பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday, 16 February 2013

எரியும் மத்யமர்.


எரிபொருள் விலை
உயர்ந்துவிட்டதாய்
அறிவித்தது ஊடகம்.

இருசக்கர வாகனத்தை
வருடிவிட்டேன்.

என்னைச் சுமந்து
செல்லும் கர்வம்
எப்பொழுதும் அதற்குண்டு.

என்
கனத்தபார்வையின் வீரியத்தில்
என்னைக்
கவலையாய்ப் பார்த்தது.

நான் அதனைப்
புறக்கணித்துவிடக் கூடாதென்று
பரிதாபமாய்க் கெஞ்சியது.

கூடுதல் காந்தித்தாள்களுக்காய்
மாற்றுவேலை தேடவேண்டிய
தேடல் சலிப்பைக் கொடுத்தது.
.
மத்தியதரக்
குடும்பத்தலைவனாய் இருப்பதற்கு
மனம் பரிதாபப்பட்டது.

இயற்கையின் விற்பனை
இயல்பின்மைச் சூழலை
இலகுவாக்கியது.

தினப் பொருள்கள்
வாரப் பொருள்களாகவும்
இருசக்கர வாகனப்பயன்பாடு
இருமுறை மட்டுமென்றும்
ஒப்பந்தம் போடப்பட்டது.

மனைவியின் வெளிப்பயணம்
குழந்தைகளின் உணவுவிடுதிப்பயணங்கள்
ஒத்தி வைக்கப்பட்டன.

அழுக்கடைந்திருந்த மிதிவண்டியை
அவசரமாய் வெளியிலெடுத்துத்
தூய்மைப்படுத்துகையில்
அமைச்சரோடு
அறுபது மகிழுந்துகள்
அதிவிரைவாகப் போவதுகண்டு
என்
இருசக்கர வாகனம்
பெருமூச்செறிந்ததுகண்டு,
இதயம் கனத்தது

1 comment:

  1. SIR PL VISIT

    http://www.kalvisolai.org/p/home-wwwkalvisolaicom-plus-two-study.html

    ReplyDelete