பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday, 21 December 2014

வேட்கை.

வேட்கை.
                                                                                            சி.குருநாதசுந்தரம்.

           ஒரு இனிதான மாலைப்பொழுது, நான் அப்போதுதான் கணினியைத்  திறந்தேன். தமிழ்வாசி பிரகாஷ் மின்னஞ்சலில் கூப்பிட்டார்.
  “வணக்கம்
நிமிர்ந்தேன்.
  “என்ன்ங்கய்யாஎன்ற பார்வையுடன் அம்மின்னஞ்சலைப் பார்த்தேன்,
  ” உங்கள வலைச்சரத்துக்கு ஒருவாரத்துக்கு ஆசிரியரா போடலாம்னு இருக்கோம்.   
    உங்க அனுமதி வேணும்.”
பகீரென்றது எனக்கு. உள்ளுக்குள் ஒரு படபடப்பும், பரிதவிப்பும் படர்ந்ததாய் உணர்ந்தேன்.
 “ உண்மையாகவா? “
 “ ஆம் என்றார்.
 அவர் எழுத்துக்கண்களில் ஆர்வம் தெரிந்தது.
சரிங்கையா சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
பனிக்காற்று இதமாய்ச் சீண்டியது.
சரியா செஞ்சுருவோமா? ” மனதுக்குள் நெருடிய முள்ளுணர்வுகளில் என் தேகம் ஒருமுறை ஆடியது. மனிதமனம் ஒரு புரியாத புதிர்தானென்பது எனக்கு அன்றுதான் தெரிந்தது. தொடங்கும் முன் எதையும் பெரிதாக எடுத்துக்கொண்டு உணர்வுகளைப் பயமுறுத்தும் மூர்க்கம் மனதிற்கு மட்டுமே உண்டு. ஆனால் செயலின் உள்ளே சுகமான பயணங்களை முன்னிறுத்தும் இனிய முகமும் மனதிற்கு உண்டு. மனதை வெல்லும் வேட்கையில் திட்டமிடத் தொடங்கினேன்.
 “ நான் இருக்கேன். பயப்படாத “  என்றது என்  பெருநாழி
 “ நாங்களும் இருக்கோம் பயப்படாதப்பா “  என்றன என் நண்பர்களின் வலைப்பூக்கள். பூக்களின் மணத்தை எவ்வாறு விளக்க முடியும் ? அதன் எம்முகத்தை வெளிப்படுத்துவது என்ற சிந்தனையில் தெருவில் நடந்தேன்.
            அப்பொழுது தான் தன் குட்டிகளைப் பிரசவித்த மகிழ்வின் களைப்பில் ஒரு தெருநாயொன்று என்னைப் பார்த்து ஓடியது. குட்டிகளைக் களவாடும் மனிதப் பதரென்று என்னை நினைத்து விட்டதோவென என் மனம் கூசியது.
 ‘ சே, நாய்க்குக்கூட மனிதன் மேல நம்பிக்கை வரலப்பா,  “
  அப்போதுதான் வந்த இராசையன் என்னோடு நடையில் சேர்ந்து கொண்டார்.
 “ ஆமாமா, ” தலையாட்டினேன்.
 “ இந்த நாயைப் பத்தி ஒரு கத எழுதினயே, என்ன ஆச்சுப்பா? “
என்றார் இராசையன். அவரின் வார்த்தைகளில் ஆர்வம் இல்லை. ஆயினும் ஏதோ பேச வேண்டுமென்ற ஒரு நிச்சயச் சூழலில் அவர் இருப்பதாக எனக்குப் பட்டது, நடைப்பயிற்சிக்கு துணை வேண்டிய அவரது பேச்சின் நிழல் என்னை வெகுவாய்க் கவர்ந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
              சிலசமயங்களில் பிறரின் முக்கியமில்லாத பேச்சுகள் கூட நமக்கு ஆர்வத்தை ஏற்படுத்திவிடும் மாயையை அன்று தான் இராசையனின் பேச்சில் கண்டேன்..
 “ ஆமாண்ணே. என் வலைப்பூவுல போடுருக்கேன். “
  “ பேருகூட திருப்பதியின் தங்கம் தான? ” என்றவரிடம் ஆசையாக
ஆமாண்ணே என்றேன்.
 “ படிச்சிருக்கீங்களாண்ணே என்றேன் ஒரு அதீத ஆர்வத்துடன்.
இல்லப்பா, அதுக்கெல்லாம் எங்க நேரமிருக்குது? “ என்றவரின் மேல் இப்பொழுது   
  வெறுப்பு வந்து தொற்றிக் கொண்டது.
  “ என்னண்ணே , தம்பியோட கத உங்களுக்கு பிடிக்கலையா? “
  “ இல்லப்பா, இன்னிக்குப் படிச்சுடரேன் என்றவரின் கையைப்பிடித்து கோர்த்துக் கொண்டேன்.
படிச்சிருவேன்பா. ” என்று தன் கையை என்னிடமிருந்து விடுவித்துக் கொண்டார்.   “ சரிப்பா, வீட்டுக்கு போகணும் . நேரமாச்சு, நான் வரட்டா,
”” அண்ணே கதய கட்டாயம் படிச்சிருங்கண்ணே, ”என்று கூறினேன்.
           இராசையனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். நான்கு பிள்ளைகள். அதில் மூன்று பெண்பிள்ளைகளும் அடக்கம். கமலினி பத்தாவதும் எழிலினி பன்னிரண்டாவதும் படித்துக்கொண்டிருந்தார்கள். மூன்றாவது பெண் போதும்பொண்ணு ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள்.
           கடைக்குட்டிப் பையனுக்கு வீட்டில் மிகுந்த செல்லம். அவன் இப்போதுதான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டுருப்பதாக போதும் பொண்ணு சொன்னாள்.
          என் பள்ளியில் இப்பெண் பிள்ளைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.
          அன்று ஆசிரியர் அறையில் ஓய்வாக அமர்ந்திருந்தேன்.
எழிலினி என்னருகே வந்தாள்.
 “ ஐயா.. ” இழுத்தாள்.
  என்ன என்பது போல் புருவம் நிமிர்த்தினேன்.
 “ நேத்து எங்க அப்பாவோட கம்ப்யூட்டருல..”
 “ என்ன புள்ள , சீக்கிரமா சொல்லித் தொலை. எனக்கு நெறைய வேலையிருக்கு. ”
அவளிடம் அந்நேரத்தில் எரிந்து விழுவது எனக்கே வெறுப்பைத் தந்தது.
 “ உங்க கவிதை படிச்சேன் ஐயா. “
   நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவளிடம் எரிந்து விழுந்ததற்காய் மனதிற்குள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.
 “ சொல்லும்மா, ” குரலில் கனிவு தெரிந்த்து.
 “ கர்மவீர்ர் காமராஜர் பற்றி நீங்க எழுதுன கவிதைய படிச்சேன் ஐயா. ரொம்ப நல்லாயிருக்கு.”  
 “ நல்லாயிருக்கா, உண்மையாகவா?”
 அவளுக்கு ஏதாவது கொடுத்தே ஆக வேண்டுமென்று என் மனம் பரபரத்தது.
அப்போது பார்த்து ஏழாம்வகுப்பு பிரகாஷ் தன் பிறந்தநாளுக்காக சாக்லேட் கொண்டு வந்து கொடுத்தான். அவனை வாழ்த்திவிட்டு நிமிர்ந்தேன்.
 “ இன்னோரு கவிதையும் படிச்சேன் ஐயா,”
  “ என்ன கவிதை? “
  எனக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.
  “ நிசமாவா?”
 ஆம் என்பது போல் தலையாட்டினாள்.
இந்தா இத வச்சுக்கோ. ” சாக்லேட்டை அவள் கையில் திணித்தேன்,.
 “ அப்புறம் சொல்லும்மா.”
 “ வள்ளுவரப் பத்தி ஐயனின் ஐம்புலன்கள் என்ற தலைப்புல நீங்க எழுதுன கட்டுரை ரொம்ப நல்லாயிருக்குதுன்னு மாலா டீச்சர் சொன்னாங்க ஐயா. அதயும் இப்பவே படிக்கணும் போல இருக்கு.”
 “ என்னது மாலா டீச்சர் சொன்னாங்களா? இருக்காதே, காலயில கூட என்னப் பாத்தாங்க, ஒன்னும் சொல்லலியே?”
 “ இல்லங்கய்யா, இன்னிக்கு வகுப்புல குறள் நடத்துறப்போ இத பத்திச் சொன்னாங்க.”
 “ அப்புறம் வேற என்ன சொன்னாங்க? “
 “ உங்களோட பல கட்டுரைகளையும் பத்திச் சொன்னாங்கய்யா” .
 “ பட்டுக்குட்டி, அப்படியா சொன்னாங்க? “
அவள் பலமாகத் தலையாட்டினாள். அவளின் கண்கள் மேசை மீதிருந்த மற்றொரு சாக்லேட்டின் மீது லயித்திருப்பது தெரிந்தது.
 “ இந்தா இதயும் வச்சிக்கோ என்றேன்
  “ வேண்டாங்கய்யா, ”
  “ சும்மா வச்சுக்கோ எழில். ”
  “ அப்புறம் ? “
  “ காளிகாம்பாள் டீச்சரும் பள்ளிக்கூடத்த பத்தி நீங்க எழுதுன நானும் கரும்பலகையும் கவிதையப் பத்திச் சொன்னாங்க. ”
 “ அப்படியா? “
      நான் மகிழ்வின் உச்சத்திலிருந்தேன். இருக்காதா பின்னே, என் எழுத்தின் மணம் அனைவரின் உள்ளத்திலும் ஏதோவொரு துள்ளலை ஏற்படுத்தியிருந்ததை எழிலினியின் பேச்சு உறுதிப் படுத்தியது..
     “ அப்புறம் இராசசேகரன் சாரு கூட உங்க நண்பர் முத்துநிலவனோட ஒரு கட்டுரையை வாசிச்சுக் காமிச்சாங்கய்யா. அதனோட தலைப்பு கூட.. “
. நான் முந்திக்கொண்டேன்.. ஏனெனில் முத்துநிலவன் என் நண்பர் மட்டுமல்ல. என் வலைப்பூவின் ஒரு வேர் அவரால் ஊன்றப்பட்டது.
 “ ஐயா, அந்த சாக்லேட்டையும் கொடுத்தீங்கன்னா.. “
 இழுத்தாள் கமலினி.
 “ இந்தாப்பா, எல்லாம் உனக்குத் தான் . வச்சுக்கோ. ” என்றவாறே மிகிழ்ச்சியாக மீதியிருந்த சாக்லேட்டையும் கொடுத்தேன்.
 “ நாளைக்கும் வந்து சொல்லு “  என்றேன் ஆர்வமாக.
 “ சரிங்கய்யா, ” என்றபடி சிட்டாகப் பறந்து போனாள்.
    கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். மனதில் கொஞ்சம் கர்வம் வந்திருந்தது.
பாரதியின் ஒரு முகப்பொலிவு எனக்கு வந்த்தாய் என் மனம் கூறிக்கொண்டது.
    “ இந்தத் தமிழய்யாவப் பாரு, பிறந்த நாள் வாழ்த்துக்காகக் கொடுத்த சாக்லேட்டையெல்லம் பெரிய கொடைவள்ளல் மாதிரி எழிலினிக்குத் தூக்கிக் கொடுத்திட்டாரு. சே, ”
   என் பெயர் அடிபடவே என் காதுகள் உற்றுக் கவனித்தன.
   கமலா டீச்சர் காளிகாம்பாள் டீச்சரிடம் கூறிக்கொண்டிருந்த்து கேட்டது.
   “ அதுனால என்ன டீச்சர்? “
  “ இல்லப்பா, எழிலினி இன்னிக்கு தன்னோட தங்கச்சிகளுக்கு முட்டாய் வாங்கிக் கொடுக்க காசு கொண்டு வரல போல. உடனே அந்த கிளாஸ் மேனகா எழிலினிகிட்ட போயி , தமிழய்யாவப் போயி பாரு. அவரோட படைப்புகள பத்தி புகழ்ந்து பேசு. உனக்கு முட்டாய் தருவாரு. ஏன்னா ஏழாம் வகுப்பு பிரகாஷ் இப்ப தான் அவர்கிட்ட முட்டாய் கொடுத்திட்டுப் போனான். அத உன் தங்கச்சிகிட்ட கொடுத்து சமாளிச்சிக்கோன்னு சொன்னத கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டிருச்சு.
தன் கைக்காசு போட்டு முட்டாய் வாங்கி என்னக்கித் தமிழய்யா கொடுக்கிறாரோ அன்னக்கித் தான் அவரோட படைப்புகள ஸ்டூடன்ஸ் படிப்பாங்க. “
     எனக்கு முன்னால் என் பெருநாழி சிரித்துக் கொண்டிருந்தது.

                                                                 ( தொடரும்..)

8 comments:

 1. வலைச்சர இணைப்பையும் கொடுத்து விடுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா. கட்டாயம் போடுகிறேன்.

   Delete
 2. வணக்கம்
  வலைச்சரப்பணிக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர்.

   Delete
 3. நீங்களே சொன்னமாதிரி பாரதியின் முகப்பொலிவு உங்கள் பதிவில் தெரிகிறது அய்யா.. தொடருங்கள். கதைபொதி கட்டுரை என்பதா, கட்டுரையின் புதிய வகைஎன்பதா தெரியவில்லை.. ஆனால் நல்லாயிருக்கு. வலைச்சரமும் பார்த்துக் கருத்துப் பதிந்துவிட்டு இங்கு வந்தேன். நன்றி அய்யா. வணக்கம்

  ReplyDelete
 4. ஐயா மிக அருமை!

  தங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் நற்பேறுதவி செய்வானாக!

  எனக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டுவிட்டதய்யா.,
  உரையாடியது எழிலினி, எப்போது கமலினி வந்தாங்க
  “ ஐயா, அந்த சாக்லேட்டையும் கொடுத்தீங்கன்னா.. “
  இழுத்தாள் கமலினி.

  ReplyDelete