப் பாராட்டு தனக்கும் வேண்டும் என அடம்பிடிப்பது ஒருவகையான நோய். அந்த நோய் தான் முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும் வந்திருந்தது. அந்த நோயை குணப்படுத்த சரியான மருந்தும் இருக்கிறது.

எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் பிறரைப் புரிந்துகொள்கிறீர்களோ,
அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் மகிழ்ச்சியை உங்கள் வசமாக்குவீர்கள்.

அம்மாணவனுக்கு நான் புரிய வைத்தேன். இப்பொழுதெல்லாம் ஐயப்பனைப் பரிவுடன் பார்க்க ஆரம்பித்திருந்தான் அந்த மாணவன்.

      வட்டம் போடக் கற்றுக் கொண்டிருக்கும் நிஷாவும், ரெட்டைக் கொம்பு நெடிலைத் தேடிக்கொண்டிருக்கும் ரெங்கராஜனும்  அடுத்த தேர்வில் ஐயப்பனின் பாராட்டைத் தன்வசப்படுத்த போராடத் தொடங்கி விட்டார்கள்  என்று மகிழ்வோடு கூறிய ஆங்கில ஆசிரியரின்  செய்தி எங்கள் காதுகளில் தேனாய்ப் பாய்ந்தது.

      பாராட்டுப் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். அடுத்த ஆண்டு பாராடுப் பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் முன்வாழ்த்துகள்.
                                       அன்புடன் சி.குருநாதசுந்தரம்


நன்றி : திரு. பெர்ஜின் முகநூல் நண்பர்..

6 comments:

 1. வாழ்த்துகள் நூறு சத ஆசிரியருக்கு ..

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சார்ந்த நன்றி . வருகைக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 2. மனம் நிறைந்த வாழ்த்துகள் அய்யா..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. தங்களின் கடின உழைப்பில் நான் பிரமித்து நிற்கிறேன். மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 3. மனம் நிறை நல் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete