பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday, 1 June 2014

நாளையும் நானும் !
இரண்டு மாதத்திற்கு
முந்தைய பாதையில்
என் தடங்களின்
நாளைகள் தொடங்குகின்றன !

மதிப்பெண்மாயையில் மரணஓலமிடும்
வகுப்பறைச்சுவர்களில்  மயானஅமைதிக்கான
ஆயத்தச்சூழல் ஒழுக்கச்சான்றாய்ப்
பிரகடனப்படுத்தப்படும்.!
\
வரிவிடாத வாசிப்பில்
களைப்பு மிகும்.

கரும்பலகைக் கருப்பெல்லாம்
வெள்ளையாகும்.

மணிஒலிப்பது முதல்
சுருக்கொப்பஓசை வரை
அட்டவணைப்படி செயல்படும்.

சத்தங்களும் கனவுகளும்
கையுயர்த்தல்களும் சிரிப்புகளும்
பிரம்புகளுள் புதையும்.

நூறு விழுக்காடுக் கூட்டங்களும்
பதிவேடுப் புலம்பல்களும்
நீளும் தருணங்களோடு
ஊதியக் கனவுகளும் நீளும்.

திருத்தப்படும் மதிப்பிலாப்பதிவேடுகள்
மேசையில் இடம்பிடிக்கத்
தகுதியின்படிப் போட்டியிடும். !

மரக்கன்றின் நீளத்தையும்
தேர்ச்சியெனச்சொல்லப்பட்ட தன்னையும்
அளந்துபார்த்து..
குட்டிச்சித்திரங்கள் சிரிக்கும்.

ஆதவனைக்கண்டு மிரளும்
மேகமும் சிரிக்கும்,

நகரும்பூக்கள் வண்டுகளுக்காய்ப்

பயமின்றிப் பறக்கும்.


பாடக்குறிப்பேடும்
உணவுப் பொட்டலமும்
மேசை மீது அமருகையில்

வெள்ளைப் புன்சிரிப்புடன்
பனித்துளிக் கைகள்
எனைக் கைகுவித்து
வரவேற்கும் !

பழைய நினைவுகள்
புதிதாய்ப் பிரசவிக்கும்
புதிய நிமிடத்தில்
என் மனமும்
புதிதாய் நிமிரும்.

21 comments:

 1. அழகான கவிதை ஐயா.. மீண்டும் நான் வகுப்பறைக் கனவுகளைப் புதிதாய்க் காணப் போகிறோம் என்ற உணர்வை தங்களின் கவிதையை வாசிக்கும் போது உணர்ந்தேன் ஐயா..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி . பழைய மொந்தையில் புதிய கள். வகுப்பறைக் கனவுகள் புதிதாக இருப்பினும் அதை வகுப்பறைச் சூழல் ஏற்கும் காலமே நம் ஆசிரியவிடுதலை பிறக்கும் நாள் அம்மா. அதை நோக்கியே நாம் நகர்வோம்.

   Delete
 2. எனது வலைப்பக்கத்தில் நான் பகிர்ந்துள்ளவைகளுக்குத் தங்களிடமிருந்து பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்.. உங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல் எனக்கு அவசியம் தேவை ஐயா.. தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும் ஐயா..

  ReplyDelete
  Replies
  1. கட்டாயம் வருகிறேன் . தங்களின் வளர்ச்சியே எங்களது நோக்கம். தமிழாசிரியர்களின் இப்புரட்சி பேசப்பட வேண்டும். உங்களின் மற்ற தோழிகளையும் எழுதச் சொல்லுங்கள். (குறிப்பாக் சத்யா அம்மா )

   Delete
  2. கண்டிப்பாக சொல்கிறேன் ஐயா..

   Delete
 3. வணக்கம் ஐயா
  அழகான வரிகள். ஆம் ஐயா முந்தைய பாதை தான். ஆனால் தடங்கள் புதிது. நாம் பயணிக்கும் இலக்கு புதிது. நமக்கும் மாணவர்களுக்கும் இக்கல்வியாண்டு இனிதாய் அமையட்டும். புதிய பல புதுமைகள் காணட்டும். உங்களைப் போன்ற ஆசான் கிடைக்க மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா. புதிய இலக்கு நோக்கிய பயணத்தில் உங்கள் கை பற்றிக் கொள்கிறேன் தொடர்ந்து வழிநடத்துங்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பாண்டியன். தங்களின் மொழிப்புலமை வியக்க வைக்கிறது ஐயா. இப்பொருள் சார்ந்த தங்களின் கவிதை இயல்பாய் இருத்தல் கண்டு மகிழ்ந்தேன். நம் நற்சிந்தனைகள் நம் மாணாக்கரை நற்பாடையில் இட்டுச் செல்லட்டும். இணைந்தே பயணிப்போம். வாழ்த்துகள் ஐயா.

   Delete
 4. விதிகளி்ன் இடையே
  விதிவிலக்குகள் உண்டல்லவா நண்பா?
  நீ விதிவிலக்கு
  பல வீதி விளக்குகள்
  நாளைய
  விதிகளை உருவாக்கும் என்பது
  உண்மையெனில்
  நீ அந்த விளக்குகளின்
  திரியாவாய்
  உனது நம்பிக்கையை
  வகுப்பறையில் விதை
  உன் அறிவை
  மதிப்பெண் கடந்தும் விரிவாக்கு
  உன் கண்ணசைவில்
  உலகை வசமாக்கும்
  ஒரு சமூகத்தை நீ உருவாக்குவாய்!
  நாளை மற்றுமொரு நாளே!
  என்று நீ எங்கள் “குரு” அ்ல்லவா?
  என்னால் முடியாதினி நண்பா,
  உன்னில் நான் இருப்பேன் -
  உன் கைவிரல் சுண்ணக்கட்டியாய்
  சென்று வா நண்பா வென்று வா!
  பள்ளிக்கூடத்தை மீறிய
  பகுத்தறிவை வளர்.
  மனித நேயம் மிகுந்த
  மதிப்பெண்களை வெல்ல வழிகாட்டு!
  அன்புடன்,
  (ஏதோ பாரதப்போருக்குச் செல்லும்
  பார்த்தனை வழியனுப்பும் உணர்வோடு..)
  உன் தோழன்,
  நா.முத்துநிலவன்.
  பி.கு. உன் கவிதை தந்த உணர்வில்
  ஏதோ உளறிவிட்டேன்.
  தவறெனில் மன்னித்துவிடு நண்பா

  ReplyDelete
  Replies
  1. மெய் சிலிர்க்க வைத்து விட்டது ஐயா தங்களின் வாழ்த்துக் கவிதை. தங்களின் நல்வழிகாட்டல்கள் எப்பொழுதும் என்முன்னே வழிகாட்டியாய் எனை வழிநடத்த வேண்டும் ஐயா. உன்னில் நான் இருப்பேன் -
   உன் கைவிரல் சுண்ணக்கட்டியாய் - கட்டாயம் ஐயா. உஙகளின் பாதையிலேயே நானும் பயணிக்க எத்தனிக்கிறேன். தங்களின் உணர்வுகளின் வடிகாலாக நாங்கள் செயல்படுவோம் ஐயா. இது உள்றல் இல்லை ஐயா. நல்லூக்கம். (பி.கு :தவறெனில் மன்னித்துவிடு - ஐயா , தவறில்லை. ஆகையால் மன்னிக்க முடியாது.)

   Delete
 5. நம் நண்பர் பாண்டியனும் இதே உணர்வில் ஒரு சிறப்பான கவிதையைத் தந்திருக்கிறார் பார்க்க - http://pandianpandi.blogspot.com/2014/06/calling-from-friend.html “சான்றோர் சிந்தனை ஒன்றாயிருக்கும்“ என்பது உண்மைதானே? கடைசி வரிகளில் -
  பட்டாம்பூச்சியாய் பறந்து வாருமடா
  உமது சிறகுகள் கசங்காமல்
  காப்பது என் பொறுப்பு!“ என்னும் அன்பில் உங்களது
  “மரக்கன்றின் நீளத்தையும்
  தேர்ச்சியெனச்சொல்லப்பட்ட தன்னையும்
  அளந்துபார்த்து..
  குட்டிச்சித்திரங்கள் சிரிக்கும்.“ எனும் வரிகளும் உள்ளடக்கததில் ஒன்றி நிற்பதைப் பார்த்துப் பார்த்து மகிழ்கிறேன். தொடரட்டும் உம் அறிவுப்பணி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. தங்களின் அறிவுப்பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. பாண்டியன் கவிதையையும் படித்துவிட்டேன் ஐயா. ஒன்றிணைவுகள் தொடரும் . மிக மிக நன்றி,

   Delete
 6. புதிய கல்வியாண்டு சிறக்க மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே ! தங்களுக்கும் வாழ்த்துகள். தங்களைப் போன்ற ஆசுஇரியன் கிடைப்பதற்கு உங்களின் மாணவர்கள்கொடுத்து வைத்திருக்க வேண்டும். கணிதம் கற்கண்டாய் இனிக்கட்டும். அத்தோடு அதில் தமிழ் மணம் வீசட்டும். மிக்க நன்றி

   Delete
 7. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. எனது இவ்வெழுத்துகளுக்கு நீங்கள் தந்த பாடமே விதை. தங்களின் வலைப்பூவில் சொல்லப்பட்ட வலையுரை (கோனாருரையைப் போல் 0 மிக மிக அருமை ஐயா. பல விடயங்கள் அதைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். தங்களின் அரும் பணி நீடிக்கட்டும். மிக்க நன்றி.

   Delete
 8. அய்யா,
  இயந்திர வாழ்க்கை நமக்கான சாபமெனில் இயந்திரங்களோடு வாழாமை நாம் பெற்ற வரம். மதிப்பெண்களை வென்றெடுப்பதினும் மனங்களை வென்றெடுப்பது வாழ்க்கைக்கான கல்வி என்பதை உங்களால் உணர்த்த முடியும் என்பதை உங்கள் கவிதை உணர்த்தும்.
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உண்மை ஐயா. வாழ்க்கைக் கல்வி கட்டாயம் தேவை. வாழும் கல்வியைச் செழுமைபடுத்த நம் போன்ற ஆசிரியர்கள் முனையும் போது பல் இடர்ப்பாடுகளைத் தாண்ட வேண்டியுள்ளது சலிப்பைத் தருகிறது ஐயா. தங்களின் நலமிகு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா.

   Delete
 9. இனி
  நாம்
  இதயமில்லா
  எந்திரங்களாய்
  இயங்குவதற்குத்
  தயாராவோம்.
  உயிர்ப்புள்ள
  ரோஜாக்களைப்
  பதியம்போடுவதாய்
  நினைத்து
  தொட்டிக்குள் திணித்து
  தோட்டத்துச் செடியாக்குவோம்
  இதயம் மறந்து
  மூளைகளை மட்டும்
  முதன்மைப் படுத்துவோம்
  இனி நம் கண்களுக்கு
  எண்ணிக்கை மட்டுமே
  எளிதாய்த் தெரியும்
  அடக்குவோம்,அடங்குவோம்
  சுவடிகளுக்குள்ளும் புத்தகங்களிலும்
  புதைந்து போவோம்
  தேர்வுகளைச் சொல்லியே
  தினமும் மிரட்டுவோம்
  மருத்துவர்களை, பொறியாளர்களை உருவாக்குவதே
  மகத்தான பணியென
  மார்தட்டுவோம் .....
  இந்நிலை மாற இனியேனும் முயற்சிப்போம்
  மதிப்பெண்களைத் தாண்டி
  மனிதம் வளர்ப்போம் .
  ..ஐயா உங்கள் கவிதை என்னையும் எழுதத் தூண்டியது .கொஞ்சம் பொறுத்துக்கங்க! உங்கள் கவிதையில் உள்ள அடர்த்தி,கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களை நினைவுபடுத்துகிறது! உங்களைப் போன்றவர்களால் கல்வி மாற்றம் பெரும்! ஏற்றம் பெரும் என்ற நம்பிக்கை வருகிறது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஐயா, வணக்கம். உண்மையில் இது கவிதையே அல்ல. பாடம். அருமையான வரிகள். உண்மையைச் சொல்ல ஒரு துணிவு வேண்டும். எல்லாம் சரியாகச் சொன்ன நீங்கள் இறுதி வரியில் உங்கள் இயல்பைக் காட்டிவிட்டீர்களே ! அது தானய்யா நம் மனது. தேர்வுகளைச் சொல்லியே தினமும் மிரட்டுவோம் என்று சொன்ன கோபச் சூழல் மதிப்பெண்களைத் தாண்டி மனிதம் வளர்ப்போம் என்பதில் அமைதியாகிவிட்டது. ஐயா நாம் இக்காலக் கல்விச் சூழலை மாற்ற முடியும் என்பதில் ஏனெனில் எனக்கு நம்பிக்கையில்லை. என்றாலும் நாம் முயன்று கொண்டே இருப்போம். உங்களின் வழிகாட்டலே எனது பாதை. என் எழுத்து உங்களின் பின்னூட்டத்தில் மகிழ்வெழுத்தாய் மாறிவிட்டது. மிக மிக நன்றி ஐயா!.

   Delete
 10. அருமையான வரிகள் ஐயா.... ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள உருவக உள்ளடக்கம் சிறந்த சொற்செறிவைக் காட்டுகின்றது. புதிய கல்வியாண்டில் புது சகாப்தம் படைப்போம்... நன்றி. கொ.சுப.கோபிநாத், இலந்தக் கோட்டை அரசு மேனிலைப் பள்ளி, திண்டுக்கல் மாவட்டம். www.ilakkanatheral.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. ஐயா, வணக்கம். நலமா ? தங்களின் குட்டிச் செல்லம் நலமா ? தங்களின் செறிவுமிகு பின்னூட்டம் என் அறிவின் தூண்டலை அதிகப்படுத்தியுள்ளது என்பது உண்மை. தாங்கள் புதுக்கோடையில் இல்லையென்பது மிகப் பெரிய வெற்றிடம். இரவு கட்டாயம் தங்களின் வலைப்பூவில் இளைபாறுகிறேன் ஐயா. வாழ்த்துகள் ! மிக்க நன்றி.

   Delete