பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday 28 May 2014

பின்னடைவின் பாடம் !

பொதுத்தேர்வுக்குப் பிந்தைய பத்தாம்வகுப்பு                                      தமிழ்ப்பாடச் சூழல்.


                     இருபத்துமூன்றாம் தேதியின் கனத்த முற்பகல் நிமிடமொன்றில் தலைமையாசிரியர் அந்த அரக்குவண்ண உறையைப் பிரித்தார். சுற்றியிருந்த ஆசிரியர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஒரு மிரட்சி. ஓர் எதிர்பார்ப்பு. உறையின் உள்ளிருந்த பத்தாம் வகுப்புத் தேர்ச்சி விவரத்தைப் பார்வையிட்ட தலைமையாசிரியர்தமிழ்பாடத்துல மட்டும் ரெண்டு பேரு பெயிலு. மத்த பாடத்துல எல்லாரும் பாஸ் “ -இக்காட்சி சற்றேறக்குறைய எல்லாப் பள்ளிகளிலும் பரவலாகக் காணப்பட்டது. பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டினை அறிவியல்,கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களே முடிவுசெய்யும் இடத்தில் இருந்த நிலை போய் அவ்விடத்தை தமிழ்ப்பாடம் பிடித்துக் கொண்டதை தற்போதைய தேர்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. இச்சூழலில் தமிழ்ப்பாடத்தின் பின்னடைவுச் சூழல் பற்றிய புரிதல் அவசியமாகிறது.

.                   இப்பின்னடைவு பெற்றோரிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.அதே நேரத்தில் இப்பாதிப்பு தமிழாசிரியப் பெருமக்களின் மனசாட்சியை சிறிதுகாலமாக உலுக்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

                   2014 பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை 10,28,876 மாணவர்கள் எழுதினார்கள். அவர்களுள் 72722 மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வி கண்டுள்ளார்கள் என்ற செய்தி தமிழாசிரியப் பெருமக்களை மட்டுமல்லாது கல்வியாளர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

                  புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வெழுதிய 23671 மாணவர்களுள் 21417 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளார்கள். 2254 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இவர்களுள் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் தோல்வி கண்டுள்ளார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இத் தோல்வி புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர்களிடையே பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

                   தாய்மொழிப் பாடத்தில் மாணக்கர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்து போனதற்கு பல காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு தாள்கள், வினாக்கள் அதிகம், மதிப்பெண் பகுப்பில் குறை, மாணவர்களிடையே விழிப்புணர்வின்மை, தமிழாசிரியர்களிடையே ஆர்வமின்மை என்று பல காரணிகள் கூறப்படுகின்றன..



                  ஆயினும் கடினப் பாடமென்று ஆசிரியர்களால் வலியுறுத்தப்படும் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களிலும் இத்தகு இடர்ப்பாடுகள் காணப்படினும் அப்பாடங்களில் குறிப்பாக கணிதப் பாடத்தில் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது, சில மாற்றங்களுக்கு தமிழாசிரியப் பெருமக்கள் உட்பட்டாக வேண்டுமென்ற உண்மையைக் காட்டுகிறது. அம்மாற்றங்களை நாம் தொடர்ந்து வலியுறுத்துவதும் அவசியமாகிறது.

பள்ளிப்புறச்சூழல் சாதகமின்மை :

                பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டம் தொடங்கி, இலக்கிய மன்றங்கள், பொது விழாக்கள் ஒருங்கிணைப்பு ,நூலகச் செயல்பாடு என்று வகுப்பறையையும் தாண்டி வெற்றிச் சூழலை சாதகப்படுத்திவரும் தமிழாசிரியப் பெருமக்களுக்கு தேர்ச்சி விழுக்காட்டினை அதிகரிப்பது என்பது இலகுவான ஒன்றுதான்.   
    
                 ஆனால் பள்ளிப் புறச்சூழல் எப்போதும் தமிழாசிரியப் பெருமக்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது வருந்தத்தக்க ஒன்று. தமிழ்ப்பாடத்தைக் கேலி செய்வதும், தமிழாசிரியர்களை பணிஅவமதிப்பு செய்வதும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஒருநாள் என் வகுப்பறையில் அலகிடுதல் பகுதியை நடத்திக்கொண்டிருந்தபொழுது பாடவேளை முடிந்து விட்டது. ஒரு ஐந்து நிமிடம் கூடுதலாக எடுத்து மீதிப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கணித ஆசிரியர் ஒரு கேலிப்புன்னகையோடு மாணவர்களையும் என்னையும் பார்த்துச் சிரித்தார். “ ஆமா. இதெல்லாம் போயி நடத்திக்கிட்டு இருக்கீங்கஎன்பதாக அவர் முணுமுணுத்தது என்னை எரிச்சலூட்டியது..

                 வேறொரு பள்ளியில்  பெண் தமிழாசிரியர் படிவம் நிரப்பும் பகுதியை கற்பித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்த தலைமையாசிரியர் தவறான தகவலை மாணவருக்குச் சொல்லியதோடு சரியாகக் கற்பித்த அவரை அவமதித்ததாகக் கூறி அழுத நிகழ்வும் என்னை மிகவும் பாதித்தது. இது போன்று பல நிகழ்வுகள் தொடர்ந்து பள்ளிகளில் தமிழ்ப்பாடத்திற்கும்  தமிழாசிரியர்களுக்கும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பள்ளிகளில் நம்மொழிப்பாடம் முதன்மைப்படுத்தப்படும் வரை நாம் நம் செயல்பாடுகளில் முனைப்பு காட்டியே தீர வேண்டும். தேர்ச்சி விழுக்காடு குறைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றே நான் கருதுகிறேன்.



வினாத்தாள் பகுப்பாய்வில் தமிழ்ப்பாடநிலை :

               இத்தருணத்தில் வினாத்தாள் பகுப்பாய்வும் அவசியமாகிறது. தமிழ்ப்பாட வினாத்தாளில் முதல் தாளில் 49 வினாக்களும் இரண்டாம் தாளில் 41 வினாக்களும் கொடுக்கப்படுகின்றன. பிற பாட வினாத்தாளினை நோக்குங்கால், தமிழ்ப்பாட வினாத்தாள் அமைப்பின் கடினம் நமக்குப் புரிகிறது. ஆங்கிலப்பாடத்தில் முதல் தாளில் புறவயவினாக்களும், இலக்கணமும் 45 மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. ஆனால் தமிழ் முதல் தாளில் புறவயவினாக்கள் 20 மட்டுமே கொடுக்கப்படுகின்றன. உரைநடை, செய்யுள் ஆகிய பகுதிகளுக்கு 35 மதிப்பெண்களும் மொழித்திறன்களுக்கு 20 மதிப்பெண்களும் ஆங்கிலப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இது மெல்லக்கற்கும் மாணவர்கள் எளிதில் மதிப்பெண்கள் எடுக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது,

              ஆனால் தமிழ் முதல் தாளில் எழுதப்படிக்கத் தெரியாத மெல்லக் கற்கும் மாணவர்களுக்குத் தகுந்த வடிவமைப்பு இல்லை என நான் கருதுகிறேன். மொழித்திறன்கள் ( ஒலி வேறுபாடு அறிதல், அகரவரிசையில் எழுதுதல், செய்யுள் அமைப்பு கண்டறிதல், உரையாடல், மொழி விளையாட்டு ) அதிகம் சேர்க்கப்படவேண்டும். 35 வினாக்கள் ஒரு மதிப்பெண் புறவய வினாக்கள் வழங்கப்படவேண்டும். ஆங்கிலம் இரண்டாம் தாளில் துணைப்பாட்த்திற்கு 35 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ் இரண்டாம் தாளில் வெறும் 5 மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளன. மொழித்தொடர்புறு திறன்கள், சொந்த நடையில் எழுதுதல் போன்றவை ஆங்கிலப் பாட்த்தில் அதிகம் கேட்கப்படுகின்றன. ஆனால் தமிழ் வினாத்தாளில் இவை மிகவும் குறைவு. மொழித்திறன்கள் மேலும் வலுவாகக் கேட்கப்படவேண்டும்.

              செய்யுள் நயம் பாராட்டலுக்கு மேனிலைத் தேர்வில் பத்து மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் பத்தாம் வகுப்பிலோ ஐந்து மதிப்பெண்களே வழங்கப்படுகின்றன. கடிதங்கள், நிரப்பும் வகை வினாக்களாக ஆங்கிலத்தில் கேட்கப்படுவது போல் தமிழில் இல்லை, படிவங்கள் நிரப்பப்படுவது ஆண்டுக்காண்டு மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. புறவய வினாக்கள் இன்னும் அதிகப்படுத்த வேண்டும். வாக்கியம் அமைத்தல், பேசுதல், எழுதுதல், போன்ற அடிப்படைத் திறன்களில் போதிய வினாக்கள் வழங்கப்படுவதில்லை.

             மேலும் கணித வினாத்தாளில் 15 புறவயவினாக்களும் வடிவியல், வரைபடம் 20 மதிப்பெண்களும் கேட்கப்படுகின்றன். பெரும்பாலான பள்ளிகளில் கணித ஆசிரியர்கள் இதை மட்டுமே கற்பித்து தேர்ச்சியடைய வைத்து விடுகிறார்கள். அறிவியல் வினாத்தாளில் இருபது மதிப்பெண் எடுத்தால் போதுமானது. 15 புறவய வினாக்களும், 40 மதிப்பெண்கள் கொண்ட குறுவினாக்களும் மாணவர் தேர்ச்சிக்கு எளிமையாகத் துணைநிற்கின்றன.

             சமூக அறிவியலிலோ 24 புறவயவினாக்களும், காலக்கோடு 5 மதிப்பெண்களும், வரைபடம் 15 மதிப்பெண்களும் மாணவர்களுக்கு எளிதில் தேர்ச்சி இலக்கை எட்ட வைக்கின்றன. வரைபடம் சார்ந்த வினாக்கள் அனைத்துப் பாடங்களிலும் கேட்கப்படுகிறது.ஆனால் தமிழ்ப்பாடத்தில் மட்டும் கேட்கப்படுவதில்லை. வரைபடப் பொருளுணர் திறன் பயிற்சிகள், செய்யுளை வரைபடமாக வரைதல் போன்றவையும் சேர்க்கப்படல் காலத்தின் கட்டாயமாகிறது.

            எனவே வினாத்தாள் வடிவமைப்பு பிற பாடங்களைக் காட்டிலும் தமிழ்ப்பாடத்தில் கடினமாக வடிவமைக்கப்படுள்ளது தெரிகிறது, இந்நிலை மாற்றப்படல் அவசியம். இதனைத் தமிழாசிரியப் பெருமக்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.


நேரப்பகுப்பாய்வில் தமிழ்ப்பாடநிலை :


            பள்ளிகளில் வாரத்திற்கு 40 பாடவேளைகள் கற்பித்தலுக்காகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. அதில் தமிழ் 7, ஆங்கிலம் 7, கணிதம் 7, அறிவியல் 7, சமூக அறிவியல் 5 என 33 பாடவேளைகள் பாடங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது போக இரு பாடவேளைகள் உடற்கல்விக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 5 பாடவேளைகள் மதிப்பீட்டுக் கல்வி 2, ஓவியம் 1, தையல் 1, சுற்றுச்சூழல் கல்வி 1 என ஒதுக்கப்படும்.

              மதிப்பீட்டுக் கல்வி பெரும்பாலும் கணித ஆசிரியர்களின் பாடவேளைகளாகவும் இணைச்செயல்பாட்டுப் பாடவேளைகள் பெரும்பாலும் அறிவியல் ஆசிரியர்களின் பாடவேளைகளாகவும், சுற்றுச்சூழல் ஆங்கில ஆசிரியரின் பாடவேளைகளாகவும் இரகசியமாகப் பாகுபாடு செய்யப்படுகின்றன. 35 மதிப்பெண்கள் தேர்ச்சி பெறக்கூடிய பாடங்களுக்கு 10 பாடவேளைகளும், 70 மதிப்பெண்கள் எடுக்கவேண்டிய தமிழ்மொழிப்பாடத்திற்கு 7 பாடவேளைகளும் ஒதுக்கீடு செய்யப்படுவது எவ்வகையில் சரியென்று தெரியவில்லை.

பள்ளித் தேர்வுச் சூழல் :

                  சிறப்புத் தேர்வுகளிலும் கூட தமிழ்ப்பாடத் தேர்ச்சிப் புள்ளிவிவரங்கள் ஆசிரியர்களால் கவனிக்கப்படுவதில்லை. சிறப்பு வகுப்புகளிலும் தமிழ்ப்பாடத்திற்கு உரிய முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. இப்பாகுபாடு தமிழாசிரியர்களிடையே ஒருவித களைப்பையும் சலிப்பையும் உண்டாக்குகின்றன என்பதே உண்மை.

                  புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் தமிழ், ஆங்கிலம்,கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கான சிறப்புக் கட்டகங்கள் வெளியிடப்பட்டன. இக்கட்டகங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தரும் அன்புக்கொடை மூலம் வெளியிடப்படுகின்றன. அதிலும் கூட தமிழ்ப்பாடத்திற்கான கட்டகம் வெளியிட பல கல்வி நிறுவனங்கள் தயங்கியதாக வந்த செய்திகள் மிக்க வருத்தத்தை அளித்தன.. வருங்காலங்களில் தேர்வுக் கால அட்டவணையிலும் சரி, சிறப்புத் தேர்வுகளிலும் சரி, தமிழ்ப்பாட்த்திற்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்.

பொதுத்தேர்வுமதிப்பீடு ;

                   ஆங்கிலப் பாடத்தில் பலர் இவ்வாண்டு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது ஆங்கில ஆசிரியர்களிடையே கூட வியப்புக்குரிய செய்தியாகப் பேசப்படுகிறது. மொழிப்பாடங்களில் 100 மதிப்பெண் பெறுவது என்பது எவ்வகையில் சாத்தியம் என்பது மதிப்பிடும் ஆசிரியர்களுக்கே வெளிச்சம்.

                தமிழ்ப்பாட மதிப்பீட்டாளர்கள் மொழிப்பாட மதிப்பீட்டின் போது பிழைகளுக்கு மதிப்பெண் குறைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அது தவறில்லை. ஆயினும் வினாவினைப் புரிந்து சொந்தமாக விடை எழுதப்பட்டிருக்கும் வினாத்தாளில் பிழைகளுக்காக மதிப்பெண் முழுமையாகக் குறைக்கப்படுவது மாணவனின் கற்றல் அடைவின் மீதான அவநம்பிக்கையினை அதிகப்படுத்தும் செயல் என்றே நான் கருதுகிறேன்.

              கோனார் உரையில் வெளியிடப்பட்ட கவிதை விடைத்தாளில் இல்லையென்று மதிப்பெண் குறைத்த தமிழாசிரியரைப் பார்த்து நான் மிக்க வேதனையடைந்திருக்கிறேன். சொந்தமாக எழுதப்படும் விடைக்கு மதிப்பெண் குறைக்கும் மதிப்பீட்டாளர்கள், உரையிலோ அல்லது வேறு வகையிலோ மனப்பாடம் செய்து எழுதும் விடைக்கு முழு மதிப்பெண் வழங்குகிறார்கள் என்றால் மதிப்பிடும் திறன் கட்டாயம் மறுஆய்வு செய்யப்படல் அவசியம். பெண் தமிழாசிரியர்கள் மதிப்பீட்டில் சற்று தாராளமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் ஊடகங்களால் பேசப்பட்டுகின்றன. ஒருவித பயம் சார்ந்த புறச் சூழல் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

               இந்நேரத்தில் எழுத்தாளர் செயமோகன் எழுதிய பெண் ஆசிரியர்கள் சார்ந்த கருத்து மெய்யாகிவிடுமோ என்ற அச்சமும் என்னுள் எழுகிறது,

[தமிழகக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியைகளில் சற்றேனும் பாடம் நடத்துபவர்கள் அரை சதவீதம் இருந்தாலே ஆச்சரியம். திருமணமாகி குழந்தை பெற்றதுமே வேலையை ஒப்பேற்றிவிட்டு வீடுதிரும்புதல், முடிந்தவரை விடுப்பு எடுத்தல்தான் அவர்களின் வழிமுறையாக இருக்கிறது. சமூகம் என்ற ஒன்று இருக்கும் தகவலே அவர்களுக்குத் தெரியாது என்னும்போது என்ன சமூகப்பொறுப்பு? மேலும் அடிப்படை அறவுணர்ச்சி கொண்ட படித்த பெண்கள் இங்கே வைரங்களுக்குச் சமம். எங்காவது தோண்டித்தான் எடுக்கவேண்டும். தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் கோயில்சொத்தை கொள்ளையடிக்கவும் தயங்காத குடும்பவிளக்குகளே பெரும்பான்மை. இதை பலநூறு முறை நேரில் கண்டு திகைத்திருக்கிறேன்] - செயமோகன் - கல்விக்களைகள் - 15.05.2014. இதற்கான பதிலை தமிழாசிரியர்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.


தமிழ்ப்பாடத் தேர்வுத்தாள்கள் ;


                    அரசு தமிழ்ப்பாடத்திற்கு இரு தாள்கள் வைத்திருப்பது தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. மொழித்திறன்களை அளவிட ஒரு தாள் போதுமானதாக இருக்காது என்ற கருத்திற்கு மறுப்பேதுமில்லை,ஆனால் இரு தாள்களின் மதிப்பெண்களையும் கூட்டிச் சராசரி மதிப்பெண் அளவுகோல் பின்பற்றப்படுவது மறுபரிசீலனை செய்யத் தக்க ஒன்று என்றே நான் கருதுகிறேன்.. மொழிப்பாடங்களுக்கு இரு தாள்களை வைக்கும் அரசு ஏன் அவைகளைத் தனித்தனித் தேர்வுகளாக ஏற்க மறுக்கின்றது என்பது தெரியவில்லை ஐந்து பாடங்கள் என்பதை ஏழு பாடங்களாக மாற்றி மொழிப்பாட இரு தாள்களுக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சி அளவிடப்படவேண்டும். அதற்குக் கூடுதல் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும்.

                 ஏனெனில் 34 மதிப்பெண்களில் தோல்வியடைந்த மாணவர்களின் விழுக்காடு 10 சதவீதம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதற்குக் காரணம் இரு தாள்களின் சராசரி மதிப்பெண் கணக்கிடப்படுவதே ஆகும். பல மாணவர்கள் ஏதாவது ஒரு தாளில் தேர்ச்சி அடைந்து மற்றொரு தாளில் தோல்வியடைவது மொழிப்பாடத் தேர்ச்சிவிகிதம் குறைவதற்கான முக்கியக் காரணமாகும்.தேவையேற்படின் மேனிலைக்கல்வியில் இருப்பதைப் போன்று அடிப்படை மொழித்திறன்களில் வாய்மொழித்தேர்வு உருவாக்கப்படலாம்.

பாடப்புத்தகக் குழப்பங்கள் :

                  இதுபோதாதென்று பாடப்புத்தகத்தில் காணப்படும் ஐயங்கள் தமிழாசிரியரின் கற்பித்தல் பாதையில் பெரும் குழப்பத்தினை ஆண்டு தோறும் ஏற்படுத்திவருகின்றன. பாடப் புத்தகத்தில் ஐந்து ஒருமதிப்பெண் வினாக்களுக்குச் துல்லியமான விடை இல்லை. ( .கா : உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் - சீதக்காதியா, அபுல்காசிம் மரைக்காயரா போன்றவை ) மேலும் பல வினாக்களுக்கான விடைகள் குழப்பமாக உள்ளன. அது கட்டாயம் வருங்காலங்களில் தீர்க்கப்படவேண்டும்.


மாணாக்கரின் தமிழ்ச்சூழல் :   
           

                மாணவர்களிடையே தமிழ் மொழி மீது பற்றற்ற சூழலே தொடர்ந்து 
நிலவி வருகிறது. கவிஞர் முத்து நிலவன் கூறியதைப் போல தமிழ்ப்பாடத்தின்  இன்றைய நிலை மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.

    ( தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்  அதற்குமேல் போகும் தொழிற்கல்வி வகுப்புகளுக்கு -எந்தப் பயனையும் தரப் போவதில்லை. கணக்கில் கொள்ளப்படுவதும் இல்லை. கட்-ஆஃப்எனும் உயர்கல்விக்கான அடிப்படை-மதிப்பெண் தகுதி தமிழுக்கில்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல் மதிப்பெண்கள் மட்டுமே மருத்துவக் கல்விக்கும், இயற்பியல், வேதியியல், கணித மதிப்பெண்கள் மட்டுமே பொறியியற் கல்விக்கும் கணக்கில் கொள்ளப்படும் நடைமுறையை நமது அரசுகள் கொண்டுள்ளன. பிறகு தமிழ் எதற்கு? சும்மா தேர்ச்சிபெற்றால் போதுமல்லவா? “தமிழைப் படிச்சு டைமை வேஸ்ட் பண்ணாதே!எனும் குரல்கள் தமிழே வேஸ்ட்எனும் மனநிலைக்கு மாணவரைத் தள்ளாதா?  - கவிஞர் முத்துநிலவன் - பத்தாம் வகுப்பில், தமிழ்ப் பாடத்தில் அதிகத் தோல்விக்குக் காரணமென்ன? - 26.05.2014.)

 

                        தமிழாசிரியர்கள் தம்மைச் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. பள்ளிகளில் பணிநிரவல் எனும் பெயரால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆங்கிலவழிப் பயிற்றுமுறை தீவீரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  தமிழ்ப்பாடத் தேர்ச்சி விழுக்காடும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை என்றால் தமிழ்ப்பாடத்தை பள்ளிகளிலிருந்தே எடுக்கப்படும் அவலநிலை ஏற்பட்டாலும் வியப்பில்லை. தமிழாசிரியர் பணியிடங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும் அபாயம் ஏற்படும்.


                        இப்பின்னடைவு தற்காலிகமானதுதான். ஆங்காங்கே ஆசிரியர்களுடனும் ஆய்வு அலுவலர்களுடனும் நம் பாடத்தின் மேன்மை குறித்தும் மாற்றம் குறித்தும் விவாதித்து நல்லதொரு முடிவை எட்டுவோம். நாம் நமக்காய் மட்டுமல்ல ; .நம் உயிர்மொழித் தமிழையும் காப்பதற்காய் விழித்துக்கொள்வோம்..


இப்பொருள் சார்ந்து கவிஞர் முத்துநிலவன் தந்து வலைப்பூவிலும் , புலவர் மகாசுந்தர் தனது வலைப்பூவிலும் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளனர். அதன் இணைப்பு :

www.valarumkavithaikal.blogspot.inwww.mahaasundar.blogspot.in.

           
             
             ஓங்கல் இடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளங்கி
             ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
             மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
             தன்னே ரிலாத தமிழ்.
-    தண்டியலங்காரம்.

 - சி.குருநாதசுந்தரம்,
   மாவட்டச் செயலர்,
தமிழகத் தமிழாசிரியர் கழகம்,
புதுக்கோட்டை மாவட்டம்.


நன்றி :
www.valarumkavithaikal.blogspot.in

18 comments:

  1. ஐயா..தங்களின் விரிவான கட்டுரை அருமை..! ஒவ்வொன்றையும் தனித்தனியாக எழுதலாம் போலிருக்கிறது. அலசி...ஆய்ந்து இருக்கிறீர்கள் .தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா ! தங்களின் வலைப்பூவில் கருத்துகளை என்னால் இட முடியவில்லை. மிக்க நன்றி ஐயா !

      Delete
  2. அய்யா வணக்கம். தங்களின் தமிழ்மீதான பற்றும், அதற்குத் தடையான நம பள்ளிச்சூழல் குறித்த கருத்தும் மிகச்சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.அத்தோடு - “ஆங்கிலம் இரண்டாம் தாளில் துணைப்பாட்த்திற்கு 35 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ் இரண்டாம் தாளில் வெறும் 5 மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளன.” என்பதோடு, வினாத்தாள், பாடவேளைகளில் தமிழ் படும்பாடு குறித்த தங்களின் பட்டறிவை அடக்கத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். சிறப்பான ஆய்வு அய்யா. நம் கல்வித்துறை இதைக் கவனித்துத் திருத்தினால் தமிழுக்கு நல்லது. எனது பதிவிலும் உங்களின் இந்தக் கட்டுரையை மேற்கோளில் இடுகிறேன் அய்யா. கல்விச் சோலைக்கும் அனுப்புஙகள்் இதுபோலும் ஆய்வுக்ள தொடரட்டும். (பின்னூட்டமிடுவதில் சொல்-தேர்வு முறையை நீக்கிவிடுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா ! இப்பதிவின் மூலம் தங்களால் வந்தது. என்னை எழுதத் தூண்டிய தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா ! தொடர்ந்து எழுத முனைகிறேன். மிக்க நன்றி,

      Delete
    2. அய்யா இதே பொருள்குறித்த எனது கட்டுரையின் கடைசியில் தங்களின் இக்கட்டுரை குறித்து எழுதி இணைததிருக்கிறேன்.கல்விக் கட்டுரைகளோடு, தங்களின் அருமையான சிறுகதைகளையும் பதிவிடுவீர்கள் என்னும் நம்பிக்கையில் எனது வலைப்பதிவர் பட்டியலிலும் இணைததிருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

      Delete
    3. மிக்க நன்றி ஐயா !

      Delete
  3. தாங்கள் கூறிய கருத்துகளை எவராலும் மறுக்க முடியாது. ஏனெனில் அவைதான் நடைமுறையில் இருந்துவருகிறது. பெண் ஆசிரியர்கள் குறித்து ஜெயகாந்தன் கூறியதாகத் தாங்கள் குறிப்பிட்டிருப்பது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. எனினும் என்னாலும் இதை மறு்க்கமுடியவில்லை. எனக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு கணினி அறிவு எதற்கு? என்று கேள்வி கேட்ட பெண் தமிழாசிரியர்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அப்போதெல்லாம் நான் மிகுந்த மனவருத்தம் அடைந்திருக்கிறேன். தமிழாசிரியர் என்றால் அவர்களுக்குத் திருக்குறளைத் தவிர வேறு ஏதும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற மனநிலை பிறருக்கு மட்டுமல்ல தமிழாசிரியர்களிடமேப் பரவலாகக் காணப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும். தமிழாசிரியர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.. கரித்துண்டுகளாக மங்கி இருந்த நிலை போதும் இனி வைரங்களாக மாற நம்மை நாமே பட்டைத்தீட்டிக் கொள்ள முற்படுவோம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா ! தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.பெண் ஆசிரியர்களை மட்டுமல்ல அனைத்து ஆசிரியர்கள் மீதும் விமர்சனங்களை அள்ளி வீசியிருக்கிறார் எழுத்தாளர் செயமோகன். மறுப்புக் கட்டுரை தங்களிடமிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கிறேன். நன்றி.

      Delete
  4. வணக்கம் ஐயா
    தற்போது வந்திருக்கும் தேர்வு முடிவு தமிழ் மீதும்/ தமிழாசிரியர்கள் மீதும் ஏளனப்பார்வையை அதிகரித்து விடுமோ எனும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அனைத்துமே தமிழாசிரியர்களுக்கு சாதகமாக இல்லை என்பது நமக்கு தான் தெரியும். மிக நேர்த்தியாக தேர்வுக்கான பின்னடைவை அலசியிருக்கிறீர்கள். முடிவு பற்றி நாம் ரொம்பவே சிந்திக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மை. தாங்கள் குறிப்பிட்டது போல் இரண்டு தேர்வுகளுக்கும் தனித்தனியாக தேர்வு முடிவு வழங்குவது சிறப்பாக இருக்கும் என்றே தோணுகிறது. ஆழ்ந்த சிந்தனைகள் அரசின் கவனத்திற்கு சென்றால் நலமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பயணத்தை இணைந்தே தொடங்குவோம். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாண்டியன்.தங்களின் பின்னூட்டத்தைத் தான் எதிர்பார்த்திருந்தேன். தங்களைப் போல இளம் தமிழாசிரியர்கள் தான் மாற்றத்திற்க்கான விதைகளை உருவாக்கவேண்டும். தங்களைப் போன்றவர்களால் மட்டுமே இது முடியும்.மிக்க நன்றி.

      Delete
    2. கழகம் தீர்வுகளை முன்னெடுக்கட்டும்..

      Delete
  5. எனது பதிவில் ஜெயமோகனுக்கு ஜெயகாந்தன் என்று தவறுதலாகக் கூறிவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும் ஐயா..

    ReplyDelete
  6. முதன் முறையாகத்தங்களின் தளத்திற்கு வருகிறேன் நண்பரே
    இதுநாள் வரை அறியாமல் இருந்துவிட்டேன்
    இனி தொடர்வேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழரே ! தங்களைப் போன்றோரின் ஊக்கமே இவ்வலைப்பூவின் தாக்கம். மிக்க நன்றீ ஐயா.

      Delete
  7. Word Verification ஐ நீக்கிவிட்டீர்களேயனோல்
    கருத்திடுவது மிகவும் சுலபமாக இருக்கும் நண்பரே

    ReplyDelete
  8. முயன்று கொண்டிருக்கிறேன் தோழரே !

    ReplyDelete
  9. வணக்கம்
    நீங்களுமா குரு?
    தேர்வின் தேர்ச்சிகள் ஒரு தற்காலிக போதையே..
    மாணவர்களை மொழியை நேசிக்கவும், சமூக நீதியை சிந்திக்கும் ஒரு முழு மனிதனாக மாற்றுவதும் மட்டுமே தமிழாசிரியர் வேலை.
    உங்களின் பணி நெறி எனக்குத் தெரியும் தெரிய வேண்டியவர்களுக்கும் தெரியும். இந்த மனச் சோர்வு தேவையில்லை..

    என்னைப் பொறுத்த வரை மரியாதையாக இரண்டு பாடங்களுக்குமே ஒரு தேர்வை முழுக்க முழுக்க உள்மதிப்பீடாக மாற்றுவது பலவிதங்கங்களில் நமக்கு தீர்வினைத் தரும். (அது நேர்மையாகவும் படைபாற்றலயையும், சமூக நலச் சிந்தனைகளைத் தூண்டுவதாகவும் இருந்து நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும். )
    உங்கள் தளத்திற்கு வெகுநாட்கள் கழித்து திரு மகா அய்யா சொல்லி வந்தேன்.
    தொடருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா குரு?- கல்விச் சூழலில் எப்பொழுது ஒரு ஆசிரியரின் உள்ளார்ந்த திறமை மதிப்பிடப்படுகிறதோ அப்பொழுதே இக்கட்டுரைகளின் களம் குறையும் தோழரே ! தேர்ச்சி விழுக்காட்டினை வைத்தே ஒரு ஆசிரியரின் நிலை மதிப்பிடும் சூழலில் இது அவசியமானதாக ஆக்கப்ப்ட்டுவிட்டது தோழரே.மிக்க மனவருத்தத் துடனே இக்கட்டுரையை எழுதினேன். பல் தமிழாசிரியர்கள் இது தமக்கு ஆறுதல் அளித்திருப்பதாகக் கூறினார்கள். இவ்வாறுதல் நீடிக்கப்படும்வரை இதன் நீளலும் தொடருமென்றே நான் நினைக்கிறேன். மிக்க நன்றீ தோழர். எனது தளத்தையும் பார்வையிட்டமைக்கு.

      Delete