பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Tuesday 17 June 2014

நா நெகிழ் வாக்கியங்கள்


நா நெகிழ் வாக்கியங்கள் நமது தமிழ் உச்சரிப்பை சீர்படுத்தும். எனவே பின்வரும் வாக்கியங்களை வேகமாக படித்துப் பழகுங்கள்.


நமக்குத் தெரிந்த ஒரு ஒரு திருக்குறளே நா நெகிழ் வாக்கியமாக இருக்கிறது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

உங்களுக்குத் தெரிந்தவை

பின் வருவனவை நீங்கள் கேள்விப்பட்டவைகளாகவோ அல்லது சிறு வயதில் படித்தவைகளாகவோ இருக்கலாம்.

1.இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.

2.கும்பகோணக் குளக்கரையில் குந்தியிருந்த குரங்கை குப்பன் குச்சியால் குத்தியதால்   குரங்கு குளத்தில் குதித்தது.

3.பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியருக்கு   பைத்தியம் பிடிச்சா எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம்   பாக்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பாரு?

4.காக்கா காக்கான்னு கத்திறதினால காக்கான்னு பேரு வந்ததா?

 ‘
காக்கான்னு பேரு வந்ததினால காக்கா காக்கான்னு கத்துதா?

5.கிழட்டுக் கிழவன் வியாழக் கிழமை சடு குடு விளையாட குடு குடு வென ஓடி       வாழைப் பழ தோலில் வழுக்கி விழுந்தான்.

6.கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
  ஓடற நரியில ஒரு நரி கிழ நரி உருளுது புரளுது.

7.பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு.

8. பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
 ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும்  இனிக்கல.

  
          எல்லாருக்கும் தெரிந்ததை கூறுவதில் என்ன பயன். எனவே நானே யோசித்து சில நா நெகிழ் வாக்கியங்களை எழுதியிருக்கிறேன். அவைகளையும் படித்துப் பழகுங்கள்.

9.தேவியும் கோபியும் கிளைகளில் தாவி, ஏறி இறங்கி, இறங்கி ஏறி, ஏறி இறங்கி விளையாடினார்கள்.

10.சொல்லவும் மெல்லவும் முடியாமல் அள்ளவும் மொள்ளவும் தெரியாமல் கொட்டவும் வெட்டவும் பிடிக்காமல் சட்டம் பேசின சிட்டைப் பார்த்து சிரித்த மொட்டையைக் காண மொட்டை மாடிக்குச் சென்றேன்.

11.கூட்டுக் களவாணிகள் கூட்டமாக கோட்டுப் போட்டு ஏட்டு வீட்டில் திறந்த பூட்டை பூட்டிப் பூட்டிப் பார்த்தார்கள்.

12.மெத்தையில் இருந்து விழுந்த அத்தை வாய்ப் பொக்கையாகி கை பைய்யும் பொத்தையாகி மெத்தையில் கிடந்த அத்தையை பார்க்க வந்தான் அத்தை மகன் சொத்தைப் பல் முத்தையன்.

13.பக்தியில் முத்தின பக்தன் பக்தர்களை பத்துப் பத்துப் பேராக பந்திக்கு அழைத்தான்.





14.சொல்ல சொல்ல சொல்லிக் கொள்ள எதுவும் இல்ல. சொல்லச் சொல்ல சொந்தங்களும் எதுவும் இல்ல.

15.வியாழக்கிழமை வாழப்பாடிக்கு வாழக் சென்றவன் வாழைப் பழத் தோல் வழுக்கி விழுந்தான்.

16.ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள்.

17.சுத்தத்தை மறந்து சொந்தத்தைத் துறந்து பந்தத்திடம் இரந்து பணத்தைக் கரந்து பாதி வாழ்கையில் பரதேசியானான்.

18.ஒரு கை கொடுக்க மறு கை எடுக்க பிற கை மடக்க பலர் கை அடக்க வடக்கே போனான் கடுக்கன்.

13 comments:

  1. வணக்கம் ஐயா
    மிகவும் பயனுள்ள பதிவு. நாநெகிழ் வார்த்தைகள் அனைத்தும் படிக்கும் போது மிகவும் ஆர்வமாக இருக்கிறது. நான் வாசித்துப் பார்த்து விட்டேன். ரொம்பவே உற்சாகமாக இருக்கிறது. அதும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டால் சொல்லவா வேண்டும் ஐயா? ஆர்வமுடன் சொல்லிப் பார்ப்பார்கள். நல்ல பகிர்வுக்கு நன்றிகள் ஐயா. தொடரட்டும் தங்கள் பணி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாண்டியன். நலமா ? தங்களின் கருத்துக்கு நன்றி.அவசரமாக பதிவிட்டதால் இன்னும் நிறைய விடயங்கள் விட்டுப் போய்விட்டன ஐயா. மிக்க நன்றி.

