பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday, 26 December 2012

நானும் சுண்ணாம்புக்கட்டியும்..!


தொடரும் கற்றலின்..
தொடர்புச் செயலகம்.


வளையும் நெளியும்
வாதிடும் நகர்ந்திடும்,
அசைவுகள் அனைத்தும்
அறிவினை உணர்த்திடும்.


தன்வடிவம் சுருக்கும்
தன்னலமற்ற தியாகத்தில்
அறிவின் வடிவம்
விரிந்து நீளூம்.


சிறைபட்ட எண்ணங்களை
சீர்தூக்கி வடிகட்டும்.
சிறந்தவற்றையே அனுமதிக்கும்.


கைவிரல்களையும் காலங்களையும்
கவனமாய்ப் பேசவைக்கும்.


சிதைந்த மூளைத்தொடர்பினை
சிறந்ததாய் மாற்றிடும்,
நரம்பியல் நிபுணத்துவம்
இதற்குமட்டுமே உண்டு.


வெள்ளைச்சிற்பி எழுதும்
கரும்பலகைக் கல்வெட்டுக்கள்,
வசப்படும் பொழுதுதான்..
வாழ்வும் வசப்படும்.



கரும்பலகையின் காதலியாய்,
இதனைக் கையாளுங்கள்..!
ஏனெனில்
இந்த வெள்ளைப்பெண்
கோபப்பட்டுவிட்டால்..
கரும்பலகை
மௌனமாகிவிடும் அபாயமுண்டு

No comments:

Post a Comment