      Delete
  2. அருமை தொடரட்டும். கூடுதலாகச் சில கருத்துகள் -
    “ஓடுற நரியில் ஒருநரி கிழநரி, கிழநரி முதுகுல ஒருபிடி நரைமுடி“ இதைத் தொடர்ந்து பத்துமுறை சொல்ல வேண்டும்.
    “வாழைப்பழம் அழுகிக் குழகுழத்துக் கீழே விழுந்தது” - ழகர உச்சரிப்புக்கு.
    (அய்யா “துப்பார்க்கு திருக்குறளில் ஆறாம் சீர் தூஉம் என்பதே சரி -திருத்துக
    துப்பாயதும் என்பதன் நீட்சி துப்பாய தூஉம் என அளபெடுத்தது) நன்றி பின்னூட்டத்தில் எழுத்துச் சரிபார்ப்பை எடுத்துவிடுங்கள். இதனைக் கண்டு பலர் பின்னூ்ட்டமிடத் தயங்குவர் என்பது எனது பட்டறிவு.

    ReplyDelete
    Replies
    1. தவறைத் திருத்தி விட்டேன் ஐயா. தாங்களின் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து என் தடங்களில் தங்களின் இளைப்பாறுதல் கட்டாயம் வேண்டும் ஐயா. மிக்க நன்றி.

      Delete
  3. ம்ஹீம்... சிலது சிரமம் தான்...

    நல்லதொரு தொகுப்பு ஐயா... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஐயா, நலமா ? பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  5. அய்யா,
    வணக்கம். கட்டுரையில் இடம்பெற்றிருந்த நாநெகிழ் தொடர்களின் தொகுப்பு அருமை. ( இந்தச் சொல்லாட்சியை இப்பொழுதுதான் காண்கிறேன். ஆங்கிலத்தில் Tongue Twister என்றறிவேன்.) அருணகிரியாரின் பாடல்கள் பலவும் நாநெகிழ் வகைமைய தான்.
    அதிகம் அறியப்படாத ஒரு பாடல்,
    “ இப்பிறப்பை நம்பி இருப்பையோ நெஞ்சமே
    வைப்பிருக்க வாயின் மனையிருக்க - சொப்பனம்போல்
    விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பை
    கக்கிச்செத் துக்குட்டக் கண்டு”
    இது பட்டினத்தார் பாட்டு. கடைசி ஈறடிகள் நாநெகிழ் தொடர்கள் போல் தோன்றுகிறது.
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா. முத்தை தரு பத்தி திரு நகை
      அத்திக்கு இறை சத்தி சரவண
      முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் என்ற திருப்புகழிலும் கூட நாம் இதனைக் காணலாம். சந்தமுள்ள எப்பாடலும் நெகிழ்பயிற்சிக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் ஐயா. மிக்க நன்றி ஐயா. தங்களின் மேலான அறிவூட்டத்திற்கும், ம்திப்புமிக்க பின்னூட்டத்திற்கும்.

      Delete
  6. வணக்கம் ஐயா.. ஐயா மிகவும் அருமையான பகிர்வு ஐயா.. எனது குழந்தைகளிடமும் இதை அவசியம் பகிர்ந்து கொள்வேன்.. ஒப்பிட முடியா தப்பிதமில்லா ஒப்பனை இல்லா இப்படிப்பட்ட செப்பமிட்ட வார்த்தைகளால் செப்ப சிலையாய் சிலைத்துவிட்டேன் ஐயா.. நன்றி தொடர்வேன்






    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா. தங்களின் வலைப்பூவில் நற்பதிவுகள் மலர்கின்றன அம்மா. தொடருங்கள்.

      Delete
  7. வணக்கம் ஐயா.
    தங்களின் நா நெகிழ் வாக்கியங்கள் கடினமாக இருப்பினும் முற்றிலும் அருமையான தொகுப்பு ஐயா....லகர ளகர ழகர வேறுபாடுகளை மாணவர்களிடம் எடுத்துக்காட்டி வார்த்தைகளை அழகாக உச்சரிக்க பழக்கப்படுத்தலாம் ஐயா...நன்றி

    ReplyDelete
  8. வணக்கம் அம்மா. நலமா ? தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அம்மா. தாங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  9. நான் என் பிள்ளைகளுக்கு கற்றுகொடுத்து வருகிறேன்... மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete